வாயிலிலே நின்றேனும் காண மாட்டா வறுமையினை என் சொல்வோம்! -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

உலகமெலாம் காக்கின்ற நல்லூர்க் கந்தன் 
ஒப்பற்ற திருவிழவும் வந்தால் மக்கள்
நிலமதனை விண்ணாக்கி மகிழ்வர் தங்கள்
நினைவெல்லாம் கந்தனது அழகுக் காக்கி
பலபலவாய் விரதங்கள் பிடித்தே வாடிப் 
பக்தியினால் நெஞ்செல்லாம் உருக நின்று
மலமறவே உயிர் வளர்த்து மாண்பு கொண்டு
மங்கலங்கள் கண்டேதான் மகிழ்ந்து நிற்பர்!
 
ஒப்பற்ற கந்தனது வேலைக் கண்டு 
உவந்தேதான் கண்களிலே அருவி ஓட
இப்பற்று எதற்கென்று வாழ்வை நீக்க 
இதயத்தால் ஒருப்பட்டே இயங்கி நிற்பர்
வெப்புற்றுப் பிளந்தேதான் வீரம் செய்த 
வேலவனின் கைவேலே இதுவென்றெண்ணி
முப்பற்றும் நீக்கிய நல் முனிவோர் போல
முருகனையே நல்லூரில் வணங்கி நிற்பர்!
 
ஓம் முருகா! எனும் நாமம் உலகமெல்லாம்
ஒலித்திடவே ஒன்றாகி உரத்துக் கூவி
தாம் வளர அருள் கொடுக்கும் வேலன் தன்னின்
தண்ணளியாம் கருணை நினைந்தழுது நிற்பர்
நாமமதில் முருகனவன் வடிவைக் கண்டு
நாமார்க்கும் குடியல்லோம் என்றே கூறி
சேமமுறச் செய்கின்ற அவன் தாள் பற்றி
சேவிக்கும் அன்பர்களின் பெருமை என்னே!
 
வள்ளியொடு தெய்வானைத் தாய்மார் சூழ
வலம் வருவான் வேல் வடிவாய் கந்தன் தானும்
நல்லவர்கள் மனம் குளிர்ந்து நடுங்கி ஐயன்
நாடரிதாம் திருவுருவின் நலங்கள் கண்டு
தள்ளரிய பெருவரத்தைப் பெற்றாற்போல
தமக்குள்ளே மெய்யுருகித் தளர்வு கொள்வார்
வெல்லரிய வேல் வடிவாய்த் தோன்றும் வேலன்
விளங்கிடவே விண்ணவரும் பணிந்து நிற்பார்!
 
கொடி ஏறிக் கோபுரத்தில் சேவல் ஆடக்
கொண்டாடி அடியரெலாம் குவிவார் அங்கு
அடி அளந்து பெண்களெலாம் அன்பால் விம்மி
'அரகர' என்றனுதினமும் அவனைச் சூழ்வார்
நெடிதுயர்ந்த தோள்களெலாம் மண்ணில் தோய 
நெஞ்சுருகி இளையரெலாம் கந்தன் நாமம்
இடியெனவே முழங்கி அவன் வீதி தன்னில்
எப்போதும் உருளுகிற காட்சி என்னே!
 
அருணகிரி முனிவனிடம் தமிழாய் வந்தான்!
அற்புதமாய் அறுமுகத்தோடவனி வந்தான்!
விருத்தனென வள்ளித்தாய் முன்னே வந்தான்!
வெல்லுகிற போர்முனையில் வேலாய் வந்தான்!
பெரும் புலமை ஓளவையவள் தன்னை ஏய்க்க
பேதமைசேர் இடையன் எனப் பிறழ்ந்து வந்தான்!
அருமைமிகு நல்லூரில் எம்மைக் காக்க
அற்புதமாம் ஐயனவன் அழகாய் வந்தான்!
 
வீதியெலாம் வெண்மணலாய் விரிந்த கூட்டம்
வினைகளற வேலனவன் தன்னைக் கூவி
ஓதி அவன் திருநாமம் உளத்தே சேர்த்து
உணர்வுருகித் தமை மறந்து உறைந்து நிற்கும்
பாதிமதி அணிந்த சிவப் பரமன் தானும்
பார் உயரத் தந்த திருமுருகன் தன்னை
நீதியொடு நினைவார்கள் நெஞ்சத்துள்ளே
நெருங்காது துன்பமதன் சாயல் தானும்
 
சித்தர்களை உருவாக்கிச் சிறக்கச் செய்த
சீரமைந்த நல்லூரான் வீதி தன்னில்
பத்தர்களின் கால் பட்டால் பாவம் தீரும்
பரவுலக வாழ்வதுவும் பயனாய்ச் சேரும்
நித்தமுமே நல்லூரான் வீதி சுற்றி
நினைந்தவனைப் போற்றுகிற அடியார்க்கெல்லாம்
முத்தியொடு பேரின்பம் முழைக்கும் தன்னால்
முருகனவன் பெருமைதனை என்ன சொல்ல?
 
ஆயிரமாய் அடியவர்கள் கண்களெல்லாம்
ஆசையுடன் பார்த்திருக்கும் அழகுக் கோலம்
கோயிலுளே அடங்கியதோ? இந்த ஆண்டு
குமரா! உன் பேர் அழகைக் குறைகள் தீர
வாயிலிலே நின்றேனும் காண மாட்டா
வறுமையினை என் சொல்வோம்! உலகை வாட்டும்
நோயதனைத் தொலைத்தேதான் மீண்டும் எங்கள்
நொந்த மனம் குளிர்ந்திடவே காட்சி நல்காய்!
 
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்