பூங்குழலி: பகுதி 03-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

ள்ளத்தில் எந்தவித அதிர்வுமின்றி,
இயற்பகையாரின் வார்த்தைகள் வந்து விழுகின்றன.
'சுவாமி! தங்களுக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
நான் 'இல்லை' என்று சொல்லும்படியான ஒன்றைக் கேட்காமல்,
என்னிடம் இருக்கும் ஒரு பொருளைக் கேட்டு எனக்கு நிம்மதி தந்தீர்கள்.
என் மனைவி என் உரிமை மட்டுமல்ல என் உடமையுமாம்.
அவள் நான் நினைப்பதையே சரி என்று நினைத்துப் பழகியவள்.
ஒருக்காலும் என் கருத்துக்கு மாறாய்,
அவள் நினையவும் மாட்டாள், செயற்படவும் மாட்டாள்.
நீங்கள் கேட்டதன்படி அவளை இப்போதே அழைத்துச் செல்லலாம்.'
இயற்பகையாரின் நிதானமான பதிலைக் கேட்டு,
வந்த தூர்த்த சந்நியாசி அதிர்ந்து நிற்கிறார்.
 
🌼 🌼 🌼
 
சந்நியாசி தன்னைத் தானமாகக் கேட்ட அந்த நிமிடத்தில்,
பூங்குழலியின் ஐம்புலன்களும் ஒரு நிமிடம் அதிர்ந்து ஒடுங்குகின்றன.
அன்புக் கணவர் என்ன பதில் உரைக்கப் போகிறார் என்று,
ஆவலோடு அவள் நிமிர்ந்து பார்க்கிறாள்.
இயற்பகையார் உரைத்த பதில் கேட்டு அவள் மனம் ஒரு நிமிடம் கலங்குகிறது.
 
🌼 🌼 🌼
 
மறுகணமே பூங்குழலி தெளிவடைகிறாள்.
கணவர்க்கு சிவனடியார்களும் சிவனுமே தலைவர்கள்.
எனக்கு என் கணவர்தான் தலைவர்.
தம் தலைவராகிய சிவனடியார் சொன்னதற்கு,
கணவர் எப்படி உடன்படுகிறாரோ,
அப்படியே என் தலைவரான கணவர் சொற்படி நடப்பதுதான்,
எனக்கான தர்மமாகும் என முடிவு செய்கிறாள் அவள்.
இப்பொழுது அவள் முகத்தில் குழப்பமில்லை.
 
🌼 🌼 🌼
 
இனி எது நடந்தாலும் ஏற்பது என்ற முடிவோடு,
கணவனைப் பார்க்கிறாள் பூங்குழலி.
சிவனடியார் 'உன் மனைவியைத்தா' எனக்கேட்டும்,
'இல்லை' என்னாது 'தருகிறேன்' என்று சொன்ன கணவர்மீது,
கோபத்திற்குப் பதிலாக அவளுக்கு மரியாதை தான் உண்டாகிறது.
கணவர் தன்மீது வைத்திருக்கும் எல்லையற்ற காதலை அவள் நன்கு உணர்வாள்.
சிவனடியார் கேட்டுவிட்டார் என்பதற்காக,
மறுநிமிடமே தன்னை அவருக்குக் கொடுத்த,
தன் கணவனின் சிவபக்தி நினைந்து வியப்புறுகிறாள் பூங்குழலி.
இத்தனை பெரிய பக்தனை நம் சிவனார் கைவிடவா போகிறார்? என்ற எண்ணம்,
அவள் மனதை உறுதிப்படுத்த,
இனி எது வந்தாலும் பார்த்துவிட வேண்டியதுதான் எனும் முடிவோடு,
கண்களில் பக்தி பொங்க தன் கணவரைக் கையெடுத்துத் தொழுகிறாள் பூங்குழலி.
 
🌼 🌼 🌼
 
அவள் கையெடுத்து வணங்கிய மறுநிமிடமே,
இயற்பகையார் முன்னால் வந்து அவளது காலில் விழுந்து வணங்குகிறார்.
ஒரு நிமிடம் தடுமாறிய பூங்குழலிக்கு கணவனாரின் உளக்கருத்துப் புரிகிறது.
எப்பொழுது சிவனடியாருக்குத் தருகிறேன் என்று சொல்லிவிட்டாரோ,
அந்த நிமிடமே தன்னைச் சிவனின் சொத்தாகக் கருதிவிட்டார் என்பதையும்,
அதனை உணர்த்தவே தன் காலில் வீழ்கிறார் என்பதையும் உணர்ந்து,
மேலும் நெகிழ்கிறாள் பூங்குழலி.
இப்போது அவளது கண்களில் கவலைக்குப் பதிலாகக் கனிவு.
 
🌼 🌼 🌼 
 
பூங்குழலி, எந்த அச்சமும் இன்றி,
வந்த சிவனடியாரின் பின்னால் போய் நின்று புறப்படத் தயாராகிறாள்.
இப்பொழுது சிவனடியாரிடம் மீண்டும் தயக்கம்.
எதையோ அவர் சொல்ல நினைக்கிறார் என்பதை முகக் குறிப்பு உணர்த்த,
இயற்பகையார் தானே அக்குறிப்புணர்ந்து பேசத் தொடங்குகிறார்.
'சுவாமி! தாங்கள் மேலும் ஏதோ கேட்க விரும்புகிறீர்கள்.
நான் தங்களின் அடிமை, எதுவானாலும் எனக்கு உத்தரவிடுங்கள்.
உடன் அதனை நிறைவேற்றித் தருவேன்.' எனப் பணிவோடு சொல்ல,
சிவனடியார் தயக்கத்துடன் வாய் திறக்கிறார்.
 
🌼 🌼 🌼
 
'ஐயனே! நன்று! நன்று! உன் சிவபக்தி,
சிவனடியார்கள் எதைக் கேட்டாலும்,
'இல்லை' என்று சொல்லாமல் தருவாய் எனப் பலரும் சொன்னபோது,
நான் அதனை நம்பவில்லை.
ஆனால் உன் காதல் மனைவியையே நான் கேட்டதும் தந்துவிட்டாய்.
உன் பக்திமையை நினைந்து பெருமையுறுகிறேன்.
உன்னால் எனக்கு இன்னொரு காரியமும் ஆகவேண்டியிருக்கிறது.
உன் மனைவியாகிய இவளை நீ தானமாய்த் தந்ததையும்,
அவளை நான் அழைத்துச் செல்வதையும் அறிந்தால்,
உன் உற்றார் உறவினர்கள் எல்லோரும் கொதித்து எழுவார்கள் அன்றோ!
அவர்களால் எனக்குத் தீமை வர வாய்ப்பிருக்கிறது.
அவர்களிடமிருந்தும் என்னை நீதான் காத்தருள வேண்டும்.'
அடியார் கேட்க, 'சுவாமி! இதனை நீங்கள் கேட்பதற்கு முன்பே நான் செய்திருக்க வேண்டும்.
இதோ! உங்களுக்குக் காவலாய் நான் முன்னே புறப்படுகிறேன்.' என்றுரைத்த இயற்பகையார்,
உட்சென்று வாள், வில், வேல் போன்ற ஆயுதங்களை எடுத்துக் கொண்டு,
அடியவர் முன்னே செல்லத் தொடங்கினார்.
 
🌼 🌼 🌼
 
பூங்குழலிக்கு அனைத்தும் அதியசயமாய்ப்பட்டது.
சிவனடியார் வந்தது, 
தன்னைத் தானமாய்க் கேட்டது,
கணவர் உடன்பட்டுத் தன்னை வழங்கியது,
இப்போது உற்றார், உறவினரிடமிருந்து தன்னைக் காக்க,
இயற்பகையாரையே சிவனடியார் அழைத்தது.
இயற்பகையார் போர்க்கோலம் கொண்டு புறப்பட்டது என,
அனைத்தும் கனவில் நடந்தாற்போல்த் தெரிய ஒரு நிமிடம் தலையை உலுப்பி,
தான் காண்பது, கனவா? நனவா? எனச் சிந்திக்கிறாள் பூங்குழலி.
நடப்பது நிஜம்தான் என்று தெரிய,
அவள் மனதில் மேலும் உறுதி பிறக்கிறது.
இது சிவன் செய்யும் சோதனைதான் எனும் எண்ணம் உதிக்க,
மேலும் தெளிவோடு இயற்பகையாரைத் தொடரும்,
சிவனடியாரின் பின் நடக்கத் தொடங்குகிறாள்.
 
🌼 🌼 🌼
(பூங்குழலி தொடர்வாள்)
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்