பாட்டும் நானே! பாவமும் நானே! பகுதி 41: -'கம்பவாரிதி' இலங்கை ஜெயராஜ்-

கேள்வி 01:- எல்லா விஷயம் பற்றியும் எழுதுகிறீர்கள். உங்களுக்கு விளங்காத விஷயம் என்று ஒன்றுமில்லையா? 

பதில்:-

ஏன் இல்லாமல். முக்கியமாக இரண்டைச் சொல்லலாம். 
ஒன்று, சம்பந்தர் நடாத்தும் கூட்டமைப்பினரின் நிர்வாக முறைமை. 
இரண்டாவது, பேராசிரியர் சபா.ஜெயராசா எழுதும் கட்டுரைகள்.
இவ்விரண்டிலும் ஏதும் இருப்பதாய்த் தெரியவில்லை. 
ஆனாலும் இருப்பதாய்ச் சொல்லப்படுகிறது. இருக்கிறதா? இல்லையா? என்ற உண்மை, 
ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். 

😜உலகநாதரின் ஒப்பீனியன்​: 📣 பூச்சியத்திற்குள்ளே ஒரு ராஜ்ஜிpயத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருக்கும் இருவர்.
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 02:- சென்ற முறை சுமந்திரன், சிறீதரன், சாணக்கியன் ஆகிய இம் மூவரின் கூட்டினை ஆதரித்து எழுதியிருந்தீர். என்ன காரணம்? 
பதில்:-
'முக்கூட்டுக்குளிசை' என்ற ஒன்று உண்டு. 
அது குழந்தைகளின் பல நோய்களை மாற்றும் என்பார்கள். 
இவர்களும் ஒரு வகையில் முக்கூட்டுக் குளிசைதான். 
அறிவாற்றல், ஆளுமைத்திறன், மக்கள் ஆதரவு என்கின்ற,
ஒரு கட்சிக்குத் தேவையான மூன்று பலங்கள் இவர்களால் அடையாளப்படுத்தப்படுகின்றன.
சரியான அளவில் சரியான முறையில் இணைந்தார்களானால்,
ஈழத்தமிழினக் குழந்தை உருப்பட வாய்ப்பிருக்கிறது. 

🧐உலகநாதரின் ஒப்பீனியன்​: 📣 மருந்து குழந்தையைக் கொல்லாமல் இருந்தாச் சரிதானுங்கோ. ஹி..ஹி..ஹி..

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 03:- உலகில் வெகு சீக்கிரத்தில் நடைபெறப்போகும் அதிசயம் என்று எதைக் கருதுகிறீர்?  
பதில்:-

வெளிக்கிரகவாசிகளின் தொடர்பாகத்தான் அது இருக்குமென்று கருதுகிறேன். 
அதுகூட இனி நடைபெறப்போகும் அதிசயம் அல்ல. 
முன்பே நடைபெற்றுவிட்ட அதிசயம் என்றே கருதுகிறேன். 
வல்லரசுகள் அந்த ரகசியத்தைத் தமக்குள் மறைத்து வைத்திருக்கின்றன. 
விஞ்ஞானிகள் பலரினது கருத்தும் அதுவாய்த்தான் இருக்கிறது. 

 🙂உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  'ஹைய்யா! அப்ப இனி யாரும் எங்களை அடிச்சா வெளிநாடுகளுக்கு ஓடினது போல வெளிக்கிரகங்களுக்கும் ஓடலாமுங்கோ.'

 ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 04:- சிற்றின்பம் (sex) குற்றமாகுமா?  
பதில்:-

யார் சொன்னது? அது நாம் பேரின்பத்தை அடைவதற்கு,
இறைவன் தரும் ஒத்திகையாக்கும்.

😄உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 போச்சுடா சாமி! இன்னொரு 'ரஜனீஸ்'சாமி வந்துட்டா.டா.டார் போல!

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 05:- வள்ளுவர் பல இடங்களில் தன் கருத்தோடு தானே முரண்படுகிறாரே. கவனித்தீர்களா?​ 

பதில்:- அப்படியா? நீர் வள்ளுவரை விடக் கெட்டிக்காரராய் இருக்கிறீரே. 
பிறகென்ன? 'வள்ளுவத்தின் முரண்பாடுகள்' என ஓர் ஆய்வுக்கட்டுரையை எழுதி,
யாழ் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் வாங்கவேண்டியது தானே! 
ஓய்! முதலில் திருக்குறளை ஒழுங்காக முழுமையாய் முறைப்படி படிக்கப்பாரும். 
பிறகு அதில் சொன்னபடி நடக்கப்பாரும். 
அதற்குப் பிறகு முரண்பாடுகள்பற்றி ஆராயலாம்.

😟உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  'கற்றதனால் ஆய பயன்' ஹி..ஹி..

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 06:- 'கவிமணி' தேசிகவிநாயகம்பிள்ளை 'பாட்டுக்கு ஒரு புலவன் பாரதியடா' என்கிறாரே. தமிழில் வேறு புலவர்களே இல்லையா? ​ ​  
பதில்:-

ஒரு என்ற வார்த்தைக்குத் தமிழில் ஒன்று என்ற அர்த்தம் மட்டும் இல்லை. 
ஒப்பற்ற என்ற அர்த்தமும் இருக்கிறது. 
அதனால்த்தான் 'ஒரு திருமுருகன் வந்தாங்கு உதித்தனன்' என்றார் கச்சியப்பர். 
தசரதனிடம் யாகம் காக்க இராமனைக் கேட்க வந்த விசுவாமித்திரர்,
'கரியசெம்மல் ஒருவனைத் தந்திடுதீ' என்கிறார். 
இந்த இடங்களிலெல்லாம் வரும் 'ஒரு' என்ற வார்த்தைக்கு,
ஒப்பற்ற என்பதுதான் அர்த்தம். 
தேசிகவிநாயகம்பிள்ளை அவர்கள் கவிதையிலே,
ஒப்பற்ற புலவன் பாரதி என்பதைத்தான் அப்படிச் சொல்லியிருக்கிறார். 

👍உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  இவரும் 'ஒரு' விண்ணர் தானாக்கும்.

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 07:- 'சிவஞானபோதத்தைப்' படித்துப் பார்த்தேன். ஒன்றும் விளங்கவில்லையே. ஏன்? ​  
பதில்:-

ஆகா சந்தோஷம்! அதையெல்லாம் படித்துப் பார்க்கக் கூட இன்றைக்கு ஆள் இருக்கிறதா? 
நீங்கள் சொல்வது உண்மைதான். 
எனது ஆசிரியர் அமரர் வித்துவான் வேலன் அவர்கள்,
'அது சிவஞானபோதம் இல்லையடா சிவஞானபூதம்' என்று விளையாட்டாய்ச் சொல்வார். 
சிவஞானபோதத்தைப் படித்து விளங்க, புத்தித்தகுதி மட்டும் போதாது. 
ஆன்ம தகுதியும் வேண்டும் என்கிறார்கள். 
தத்துவநூல்களை யாருக்குச் சொல்லலாம் என்ற கேள்விக்கு,
ஆத்மவிசாரம் ஏற்படாதவர்களுக்கு அதனைச் சொல்லக் கூடாது என்பதாய்,
பதில்  சொல்லப்பட்டிருக்கிறது. 
ஆன்ம தகுதி இல்லாமல் புத்தித்தகுதியால் மட்டும் தத்துவம் கற்றால்,
பயன் விளையாதது மட்டுமல்ல பாவம் விளையும் என்பதையும் நாம் அறிய வேண்டும். 
ஆகவே விளங்காவிட்டால் அதிகம் கவலைப்படாதீர்கள். 
விளங்க வேண்டிய காலம் வரும்போது அது தானாய் விளங்கும்.

😟உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  சிவஞானபோதமோ? அப்படியெண்டால் என்ன பாருங்கோ?

கேள்வி 08:- இராமனுக்கும் இராவணனுக்கும் அப்படி என்னதான் வித்தியாசம் என்கிறீர்? 

பதில்:-
இராவணனை அவனுக்கு வேண்டப்பட்டவர்கள் மட்டும் விரும்பினார்கள். 
இராமனை எதிரிகள் உட்பட எல்லோரும் விரும்பினார்கள். 
அதுதான் வித்தியாசம்.

😟உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  இத்தால் தம்பிமாருக்கு வாரிதியார் சொல்லும் செய்தி! நீங்கள் பலபேரால் விரும்பப்படவேண்டுமே தவிர, பலபேரை விரும்பக்கூடாதாம். ஹி..ஹி..!

கேள்வி 09:- நீங்கள் என்னதான் தாக்கி எழுதினாலும், சம்பந்தரோ, விக்னேஸ்வரனோ எந்தப் பதிலும் சொல்வதில்லையே எதனால்?​

பதில்:-
தம்மீது சாட்டப்படும் குற்றங்களுக்குப் பதில் சொல்ல, பிழை செய்யாத நிமிர்வு தேவை. 
அது அவ்விரண்டு பேரிடமும் இல்லை என்பது ஒரு காரணம். 
'ரோஷநரம்பு, ரோஷநரம்பு' என ஊரில் ஒன்றைச் சொல்வார்கள். 
நீங்கள் சொன்ன இருவர்க்கும் அந்த நரம்பு அறுந்து பலகாலம் ஆகிவிட்டது என்பது மறு காரணம்.
அதைவிட முக்கியமான காரணம் ஒன்றும் இருக்கிறது. 
எங்களது 'இழிச்சவாய்த்' தமிழர்கள் குற்றம்சாட்டப்படுகிறவர்களுக்கு,
அனுதாபம் தெரிவிப்பார்கள் என்ற ரகசியம் அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. 
அதனால்த்தான் அவர்களால் அப்படியிருக்க முடிகிறது.

😟உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  நரம்பறுந்த வீணைகளோ?

கேள்வி 10:- ஒரு பட்டமும் வாங்காத நீங்கள் பெரிய, பெரிய பட்டம் பெற்றவர்களையெல்லாம் குறை சொல்வது நியாயமாகுமா? ​ 

பதில்:-
நியாயமில்லைதான்! ஆனால் துரதிஷ்டவசமாக அதைச் செய்யவேண்டியிருக்கிறது. 
தாம் பெற்ற பட்டங்களால் தம் புத்தியின் அளவை மறைக்க,
அல்லது பெரிதாக்கிக் காட்ட அவர்கள் நினைக்கிறபொழுது,
அப்பட்டங்களைக் கிழித்தெறிவதைத் தவிர வேறு வழி எனக்குத் தெரியவில்லை.

😟உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  'பட்ட' அறிஞர்களோ!
கேள்வி 11:- என்ன காணும்? இன உணர்ச்சிபற்றி அதிகம் பேசி நம்மக்களை உசுப்பேத்திக் கொண்டிருந்த நம்ம பிரபாகரனின் அண்ணனின் சத்தத்தைப் பாராளுமன்றத்திற்குப் போனதும் அதிகம் கேட்க முடிவதில்லையே?

பதில்:-
நீங்கள் என்னை உசுப்பேத்துகிறீர்கள் போல. 
'அறம் நிரம்பிய அருளுடை அருந்தவர்க்கு ஏனும் 
பெறலரும் திருப்பெற்றபின் சிந்தனை பிறிதாம்.' என்று, 
இதுபற்றிக் கம்பன் அன்றைக்கே சொல்லிவிட்டான். 
நீங்கள் சொன்ன செய்தியில் உண்மை இருக்கிறது. 
அன்றைக்கே கூட்டமைப்பினர் அவரைப் பாராளுமன்றத்திற்கு அனுப்பியிருந்தால்,
அவரால் இவ்வளவு பிரச்சினைகள் விளைந்திருக்காது. 
காலம் கடந்த ஞானத்தால் என்ன பயன்?

😟உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  பதில் சொன்னவரைவிடக் கேள்வி கேட்டவர் பெரிய நையாண்டிக்காரனாய் இருப்பார் போல.

 

கேள்வி 12:- கூட்டமைப்பின் அடுத்த தலைவராக யாரை நியமிக்கலாம் என்று நினைக்கிறீர்கள்?​

பதில்:-
நான் நினைத்து என்னாகப் போகிறது? 
ஆனாலும் நீங்கள் கேட்டபிறகு அந்தப் பதவிக்கு யார் வரலாம் என்று சிந்தித்துப் பார்க்கிறேன்.
மாற்றணியினரின் பக்கம் ஒரு காலும் இங்கு ஒரு காலுமாக,
தடுமாறி வாழ்ந்து கொண்டிருக்கும் கூட்டமைப்பின் சகோதரக் கட்சித் தலைவர்களுக்கு, 
அப்பதவியைத் தர முடியாது என்பது உறுதி.
தமிழரசுக்கட்சிக்குள் என்று பார்த்தால்,
சம்பந்தர் மெல்ல மெல்லப் பூச்சியம் நோக்கிச் செயலற்றுப் போய்க் கொண்டிருக்கிறார். 
ஆகவே அவரை அப்பதவியில் தொடர்ந்து வைத்திருக்க முடியாது. 
மாவையாருக்கு வயதாகிவிட்டது. 
ஒரு கூட்டு அணியைச் சுயநலமின்றி வழி நடத்த,
அவரது தலைமையும் உதவாது என்பது திண்ணம். 
எஞ்சியிருக்கும் மற்றவர்களுக்குள் மூவர்தான் கண் பார்வையில் விழுகின்றனர். 
நான் யார், யாரைச் சொல்லுகிறேன் என்று உங்களுக்கே தெரிந்திருக்கும். 
அவர்களிலும் சாணக்கியன் அரசியலுக்குப் புதியவர். 
அவர் முதிரச்சி அடைய இன்னும் சிலகாலம் தேவை. 
ஆற்றல் இருந்தாலும், தலைமையேற்கும் தகுதி,
இப்போதே அவருக்கு வந்துவிட்டதாய்ச் சொல்லமாட்டேன். 
அதனால் அவரும் போட்டியிலிருந்து விலக்கப்படுகிறார். 
எஞ்சியிருக்கும் இரண்டு போட்டியாளர்கள் சிறீதரனும் சுமந்திரனும்தான். 
இவ்விருவரில் ஒருவர் தமிழரசுக்கட்சிக்குத் தலைமையேற்கலாம். 
மற்றவர் கூட்டமைப்புக்குத் தலைமையேற்கலாம். 
இவ்விளையோரின் வருகையால் இவ்விரு கட்சிகளும் உயிர்ப்புப் பெற வாய்ப்பிருக்கிறது.
இவ்விருவரில் சுமந்திரன், 
மற்றவர்களோடு கொஞ்சம் 'அஜஸ்ட்' பண்ணப் பழகிக் கொள்ள வேண்டும். 
சிறீதரன் தேவை இல்லாமல் எல்லோரோடும் 'அஜஸ்ட்' பண்ணுவதை,
நிறுத்தப் பழகிக் கொள்ள வேண்டும் என்பது என் கருத்து.

😟உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  'திருப்பாச்சி அரிவாளைத் தீட்டிக்கிட்டு வாடா வாடா! சிங்கம் தந்த பிள்ளையின்னு தெரிய வைப்போம் வாடா வாடா'

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

ஹலோ... உங்களைத்தான்!.....
பாட்டையும் பாவத்தையும் மட்டும் இரசித்துவிட்டுப் போகாமல்,
நீங்களும் கச்சேரியில் இணைந்து கொண்டு,
சமூகம், தமிழ் மற்றும் சமயம் சார்ந்த உங்கள் கே
ள்விகளையும் அனுப்பி வையுங்கள்.
மின்னஞ்சல் முகவரி: mailuharam@gmail.com

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்