பூங்குழலி: பகுதி 02 -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

திரம் உறைந்தாற்போல் ஆயிற்று பூங்குழலிக்கு.
கணவனாரின் கண் பார்வை குத்திட்டு நின்ற திசையில் நோக்கிய,
அவளின் பார்வையில் அந்த அடியார் தெரிந்தார்.
பட்டும் பீதாம்பரமுமான உடை.
கையில் சுற்றிய மல்லிகைச் சரங்கள்.
மையால் தீட்டப்பட்ட புருவம்.
கழுத்தில் பலவகை நிறங்களில் மணிமாலைகள்.
தாம்பூலத்தால் சிவந்த உதடுகள் என,
அடியார்க்கான எந்த இலட்சணமுமின்றி,
ஆடம்பரமாய் அமர்ந்திருந்தார் அவர்.
 
🪔 🪔 🪔
 
தூரத்தில் இருக்கும் போதே அவரிடமிருந்து எழுந்த அத்தர் வாசனை,
அந்த மண்டபம் முழுவதும் நிரம்பியிருந்தது.
நெற்றியில் ஜவ்வாதுப் பொட்டணிந்திருந்தார்.
அவரின் உடல் அசைவுகளிலும் கண்களிலும் காமக்குறிகள் வெளிப்படத் தோன்றின.
அவரின் தோற்றம் கண்டு மற்றைய சிவனடியார்கள்,
அவரைவிட்டுச் சற்றுத்தள்ளி ஒதுங்கியே இருந்ததையும்,
அதுபற்றி எந்தக் கவலையும் இல்லாமல்,
அத் தூர்த்த சந்நியாசி தன்பாட்டில் அமர்ந்திருந்ததையும் கண்ட பூங்குழலி,
ஏலவே போர்த்தியிருந்த தன் சேலைத் தலைப்பை,
மேலும் இழுத்துப் போர்த்திக்கொண்டு கணவனைப் பின்தொடர்ந்தாள்.
 
🪔 🪔 🪔
 
இயற்பகையார் பூங்குழலியுடன்,
கூடியிருந்த அடியார்கள் அனைவரது திருவடிகளையும் கழுவிப் பூஜித்து,
அவர்களிடம் ஆசிபெற்றபின்பு 
வந்த அடியார்கள் அனைவரும் உள்ளத்தில் உண்மை ஒளிர,
இயற்பகையாரை வாழ்த்தி அவர் வழங்கிய தானங்களைப் பெற்றுக்கொண்டு,
ஒவ்வொருவராய் விடைபெற்றுச் சென்ற பின்பும்,
வந்திருந்த தூர்த்த சந்நியாசி,
அசையாமல் தான் அமர்ந்திருந்த இடத்திலேயே அமர்ந்திருக்க,
இயற்பகையார் நெற்றியில் விபூதியோடு இருக்கும்,
அவர்தம் சிவத்தன்மையை மட்டும் மனதில் கொண்டு,
எந்தபேதமும் இல்லாமல் அவர் அடிகளில் சென்று மீண்டும் வீழ்கிறார்.
கணவனைத் தொடர்ந்த பூங்குழலியும் அவ்வண்ணமே தானும் செய்து,
அச் சந்நியாசியைப் பணிந்து எழும்புகிறாள்.
 
🪔 🪔 🪔
 
அத் தூர்த்த சந்நியாசி இயற்பகையாரை ஆழ்ந்து நோக்கிய பின்னர்,
'இயற்பகையாரே! சிவனடியார்கள் எதனைக் கேட்டாலும் மறுக்காமல் தருவீராமே,
அச்செய்தி அறிந்து, அரிய பொருள் ஒன்றை,
உம்மிடம் கேட்டுப் பெறவே யாம் வந்திருக்கிறோம்.'
வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் பணிவின்மையைப் படரவிட்டு பேசுகிறார் அச்சந்நியாசி. 
இயற்பகையார் அச்சந்நியாசியின் புகழ் வார்த்தை கேட்டுக் கூசிப் பணிகிறார்.
பின்னர் 'சுவாமி இச்செல்வம் அனைத்தும் இறைவன் தந்தது.
எனவே அவை அனைத்தும் அவன் அடியார்க்கே உரியதன்றோ?
அதனால் அவன் தந்த பொருள்களை அவன் அடியார்க்கே வழங்கி,
என் கடமையைச் செய்கிறேன். 
அதுவன்றி வேறொன்றுமில்லை'. என்று சொல்லி மீண்டும் அவரைப் பணிகிறார்.
 
🪔 🪔 🪔
 
'ஹா.. ஹா.. ஹா.. ஹா..' வாய்விட்டுச் சிரித்த அச்சந்நியாசி,
'அப்படியா! நன்று, நன்று உன்னிடம் இருக்கும் எந்தப் பொருளையும்,
அடியார் கேட்டால் கொடுத்துவிடுவாயா?'
மீண்டும் வேண்டுமென்றே கேள்வி எழுப்புகிறார் சந்நியாசி.
'சுவாமி! அதிலென்ன சந்தேகம்.
ஒன்றென்ன ஆயிரம் கேளுங்கள் உடனே கொடுத்துவிடுகிறேன்.'
இயற்பகையார் பணிந்து சொல்ல,
சந்நியாசியின் குரல் மீண்டும் உயர்கிறது.
'இப்போது சொல்லிவிட்டுப் பின் மறுக்கமாட்டாயே.'
'இல்லை என்ற சொல்லை ஒருநாளும் நான் சொல்லமாட்டேன் சுவாமி.
எதுவானாலும் கேளுங்கள்.' இயற்பகையார் குரலில் பணிவும் பண்பும்.
'நீ இவ்வளவு தூரம் அழுத்திச் சொல்வதால் துணிந்து கேட்கிறேன்.
நான் கேட்க வந்தது பொன்னையும் பொருளையும் அல்ல, ஓர் உயிர்ப்பொருளை.'
மீண்டும் சிவனடியார் தயங்க இயற்பகையார் குறுக்கிடுகிறார்.
'அது எந்த உயிர்ப்பொருளாக இருந்தாலும் கவலைப்பட வேண்டாம்.
உடனே உரையுங்கள் தந்துவிடுகிறேன்.'
இயற்பகையார் சொல்லச் சிவனடியார் சுற்றும் முற்றும் பார்த்தபடி பேசத் தொடங்குகிறார்.
 
🪔 🪔 🪔
 
'இயற்பகையாரே நான் கேட்க வந்த விடயத்தைச் சொன்னால்,
ஒருவேளை நீர் ஆத்திரப்படக்கூடும்.
ஆனாலும் நீர் இவ்வளவு உறுதியாகச் சொல்வதனால்,
நான் நினைத்ததை வாய்விட்டுக் கேட்கிறேன்.
எனக்கு நீர் உம் காதல் மனைவியைத் தருதல் கூடுமா?'
தூர்த்த சந்நியாசி கூச்சமின்றி தன் எண்ணத்தை வெளிப்படுத்த,
பதறித் தன் கணவன் முதுகின் பின் ஒடுங்குகிறாள் பூங்குழலி.
தான் நினைந்ததைச்  சொல்லிவிட்டு,
சிவனடியார் இயற்பகையாரின் முகத்தில் கோபத்தை எதிர்பார்க்க,
எந்தவித அதிர்வுமின்றி பேசத் தொடங்குகிறார் இயற்பகையார்.
 
🪔 🪔 🪔
 
(பூங்குழலி தொடர்வாள்)
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்