பாட்டும் நானே! பாவமும் நானே! பகுதி 44: -'கம்பவாரிதி' இலங்கை ஜெயராஜ்-

கேள்வி 01:- தமிழ் இளைஞர்கள் உயர்வு பெற இன்றைய நிலையில் எது வேண்டும்?(கல்வியா?, செல்வமா?, வீரமா?)​ 

பதில்:-

கல்வி, செல்வம், வீரம் என்பவற்றைவிட ஆளுமைதான் முக்கியம் என்று நினைக்கிறேன். 
பல தசாப்தங்களாய் எல்லோருக்கும் அடிமைப்பட்டு, அடிமைப்பட்டு வாழ்ந்து பழகிவிட்டதால்,
(இயக்கங்கள் உட்பட) சுயமிழந்து போய் நிற்கிறது நம் இளைய தலைமுறை. 
அதனால்த்தான் அவர்களிடம் ஆளுமைக் குறைவு ஏற்பட்டிருக்கிறது. 
நமது பிள்ளைகள் கல்வியிலும், செல்வத்திலும் எந்தக்குறையும் இல்லாமல்த்தான் இருக்கிறார்கள்.
வீரத்திற்கும் குறைவிருப்பதாய்த் தெரியவில்லை. 
(வாள்வெட்டுக் கூட்டத்தைச் சொல்லவில்லை.)
இவ்வளவும் இருந்தும், நம் மண்ணைத் தாண்டிச் சென்றுவிட்டால், 
ஏதும் அற்றவர்கள்போல் அவர்கள் தம்மைத்தாமே தாழ்த்தி நிற்கிறார்கள். 
உள நிமிர்வின்மைதான் இதற்கான முதற்காரணம்.
மொழி அறிவின்மை அடுத்த காரணம். 
இவை இரண்டையும் நம் இளைஞர்களுக்கு ஊட்டிவிட்டால்,
நம் தமிழ் மண் பழைய பெருமையை மீண்டும் பெற்றுக் கொள்ளும் என்று நினைக்கிறேன். 

😜உலகநாதரின் ஒப்பீனியன்​: 📣 'ஆளுமா டோலுமா ஆளுமா டோலுமா ஐசாலங்கடி மாலுமா - ச்சும்மா..ச்சும்மா.....'

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 02:- தமிழினம் தொன்மையானது என்பது உண்மையா?​ 
பதில்:-
இல்லை. அது மிக மிகத் தொன்மையானது என்பதுதான் உண்மை.

🧐உலகநாதரின் ஒப்பீனியன்​: 📣 கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து...???​ 

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 03:- இணையப் பயன்பாடு நன்மையா? தீமையா? உங்கள் கருத்தென்ன?  
பதில்:-

பொதுப்பட இக்கேள்விக்குப் பதில் சொல்லமுடியாது என்று நினைக்கிறேன்.
எல்லா விடயங்களிலும் நன்மையும் தீமையும் கலந்துதான் இருக்கின்றன. 
உயர நினைக்கிறவர்கள் தீமையை விலக்கி நன்மையை மட்டும் பெற்றுக் கொள்வார்கள்.
இணையத்தின் கதையும் அதே கதைதான்.

 🙂உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  'பக்கத்து வீட்டுத்தம்பி, அதற்குள் நல்லதும் இருக்கிறதா? என்று கேட்கிறான். ஹி..ஹி..'

 ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 04:- அமெரிக்காவின் அழைப்பின் பேரில் சுமந்திரன் குழுவினர் நம் ஈழத்தமிழர் பிரச்சினையை ஆராயச் சென்றிருப்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?​  
பதில்:-

ஒரு பக்கம் மகிழ்ச்சியும்! மறுபக்கம் கவலையும்! தோன்றுகின்றன. 
மகிழ்ச்சிக்கான காரணத்தை முதலில் சொல்கிறேன். 
உலக வரைபடத்தில் இலங்கை புள்ளியாய் நிற்கும் ஒரு சிறிய நாடு. 
அந்த நாட்டிற்குள் இருக்கும் இன்னொரு சிறிய புள்ளிதான் நம் ஈழத்தமிழினம். 
இந்தச் சிறிய கூட்டத்தை நாம் எது செய்தாலும் யார் கேட்கப் போகிறார்கள்? 
எனும் துணிவில்த்தான் சிங்களப்பேரினவாதிகள் நம்மை அநியாயத்திற்கு நசுக்க முயன்றார்கள்;. 
அத்தகைய சிறிய தமிழினத்தின் பிரச்சினையைப் பற்றிப்பேச, 
உலகத்தின் முதன்மையான வல்லரசு என்று போற்றப்படும் அமெரிக்கா,
நம் தலைவர்களை அழைத்திருக்கிறது என்றால் மகிழாமல் எப்படி இருக்க முடியும்? 
ஏற்கனவே வல்லரசுகளின் போட்டியில் 'அல்லாடிக்' கொண்டிருக்கும் இலங்கை அரசுக்கு,
இது பேரிடியான செய்திதான். 
உலகின் மிகப்பெரிய வல்லரசினது, ஈழத்தமிழர் மீதான அக்கறை,
எமக்கு மகிழ்ச்சியைத் தருவது நிஜமேயாம்.
இனிக் கவலைக்கான காரணத்தைச் சொல்கிறேன். 
உலகின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஒரு மிகச் சிறிய நாட்டில் வாழும், 
ஒரு மிகச் சிறிய இனத்திற்கு, கைநீட்டும் அமெரிக்காவின் செயலில், 
நான் மனிதாபிமானத்தை மட்டும் பார்க்கவில்லை. 
அதற்குள் பல 'சூத்திரங்கள்' அடங்கியிருப்பதாகவே தோன்றுகிறது. 
இறுதிப்போரில் துடிக்கத் துடிக்க ஆயிரக்கணக்கானோர் இங்கு இறந்து கொண்டிருந்தபோது,
மௌனமாய்ப் பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்காவிற்கு, 
எம்மீது ஏற்பட்டிருக்கும் திடீர்ப்பாசம் மகிழ்ச்சிக்குப் பதிலாய் கவலையே தருகின்றது. 
அமெரிக்கா மட்டுமல்ல உலகின் வல்லரசுகள் அனைத்துமே கழுகுகள்தான். 
அவை ஏதோ ஒன்றின்மீது அக்கறை காட்டுகின்றன என்றால், 
அது அவற்றின் சுயநலத்தின் வெளிப்பாடாய்த்தான் இருக்கும் என்பதில்,
எந்த ஐயத்திற்கும் இடமில்லை. 
தமது இலாபம் நோக்கித் திடீரென ஒன்றைப் பற்றுதற்கும், 
திடீரென ஒன்றைக் கைவிடுவதற்கும் அவை என்றும் தயங்கா. 
அதனால் ஆழ்ந்து சிந்திக்க அமெரிக்காவின் எம்மீதான அக்கறை, 
மகிழ்ச்சிக்கப்பால் அச்சத்தைத்தான் ஊட்டுகிறது.
பதில் நீள்வது தெரிகிறது. 
ஆனாலும் முக்கியமான ஒன்றைச் சொல்லித்தான் பதிலை முடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். 
பல்லாண்டுகளாய் நம் அருகில் உறவோடு வாழ்ந்த சிங்களவர்கள்,
தேவையின்றி எம் இனத்தைப் பகைக்கப்போய், 
இன்று தம் மண்ணை வல்லரசுகளுக்குக் கூறுபோட்டு விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
கைதூக்கிவிடும் என்று அவர்கள் நினைத்த சீனா, 
இன்று தேசத்தின் இறையாண்மையைக் கைப்பற்ற நினைத்து நிற்கிறது. 
ஏதும் செய்யமுடியாத நிலையில் இன்று நம் சிங்கள அரசு தடுமாறுகிறது. 
இதே நிலை நாளை நமக்கும் ஏற்படலாம்.
சீன ட்றகனைப் போலவே அமெரிக்கக் கழுகும் எதையும் விழுங்க வல்லதுதான்.
என்னதான் இருந்தாலும், இந்த இலங்கைதான் நம் சொந்தத்தேசம். 
இதனை நாம் என்றும் மறந்துவிடலாகாது. 
இத்தேசத்தை எக்காரணம் கொண்டும் நாம் வேற்றவருக்கு விட்டுக்கொடுத்துவிடக் கூடாது.
சிங்களவர்கள் செய்த முட்டாள்த்தனத்தை,
அறிவாளிகள் என்று சொல்லிக்கொள்ளும் தமிழர்களும் செய்தலாகாது. 
அமெரிக்காவின் உதவியைப் பெற்று நம் இனப்பிரச்சினையைத் தீர்க்க முயலும் அதேவேளை, 
நம் இலங்கைத் தேசத்தின் சுயாதீனத்தைப் பாதுகாப்பதும் நம் கடமையாகும்.

😄உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 வாரிதியார், உண்மையைச் சொல்லிப் பலரிடம் அடிவாங்கப் போகிறாருங்கோ.

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 05:- ஒரே நாடு, ஒரே சட்டம் என்று, நம் இலங்கை அரசு தூக்கியிருக்கும் புதிய 'காவடி'யைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?​​​ 

பதில்:- 

புதிய காவடி என்று சரியாய்ச் சொன்னீர்கள்! 
தற்போதைய அரசைப் பல விடயங்களாலும்,
வெறுத்துக் கொந்தளித்துக் கொண்டிருக்கும் சிங்கள மக்களை, 
இந்தக் 'காவடி ஆட்டத்தால்' கவரலாம் என்று,
மீண்டும் தப்புக் கணக்குப் போடுகிறார்கள் ஆட்சியாளர்கள். 
வேறுபட்ட மொழிகள் பேசுகின்ற வேறுபட்ட மதங்களைச் சார்;ந்த மக்கள் வாழுகின்ற நாடு இது.
 
ஒவ்வொருவரும் தத்தமக்கெனத் தனிப்பட்ட,
கலாசாரம், பண்பாடு, வாழ்க்கைமுறை என்பவற்றைக் கொண்டு வாழ்கிறார்கள்.
அவர்கள் அனைவரையும் ஒரே 'கூட்டிற்குள்' அடைத்து ஒன்றாக்க நினைப்பது தவறு! 
புலியையும் பூனையையும் ஒரே கூட்டிற்குள் அடைத்து வைத்தல் கூடுமா? 
இந்நாட்டு மக்கள் அனைவரும் தத்தம் அடையாளத்தோடு வாழவேண்டுமானால், 
சட்டத்தில் சில பாகுபாடுகள் இருப்பது தவிர்க்க முடியாதது. 
அதனை மாற்ற நினைப்பது முட்டாள்த்தனம். 
அப்படி மாற்றினால் இந்த நாட்டில் இன்னும் இனவேறுபாடுகள்தான் வெடிக்கும். 
இவர்களுக்கு நாட்டுமக்களை ஒன்றாக்கும் எண்ணம் இல்லை என்பது,
அவர்கள் அமைத்த குழுவிலிருந்தே தெரிகிறது. 
தீர்க்க வேண்டிய பிரச்சனை ஆயிரம் இருக்க,
தேவையில்லாத பிரச்சினைகளை மீண்டும் மீண்டும் தொடுகிறார்கள்.
'விநாசகாலே விபரீத புத்தி' என்பது இதனைத்தான்.

😟உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  'யுவர் ஆனர்' முதலில் இருக்கிற சட்டத்தை மதிக்கப் பழகட்டும் பின் மாற்றுவது பற்றிச் சிந்திக்கலாம்.

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 06:- கூட்டமைப்பினர், 'மாவையாரை' மீண்டும் எம்.பி. ஆக்கப் போகிறார்களாமே?​ ​  
பதில்:-

அசையாமல் நிற்கும் தேரை அசைக்கப் புது வழி கண்டுபிடித்திருக்கிறார்கள் போல.
சம்பந்தனுக்குப் பிறகு கூட்டமைப்பின் தலைவராகச் சுமந்திரன் வரவேண்டுமானால், 
ஒன்றிணைந்த கட்சிகளின் ஏதோ ஒன்றின் தலைவராக அவர் இருத்தல் அவசியம் என்கிறார்கள். 
அப்படி அவர் வருவதானால் தமிழரசுக்கட்சியின் தலைவராகத்தான் வர வேண்டும். 
தேர்தலிலும் தோற்றிருக்கும் இன்றைய நிலையில் எஞ்சியதாய்,
தான் கையில் வைத்திருக்கும் அத்தலைவர் பதவியை விட்டுக்கொடுக்க,
'மாவையார்' ஒருக்காலும் சம்மதிக்கமாட்டார் எனும் உண்மையைத் தெரிந்து, 
அவரின் 'உடும்புப்பிடியைத்' தளர்த்துவிக்க புது வழியை,
கண்டுபிடித்திருக்கிறார்கள் போல்த் தெரிகிறது.
பதவிகளைப் பற்றிக் கவலைப்படாமல் வெறுமனே இனநலம் நோக்கிச் செயற்பட,
நம் தலைவர்கள் போராளிகளா என்ன? 
அதனால்த்தான் இந்தப் பேரம் நடக்கத் தொடங்கியிருக்கிறது என்று நினைக்கிறேன். 
வெட்கமாக இருக்கிறது. 

👍உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  'பதவிப் பண்டமாற்றுத் தொடங்கிவிட்டது போல.'

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 07:- உங்களை வைஷ்ணவர் என்று சிலர் சொல்கிறார்களே?​  
பதில்:-

அப்படியா? அதை ஒத்துக் கொள்வதில் எனக்கு ஒன்றும் பிரச்சினையில்லை. 
ஆனால் ஒன்று, அப்படிச் சொல்கிறவர்கள்,
உலகில் வேறெங்கேனும் திருநீறு பூசுகிற ஒரு வைஷ்ணவனைக் காட்ட வேண்டும். 
என்னைப் பொறுத்தவரை சமயம் என்பது கடவுளோடு நான் தொடர்புகொள்ள,
வழிசெய்யும் ஊடகம் மட்டுமே. 
ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் இருக்கும் தொடர்புபோல,
அது எனக்கும் இறைவனுக்குமான தனித்தொடர்பு. 
அதனை மற்றவர்களுக்கு நிரூபிக்க வேண்டிய தேவையேதும் எனக்கில்லை. 
ஒரு மனைவியின் கற்பு கணவனுக்கு மட்டும் தெரிந்தால்ப்போதும் என்று நினைக்கிறேன். 
நான் சைவனா? வைஷ்ணவனா? என்பதைச் சிவன் நன்கு அறிவார் என்று நினைக்கிறேன். அதனால் மற்ற முட்டாள்கள் சொல்லும் கருத்துப் பற்றி எனக்குக் கவலையில்லை.

 🙂உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  'அப்படிப் போடு அரிவாளை!'

 ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 08:- சொற்களின் பெறுமதி எதில் தங்கியிருக்கிறது?  
பதில்:-
சொல்லப்படும் வார்த்தைகளின் சத்தியத்தில். 

 🙂உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  'சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா! வெல்லடா!'

 ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 09:- அடைமழை எப்படி?  
பதில்:-

நம் தேசத்தின் நிலைநயப் பார்த்து வானமும் அழுவது போல்த் தெரிகிறது.

 🙂உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  'சூப்பர்'! கம்பற்ற ஆளுக்குக் கற்பனைக்குப் பஞ்சமா என்ன?

 ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

ஹலோ... உங்களைத்தான்!.....
பாட்டையும் பாவத்தையும் மட்டும் இரசித்துவிட்டுப் போகாமல்,
நீங்களும் கச்சேரியில் இணைந்து கொண்டு,
சமூகம், தமிழ் மற்றும் சமயம் சார்ந்த உங்கள் கே
ள்விகளையும் அனுப்பி வையுங்கள்.
மின்னஞ்சல் முகவரி: mailuharam@gmail.com

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்