பூங்குழலி: பகுதி 01 -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

ளம் அதிர்ந்து நின்றாள் உத்தமியான பூங்குழலி.
எந்தப் பெண்ணுக்குத்தான் அந்தச் செய்தி அதிர்ச்சி தராது?
அந்த அதிர்ச்சி தரும் செய்தியைச் சொல்லிவிட்டு,
ஏதுமே நடக்காததுபோல் பற்றற்று நின்றார் இயற்பகையார்.
அவர் சொன்ன வார்த்தைகள் நெஞ்சைச் சுட,
வழமைக்கு மாறாகக் கணவனை நேருக்கு நேர் பார்க்கிறாள் அவள்.
அவள் விழிகளில் ஆயிரம் கேள்விகள்.
அவள் பார்வையை எதிர்கொள்ள முடியாமல்,
இயற்பகையார் கண்கள் நிலம் நோக்குகின்றன.
 
🏵 🏵 🏵
 
எத்தனை பெருமிதமான வாழ்வு அவள் வாழ்வு.
நேற்றுவரை தன் கைபிடித்த கணவர்,
குறையென்று சொல்ல ஏதுமின்றி,
தன்னை அன்போடு போஷித்ததை, 
பூங்குழலியின் மனம் எண்ணிப் பார்க்கிறது.
ஒன்றா, இரண்டா அத்தனை வசதிகளையும்,
அவளுக்கு அள்ளிக் கொட்டிக் கொடுத்திருந்தார் இயற்பகையார்.
அவள்மேல் அத்தனை அன்பு அவருக்கு.
கணவன் மீதான அன்பில் அவள் அவரை விஞ்சி நின்றாள்.
பிறந்தது வணிககுலமானாலும் அரச குலத்தில் பிறந்தாற் போன்று,
பெறுமதிமிக்க வாழ்வு அவர்களுக்கு வாய்த்திருந்தது.
 
🏵 🏵 🏵
 
கணவனார்மேல் கொள்ளைப் பிரியம் கொண்டிருந்தாள் பூங்குழலி.
அப்பிரியத்திற்கு அவர்மேல் கொண்ட காதல் மட்டும் காரணமாய் இருக்கவில்லை.
அதைவிட அவரின் சிவத்தொண்டு அவளுக்கு நிரம்பவே பிடித்திருந்தது.
இல்லம் தேடிவரும் அடியார்கள் எதைக் கேட்டாலும் மறுக்காமல் கொடுக்கின்ற,
இயற்பகையாரின் பண்பு அவளைப் பிரமிக்கச் செய்திருந்தது.
இப்படியும் ஒரு சிவப்பற்றா! என்று பலதரம் வியந்திருக்கிறாள் அவள்.
பொன்னோ, பொருளோ அடியார்கள் கேட்டு வாய்மூடும் முன்,
எதைப் பற்றியும் சிந்திக்காமல் மகிழ்வோடு 'தந்தனன்' என்று,
கணவர் கூறும்போது அவரது கொடைத்தன்மை கண்டும்,
சிவப்புற்றுக் கண்டும் பெருமிதம் கொள்வாள் அவள்.
 
🏵 🏵 🏵
 
அள்ளஅள்ளக் குறையாத செல்வமும் அவர்களுக்கு வாய்த்திருந்தது.
கொடையால், வெளிச் செல்லும் செல்வத்தைவிட,
வணிகத்தால், உள்ளேவரும் செல்வம் பன்மடங்கு அதிகமாய் இருந்தது.
அச்செல்வத்தால் உற்றார், உறவினர், அயலவர் என,
அனைவரையும் பேணி, ஒரு சிறுகுறுநில மன்னன் போலவே,
வாழ்ந்து வந்தார் இயற்பகையார்.
 
🏵 🏵 🏵
 
இதுவரை காலமும் அடியார்க்கு அள்ளிக் கொடுக்கும்,
கணவர்தம் இயல்பால் மகிழ்ந்திருந்த பூங்குழலி,
இன்று கணவரின் அவ் இயல்பால் அதிர்ந்து நின்றாள்.
 
🏵 🏵 🏵
 
வழமைபோலவே, அன்றும் சிரித்துக் கொண்டு உதித்தான் சூரியன்.
சோழநாட்டின், வணிக நகரங்களில் ஒன்றான,
பொருட்செல்வத்தால் பொலிந்திருந்த பூம்புகாரில் சூரியஒளி படர,
அந்நகரம் பொன்னால் முலாமிட்டால் போல மேலும் பொலிகிறது.
வணிக நகரம் ஆதலால் அதிகாலையிலேயே,
ஊர் விழித்து இயங்கத் தொடங்கியிருந்தது.
கப்பலில் ஏற்றப் பொருட்களைக் கொண்டு செல்வாரும்,
கப்பலால் இறக்கிய பொருட்களை வண்டிகளில் ஏற்றிக் கொண்டு, 
எறும்புகள் ஊர்ந்தாற்போல அடுக்கடுக்காய் வேற்றூர்களுக்குப் புறப்படுவாரும்,
வீதியோரம் எல்லாம் பொன்னையும் மணியையும் குவித்து,
கூவிக்கூவி விற்பனை செய்யும் சிறுவணிகர்களும்,
தத்தம் நாட்டுச் செல்வங்களைக் கப்பலில் கொணர்ந்த,
வேற்றுநாட்டு மாலுமிகளுமாக,
பூம்புகார் அதிகாலையிலேயே பரபரத்துக் கொண்டிருந்தது.
 
🏵 🏵 🏵
 
பூம்புகாரின் விரல்விட்டு எண்ணக்கூடிய பெரும் வணிகர்களில் ஒருவரான,
இயற்பகையார் அரண்மனையிலும் அதே பரபரப்பு.
அவர் நட்பினைப் பெறுதற்காய் பலநாடுகளிலும் இருந்து வந்த,
பெருவணிகர்கள் பலர் அதிகாலையிலேயே அவ் அரண்மனை வாசலில்,
அவரின் தரிசனத்திற்காய்க் காத்திருந்தனர்.
உற்றாரும் உறவினரும் உரிமையோடு அங்குமிங்குமாய்,
இல்லம் முழுவதும் நடமாடிக்கொண்டிருக்க,
அத்தனைபேருக்குமாக அவ்வீட்டு உணவுக்கூடத்தில்,
வகைவகையான உணவுகள் சமைக்கப்பட்டுக் கொண்டிருந்தன.
அச் சமையல் கூடத்திலிருந்து எழுந்த அரிய வாசனையால் ஈர்க்கப்பட்டு,
வீதியால் செல்வோர் கூட ஒருதரம் நின்று பின் இயங்கினர்.
இயற்பகையார் அதிகாலையில் எழுந்து,
வழமையான தனது சிவபூசையில் ஈடுபட்டிருந்தார்.
அவருக்குத் தேவையான உபகாரங்களை,
அவர் கேட்பதற்கு முன்பாகவே செய்துகொண்டிருந்தாள் பூங்குழலி.
 
🏵 🏵 🏵
 
பூசை முடிந்து எழுந்த இயற்பகையார்,
தன் அரண்மனையில் இருந்த வேறுபட்ட விருந்தினர் கூடங்களில்,
சிவனடியார்கள் அமர்ந்து இருந்த கூடத்திற்குள் முதல் நுழைகிறார்.
பொருட்செல்வம் உண்டாக்கித் தரக்கூடிய பன்னாட்டுப் பெருவணிகர்கள்,
அருகிருந்த மற்றொரு கூடத்தில் அவருக்காய்க் காத்திருக்க,
சிவனடியார்கள் அமர்ந்திருந்த கூடத்திற்குள் செல்லும் கணவரை,
பெருமிதமாய்ப் பார்க்கிறாள் பூங்குழலி.
பொருட்செல்வத்தை விட அருட்செல்வத்தைப் பெரிதெனப் போற்றும்,
தன் கணவனாரின் இயல்பை அறிந்திருந்தபடியால்,
சிவனடியார் சந்திப்பிற்கு முதல் இடம்கொடுத்துச் செல்லும்,
அவருடைய செயல் பூங்குழலிக்கு ஆச்சரியம் ஏற்படுத்தவில்லை.
கழுத்துவரை தன் புடவைத் தலைப்பால் இழுத்து மூடியபடி,
அவளும் கணவனைப் பின்தொடர்கிறாள்.
 
🏵 🏵 🏵
 
வந்த அடியார்களிடம் தம்பதி சமேதராய் ஆசிபெற,
கணவர்  தன்னை அழைப்பார் என்பது பூங்குழலிக்குத் தெரிந்திருந்தது.
அதனால் அவரின் நிழல் போலக் கணவன் அடிகளைப் பின்பற்றி அவளும் செல்கிறாள்.
அகன்று விரிந்திருந்த அக்கூடத்தினுள்,
இயற்பகையாரும் பூங்குழலியும் கூப்பிய கரங்களோடு பணிவோடு நுழைகின்றனர்.
அவர்களைக் கண்டதும் சிவனடியார்கள் மனதில் பெரும் மகிழ்வு.
'சிவாயநம', 'சிவாயநம' என்ற அவர்களின் கோஷம் விண்ணைத் தொடுகின்றது.
நின்ற இடத்தில் நின்றுகொண்டே பார்வையால் அனைவர் பாதங்களையும்,
தொட்டு நிமிர்கிறார் இயற்பகையார்.
 
🏵 🏵 🏵
 
மண்டபம் முழுவதுமாய்ச் சுற்றி வந்த அவரது பார்வை,
குறித்த ஓர் இடத்தில் ஸ்தம்பித்து நிற்கிறது.
கணவரின் பார்வை நின்ற அத்திசையில் பூங்குழலி நோக்குகிறாள்.
அங்கு ..................
 
🏵 🏵 🏵
 
(பூங்குழலி தொடர்வாள்)
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்