பெயரிடாத கடிதம்...

அன்பு நண்பன் ஜெயராஜூக்கு!

பெற்றோர், உடன் பிறந்தோர் மற்றும் ஏனைய உறவுகள் போலவேதான் நட்பும் என்ற விடயத்தில் நான் மிகுந்த நம்பிக்கையுடையவன். முன்னாள், இந்நாள் என்றெல்லாம் நண்பனைக் குறிப்பிட முடியாது. ஆகவே இக்கடிதத்தைப் படித்த பின்பும் தங்கள் மனதிலிருந்து எமது உறவு அறுந்து போகாது என்ற முழுநம்பிக்கையுடன் இத்திறந்த மடலை எழுதுகிறேன். இக்கடிதத்தை எழுத நேர்ந்தமைக்காகக் காலத்தைத்தான் சபிக்கின்றேன். “துலையப் போகிறது நம் இனம்”, என்று எந்தக் காலத்திலும் என் மனதின் உள்ளுணர்வு சொல்லாது - நாக்கும் உச்சரிக்காது - பேனாவும் எழுதாது.

நானும் நீங்களும் வெவ்வேறு பாதையைத் தெரிவு செய்தவர்கள். நீங்கள் எமது மொழிக்காக உங்கள் இளமைக் காலத்தை முழுமையாக அர்ப்பணித்தவர். நான் எமது இனத்துக்காக மாற்று வழியொன்றைத் தேர்ந்தெடுத்தவன். நான் தேர்ந்தெடுத்த வழிமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என என் தலைவர் அறிவித்தார். ஆனாலும் என் இளமைக்காலம் எனக்கிட்ட பணியை மனச்சாட்சிப்படி செய்தேன். என் இளமைக்கால உழைப்பு முழுவதும் ஐயத்துக்கு அப்பாற்பட்டது என்ற திருப்தியை தங்கள் எழுத்துக்கள்மூலம் உணர்ந்து கொண்டேன். அதற்காக எனது நன்றிகள்.

“நகுதற் பொருட்டன்று நட்பு - மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற்பொருட்டு”

(அதிகாரம் 78 - குறள் 784)

ஒரு நண்பனின் பண்பு என்பது அவனது நண்பன் தவறுவிடும் பட்சத்தில் அதனைக் கேலி செய்வதாக இருக்கக்கூடாது. மாறாக அவரது தவறு குறித்து விளக்கி வழிகாட்டுவதாக அமைய வேண்டும் என்ற வள்ளுவரின் வாய்மொழி.

01. பிரபாகரனுடைய இருப்பு எவ்வளவு முக்கியமாக இருந்ததோ இன்றைய சூழலில் சுமந்திரனின் இருப்பும் இன ஒற்றுமையும் அந்தளவு முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த உண்மையை நிராகரிப்பவர்களே இனத் துரோகிகளாம்.

02. இங்கு நடந்தது இன அழிப்புத்தான் என மாகாண சபையினூடு ஐ. நா. சபைக்கு இவர்களால் அனுப்பப்பட்ட மகஜர் என்னாயிற்று. அதனால் இன நன்மை நோக்கி ஒரு துரும்புதானும் அசைந்ததா?

எனத் தாங்கள் குறிப்பிட்டமைதான் நான் இப்பகிரங்கக் கடிதத்தை எழுத நேர்ந்தமைக்கான காரணம்.

“ஒரே ஒரு சூரியன்; ஒரே ஒரு சந்திரன்; ஒரே ஒரு எம்.ஜி.ஆர்.”, என்று தமிழகத்தில் ஒருவர் குறிப்பிட்டார். அதுபோல் ஒரே ஒரு பிரபாகரன்தான். எந்தக் காரணத்தை முன்வைத்தும் அவரோடு எவரையும் ஒப்பிட முடியாது. பிரபாகரனை இந்தளவுக்கு வேறு எவரும் கேவலப்படுத்தியதாக எனது 65 வயது அனுபவத்தில் எனக்கு நினைவில்லை என்பதை என் நண்பனுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஏனெனில் நம்மிடையே உள்ளது உண்மையான நட்பு. இதனை விபரிக்க முன்னர் இரண்டாவது விடயத்துக்கு வருகின்றேன்.

இன அழிப்புத் தொடர்பாக வடக்கு மாகாண சபை ஏகமனதாக நிறைவேற்றி ஐ. நாவுக்கு அனுப்பிய மகஜர் பற்றிக் குறிப்பிட்டுள்ளீர்கள். இதன் காத்திரம், தேவை தங்களுக்குப் புரியாமல் போனது எமதினத்தின் துரதிர்ஷ்டமே.

கம்பன் விழாக்களில் எத்தனையோ விடயங்கள் எடுத்துரைக்கப்படுகின்றன. அதில் முக்கியமான ஒன்றான தசரதனின் புத்திர சோகத்தை நானும் உணர்கிறேன். இரட்டை இலக்க எண்ணிக்கையிலான நாடுகளின் உதவியுடன் எமது மக்களின் மீது தொடுக்கப்பட்ட இறுதி யுத்தத்தில் நிகழ்ந்த அவலங்கள், இழப்புக்களை சந்தித்த மக்களுக்கு மட்டுமே தெரியும். இழப்பின் வலி துறவியான தங்களுக்கு உணர முடியாமற் போனதுக்கு காலம்தான் குற்றவாளி. பதினாறே வயதேயான எனது மகன் விரலைச் சூப்பியபடியே இறந்து கிடந்தான். தாங்கள் அந்தக் களத்தில் இருந்திருந்தால் துடிதுடிக்காமல் செத்த வாழ்வு கிடைத்தமை குறித்து எனக்கு ஆறுதல் கூறியிருப்பீர்கள். எறிகணைத் தாக்குதல் அவனது பிடரியில் பட்டதால் துடிப்பதற்கு தேவை இல்லாமல் போய்விட்டது.

எனது மிக நெருங்கிய உறவுகளில் நால்வரை இழந்தேன். அத்துடன், பொதுவில் அங்கே இருந்த எல்லோருமே எமது உறவுகள்தான். அங்கு நடந்த அவலங்களை எழுதப் பல நூறு நூல்கள் வெளியிட வேண்டியிருக்கும். புதுக்குடியிருப்பிலோ, முல்லைத்தீவிலோ ஓர் எண்ணெய்க் கிணறு இருந்திருந்தால் ஒருவேளை எமது மக்கள் சர்வதேச நாடுகளால் காப்பாற்றப்பட்டிருப்பார்கள் எனக் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு அனுப்பியிருந்த கடிதத்தில் நான் குறிப்பிட்டிருந்தேன். தாம் தயாரித்த மனிதப் பேரழிவு ஆயுதங்களின் அதியுச்ச பயன்களை அறிந்து கொள்ளும் ஒரு களமாகவே இக்களத்தை ஆயுத உற்பத்தி நாடுகள் நோக்கின என்றும் அதில் குறிப்பிட்டிருந்தேன்.

இந்த ஆணைக்குழுவினால் பயன் விளையும் என்று எண்ணி இதனை நான் அனுப்பவில்லை. ஆனால், அந்தந்த காலத்திற்குரிய பதிவுகளைச் செய்ய வேண்டும். அது போன்றதே வடக்கு மாகாண சபையின் தீர்மானம். வம்ச விருத்தியைக் கருத்திற் கொண்டே திருமணங்கள் நடைபெறுகின்றன. அது கிடைக்காவிடினும் முதுமைக்கான நட்பு, துணை கிடைத்து விடுமே. பிள்ளை பிறக்கவில்லை என்பதற்காக திருமணம் முடித்ததால் உனக்கு என்ன பயன் கிடைத்தது என்று கேட்க முடியுமா?

வட மாகாண சபையில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியதைத் தொடர்ந்து சீற்றமுற்றார் சுமந்திரன். தனது சகாக்கள்மூலம் முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர ஏற்பாடு செய்தார். ஜெனிவாவுக்கு இவர் அரசு தரப்புப் பிரதிநிதியாகச் செல்வதாகத் தமிழ் மக்களுக்குச் சொல்லவில்லை. பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாகச் செல்வது போல நடித்து ரணிலின் அரசைக் காப்பாற்ற தலா இரு வருடம் என இருமுறை கால அவகாசம் பெற ஏற்பாடு செய்தவர் சுமந்திரன். இவரது மண்டை கழுவுதலில் அவிந்து போனார்கள் சில புலம்பெயர் அமைப்பினர். அரசுக்குக் கேடு தரக்கூடிய எதையும் நாம் செய்யமாட்டோம் என இவர் சொல்லும் காணொலிகள் தற்போது வெளிவருகின்றன. இந்த விடயத்தைத் தாங்கள் கவனத்தில் கொள்ளவில்லை என்பது கவலைக்குரியது. என்னைப் பொறுத்தவரை இதன் பாதிப்புப் பற்றித் தங்களால் புரிய முடியவில்லை. எப்போதும் பாதிக்கப்பட்ட மக்களின் தரப்பில் இருந்தே விடயங்களை அணுக வேண்டும்.

தமிழருக்குக் கேடு தரக்கூடிய விடயங்களைப் புரிந்த இவரை இனி எங்கேயும் பிரபாகரனுக்கு அடுத்த பெயராக உச்சரிக்காதீர்கள் என்பதே எமது மக்களின் பெயராலும் - எங்கள் தனிப்பட்ட நட்பினைக் கவனத்திற் கொண்டும் வேண்டுகின்றேன்.

சிவனே என்று தானும் தன்பாடும் என்றிருந்தவர் நீதியரசர் விக்னேஸ்வரன். அவரைக் கம்பன் கழகத்தின் பெருந்தலைவராக்கினீர்கள். 2009 பேரழிவின் பின்னர் கொழும்பில் நடைபெறவிருந்த கம்பன் விழா தொடர்பாக ஏற்கனவே நீதியரசர் ஒரு விடயத்தைத் தங்களின் கவனத்துக்குக் கொண்டு வந்தார். நிகழ்வின் ஆரம்பத்தில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த எமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்றார் அவர். தாங்களோ அங்கே படையினர், புலிகள், பொதுமக்கள் என எல்லோருமே உயிரிழந்தனர். ஆகவே, அங்கு உயிரிழந்த அனைவருக்குமாக அஞ்சலி செலுத்தலாம் என்றீர்கள். அவரோ புலிகளுக்கென்று மாவீரர் நாள் உண்டு; படையினருக்கு இராணுவ தினம் உண்டு; ஆகவே, பொது மக்களுக்கு மட்டுமே அஞ்சலி செலுத்த வேண்டும் என்றார் அவர். ஆனால், நிகழ்வில் தாங்கள் கூறியபடியே சகலருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. சற்றுத் தாமதமாக வந்த நீதியரசர் இதனை அறிந்ததும் கம்பன் கழக பெருந்தலைவர் பொறுப்பில் இருந்து விலகுகிறேன் எனக் கடிதம் எழுதிக் கொடுத்து விட்டுப் புறப்பட்டார். இந்தத் தகவலும் நம் இருவருக்கும் பழக்கமான எமது ஊர் பிரமுகர் எனக்குச் சொன்னது.

வட மாகாண சபையின் முதல்வராக விக்னேஸ்வரன் வர வேண்டும் எனப் பகிரங்கமாகக் கருத்துத் தெரிவித்தவர் தாங்கள். சூழ்ச்சியும், வஞ்சகமும் நிறைந்த படுகுழிதான் அரசியல். ஜெயராஜ் விசயம் விளங்காமல் அப்பாவியான அவரை இப்படுகுழியில் தள்ளப் பார்க்கிறாரே என அப்போது நான் நினைத்தேன்.

உண்மையில் இலங்கைத் தமிழரைப் புரிந்து கொண்டு இத்தனை ஆண்டுகள் கம்பன் கழகத்தை வழிநடத்தியது மாபெரும் சாதனைதான். பட்டிமன்றத்தினை கட்டணச் சீட்டினைப் பெற்றுக் காணும் ஒரு வரலாற்று அற்புதத்தை எமது நாட்டில் நிகழ்த்தியவர் நீங்களல்லவா...! எனவே, நீங்களே முதல்வராகியிருக்கலாமே. அப்பாவியான நீதியரசரை ஏன் இப்படுகுழியில் தள்ளுகிறார் என நான் நினைத்ததுண்டு. நீங்கள் போட்டியிட்டிருந்தால் விருப்பு வாக்குக்காக அனந்தி சசிதரனுக்கு எதிராகச் சொந்தக் கட்சியினரே தேர்தலன்று செய்த மோசடிகள் இடம்பெற்றிருக்காது.

நீதியரசரை அரசியல் படுகுழிக்குள் தள்ளி விட்டுப் பின்னர் தூற்றுவது அறமல்ல என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம். தாங்கள் முதலமைச்சராவதற்கு துறவு நிலைக்கு ஒரு தடையல்ல, உத்தரப்பிரதேசத்தில் ஒரு துறவியே ஆட்சி நடத்துகிறார். அரசர்கள் யோகியாவதும் யோகிகள் அரசராவதும் வரலாறும் நமக்கு காட்டியிருக்கிறதுதானே.

எது எப்படி இருந்தாலும் காலம் தாழ்த்தியேனும் சுமந்திரனின் உண்மை முகத்தைப் புரிந்து கொள்வீர்கள். அப்போது நிச்சயம் நான் உங்கள் பக்கம் நிற்பேன். அப்போது தூற்றுபவர்களுக்கு ஜெயராஜ் ஏமாந்துதான் போனாரேயொழிய; ஏமாற்றுபவரல்ல என நான் உரத்துச் சொல்வேன்.

நாங்கள் ஏமாந்து போனோம் என்று சேர். பொன். இராமநாதன், ஜீ.ஜீ. பொன்னம்பலம், தந்தை செல்வா, அமிர்தலிங்கம், சம்பந்தர் போன்றோர் காலம்தாழ்த்தித்தான் உணர்ந்தார்கள். ஏமாந்ததைப் பகிரங்கமாக ஒப்புக் கொண்டவர் தந்தை செல்வா ஒருவரே. அடுத்தவர் ஜெயராஜ் என்பது எதிர்கால வரலாறு என எனது உள்மனம் நம்புகிறது. புலிகளைப் பயங்கரவாதிகள் எனக் குறிப்பிட்டவர் சுமந்திரன். அதுவும் நீதி தேவதை ஆட்சி புரியும் மன்றில். அது ஆலயத்துக்கு சமமானதாக நம்பப்படுகிறது. இதன் மூலம் 35 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாவீரர்களின் பெற்றோருக்கு உங்கள் மகன், மகள் பயங்கரவாதிதான் என உரத்துச் சொல்கிறார். அவரது பார்வையில் நானும் பயங்கரவாதி. நமது நண்பர் சிவகுமாரின் தம்பி சிவசங்கரும் அப்படியே. ஆதலால்தான் நாங்கள் உரத்துக் கூறுகிறோம், சுமந்திரன் ஒரு துரோகி என்று...
சுமந்திரனை ஏற்காதோர் துரோகிகள் என அர்த்தப்பட தாங்கள் சொன்ன கூற்றுக்காக என்றோ ஒருநாள் வருத்தப்படுவீர்கள்.

சுமந்திரனை விட்டால் நாதியில்லை எனத் தாங்கள் நம்புகிறீர்கள். உண்மையில் அவரை  விடத் தகுதியானவர்களை கூட்டமைப்புக்குள் தலையெடுக்காமல் பார்த்துக் கொள்கிறார் அவர். யாழ். பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த கலாநிதி மோகனதாஸ் இருக்கத்தக்கதாக யாழ். மேயர் ஆனல்ட்டே என அறிவித்தார் சுமந்திரன்.

முதல்வருக்கு எதிரான சதியை தனது சார்பாக முன்னெடுத்தமைக்கான சன்மானமே இது என ஏனைய அரசியல்வாதிகளுக்கு உணர்த்தினார். தாம் தேர்ந்தெடுத்த முதல்வருக்கு எதிரான சதியை முன்னெடுத்த ஆனல்ட்டுக்கு முன்னால் தமது அன்புக்குரிய துணைவேந்தர் சாதாரண உறுப்பினராக இருப்பதை விரும்பாதமையால்தான் அரியாலை கிழக்கு மக்கள் அந்த வட்டாரத்தில் கூட்டமைப்பை தோற்கடித்தனர். உண்மையில் இன ஒற்றுமையைத் தகர்த்தவரும் சுமந்திரனே.

சுமந்திரன் மூலம் வேட்பாளர் பட்டியலில் இடம்பிடித்தாலும் அவருடன் சேர்ந்து நின்றால் தோல்வி உறுதி எனத் தெரிந்ததால்தான் ஆனல்ட் கழன்று கொண்டார். இது விளங்காமல் ஆனல்ட் மீதும் கோபம் கொள்கிறீர்கள் நீங்கள்.

இன்று தன்னைவிட தவராசா புகழ் பெற்றுவிடுவார் என்பதற்காகவே அவர் தலையெடுக்காமல் பார்த்துக் கொள்கிறார் சுமந்திரன். தேசியப் பட்டியலில் முதலாவது தெரிவு அம்பிகா என அறிவித்ததன் பின்னணி இதுதானே தவிர ஒரு பெண்மணி பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்பது சும்மா விடும் கதைதான். சுமந்திரன் பற்றி படம் எடுப்பதானால், சிங்கம் 1, 2, 3 போன்று பாகம் பாகமாகத்தான் எடுக்க வேண்டும். எனது நண்பரே இதெல்லாம் புரிய உங்களுக்கு சில காலம் செல்லும்.

வேறென்ன! பழைய நினைவுகள் இன்னமும் பசுமையாக உள்ளன. ஒரே வீட்டில் நாங்கள் இருந்ததும் அந்த வீட்டில் நீங்கள் சமைத்துத் தந்த சாப்பாடும் மறக்க முடியாதவை. எனது திருமணத்தின் பின் நல்லூரில் இருந்த வீட்டுக்கு வரவழைத்துத் தங்கள் பெற்றோருக்கு எம்மை அறிமுகப்படுத்தி விருந்தளித்தமையை என்றும் மறக்கமாட்டேன்.

இக்கடிதத்தின் ஆரம்பத்தைப் பார்த்த உடனே இது யார் எழுதியது எனப் புரிந்திருப்பீர்கள். எழுதியது எதைப் பற்றி என்பதை விட யார் எழுதினார் என்பதை வைத்தே விமர்சனம் செய்யும் பாங்கு எமது சமூகத்தில் உண்டு. எனவே பெயர் போட வேண்டிய தேவை இல்லைத்தானே.

இவ்வண்ணம்,
அன்பின் நண்பன்.

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்