'வெண்மையும் நுண்மையும்' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

லகம் தழுவிய நம்  தமிழ்மொழி,
பல்லாயிரம் சொற்களைத் தன்னகத்தே அடக்கியது.
அச் சொற்களில் பல பொருள் குறிக்கும் ஒரு சொல் எனவும்,
ஒரு பொருள் குறிக்கும் பல சொற்கள் எனவும் வகைகள் உளவாம்.
நம் தமிழ்ச் சொற்கள்,
விரிந்த பொருள்களை உள்ளடக்கிய குறியீடுகளாய், 
நம் எண்ணத்தைப் பொதித்த வைக்க இடமளிப்பவை.
இச் சொற்களே கவிஞர்களின் கைம்முதலாம்.
இச் சொற்களின் துணை கொண்டு,
சிந்தனைக்கு அப்பாற்பட்ட பொருள்களையும்,
நம் கைக்கொண்டு வந்து தரும் சித்து விளையாட்டில் கைதேந்தவர்கள், 
நம் கவிதைச் சித்தர்கள்.
அவர்கள் கையாள்கையில் மயங்கி,
சில் வகைச் சொற்கள் பல்வகைப் பொருள் தந்து,
அவர்க்கு ஏவல் செய்து நிற்கும்.

📚 📚 📚

சாதாரண கவிஞர்களுக்கே ஏவல் செய்;யும் இச் சொற்கள்,
கவிச்சக்கரவர்த்தி கம்பன் கைவயப்பட்டால்,
விந்தை பல புரிவது வியப்பன்றே!
வேறு வேறு இடங்களில் ஒரே சொல் பல பொருள் தரும்படி,
பிற கவிஞர்கள் அமைத்துக் காட்ட,
நம் கவிச் சக்கரவர்த்தியோ,
ஒரே பாட்டில் இரண்டிடங்களில் வரும் ஒரே சொல்லிற்கு,
அச் சொல்லிற்குரிய பொருட்கள் அனைத்தும்,
அவ்விரண்டிடத்திலும் பொருந்துமாறு அமைத்து விந்தை செய்கிறான்.
அந்த அற்புதக் கவிதையைக் காண்பாம்.

📚 📚 📚

அவதார புருஷன்,
இராம காதையின் நாயகன், காசில் கொற்றத்து இராமன்,
அவதரிக்கப்போகும் பேறு பெற்ற நாடு கோசலம்.
இவ்வரிய வாய்ப்பைப் பெற, அக்கோசலம், 
எத்துணைத் தவம் இயற்றியிருத்தல் வேண்டும்?
ஒரு நாட்டின் தவ வெளிப்பாடு அதன் செழிப்பன்றோ?
கோசலத்தில் அச்செழிப்பைப் பல்லாற்றானும் காட்டி வந்த கம்பன்.
ஆயர்பாடியில் ஒரு பெண் தயிர் கடையும் காட்சியை விவரிப்பதாய்,
அவ்வரிய கவிதையை அமைத்துள்ளான்.

📚 📚 📚

பெரியதோர் பானையிலே  தயிரை இட்டு,
மத்தின் வடம் பிடித்துத் தயிர் கடைகின்றாள்;.
இளமை பொருந்திய ஓர் ஆயர் குலப் பெண்,
அப்பெண் தயிரைக் கடைய,
மத்தினால் மொத்துண்ட தயிரில் ஓசை கிளம்புகின்றது.
கயிறசைந்துத் தயிர் கடையும்,
ஆயர்குலப் பெண்ணின் கைகளிற் கிடக்கும் சங்கு வளைகள்.
தயிர் கடையும் அவள் கைகள் அசைய, அசைய,
ஒன்றோடொன்று மோதுவதால், அவற்றிலும் ஓசை கிளம்புகின்றது.
இதுவே கம்பன் காட்டும் அவ் வர்ணனைக் காட்சியாம்.
வளையோசையில் தயிரின் அலையோசை அடங்கிற்று என்றான் கம்பன்.
இவ்வாறு தயிர்கடையும் அப்பெண்ணின் சிற்றிடை,
அவள் கையசைவிற்கேற்ப மெய்யசைவதால் வருந்தி வாடுகிறது.
அசைவுறும் இடையின்; வருத்தம் வணக்கமாய்த் தோன்ற,
அக்காட்சியைக் கவிதையாக்குகிறான் கம்பன்.

தோயும் வெண் தயிர் மத்தொலி துள்ளல் போய்
மாய வெள்வளை வாய் விட்(டு) அரற்றவும்
தேயும் நுண்ணிடை சென்று வணங்கவும்
ஆய மங்கையர் அங்கை வருந்துவர்.

📚 📚 📚

தயிரை வெண் தயிர் என்றும்,
வளையை வெள்வளை என்றும்,
இப்பாடலில் வெண்மை என்ற சொல்லை இருமுறை,
புகுத்துகிறான் கம்பன்.
வெண்மை எனும் சொல்லிற்கு அகராதிகள் தரும் பொருள்கள் மூன்று,
வெண்மையாகிய நிறம், இளமை, அறியாமை என்பவையே அவையாம்.
இம்மூன்று பொருள்களையும்,
வெண்மை எனும் அச்சொல்லைத் தான் பயன்படுத்தும் இரு இடங்களிலும், 
பொருந்திப் பொருள் காணுமாறு அமைத்து,
கற்றோரைக் களிக்கச் செய்கிறான் கம்பன்.

📚 📚 📚

முதலில், வெண்மை என்ற சொல்லிற்கு,
நிறம் என்ற பொருள் பொருந்துமாற்றைக் காண்பாம்.
இப்பொருள் சிந்தனைக்கிடமின்றி எளிமையாய் இரு இடங்களிலும் பொருந்தி நிற்கிறது.
தயிரது வெண்மை நாம் அறிந்ததே,
ஆயர்பெண்கள் கைகளிலிடுவது சங்கு வளைகளாதலால்,
குறித்த, தயிர் கடையும் அப்பெண்ணின் கையில் கிடந்த வளைகளை, 
வெள்வளை என்றதும் பொருத்தமேயாம்.
இவ்விரு பாடலடிகளிலும் வரும் வெண்மை என்ற சொற்கள், 
நிறத்தைக் குறித்து நிற்பது தெளிவாகிறது.

📚 📚 📚

அவ்வளைகளின் ஓசையில் தயிரின் ஓசை மாய்ந்து போவதால்,
ஒலி துள்ளல் போய் மாய என்ற பொருளும் அவ்வளைகள் அசையும் வேகத்தால்,
அவை இருப்பது போன்றும், இல்லாதது போன்றும் தோற்றந் தருவதால்,
மாய வெள்வளை என்ற  பொருளும் பொருந்துதல் கண்டு மகிழ்கிறோம் நாம்.
மாய என்ற சொல்லை மடிதல், மாயம் செய்தல் எனும், 
இரு பொருள்களில் கம்பன் பயன்படுத்தியமையும் நயப்பிற்குரியதாம.; 

📚 📚 📚

இனி வெண்மைக்கு,
இளமையெனும் பொருள் பொருந்துமாற்றைக் காண்பாம்.
வெண்மை என்ற சொல்லுக்கு இளமை என்ற பொருள் கொள்ள.
வெண்தயிர் எனும் சொல், இளந்தயிர் எனப் பொருள் தருகிறது.
இக்கருத்து, நாம் வலிந்து பொருள் கொள்வதாய் ஆகுமோ? எனின், -ஆகாதாம்.
முதிர்ந்த தயிர் செங்நிறங் கொண்டது.
செந்தயிர்க் கண்டம் கண்டம் இடை இடை செறிந்த சோற்றில் என்று, 
பிறிதோரிடத்தில் கம்பனே இதை எடுத்துக் காட்டுகிறான்.
முதிர்ந்த தயிர் கடைந்ததும் வெண்ணெயை வெளிப்படுத்தும்.
இப்பெண்ணோ இடை வருந்த நீண்ட நேரம் தயிர் கடைகிறாள். 
அவள் இளமை காரணமாய் அனுபவமின்றி,
தன்னைப் போல், முதிர்ச்சியுறாத தயிரினை முனைந்து கடைவதால்,
வெண்ணெய் வெளிப்படவில்லை.
இதனாலும் கடையப்படுவது இளந்தயிரென்பது உறுதியாகிறது.

📚 📚 📚

இனி, வெள்வளை என்ற தொடரில் வெண்மை என்ற சொல்லிற்கு, 
இளமை எனப் பொருள் கூறுதல்  பொருந்துமோ? எனிற் பொருந்துமாம்.
இளமை மிக்கவர்கள் அணியும் ஆடை, அணிகலன்கள்,
அவர்தம் இளமையை வாங்கி இளமையுற்றுத் தோன்றுதல் கண்கூடு.
ஆகவே, அப்பெண்ணின் இளமையை வளையிலேற்றி,
இளவளையெனப் பொருள் கொள்ளச் செய்கிறான் கம்பன். என்க!

📚 📚 📚

மேற் சொன்ன இரண்டு இடங்களிலும்,
வெண்மைக்கான  இவ்விரண்டு பொருள்களும் பொருந்திப் போக,
அறியாமை எனும் மூன்றாம் பொருள் இவ்விரு இடங்களிலும்,
அமையாது நின்று இடையூறு செய்யுமாப் போலத் தோன்றுகிறது.
தயிர், வளை ஆகிய இவ்விரண்டும் சடப் பொருள்கள்.
அறிவு, அறியாமை இரண்டுமற்ற இச்சடப் பொருள்களில்,
அறியாமை எனும் பொருளைப் பொருத்துவது எங்ஙனம்?
குழம்புகிறோம் நாம்.

📚 📚 📚

விந்தை செய்கிறான் கம்பன்.
இவ்விடத்தில், மறை பொருளாய் ஓர் பேருண்மையை,
'பிறிதுமொழிதல்' எனும் அணியின் மூலம் விளக்கம் செய்கிறான் அவன்.
வாழ்வில் நாம் அடையும் இன்ப, துன்பங்கட்கு
காரணமாய் அமைவது முன்னை வினையேயாம்.
நுண்ணறிவாளர்கள் இவ்வுண்மையை உணர்ந்து கொள்வர்.
அதனால், துன்பம் தம்மைத் தாங்கும்போது, வீணே புலம்பித் திரியாது.
இறைவன்தாள் வணங்கி அவ்வினையை அனுபவித்துக் கடப்பர்.
அறிவற்ற மூடர்களோ,
விதியின் இயல்பு உணராது துன்பங்கண்டு புலம்பித் தீர்ப்பர்.
விதியின் இயல்பை,
அறிவோர் அறிவர்.
அறியார் அறியாரே.
இஃது இயற்கையாம்.

📚 📚 📚

இப்பாடலிலே துன்பத்தால் தாக்குறும் பொருட்கள் மூன்று.
கடைவதால் துன்பமுறும் தயிர்.
அலைவதால் துன்பமுறும் வளை.
அசைவதால் துன்பமுறும் இடை.
தயிராயின் கடை படுதல் அதன் விதி.
வளையாயின் அலைவுறுதல் அதன் விதி.
இடையாயின் அசைவுறுதல் அதன் விதி.
ஆனால்,
இங்கு தம் விதியறியாது தயிரும், வளையும்
கடைதல் பற்றியும், அலைதல் பற்றியும் வாய்விட்டு அலறுகின்றன.
இஃது அறியார் செயலன்றோ?
விதியினை வணங்கிக் கடக்கவறியா இவ்விரண்டையும்,
அறிவற்றவை எனப் பொருள் படும்படி,
வெண் தயிர், வெள் வளை எனக்கூறி,
அவற்றின் அறியாமையை சுட்டி  நயக்கச் செய்கிறான் கம்பன்.
இங்ஙனமாய் இவ்விரு இடங்களிலும் வெண்மை எனும் சொல்லுக்கு
அறியாமை எனும் பொருளையும் கொள்ள வைக்கும், 
கம்பனின் கைவண்ணம் கண்டு வியக்குறோம் நாம்.

📚 📚 📚

ஆயப் பெண்ணின் இடையோ அசைவது தன் விதி என உணர்ந்து,
புலம்பாது அத்துன்பத்தைத் கடக்க வணங்கி நிற்கிறது.
விதியுணர்ந்த அவ்விடையை நுண் இடை எனப்பாடி,
அறிவின் திறத்தை அதில் ஏற்றி உரைத்தும்,
இளம் பெண்ணின் அங்கலட்சணத்திற்கேற்ப,
சுருங்கி நிற்கும் அவ்விடையின் அழகின் திறத்தை வெளிப்படுத்தியும், 
நம்மை மகிழ்விக்கின்றான் கம்பநாடன்.

📚 📚 📚

ஒரு சொல்லின் மூன்று பொருள்களையும்,
அச்சொல் வரும் இருவிடங்களிலும் வருவித்துக்காட்டி,
நயக்கச் செய்யும் கம்பன் கவித் திறம்,
கற்றோர் இதயத்தைக் களிக்கச் செய்வதாம்.

📚 📚 📚

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்