'பெருந்தெய்வம்' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

யர் தமிழர் பாரம்பரியத்தில்
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எனும் நாற்குணங்களாலும்,
மென்மைப்பட்டதாய்க் கருதப்படுவது பெண்மை.
இம்மென்மைத் தன்மைகள் மெல்லுணர்வுகளை மிகைப்படுத்த,
உணர்ச்சிகள் கூர்மையாகி பெண்மை ஒழுக்கத்தில் திண்மையுறுகிறது.
இத்திண்மை உண்டாகின் பெண், யாரிலும் பெரியளாகிறாள்.
பேதையாய்க் கிடந்தவள் பெருந்தகைமை பெறுகிறாள்.
பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னுந்
திண்மை யுண்டாகப் பெறின்
என வள்ளுவரும் இக்கருத்தை அங்கீகரிக்கிறார்.
🌹 🌹 🌹
பேதைமை உடைய பெண்மை,
கற்பு நிலைப்பட்டு மெல்ல மெல்ல வலிமையடைதலை,
தன் காவிய நாயகியாம் சீதையூடு,
கம்பன் வெளிப்படுத்தும் திறன் காண்பாம்.
🌹 🌹 🌹
சீதையைக் கம்பன் காட்டும் முதல்நிலை,
கற்போர்க்கு, பேதைமைப் பெண்ணாகவே அவளை விளக்கம் செய்கிறது.
உணர்ச்சி நிலையில் அறிவு நீங்கிய பெண்ணாய்,
பேதைமையின் முழு உருவமாய்,
பாலகாண்டச் சீதை நமக்கு அறிமுகமாகின்றாள்.
இதோ, நம் கண்முன் சீதையாம் பேதை.
🌹 🌹 🌹
கன்னிமாடம்.
இராமனைக் கண்டு காதலுற்றதால் அவன் பிரிவு வாட்ட,
வருத்தமுற்ற சீதை வாடிக்கிடக்கிறாள்.
தோழியாம் நீலமாலை அவளிடம் வருத்தத்தின் காரணம் வினவ,
பதிலுரைக்கும் சீதையின் வார்த்தைகள்,
பெண்மைக்கே உரியதான அறியாமையில் தோய்ந்து வெளிவருகின்றன.
பேசத் தொடங்குகிறாள் அவள்.
தோழி!
இராஐவீதியில் பெருமுனிவர் ஒருவருடன்,
எழில் இளைஞர் இருவர் நடந்து வந்தனர்.
வந்தாருள் ஒருவன் கரிய செம்மல்.
அத்தடந்தோள் வீரன் என் உளம் கவர,
அவன் அடி நோக நடந்து வருதற்காய் வருந்தி,
கருணையால் அவனைப் பார்த்தேன்.
அது தவறாயிற்று!
மண் வழி நடந்தவன் என் கண்வழி உளம் புகுந்து நெஞ்சம் நிரம்பினன்.
இத்தகைக் கள்வரும் உளரோ? என வினவி நிற்கிறாள் சீதை.
🌹 🌹 🌹
சீதையைக் கம்பன் காட்டும் முதல்நிலை இது.
இங்கு, காதல் வயப்பட்டுப் பேதையாய் நிற்கும் சீதையை,
அடுத்தடுத்த காண்டங்களில் மெல்ல மெல்லத் திண்மையுறச் செய்கிறான் கம்பன்.
அப்பேதைமைப் பெண்மை கற்பினால் மெல்ல வலிமை பெறத் தொடங்குகிறது.
🌹 🌹 🌹
அயோத்தியா காண்டம்.
கைகேயி சூழ்வினையால் முடிசூட்டு விழா நின்று விட,
சீதையைச் சமாதானம் செய்து காடேகும் எண்ணத்துடன்
பலரும் சூழ்ந்துவர சீதையின் இருப்பிடம் சேர்கிறான் இராமன்.
துயர முகத்தோடு பலரும் சூழ இராமன் வருதலைக் கண்ட சீதை துணுக்குற்று எழுகிறாள்.
இம் மெல்லியள் நெடுந்துயரம் தாங்குவளோ? எனும் எண்ணத்தால்
மாமியர் அழுத கண்ணொடு சீதையை அணைத்து ஆறுதல் செய்கின்றனர்.
ஏதற்காய் இவ்வாறுதல்? ஏன் இச்சோகம்? ஏதுமறியாச் சீதை,
அதிர்ச்சியால், அழுத கண்ணொடு ஐயனை நோக்கி,
அனைவரும் துன்புறும் படியாய் இங்கு நடந்தது என்ன? 
உற்றது இயம்புக என வேண்டிப் பணிகிறாள்.
 
எழுந்த நங்கையை, மாமியர் தழுவினர்;  ஏங்கிப்
பொழிந்த உண் கண் நீர்ப் புதுப் புனல் ஆட்டினர்;  புலம்ப,
அழிந்த சிந்தையள் அன்னம்,' ஈது இன்னது' என்று அறியாள்
வழிந்த நீர் நெடுங் கண்ணினள், வள்ளலை நோக்கி
 
பொன்னை உற்ற பொலங் கழலோய்! புகழ் 
மன்னை உற்றது உண்டோ, மற்று இவ் வன் துயர்
என்னை உற்றது? இயம்பு என்று இயம்பினாள்
மின்னை உற்ற நடுக்கத்து மேனியாள்.
 
இவ்விடத்தில்
அவள் மென்மையை உணர்த்துதற்காய்,
மின்னலை ஒத்த நடுக்கத்துடன் கூடிய மேனியள் என, 
அவளைக் கம்பன் வர்ணித்தல் கவனிக்கத்தக்கதாம்.
🌹 🌹 🌹
நடந்ததை அறியும் முன்பே நடுக்கமுறும் மெல்லியளான சீதை,
இச்செய்தி தரும் துன்பத்தைத் தாங்குவளோ? என நினைந்த இராமன்,
மென்மைப் படுத்தி அச்செய்தியைச் சொல்லத் தொடங்குகிறான்.
 
பொரு இல் எம்பி புவி புரப்பான், புகழ்
இருவர் ஆணையும் ஏந்தினென், இன்று போய்
கருவி மா மழைக் கற் கடம் கண்டு, நான்
வருவென் ஈண்டு வருந்தலை நீ என்றான்.
 
மேகம் தவழும் காடாகலின்,
வாழ்தற்கு இனிய இடம் எனச் சீதை கருதவேண்டி,
மா மழைக் கற்கடம் என்றும்,
பதினான்கு ஆண்டுகள் காடுறைவேன் எனக் கூறின்,
சீதை பொறாள் எனக் கருதி,
போதல் இன்று எனக் கூறிய இராமன் வரும் நாளைக் கூறிற்றிலன் என்றும்,
இப்பாடலுக்கு உரை செய்து,
சீதையின் மென்மையை மேலும் எடுத்துக் காட்டுகின்றனர் உரையாசிரியர்கள்.
🌹 🌹 🌹
இச்செய்தியால் அதிர்வள் என அனைவரும் சீதையை நோக்க,
அவளோ, அவர்தம் கருத்துக்கு மாறாய்,
கற்பெனுந் திண்மை தூண்ட வன்மையுறுகிறாள்.
அதுவரை இருந்த அவளது மெல்லுணர்ச்சி,
மற்றவர்தம் எதிர்பார்ப்பினின்றும் மாறுபட்டு உறுதி பெறுகின்றது.
நாயகன் வனம் செல்ல வேண்டி வந்ததென்றோ,
நாடிழந்தான் என்றோ வருந்தாத சீதை,
யான் நீங்குவென் என,
இராமன் தன்னைத் தனித்துச் சுட்டிய சொல்,
வெம்மையாய்ச் செவி சுடத் தேம்பி நின்றனள் என்கிறான் கம்பன்.
 
நாயகன் வனம் நண்ணுலுற்றான் என்றும்
மேய மண் இழந்தான் என்றும் விம்மலள்
நீ வருந்தலை,  நீங்குவென் யான் என்ற
தீய வெஞ் சொல் செவி சுடத் தேம்புவாள்.
🌹 🌹 🌹
தாய்,தந்தையரின் பணியை ஏற்று காடேகத் துணிந்தது உகந்ததே,
என்னை ஈங்கு இருத்தி என்றது எங்ஙனம்? என,
வருந்தித் துடிக்கிறாள் சீதை.
 
அன்ன தன்மையள் ஐயனும் அன்னையும்
சொன்ன செய்யத் துணிந்தது தூயதே
என்னை, என்னை, 'இருத்தி' என்றான்? எனா,
உன்ன, உன்ன உயிர் உமிழா நின்றாள்.
🌹 🌹 🌹
இராமனோ,
காட்டின் வெம்மையை மிகைப்பட எடுத்துக் கூறி,
சீதையைத் தடுக்க முயல்கிறான்.   
வனத்தில் வலிய அரக்கர்கள் வாழ்வர்.
மலையேறிக் கடக்கும் நிலை வரும்.
இரவிலும்,  
அரக்கினை உருக்கினாற் போன்று உறுத்துகின்ற பரற்கற்கள் அங்கு உள.
குளிர்ந்த செம்பஞ்சுக் குழம்பு ஊட்டப்பெற்ற சிவந்த நின் பாத தாமரைகள்,
அப்பாதையின் வெம்மையை தாங்கா என்கிறான் அவன்.
 
வல் அரக்கரின் மால் வரை போய் விழுந்து,
அல் அரக்கின் உருக்கு அழல் காட்டு அதர்க்
கல் அரக்கும் கடுமையை அல்ல-நின்
சில் அரக்குண்ட சேவடிப் போது என்றான்.
🌹 🌹 🌹
கைகேயியிடம் தான் காடு செல்வதாய்க் கூறிய போது,
காட்டினை அழகியதாய்ப் பேசிய இராமன்,
சீதை தானும் காடு வருவதாய்க் கூறியதும்,
அதே காட்டைக் கடியதாகக் கூறுதல்,
அவனது அன்பின் வெளிப்பாடாய் அமைந்து இரசிப்புத் தருகிறது.
கற்பினால் திண்மையுறத் தொடங்கிய சீதையோ அசைகிறாளில்லை.
நின் பிரிவை விட அப் பெருங்காடு எனைச் சுடுமோ?
எனக் கேட்டு வருந்துகிறாள்.
 
பரிவு இகந்த மனத்து ஒரு பற்று இலாது
ஒருவுகின்றன, ஊழி அருக்கனும்
எரியும் என்பது யாண்டையது? ஈண்டு, நின்
பிரிவினும் சுடுமோ பெருங்காடு என்றாள்,
🌹 🌹 🌹
இராமன் அவளுக்குப்  பதிலுரைக்கு முன்பாக,
மரவுரி தரித்து வள்ளலின் வலியகரம் பற்றி நிற்கிறாள் சீதை.
அவளின்  இவ்வுறுதி கண்டு மற்றையோர் மண்ணில் வீழ்ந்து அழுகின்றனர்.
மெல்லியளாய்த் தாம் கருதிய சீதையின் வன்மை கண்டு வணங்கி நிற்கின்றனர்.
பேதையாய்க் கிடந்த பெண்மையை பெருந்தகைத்ததாய் வளரச் செய்து,
கம்பன் காட்டும் முதலிடம் இது.- முடிவிடம் காண்பாம்.
🌹 🌹 🌹
சுந்தர காண்டம்.
அசோகவனம்.
அச் சோக வனத்தில் அரக்கியர் சூழ அமர்ந்திருக்கிறாள் சீதை.
இராமன் எண்ணத்தால் வருந்தியும் வாடியும் கிடக்கிறாள் அவள்.
கடல் தாண்டி வந்த அறிஞனாம் ஆற்றல் மிகு அனுமான்.
இக்காட்சியைக் காண்கிறான்.
 
விழுதல், விம்முதல், மெய் உற வெதும்புதல், வெருதல்
எழுதல், ஏங்குதல், இரங்குதல், இராமனை எண்ணித்
தொழுதல், சோருதல், துளங்குதல், துயர் உழந்து உயிர்த்தல்
அழுதல் அன்றி, மற்று அயல் ஒன்றும் செய்குவது அறியாள்.
🌹 🌹 🌹
அப்போது இராவணன் வருகை நிகழ்கிறது.
வந்த இராவணன் தன்னை அணைய வேண்டி,
சீதையை இரந்து நிற்கிறான்.
ஆசை வார்த்தைகளை அள்ளி வீசுகிறான்.
காமத்தால் உந்தப்பட்டு நாணமின்றி, எனை அடிமையாய்க் கொள் என
அவள் அடி வீழ்ந்து வணங்குகிறான்.
 
குடிமை மூன்று உலகும் செய்யும் கொற்றத்து என்
அடிமை கோடி, அருளுதியால் எனா
முடியின் மீது முகிழ்த்து உயர் கையினன்
படியின் மேல் விழுந்தான், பழி பார்க்கலான்.
🌹 🌹 🌹
வலியனான கொடியனாம் வல்லரக்கன் முன்,
இம்மெல்லியள் சீதை அஞ்சுவள், சோர்வள் எனக்கருதிய அனுமனுக்கு,
அளவில்லா ஆச்சரியம் ஏற்படுகிறது.
முதிர்ந்த கற்பினால் உறுதி பெற்ற சீதையின் பேச்சு,
அறிஞனாம் அனுமனை அதிரச் செய்கிறது.
தேவரும் மூவரும் நடுங்கும் அத்தீய அரக்கன் முன்,
தெய்வமென உயர்ந்து நிற்கிறாள் சீதை.
பெண்மைக்கே உரியதான,
அச்சம், நாணம், மடம் அனைத்தையும் துறந்து,
திண்மையுற்ற பெண்மை பேசத் தொடங்குகிறது.
🌹 🌹 🌹
இராவணனின் தீய சொற்கள் நெருப்புப் பாளங்களாகச் செவி புக,
கோபத்தால் சாந்த நிலை தவறிக் கண்களில்  இரத்தம் பாய,
பெண்மையின் இயல்பான மென்மைக்குப் பொருந்தாத,
கடுஞ்சொற்களைப் பேசத் தொடங்குகிறாள் சீதை.
 
காய்ந்தன சலாகை அன்ன உரை வந்து கதுவா முன்னம்
தீய்ந்தன செவிகள், உள்ளம் திரிந்தது, சிவந்த சோரி
பாய்ந்தன கண்கள்' ஒன்றும் பரிந்திலள், உயிர்க்கும் பெண்மைக்கு
ஏய்ந்தன அல்ல, மாற்றங்கள் இனைய சொன்னாள்.
 
🌹 🌹 🌹
தீயனாம் இரவணனின் முகம் நோக்காது,
கீழ்க்கிடந்த துரும்பொன்றை தனக்கும் அவனுக்கும் இடையிலிட்டு,
அவனை அத் துரும்பாய்க் கருதிப் பேச ஆரம்பிக்கிறாள் சீதை.
 
மல் அடு திரள் தோள் வஞ்சன் மனம் பிறிது ஆகும் வண்ணம்,
கல்லொடும் தொடர்ந்த நெஞ்சம், கற்பின் மேல் கண்டதுண்டோ
இல்லொடும் தொடர்ந்த மாதர்க்கு ஏய்வன அல்ல, வெய்ய
சொல், இது தெரியக் கேட்டி, துரும்பு!எனக் கனன்று சொன்னாள்
 
'மகளிரின் மனம் கெடாது, உறுதியாய் இருப்பதற்கு,
கருவியாம் கற்பைப் பூண்ட எம் போன்ற பெண்களுக்கு,
ஏலாதன பிதற்றுகிறாய்' எனத் தொடங்கி,
சீதை பேசிய பேச்சுக்கள் அனுமனுக்கு அளவிலா ஆனந்தம் கொடுக்கின்றன.
இராவணன் சென்றதும் அன்னைமுன் அவன் வருகிறான்.
🌹 🌹 🌹
இராம இலக்குவரையும், பரதனையும் உருமாறிச் சந்தித்த அனுமன்.
அன்னையாம் சீதையை தன் இயல்பான குரங்குருவுடனேயே சந்திக்கிறான்.
இஃது, ஒழுக்கத்தின் முன் அறிவு பணிந்து விடும் என்பதைக் காட்ட,
கம்பன் செய்ததோர் உத்தியாம்.
அன்னையாம் சீதையை வணங்கிய அனுமன் அவளை நோக்கி, 
'என் தோளில் ஏறுக, இராமனிடம் உடன் உன்னைச் சேர்ப்பன்'
எனக் கூறிப் பணிகிறான்.
 
பொன் திணி பொலங்கொடி!என் மென் மயிர் பொருந்தித்
துன்றிய புயத்து இனிதிருத்தி, துயர் விட்டாய்,
இன் துயில் விளைக்க, ஓர் இமைப்பின், இறை வைகும்
குன்றிடை, உனைக்கொடு குதிப்பென், இடை கொள்ளேன்
🌹 🌹 🌹
அவ்விடத்திலும் அனுமனின் அறிவின் எதிர்பார்ப்பு,
சீதையின் ஒழுக்கத்திடம் தோல்வியுறுகின்றது.
'யான் உன்னுடன் வரின் இராமனின் வில்லாற்றல் மாசுறும்,
இன்னும் ஒரு திங்கள் உயிருடன் இருப்பன்,
ஐயனுடன் வந்து அரக்கரை அழித்து என்னை அழைத்துச் செல்க,'
என்கிறாள் சீதை.
 
அன்றியும் பிறிது உள்ளது ஒன்று ஆரியன்
வென்றி வெஞ்சிலை மாசுணும், வேறு இனி
நன்றி என்? பதம் வஞ்சித்த நாய்களின்
நின்ற வஞ்சனை, நீயும் நினைத்தியோ?
இன்னும் ஈண்டு, ஒரு திங்கள் இருப்பல் யான்;
நின்னை நோக்கி பகர்ந்தது, நீதியோய்!
பின்னை ஆவி பிடிக்கிலேன், அந்த
மன்னன் ஆணை, இதனை மனங் கொள் நீ
🌹 🌹 🌹
சீதையுரைத்த இம்மாற்றம் கேட்டு,
கற்பெனும் திண்மையுற்ற பெண்மையின் பேராற்றல் கண்டு திகைத்த அனுமன்,
இலங்கைக்கு எரியூட்டி இராமன் முன் வந்து நிற்கிறான்.
பெண்மையின் புகழை உச்சநிலைக்கு உயர்த்த நினைத்து,
காட்சியைத் தொடர்கிறான் கம்பன்.
🌹 🌹 🌹
'சீதையைக் கண்டனையோ?' எனும், 
இராமனின் கேள்விக்கு வார்த்தைகளால் பதிலுரைக்காத அனுமன்,
தன் செய்கையால் பதிலுரைக்கிறான்.
மரபுமீறி தலைவனான இராமனுக்கு முதுகு காட்டி,
அன்னையாம் சீதை இருக்கும் தென்திசை நோக்கி,
வீழ்ந்து வணங்குகிறான் அவன்.
 
எய்தினன் அனுமனும்,  எய்தி ஏந்தல் தன்
மொய்கழல் தொழுகிலன்,  முளரி நீங்கிய
தையலை நோக்கிய தலையன், கையினன்
வையகம் தழீஇ நெடிது இறைஞ்சி, வாழ்த்தினான்.
🌹 🌹 🌹
கற்பெனுந் திண்மையுற்ற பெண்மை முன்பு,
ஆண்மையும் இரண்டாம் பட்சமேயாம் எனும் உண்மையை,
அனுமனின் இச்செய்கை மூலம் கம்பன் நமக்கு உணர்த்த முனைகிறான்.
எழுந்த அனுமன் பேசத் தொடங்குகிறான்.
'அசோக வனத்தில் யான் அன்னையைக் கண்டிலன்'
அனுமன் கூற அதிர்கிறது குரங்குக் கூட்டம்.
தன் உரையைத் தொடர்கிறான் அனுமன்.
'பொறுமையும், நற் குடிப்பிறப்பும், கற்பும்
களிநடம் புரிதலையே அசோக வனத்தில் யான் கண்டேன்.'
அனுமன் கூற ஆர்ப்பரிக்கிறது குரங்குக் கூட்டம்.
 
விற் பெருந் தடந்தோள் வீர! வீங்கு நீர் இலங்கை வெற்பில்
நற்பெருந் தவத்தளாய நங்கையைக் கண்டேன் அல்லேன்,
இற் பிறப்பு என்பதொன்றும், இரும் பொறை என்பதொன்றும்
கற்பு எனும் பெயரதொன்றும், களிநடம் புரியக் கண்டேன் 
என சீதை இருந்த திசை நோக்கி வணங்கி உரைக்கிறான் அனுமன்.
'இராமா! உன் வில்லுக்கு வேலை வந்து விட்டது.' எனும் குறிப்புத் தோன்ற
விற் பெருந் தடந்தோள் வீர என இராமனை அனுமன் அழைத்தல் நயப்பிற்குரியதாம்.
🌹 🌹 🌹
அனுமன் சொற் கேட்டு இராமனின் முகம் மலர்கிறது.
இராமனது அருகில் மெல்ல வருகிறான் அனுமன்.
அவனிடம் ஓர் தடுமாற்றம்.
இராமனைக் கண்ட அன்றே,
இவனைவிட உயர்ந்தாரை இனிக் காணப்போவதில்லை எனும் உறுதியினால்
இராமனே, தனது தெய்வம் என நினைத்தவன் அனுமன்.
சீதையையும் அவள் ஒழுக்க நிலையையும் கண்ட பின்பு அவனது கருத்து மாறுகிறது.
சீதையின் அவ் உயர்பண்புகள் இராமனிலும் மேலானவளாய்,
அவளை அனுமனுக்குக் காட்டத் தடுமாறுகின்றான் அவன்.
🌹 🌹 🌹
இராமன் தெய்வம் எனின் சீதையை என்னென்று உரைப்பது?
அன்னையைச் சுட்டுவது எங்ஙனம்?
வார்த்தைகளைத் தேடுகிறான் அனுமன்.
இவ்வுலகில் தெய்வத்தின் மேம்பட்டதோர் பொருளுண்டோ?
திகைக்கிறது அனுமன் நெஞ்சம்.
அவன் சொல்லின் செல்வனல்லவா?
இராமனைவிட் உயர்த்தி  சீதையைச் சுட்டுவதற்கான,
அவ்வார்த்தையைக் கண்டு பிடிக்கிறான் அவன்.
இராமனைத் 'தெய்வம்' என்றவன்,
சீதையைப் 'பெருந்தெய்வம்' எனப் பேசித் திருப்தியுறுகிறான்.
கற்பினால் திண்மையுற்ற பெண்மையை உச்சநிலைக்கு உயர்த்தியதில்,
கம்பனுக்கும் திருப்தி உண்டாகப் பாடல் பிறக்கிறது.
 
உன் பெருந் தேவி என்னும் உரிமைக்கும், உன்னைப் பெற்ற
மன் பெரு மருகி என்னும் வாய்மைக்கும், மிதிலை மன்னன்
தன் பெருந் தனயை என்னும் தகைமைக்கும் தலைமை சான்றாள்
என் பெருந் தெய்வம்! ஐயா! இன்னமும் கேட்டி என்பான்
🌹 🌹 🌹
இப்பாடலூடு,
பெண்மை பேதைமை உடைத்தெனினும்,
கற்பெனும் திண்மை உண்டாகப் பெறின்,
அதனின் பெருந்தக்க யாவுள? எனும் வள்ளுவனின் கேள்வி,
கம்பனால் நிரூபணம் செய்யப்படுகின்றது.
🌹 🌹 🌹
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்