பாட்டும் நானே! பாவமும் நானே! பகுதி 43: -'கம்பவாரிதி' இலங்கை ஜெயராஜ்-

கேள்வி 01:- ஆணாதிக்கம் நீங்கும் என்று நினைக்கிறீர்களா? 

பதில்:-

நீங்கக் கூடாது என்று நினைக்கிறேன். 
ஒரு நிர்வாகம் சிறக்கவேண்டுமானால் அதில் ஆள்பவர், ஆளப்படுபவர் என,
இருவகையானோர் இருத்தல் அவசியம். 
அங்ஙனமன்றேல் அந்த நிர்வாகம் சீர்குலைந்துவிடும். 
அடுத்து ஆள்பவராய் யார் இருப்பது? ஆளப்படுபவராய் யார் இருப்பது? எனும் கேள்வி பிறக்கும். 
அவரவர் தகுதிகொண்டே அந்த விடயத்தைத் தீர்மானிக்க வேண்டும் என்பதே பதிலாம்.
ஆளப்படுவோரை விட ஆள்பவரின் பொறுப்பே ஒரு நிர்வாகத்தில் அதிகமாம்.
நிர்வாகத்தில் நிகழும் சரி, பிழைகளுக்கு அவரே பொறுப்பேற்றல் வேண்டும். 
அதனால் ஆள்பவர் ஆளப்படுவோரை ஆதிக்கம் செலுத்தும் வல்லமை உடையவராய் இருத்தல்,
  தவிர்க்கமுடியாததாகிறது. 
செலுத்துகிற சாரதியின் ஆற்றலைக் கொண்டே செல்கின்ற வாகனத்தின் சிறப்பு நிகழும். 
சாரதியின் கை நழுவுமானால் வாகனம் விபத்துக்கு ஆளாவது நிச்சயமாம்.
கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் நான் ஏதேதோ சொல்வதாய் நீங்கள் நினைப்பீர்கள். 
இனி உங்கள் கேள்விக்குப் பதில் சொல்கிறேன். 
ஆண், பெண் இணைந்த குடும்ப நிர்வாகத்திலும் மேற்சொன்னவை உண்டு. 
அங்கும் ஒருவர் ஆள்பவராகவும் மற்றவர் ஆளப்படுபவராகவும் இருந்தால்த்தான்,
குடும்ப நிர்வாகம் சிறக்கும். 
ஆண், பெண் இருவரில் எவர் ஆளும் தகுதியோடு இருக்கிறார்? 
எவர் ஆளப்படும் தகுதியோடு இருக்கிறார்? என்பதை வைத்தே,
குடும்பத் தலைமை வழங்கப்படுதல் அவசியம்.
இயற்கை அமைப்பில் பெண் உணர்வு சார்ந்தவள். 
அதனால் அவளிடம் ஸ்திரத்தன்மை எப்போதும் குறைவாகவே இருக்கும். 
அதுமட்டுமன்றி அவளது உடல் அமைப்பும் மென்மை சார்ந்ததாய் அமைந்திருப்பதால்,
அவளால் வலிமையான பகைகளை எதிர்க்கொள்ளுதல் முடியாது.
ஆணின் அமைப்பு இதற்கு நேர்மாறானது. 
அவன் பெண்ணைவிட அறிவு சார்ந்தவனாகவும்,
உடலால் வன்மை பெற்றவனாகவும் இயற்கையாய் அமைக்கப்பட்டுள்ளான். 
இத் தகுதிகளை ஆராய்ந்து பார்க்கும்போது, 
ஆணே ஓர் குடும்பத்தில் ஆளும் தகுதிபெற்ற தலைவனாய் ஆக முடியும் என்பது தெளிவாகிறது.
நான் இதைச் சொன்னதும்,
அறிவு சார்ந்த ஆளுமை பெற்ற ஒருசில பெண்களை எடுத்துக் காட்டி,
என்னோடு நீங்கள் சண்டைக்கு வருவீர்கள். 
விதி என்ற ஒன்று இருந்தால் விதிவிலக்கு என்ற ஒன்று இருக்கத்தான் செய்யும். 
நீங்கள் சொன்னவர்கள் எல்லாம் விதிவிலக்கானவர்கள்.
சிறுபான்மையாய் இருக்கும் அவர்களை வைத்து,
பெரும்பான்மையினோருக்கு விதி சமைக்க முடியாது. 
அதனால் உங்கள் கருத்து நிராகரிக்கப்படுகிறது.
இன்று பெண்விடுதலைக்காரர்களினால் உசுப்பேற்றப்பட்டு, 
தம் நிலை உணராது, இயற்கைக்கு முரணாக, 
தம்மை வலிமையாய்க் காட்டித் தமக்கும் ஆளும் திறமை உண்டு என்று,
சில பெண்கள் உலகத்தையும் தம்மையும் ஒருமித்து ஏமாற்றி வருகிறார்கள். 
ஆள்பவராய்த் தம்மைக் காட்டிக்கொள்ளும் அவர்களின் பொய்முகம்,
தக்க தருணங்களில் கலைந்துபோகும். 
அதனால் அவர்கள் மட்டுமன்றி அவர்களின் குடும்பமும் பாதிக்கப்படும். 
அதனால்த்தான் நம் தமிழ் மூதாதையர்கள் குடும்பத் தலைவனாய் ஆணையே ஏற்றுக் கொண்டனர்.
தலைவனான அவனிடம் ஆதிக்கத் தன்மை இருப்பது தவிர்க்கமுடியாதது மட்டுமன்றி,
அவசியமும் ஆகிறது. அதனால்த்தான் ஆணாதிக்கம் அவசியம் என்கிறேன். 
உண்மையை உணர்த்துவதற்காகக் 'கொச்சையாய்' ஓன்றைச் சொல்லி,
பதிலை முடிக்க வேண்டியிருக்கிறது. 
ஆணாதிக்கம் வேண்டாம் என்கின்ற பெண்கள்,
எல்லா விடயத்திலும் அதைச் சொல்ல முன் வருவார்களா? 
ஆதிக்கம் செய்யமுடியாத ஆணால் ஓரு பெண் திருப்தியடைய முடியுமா? 
(நான் எதைச் சொல்கிறேன் என்பது உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன்.)

😜உலகநாதரின் ஒப்பீனியன்​: 📣 'சீய்ய்ய்... வாரிதியார் வரவர செக்ஸாப் பேசுறார். எனக்கு வெக்கம் வெக்கமா வருகுதுங்கோவ்வ்வ்' 

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 02:- நம்முடைய தற்போதைய ஜனாதிபதி செய்த தவறுகளை வரிசைப்படுத்துங்கள் என்று கேட்டால், அதில் முதல் தவறாய் எதைச் சொல்வீர்கள்?​ 
பதில்:-
பிழைகளின் வரிசை மிக நீண்டது. இன்னும் நீள்கிறது. 
முதல் பிழை என்று கேட்டதால் சொல்கிறேன். 
தேர்தலில் தன்னை வெற்றிபெறச் செய்த,
சிங்கள, பௌத்த மக்களின் நலன் நோக்கிச் செயற்படுவேன்,
என்னும் கருத்துப்பட அன்று அவர் பேசியதே, 
ஜனாதிபதியானதும் அவர் விட்ட முதல் பிழையாய் எனக்குத் தோன்றுகிறது. 
ஓர் ஜனநாயக நாட்டில் இக்கூற்று மிகமிகத் தவறானது.
ஜனநாயக ஆட்சியில் தேர்தல் நடைபெறும் வரைதான்,
வாக்களிக்கும் ஆதரவாளர்களினதும் தனது கட்சியினதும் தலைவராய் ஒருவர் இருப்பார்.
தேர்தலில் வெற்றி பெற்றபின்,
அவர் அனைத்து மக்களினதும் தலைவராய்த் தன்னைக் கருதல் வேண்டும். 
இந்நிலை தவறின் ஜனநாயகம் தோற்றுவிடும். 
அதனால்த்தான் ஜனாதிபதியின் அப்போதைய அக்கூற்றினை முதல்தவறு என்கிறேன்.

🧐உலகநாதரின் ஒப்பீனியன்​: 📣 இலங்கையில் ஜனநாயகமா? இந்தக் கிண்டல்தானே வேண்டாம் என்கிறது. 

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 03:- பக்றீரியாக்களுடன் அனுப்பப்பட்ட சீனாவின் இயற்கை உரத்தைத் திருப்பி அனுப்பியமைக்காகச் சீனாவின் நிறுவனம் ஒன்று இலங்கையிடம் எட்டு மில்லியன் அமெரிக்க டொலர்களை நஷ்டஈடாகக் கேட்டு இருக்கிறதே?  
பதில்:-

சீனா தன் சுயரூபத்தை மெல்லமெல்லக் காட்டத் தொடங்கிவிட்டது. 
இதனை முன்னரே நான் சொல்லியிருக்கிறேன். 
மக்கள்வங்கியைத் தனது கறுப்புப் பட்டியலில் சேர்த்ததில் தொடங்கி, 
இன்று நஷ்டஈடு கேட்டிருப்பது வரையான செயல்கள்,
அதனைத்தான் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. 
திருப்பி அனுப்பிய கப்பலை வேற்றூருக்குக் கொண்டு சென்று பெயின்ற் மாற்றி, 
பெயர் மாற்றித் திருப்பி இங்கு கொண்டுவந்த சீனாவின் செயலில்,
தன் வெற்றிக்காக அது என்னவெல்லாம் செய்யும் என்பது தெரிய வந்திருக்கிறது.
பிராந்திய அரசியலில் மறைமுகமாய்த் தலையிட்டிருக்கும் மற்ற வல்லரசுக் 'கணவர்களின்'
பலத்தை மறந்து, சீனக் கணவருக்கு மட்டும் தன் கற்பைக் காட்ட நினைத்தது இலங்கை. 
இன்று அதன் மற்றைக் கணவர்கள் நெருக்கடி செய்யத் தொடங்க,
அதன் நிலை இரண்டுங்கெட்டானாகி இருக்கிறது. 
இலங்கையைக் காசுக்கு வாங்கிய கணவனான சீனா, 
அந்தக் காசைக் கொண்டே அதனை அடிமை கொள்ளப்பார்க்கிறது. 
இலங்கையின்பாடு இனிச் சங்கடம்தான். மற்றவர்களின் உரிமையைப் பறிக்கப் பார்த்து, 
இன்று தன் உரிமையை இழக்கத் தொடங்கியிருக்கிறது சிங்கள அரசு. 
இதில் தமிழர்களாகிய நாமும் நட்டப்படத்தான் போகிறோம். 
வெகுசீக்கிரத்தில் வேறுபல 'திறில்' காட்சிகளும் அரங்கேறுவதை,
நாம் காணக்கூடியதாய் இருக்கும் என்றே நினைக்கிறேன். 

 🙂உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  'ஒருவனைப் பற்றி ஓரகத்திரு' ஹி.. ஹி..

 ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 04:- ஈழத்தமிழர்கள் பிரச்சினையைப் பற்றிப் பேச அமெரிக்காவின் அழைப்பின் பேரில் சம்பந்தர் ஐயா மூவரை அனுப்பி வைக்கப் போகிறாராமே?  
பதில்:-

பார்த்தேன், படித்தேன். இந்தச் செய்தியை வைத்துப் பல விடயங்களைக் கணிக்க முடிகிறது. அவற்றைத் தனித்தனியாய்க் கீழே குறிப்பிடுகிறேன்.
இலங்கையை அமெரிக்கா வெளிப்பட மிரட்டத் தொடங்கியிருக்கிறது என்பது ஒன்று.
இலங்கை விடயத்தில் சீனாவைக் கட்டுப்படுத்த இந்தியாவோடு அமெரிக்கா கூட்டுச்சேரத் தொடங்கிவிட்டது என்பது இன்னொன்று.
உலக சமுதாயத்தில் ஜனநாயகத் தன்மையுள்ள நாடுகளுடன் இணைய முடியாமல் சீனா தனித்து நிற்கிறது என்பது மற்றொன்று.
சீனாவின் வலிமைமிக்க வளர்ச்சி மேற்குலக ஜனநாயக நாடுகள் பலவற்றை ஆட்டங்காண வைத்திருக்கின்றது என்பது பிறிதொன்று.
ஆயிரம்தான் மற்றைக் கட்சிகள் 'தலைதலையாய்' அடித்துக் கொண்டாலும் உலக அரங்கில் ஈழத்தமிழர் விடயத்தில் இன்றைக்கும் கூட்டமைப்புத்தான் அங்கீகாரம்  பெற்றிருக்கிறதென்பது வேறொன்று.

😄உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 உலக அரங்கச் செயற்பாடுகளில் சுமந்திரன் தவிர்க்க முடியாதவராகிறார் என்பதை வாரியார் சுட்டிக்காட்டாமல் விட்டுவிட்டாரே! ஏதாவது 'லடாயோ'?

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 05:- எந்நேரமும் இலங்கையில் பொருளாதார வெடிப்பொன்று நிகழலாம். (நுஉழழெஅiஉ டிடயளவ) என வெளிநாட்டுப் பொருளாதாரச் சஞ்சிகை ஒன்று தெரிவித்திருக்கிறதாமே?​​ 

பதில்:- 

நானும் படித்தேன். கைமீறிப் போகும் தேவைகளை நிறைவேற்றுவதற்காய், 
வரையறைகளை மீறிப் பணத்தாள்களை இலங்கை அச்சிடத் தொடங்கிய பொழுதே, 
அதற்கான அத்திவாரம் இடப்பட்டு விட்டது. 
பொருட்களின் இன்றைய விலையேற்றமும், 
பரவலாக நிகழத் தொடங்கியிருக்கும் மக்கள் போராட்டங்களும், 
ஆளுங்கட்சியின் கூட்டணிக்கட்சிகள் காட்டத் தொடங்கியிருக்கும் எதிர்ப்பு நடவடிக்கைகளும், 
மேற்சொன்ன விடயத்தின் விளைவுகள்தான் என்று எண்ணத் தோன்றுகிறது.
  'பொருளில்லார்க்கு இவ்வுலகு இல்லை' என்றார் வள்ளுவப் பெருமான். 
இவ்வுலகு மட்டுமல்ல ஆட்சியும் இல்லாமல் போக வாய்ப்பிருக்கிறது. 
எந்த நிமிடமும் நாம் வங்கிகளிலும் கைகளிலும் வைத்திருக்கும் பணம்,
பெறுமதியற்றுப் போகலாம் போல்த் தெரிகிறது. 

😟உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  'எத்தனையைத் தாங்கிப்போட்டம். இதைத் தாங்க மாட்டோமா? ஹி..ஹி..'

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 06:- ஒருபக்கம் கொரோனாவின் கொடிய விளையாட்டு, இன்னொரு பக்கம் சீனா தரும் நெருக்கடி. மற்றொரு பக்கம் இந்திய, அமெரிக்க அரசாங்கங்களின் அச்சுறுத்தல், அதைவிட நாடெங்கும் தோன்றியிருக்கும் அரச எதிர்ப்பலைகள். என்ன செய்யப் போகிறது நம் அரசாங்கம்?​ ​ ​  
பதில்:-

பழைய தமிழ்ப்பாடல் ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. 
ஒருவனது வீட்டில் நின்ற மாடு கன்று போடத் தொடங்கியதாம். 
அப்போது பார்த்து மழையும் கொட்டத் தொடங்க,
அம்மழையின் வேகத்தால் அவன் இருந்த வீடு இடிந்து வீழ்ந்ததுவாம். 
அதில் அகப்பட்டு அவன் மனைவி காயப்பட்டாளாம். 
உதவிக்கு அழைக்கலாம் என்று பார்த்தால் வீட்டின் வேலைக்காரன் இறந்து கிடந்தானாம். 
இத்தனைக்கும் நடுவில் மழை பெய்கையில் நெல் விதைக்காவிட்டால்,
அடுத்த ஆண்டு இன்னும் வறுமை சூழுமே எனும் அச்சத்தில்,
போட்டதைப் போட்டபடி விட்டுவிட்டு,
வீட்டில் கிடந்த விதைநெல்லைக் கொண்டு அவன் வயல்நோக்கி ஓடினானாம். 
அவனை வழியில் நின்ற பழைய கடன்காரன் ஒருவன் மறித்து,
கடனுக்காக இவ்விதை நெல்லைக் கொடு என்று அதனையும் பறித்துக் கொண்டானாம். 
அடுத்தடுத்து வந்த இந்தச் சோதனைகளால், சோர்வுற்று அவன் வீடு திரும்ப, 
வழியில் அவன் மனைவி இறந்த செய்தியை ஒருவன் கொண்டுவந்தானாம்.
பதறிப் போன இவன் வீட்டிற்குள் நுழைய முயல,
அந்நேரம் பார்த்துத் தவிர்க்க முடியாத விருந்தினன் ஒருவன்,
வீட்டுவாசலில் வந்து நின்றானாம். 
தன் துன்பத்தை மறைத்து வந்தவனை உபசரிக்கலாம் என்று,
உடைந்த வீட்டிற்குள் நுழைய அங்கிருந்த பாம்பொன்று அவனைக் கடித்ததாம். 
பரிதவித்துப் போன அவன் வெளியில் ஓடிவர, 
அரச ஊழியர்கள் நிலவரிப்பணம் கேட்டு வந்து நின்றனராம். 
அந்நேரம் பார்த்துக் கோயிலுக்கான மாதாந்தப் படிக்காசைக் கேட்டு,
குருக்களும் வந்து கைநீட்டினாராம். 
இந்தச் செய்தியைச் சொல்லும், 
இராமச்சந்திரக் கவிராயர் எழுதிய பாடலை இனிப் பாருங்கள். 
 
ஆவீன மழை பொழிய இல்லம் வீழ அகத்தடியாள் மெய் நோக அடிமை சாக
மாவீரம் போகுதென விதைகொண்டோட வழியிலே கடன்காரன் மறித்துக் கொள்ள
சாவோலை கொண்டொருவன் எதிரே தோன்ற தள்ளவொணா விருந்து வரச் சர்ப்பம் தீண்ட
கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக் குருக்கள் வந்து தட்சணைகள் கொடு என்றாரே!
 
இதனையே 'போகூழ்க்' காலம் என்பர். 
கடும்பாவம் செய்த ஒரு மனிதருக்கு இயற்கை,
இத்தகைய தண்டனையை வழங்கும் என்கிறார்கள் பெரியவர்கள்.
நம் அரசாங்கத்திற்கும் இது 'போகூழ்க்' காலம் என்றே நினைக்கிறேன். 
அவர்கள் என்ன பாவம் செய்தனரோ யார் அறிவார்?

👍உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  வாரிதியார் கைப்புண்ணுக்கு கண்ணாடி தேடுகிறார் போல.

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

ஹலோ... உங்களைத்தான்!.....
பாட்டையும் பாவத்தையும் மட்டும் இரசித்துவிட்டுப் போகாமல்,
நீங்களும் கச்சேரியில் இணைந்து கொண்டு,
சமூகம், தமிழ் மற்றும் சமயம் சார்ந்த உங்கள் கே
ள்விகளையும் அனுப்பி வையுங்கள்.
மின்னஞ்சல் முகவரி: mailuharam@gmail.com

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்