பாட்டும் நானே! பாவமும் நானே! பகுதி 42: -'கம்பவாரிதி' இலங்கை ஜெயராஜ்-

கேள்வி 01:- பக்றீரியாக்கள் நிறைந்த இருபதாயிரம் தொன் இயற்கை உரத்தை ஏற்றி வந்து, திருப்பி அனுப்பப்பட்ட சீனக்கப்பல் எங்கெல்லாமோ சுற்றிவிட்டு பெயரையும் நிறத்தையும் மாற்றிக்கொண்டு, பழையபடி நம் கடல் எல்லைக்குள் நுழைந்துவிட்டதாமே?​ 

பதில்:-

சீனக் கப்பல் மட்டும் சுற்றவில்லை. 
சீனாவும் நம்மைச் சுற்றத் தொடங்கிவிட்டது. 
அணைக்க வந்ததாய்க் காட்டிய சீன 'ட்றகனின்' நகக்கீறல்கள், 
நம் இலங்கை அரசின் முதுகில் ஆழப்பதியத் தொடங்கிவிட்டன. 
இது வெறும் கீறல்தான். கிழிப்பும், பிளப்பும் இனித்தான் நடக்கப்போகின்றன. 
பாவம், இலங்கை அரசின் நிலை கொதி எண்ணெய்க்குப் பயந்து,
நெருப்பிற்குள் குதித்த வடையின் கதைதான். 

😟உலகநாதரின் ஒப்பீனியன்​: 📣  'சுற்றுகிறார் தம்பி சுழலுகிறார், சுருக்காக நாட்டை விழுங்குகிறார்.' புதிய காத்தவராயன் பாட்டு எப்படி? ஹி..ஹி..
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 02:- அவுஸ்திரேலியக் கம்பன்விழாவில் உங்களது ஆசிரியர்களைப் பற்றிப் பேசியபோது நெகிழ்ந்து கண்ணீர் விட்டீர்கள். சிலபேர் அதனை நடிப்பு என்கிறார்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?​ 
பதில்:-
தாராளமாகச் சொல்லிவிட்டுப் போகட்டும்! அதுபற்றி எனக்குக் கவலையில்லை. 
வெறும் கல்லாகக் கிடந்த என்னைச் சிற்பமாக்கி, 
மற்றவர்கள் வணங்கும்படியாகச் செய்தவர்கள் எனது ஆசான்கள்தான். 
அவர்கள் இல்லை என்றால் இன்றைய ஜெயராஜ் இல்லை. 
எனக்கு அறிவை மட்டுமல்லாமல் அன்பையும் அவர்கள் போதித்தார்கள். 
அந்த அன்பால்த்தான் கற்றவர்களைவிடச் சமூகம் என்னை அதிகம் மதிக்கிறது. 
அவர்கள் தந்த நிழலில்த்தான் நான் நின்று நிமிர்ந்தேன். 
இன்று எனக்குக் கிடைக்கும் வசதிகள், மரியாதைகள் அனைத்தையும் அனுபவிக்கும்போது,
 அதைக் காண அவர்கள் இல்லையென நெஞ்சு ஏங்குகிறது. 
அந்த ஏக்கம் தான் கண்ணீராய் வடிந்தது. 
குருமாரின் வாழ்த்தொன்றே ஒருவனை உயர்த்தப் போதுமானது என்பதே,
என் வாழ்க்கை அனுபவம். 

🙏உலகநாதரின் ஒப்பீனியன்​: 📣 'குருவே சரணம்' இன்றைய இளையோர்க்குத் தேவையான பதில்.

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 03:- இன்றைய இலங்கை அரசின் இக்கட்டான நிலையை எப்படிப் பார்க்கிறீர்கள்?​  
பதில்:-

இலங்கை அரசின் நிலை மட்டுமல்ல, 
இலங்கை மக்களின் நிலையும் ஆபத்தின் விளிம்பை எட்டிக் கொண்டிருக்கிறது. 
இன்றைய நிலையில் அமெரிக்கா, சீனா, இந்தியா என்ற,
மூன்று கற்களின் மேல் வைக்கப்பட்ட பானையாகத்தான் இலங்கை அரசு இருக்கிறது. 
இந்த மூன்று கற்களில் எந்த ஒன்றை நகர்த்தினாலும் பானை விழப்போவது சர்வநிச்சயம். 
மூன்று கற்களையும் ஒன்றாக வைத்திருக்க முடியப்போவதும் இல்லை. 
சிங்களப் பெரும்பான்மை மக்கள்,
தம் இனத்துவேசத்தால் விளைந்திருக்கும் பெருந்தீமையை இனியாவது உணர்வார்களா? 
கூட இருந்த சகோதரனின் உரிமையை வழங்க மறுக்கப்போய்,
இன்று தம் உரிமையைப் பிறரிடம் இழக்கும் நிலைக்கு வந்திருக்கிறார்கள் அவர்கள். 
வள்ளுவன் 'பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்' என்று, 
சும்மா சொல்லவில்லையாக்கும். 

 🙂உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  'என்னாகிப் போவோம் இனி' நம் கவிஞர்கள் வெண்பா எழுதிப்பார்க்கலாமே!

 ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 04:- அரசாங்கத்தின் கூட்டுக் கட்சிகள், தேனிலவு முடிந்து மூட்டைமுடிச்சுகளைக் கட்டத் தொடங்கிவிட்டன போல்த் தெரிகிறதே?​  
பதில்:-

அரசியலில் நிரந்தரமான நண்பனும் இல்லை, 
நிரந்தரமான எதிரியுமில்லை என்பது,
பலராலும் அடிக்கடி சொல்லப்பட்டு வரும் ஒரு தொடர். 
பதவியில் கைகோர்க்க வந்தவர்கள் பழியிலும் கைகோர்க்கவா போகிறார்கள்? 
அரசு நாட்டு மக்களின் முழுமையான வெறுப்புக்கு ஆளாகிவிட்டது.
பொருளாதாரம் எப்போது வேண்டுமானாலும் சரியலாம் என்ற நிலைக்கு வந்துவிட்டது. 
பொருட்களின் விலைகள் 'சுனாமியாய்' கரை கடக்கத் தொடங்கிவிட்டன. 
எந்தப் பிரச்சினையிலிருந்தும் மீளமுடியாமல் தத்தளிக்கிறது நம் அரசகப்பல். 
அதனைப் பற்றிக்கொண்டு தாமும் மூழ்கிப்போக அக்கட்சிகளுக்குப் பைத்தியமா என்ன?

🕺உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 

 'முஸ்தபா முஸ்தபா டோண்ட் வொறி முஸ்தபா 
காலம் தான் தோழன் முஸ்தபா
டே பை டே! டே பை டே! வாழ்க்கைப் பயணம் டே பை டே!
மூழ்கின்ற ஷிப்பே ஃபிரண்ட்ஷிப்பா?' (திருத்தங்கள் எப்படீங்கோ?)

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 05:- சீன அரசு மக்கள் வங்கியைக் கறுப்புப் பட்டியலில் சேர்த்துவிட்டதாமே?​​ 

பதில்:- 

இது வெறும் மணியோசை தான். யானை இனித்தான் வரப் போகிறது. 
மக்கள் வங்கி என்ன மக்கள் வங்கி? வெகுசீக்கிரத்தில் நம் மக்களையும்,
அது அப்பட்டியலில் சேர்த்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. 

😟உலகநாதரின் ஒப்பீனியன்: 📣   'காக்கக் காக்க கதிர்வேல் காக்க'

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 06:- பாராளுமன்ற வாக்களிப்புகளில் அடிக்கடி தலைவர் ஒருபக்கமும் உறுப்பினர்கள் ஒருபக்கமுமாக வாக்களிப்பதும், கேட்டால் மனநீதிப்படி வாக்களிக்க அனுமதித்ததாகச் சொல்வதும் சிறுபிள்ளைத்தனமாக இல்லையா? முஸ்லீம் காங்கிரஸ் எங்கே போய்க் கொண்டிருக்கிறது?​ ​ ​  
பதில்:-

தனது ஆளுமையாலும், நிர்வாகத்திறனாலும், தீர்க்கதரிசனச் செயற்பாடுகளாலும் ,
சிதறிக் கிடந்த முஸ்லீம் மக்களை ஒன்று திரட்டி, 
பேரின அரசுகளோடு சரிக்குச் சமமாய் நின்று,
முஸ்லீம் மக்களின் உரிமைகளை வென்றெடுத்த,
மாபெரும் தலைவர் 'அஷ்ரப்' அவர்களை நினைத்துப் பார்க்கிறேன். 
அவரது அகால மரணம், முஸ்லீம் மக்களின் எழுச்சிக்கு எதிராக நடந்த விதியின் சதிதான்.
அத்தகைய ஒரு பெரும் தலைவன் திடீரென மறைந்தால்,
அந்த இடத்தில் குழப்பங்கள் விளைவது சகஜம்தான். 
இராமாயணத்தில் 'வாலி' என்கின்ற ஆற்றல் நிறைந்த வானர அரசன் இறந்த பின்பு,
  இராமனை நோக்கி, 'நான் உன்னோடு உடன் வந்து அடிமை செய்யப் போகிறேன்' என்கிறான், 
அறிவாளியாகிய அனுமன். 
அதற்கு இராமன் 'ஆற்றல் மிக்க ஓர் தலைவன் இருந்து ஆண்டு, 
திடீர் என அவன் மறைந்தால் அவ்விடத்தில் பல குழப்பங்கள் விளையும். 
ஆகவே அதனைச் சமாளிக்க அறிவாளியாகிய நீ,
இங்கே தான் இருக்க வேண்டும்' என்கிறான். 
மு.கா.வின் தற்போதைய நடவடிக்கைகள்,
இராமன் சொன்ன கூற்றை நிஜமாக்குமாப்போல் தெரிகின்றன. 
தலைவர் ஒரு பக்கமும் உறுப்பினர்கள் ஒருபக்கமுமாக வாக்களிப்பது,
விளையாட்டுத்தனமான வேலை. 
மனச்சாட்சியின்படி வாக்களிப்பு என்று சொல்லி வாக்காளர்களின் காதில் பூசு;சுற்றுகிறார்கள்.
எல்லோரையும் திருப்திப்படுத்தும் முயற்சி இது. 
எல்லோரையும்  திருப்திப்படுத்த நினைக்கிறவன்,
ஒருவரையும் திருப்திப்படுத்தமாட்டான் என்பது அனுபவச் செய்தி.
ஒன்று, எல்லோருமாகச் சேர்ந்து நாடகம் போடுகிறார்கள்,
அல்லது தலைவர் 'ரவூப் ஹக்கீமின்' கையை விட்டு,
'வண்டில் மாடுகளின் மூக்கணாங்கயிறு' நழுவத் தொடங்கிவிட்டது. 
இதில் எது உண்மை என்பதைக் காலம் விரைவில் வெளிப்படுத்தும்.

〽️உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  'மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஓவியம். நீ சொன்னால் காவியம்.'

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 07:- நீங்களும் கம்பன் விழாவை 'சூம்' வழியாக நடத்திப் பார்க்கலாமே?
பதில்:-

எங்களது கம்பன்விழாக்களின் விரிவு,
'சூமுக்குள்' அடங்கும் எல்லையைக் கடந்துவிட்டபடியால்,
அது சாத்தியமாகும் என்று தோன்றவில்லை.

👌உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  கம்பன் விருது காட்சிக்குள் அடங்குமா?

கேள்வி 08:- மனதில் கைவைத்துச் சொல்லுங்கள். நீங்கள் வாழ்க்கையில் பிழைகள் செய்ததே இல்லையா? செய்திருந்தால் ஒரு கேள்வி. உங்களுக்கு புகழ்தரத்தக்க விடயங்களை எல்லாம் வெளிப்படுத்துகிற நீங்கள் ஏன் அப்பிழைகளை பகிரங்கப்படுத்துவதில்லை?

பதில்:-
நிறையப்பிழைகள் செய்திருக்கிறேன்! 
பிழைகளே செய்யாதவர்கள் என்று,
உலகில் ஒருவரும் இருக்கமாட்டார்கள் என்பது என் கருத்து. 
என்னைக் காப்பாற்றிக் கொள்ள இதனைச் சொல்வதாய்த்; தயவு செய்து நினைக்காதீர்கள். 
யதார்த்தத்தைச் சொல்கிறேன். அவ்வளவுதான். 
அப்படியானால் பிழைகள் செய்த உங்களை,
நாம் ஏன் மதிக்க வேண்டும் என்று கேட்பீர்கள்?
மதிப்பதும் மதிக்காததும் உங்கள் விருப்பம். 
அதுபற்றிய எந்த ஏக்கமும் எனக்குள் இல்லை. 
நீங்கள் கேட்டபடியால் ஒன்றைச் சொல்கிறேன். 
என் வாழ்க்கை இளமையின் கட்டுப்பாட்டிலிருந்து, 
நிதானித்த அறிவின் கட்டுப்பாட்டுக்குள் அது வந்தபிறகு,
ஒவ்வொரு நாளும் நான் என்னைச் சுத்தப்படுத்தியபடி இருக்கிறேன். 
ஒன்றை என்னால் உறுதியாய்ச் சொல்ல முடியும். 
நேற்றிருந்த ஜெயராஜைவிட இன்றிருக்கும் ஜெயராஜூம், 
இன்றிருக்கும் ஜெயராஜைவிட நாளை இருக்கப்போகும் ஜெயராஜூம்,
நிச்சயம் நல்லவர்களாய்த்தான் இருப்பார்கள். அது உறுதி.
அடுத்த உங்களது கேள்விக்கும் பதில் சொல்லிவிடுகிறேன். 
மற்றவர்களுக்குத் தெரிந்தால் என்ன தெரியாமல் விட்டால் என்ன, 
நான் செய்த பிழைகளை என் நெஞ்சு அறியும். 
என் பிழைகளை அறிந்து மற்றவர்கள் செய்யப் போகிற துன்பத்தைவிட.
என் நெஞ்சு எனக்குச் செய்யும் துன்பம் அதிகம். 
அதனால் அவற்றைப் பகிரங்கப்படுத்துவதால்,
எனக்கு ஆகப்போகும் நஷ்டம் ஒன்றுமில்லை. 
அப்படியிருந்தும் என் பிழைகளை நான் பகிரங்கப்படுத்தாதற்குக் காரணம் இருக்கிறது. 
அவற்றைப் பகிரங்கப்படுத்துவதால் மற்றவர்களுக்கு எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை. 
ஏற்படுமானால் அதனையும் வெளிப்படுத்தத் தயங்கமாட்டேன்.

😇உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  No Commence. Only hats off.

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

ஹலோ... உங்களைத்தான்!.....
பாட்டையும் பாவத்தையும் மட்டும் இரசித்துவிட்டுப் போகாமல்,
நீங்களும் கச்சேரியில் இணைந்து கொண்டு,
சமூகம், தமிழ் மற்றும் சமயம் சார்ந்த உங்கள் கே
ள்விகளையும் அனுப்பி வையுங்கள்.
மின்னஞ்சல் முகவரி: mailuharam@gmail.com

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்