வாக்குண்டாம்! வெல்ல வழியுண்டாம்! -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

லகத்தின் பார்வை மீண்டும் இலங்கைமீது பதிந்திருக்கிறது.
காரணம், வரப்போகும் பாராளுமன்றத் தேர்தல்.
இத் தேர்தல் இம்முறை தமிழர்தம் அரசியல் பாதையைப் புரட்டிப்போடும் போல் தெரிகிறது.
அதனால் தமிழர் பிரதேசத்திலும் தேர்தற் களம் பரபரப்பாகியிருக்கிறது.
அவருக்கா? இவருக்கா? எனக் கேள்விகளும்,
அவருக்கே! இவருக்கே! என்ற பதில்களுமாக,
ஊடகங்களிலும் இணையத் தளங்களிலும்,
அறிக்கைப் போர் பரபரப்பாய் நடந்துகொண்டிருக்கிறது.
🎯 🎯 🎯
தேர்தல் காலங்களில் இவ்வாறு நடப்பது இயல்புதான்.
ஆனால், வெளிவரும் அறிக்கைகளில் பல, 
இனநன்மை நோக்கியதாய் இல்லாமல் சார்புபட்டவையாக இருப்பதுதான்,
மனக்கவலை தரும் விடயமாக இருக்கிறது.
இங்ஙனமாய் சார்பு அரசியல் பேசுவோரும், 
தாம் இனநலம் நோக்கியே பேசுவதாகச் சொல்லிக்கொள்கின்றனர்.
தத்தம் அணிநோக்கி மற்றவர்களால் கேட்கப்படும் கேள்விகளுக்கு,
பதில் சொல்லும் திறனற்றிருந்தும் தம்மை நியாயப்படுத்தி நிற்கும் அவர்களது துணிவு,
பொதுமக்களின் அறியாமைமேல் அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையையே இனங்காட்டுகிறது.
🎯 🎯 🎯
அதனால் நேர்மையான, நடுநிலையான, இனநன்மை ஏற்படுத்தக் கூடிய,
ஓர் தேர்தல் வழிகாட்டுதலைச் செய்யும் நோக்கத்துடனேயே,
இக்கட்டுரையை நான் எழுதுகிறேன்.
என்னை அரசியல் அரங்கில்  மௌனிக்கச் செய்வதற்காக,
போற்றியும், தூற்றியும் பலர் முயன்று வருகின்றனர்.
போற்றுவோர் 'மதிப்பிற்குரிய நீங்கள் ஏன் இந்தச் சாக்கடைக்குள் போகிறீர்கள்?'
என்றாற்போல் பேசி என்னை மயக்க முற்படுகின்றனர்.
தூற்றுவோர் என்னை இழிவு செய்ய,
கேவலத்தின் எந்த எல்லையையும் தொடத் தயாராகியிருக்கின்றனர்.
இவை எதற்கும் நான் எடுபடவோ, அஞ்சவோ போவதில்லை.
🎯 🎯 🎯
ஒன்றை மட்டும் மீண்டும்  ஒருதரம் உரக்கச் சொல்லவேண்டியிருக்கிறது.
இலக்கிய, சமயவாதிகளுக்கு எதற்கு அரசியல்? என்போர்தம் கருத்தை,
நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
நடுநிலையாய் பேசக்கூடிய அத்தகையோர்தான்,
அரசியல் பேசவேண்டும் என்பது என் தீர்க்கமான முடிவு.
அரசியலில் தலையிட்டு நாட்டை நெறி செய்த,
சம்பந்தர், நாவுக்கரசர், சேக்கிழார் பெருமான் போன்ற ஆன்மீகவாதிகளும்,
வள்ளுவர், ஒளவை, கம்பர், பாரதி போன்ற இலக்கியவாதிகளும்,
இவ்விடயத்தில் எனக்கு வழிகாட்டியிருக்கிறார்கள்.
அவர்களின் வழியே என் வழியுமாம்!
🎯 🎯 🎯
நமது தலைவர்கள் பொறுப்பின்றி சுயநலத்தோடு இயங்குவதற்கு,
நம் மக்கள்தம் இயல்பே காரணமாயிருக்கிறது.
நடந்து முடிந்த போரின் பாதிப்பிலிருந்து,
இன்றுவரை மீண்டு வராத தமிழ்மக்கள்,
பேரழிவுமிக்க அனுபவங்களைப் பெற்றபின்பும்,
அறிவு சாராத, உணர்ச்சி அரசியலையே விரும்புகிறார்கள்.
இஃது விதியின் வன்மையேயாம்.
🎯 🎯 🎯
மக்களின் இவ்வியல்பினைப் பயன்படுத்துவதில்,
நம் தலைவர்கள் சமர்த்தர்களாய் இருக்கின்றனர்.
இனநன்மைக்காய் இதுவரை, உருப்படியாய் எதுவுமே செய்யாத இத்தலைவர்கள்,
நடைமுறைச் சாத்தியமற்ற அறிக்கைகள் மூலமும்,
பொய்யான குற்றச்சாட்டுக்கள், பாராட்டுக்கள் என்பவற்றின் மூலமும்,
தமது பதவி ஆசைகளைத் திரைபோட்டு மறைத்துவிட்டு,
தொடர்ந்து, தமிழ்மக்களை ஏமாற்ற முனைந்து வருகின்றனர். 
இவர்களை நாம் இனங்காணத் தவறுவோமாகில்,
இன்னும் நூறாண்டுகளுக்கு நம் இனம் இடர்ப்படப்போகிறது.
அதனால்த்தான்,
நம் தமிழ்மக்கள் இம்முறை யாருக்கு  வாக்களித்தல் வேண்டும் என்பதனை,
ஆராய்ந்து  அடையாளப்படுத்தும் நோக்குடன் இக் கட்டுரையை வரைகின்றேன்.
🎯 🎯 🎯
இம்முறை, யாருக்கு வாக்களிப்பது என்பது பற்றிய கருத்தைப் பகிர்வதின் முன்பாக,
அனைவருக்குமாக ஒன்றை உரைக்கவேண்டியிருக்கிறது.
இம் முறையேனும் உங்களது வாக்குரிமையை வீணாக்காமல்,
படித்தவர், படிக்காதவர் என அனைவரும் ஒன்றுபட்டு,
தயைகூர்ந்து வாக்களிக்க முன்வாருங்கள்.
குறிப்பாக, படித்த மேல்த்தட்டு வர்க்கத்தினரிடம்,
மேற்கருத்தை அழுத்தி வலியுறுத்த விரும்புகிறேன்.
நமது படித்த மேல்த்தட்டு வர்க்கத்தினர் பெரும்பாலும் வாய்வீரர்களாக,
ஒருவர்க்கும் பயனின்றி, வீடுகளிலும் சந்திகளிலுமாக அரசியல் ஆய்வுகள் நடத்திவிட்டு,
ஜனநாயகத்தின் அடிப்படை உரிமையாகிய வாக்களித்தல் கடமையைக் கூட,
செய்யாமல் இருப்பது வேதனைக்கும் கண்டனத்துக்கும் உரிய ஒன்றாம்.
🎯 🎯 🎯
மீண்டும் நாம் ஆரம்பித்த விடயத்திற்குள் வருவோம்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் போட்டியிடும் அங்கஜன் இராமநாதன் அவர்களும்,
ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடும் விஜயகலா மகேஸ்வரன் அவர்களும்,
பேரினவாதக் கட்சிகளின் பிரதிநிதிகளாய் தம்மை அடையாளப்படுத்தி,
தேர்தலில் போட்டியிடுவதால், 
சலுகைகளை நிராகரித்து உரிமை கோரும் அரசியலுக்காய்,
கடந்த அரை தசாப்தமாகப் போராடிக் கொண்டிருக்கும் தமிழ்மக்கள்,
மேற்சொன்ன வேட்பாளர்களை முழுமையாய் அங்கீகரிப்பது,
சாத்தியமான ஒன்றில்லை என்றே படுவதால்,
அவ் வேட்பாளர்கள் இவ் ஆய்வில் நிராகரிக்கப்படுகின்றனர்.
🎯 🎯 🎯
புலிகள் காலத்திலிருந்தே தன்னைத் தனித்து அடையாளப்படுத்தி,
அரசியலில் சுயத்தோடு புதிய பாதை அமைத்து,
'மத்தியில் கூட்டாட்சி , மாநிலத்தில் சுயாட்சி' எனும்,
கொள்கைப் பிரகடனத்தோடு இயங்கிவரும்,
டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஈ.பி.டி.பி கட்சியையும்,
மேற் சொன்ன இன உரிமைகோரும் கட்சிகளின் வரிசையில்,
தமிழ்மக்கள் முழுமையாய் அங்கீகரிக்கமாட்டார்கள் என்றே கருதுகிறேன்.
🎯 🎯 🎯
பலகாலமாய்ப் பேரின அரசுகளோடு இணைந்து இயங்கும் இக்கட்சி,
தான் சொன்னதான 'மாநிலத்தில் சுயாட்சி' என்ற கொள்கை நோக்கி,
பெரிய அளவில் நகராததாலும்,
மத்தியில் தான் அமைத்துக் கொண்ட கூட்டாட்சிகள் மூலம்,
இன நன்மை நோக்கிய பெரிய சாதனைகள் எதனையும் நிகழ்த்தாததாலும்,
இக்கட்சியின் மூலம் பயன்பெற்ற குறிப்பிட்ட குழுவினரைத் தவிர,
மொத்த இனமும் இக்கட்சியை அங்கீகரிக்கும் என்று தோன்றவில்லை.
அதனால் இதனையும் இவ் ஆய்விலிருந்து நீக்கவேண்டியிருக்கிறது.
🎯 🎯 🎯
இவர்கள் தவிர திரு. ஆனந்தசங்கரி அவர்களின் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி,
முன்னாள் மாகாண அமைச்சர் ஐங்கரநேசனின் தமிழ்த்தேசிய பசுமை இயக்கம் கட்சி,
சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிடும் அணி என்பவை,
மக்கள் கருத்தில் பெரும் பதிவை ஏற்படுத்தாத காரணத்தினால்,
அவையும் இக்கட்டுரையின் ஆய்வில் நிராகரிக்கப்படுகின்றன.
🎯 🎯 🎯
எனவே, இம்முறை தேர்தலில் போட்டியிடும் தமிழ்க்கட்சிகளில் மூன்றினை மட்டுமே,
தமிழ் மக்கள் தம் கருத்தில் கொள்வார்கள் என்று கருதுகிறேன்.

📌கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தலைமையில் இயங்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி

📌முன்னாள் முதலமைச்சரான சி.வி.விக்னேஸ்வரன் அவர்களின் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி,

📌இதுவரை தமிழ்மக்களால் நம்பப்பட்ட பாரம்பரியம்மிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,

எனும் கட்சிகளே அவையாம்.
🎯 🎯 🎯
இந்த மூன்று கட்சிகளில் யாருக்கு வாக்களிப்பது என்பதே,
தமிழ் மக்கள் முன் விஸ்வரூபம் எடுத்திருக்கும் கேள்வியாகும்.
பொதுமக்களுக்கு அதுபற்றி வழிகாட்டுதல் செய்யும் நோக்கத்துடனேயே,
இக் கட்டுரையை வரைகிறேன்.
🎯 🎯 🎯
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுடைய கட்சி,
அவருடைய பாட்டன், தந்தை வழி வந்த அரசியல் புகழால்த்தான்,
இன்றும் அடையாளப் படுத்தப்படுகிறது.
இக் கட்சியின் இன்றைய தலைவரான கஜேந்திரகுமாரின் ஆற்றல் கொண்டோ,
அவருக்கான மக்கள் செல்வாக்கைக் கொண்டோ,
அக் கட்சி அடையாளப்படுத்தப்படவில்லை என்பது வெளிப்படை.
பாராளுமன்றப் பதவி கிடைக்காமல் கூட்டமைப்பிலிருந்து வெளிவந்த பிறகு,
அவர் கூட்டமைப்பினர் மீது சொல்லிவரும் குற்றச்சாட்டுகள்,
பதவி மீதான அவரது விருப்பத்தையே வெளிப்படுத்தி நிற்கின்றன.
பதவி கிடைத்தவரை கூட்டமைப்புக்குள் இருந்துவிட்டு,
பதவி கிடைக்காமல் போனதும் வெளியில் வந்து அவர் போடும் சத்தங்கள்,
அவரது பதவி ஆசையின் வெளிப்பாடாகவே மக்களால் கணிக்கப்படுகின்றன.
மூத்த தலைவர்கள் எவரும் இல்லாத அவரது கட்சியின் நிலையும்,
ஆரம்பத்தில் முன்னாள் முதலமைச்சருக்கு 'வால் முறுக்கிவிட்டு',
இப்பொழுது அவரோடும் முரண்பட்டு நிற்கும் இயல்பும்,
தமிழ் மக்களுடன் கீழிறங்கி இணைந்து நடக்கத்தெரியாத இவர்களது போக்கும்,
நிச்சயம் இவர்களைத் தமிழினத்தின் தலைவர்களாய்க் கருதவிடாது என்பது உறுதி.
அதனால் இம்முறை தேர்தலில் தமிழ் மக்கள் தமது ஆதரவை,
இவர்களது கட்சிக்கு வழங்குவதில் அர்த்தம் இருக்கப் போவதில்லை.
🎯 🎯 🎯
தமிழ் மக்களின் அரசியல் பாதையில்,
யாரென்றே தெரியாதவராய் இருந்த சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள்,
கூட்டமைப்போடு இணைந்து அரசியலுக்குள் நுழைந்தார்.
அவர்களின் செல்வாக்கால் மக்களிடம் அடையாளப்படுத்தப்பட்டு,
மாகாணசபை முதலமைச்சரானார்.
பின்பு, வெளிப்படையான காரணங்கள் எதனையும் உரைக்காமல்,
தன்னை வளர்த்த கட்சிக்குள் குழப்பங்கள் செய்யத் தொடங்கினார்.
அவரது இச் செயலால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும், இனத்திற்குள்ளும்,
பெரும் பிளவுகள் ஏற்படத் தொடங்கின.
தான்  பொறுப்பேற்ற மாகாணசபையின் மூலம் 'உருப்படியாய்' எதனையும் சாதிக்காத,
இன்னும் சொல்லப்போனால், நிறையக் குழப்பங்களைச் செய்த இம் மனிதர்,
இம்முறை, புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்து கூட்டணி அமைத்து,
தேர்தல் களத்தில் குதித்திருக்கிறார்.
பலகாலமாய் தமிழர்தம் அரசியல் பிரச்சினைகளைக் கையாண்டு வந்த,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் மீதான வெறுப்பும் சலிப்புமே,
சி.வி.விக்னேஸ்வரன் அவர்களின் மீதான ஆதரவாய்,
மாயத் தோற்றம் ஒன்றை உருவாக்கியுள்ளது.
ஆராய்ந்து பார்த்தால் மக்கள் ஆதரவைப் பெறும் வகையில்,
அவர் ஏதேனும் சாதனைகள் செய்ததாகத் தெரியவில்லை.
🎯 🎯 🎯
'சர்வதேசத்தின் ஆதரவோடு பொதுஜன வாக்கெடுப்பு' போன்ற,
நடைமுறைச் சாத்தியமில்லாத கொள்கைகளை அறிவித்து,
தனது கட்சியின் வெற்றிக்காய், மக்கள் உணர்ச்சிகளைப் பொய்மையாய்க் கிளறி,
நம் இனத்தை, மீண்டும் ஒரு போர்நோக்கி நகர்த்த முயலும் இவரது போலித் தன்மையை,
நிதானமான தமிழ் மக்கள் ஓரளவு உணர்ந்து கொள்வார்கள் என்றே கருதுகிறேன்.
ஏற்கனவே கூட்டமைப்பிலிருந்து பதவி ஆசையால் வெளிவந்த,
சில கட்சிகளையும், தனிமனிதர்கள் சிலரையும் தன்னுடன் கூட்டுச்சேர்த்துக் கொண்டு,
தேர்தல் களத்தில் குதித்திருக்கிறார் இவர்.
🎯 🎯 🎯
அவரோடு இணைந்திருக்கும் சில கட்சித் தலைவர்களே,
'இது கொள்கைக்கூட்டணி இல்லை' எனப் பகிரங்கமாய்ப் பேட்டி அளித்து வருகின்றனர்.
இவை தவிரவும், வாராது வந்து தமிழர்க்குக் கிடைத்த மாகாணசபை நிர்வாகத்தை,
தன் சுயவிருப்புக்காய் இவர் பாழ்படுத்திய விதத்தையும்,
தமிழ் மக்கள் இன்னும் மறக்கவில்லை என்பதும் முக்கியமானது.
பல பலவீனங்களுடன் வாய்வீரராக மக்கள் முன் வந்திருக்கும் முன்னாள் முதலமைச்சர்,
மேற்சொன்ன காரணங்களால் தமிழ்மக்களால் நிராகரிக்கப்படுவார் என்பதே,
பலரதும் எதிர்பார்ப்பாய் இருக்கிறது, அது நடக்காத பட்சத்தில்,
தமிழ் மக்கள் இன்னும் பல இன்னல்களைச் சந்திக்கவேண்டி வரும் என்பது திண்ணம்.
🎯 🎯 🎯
இனி எஞ்சியிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பற்றியதான,
மக்களின் நன்நோக்குக் கருத்துக்கள் பின்வருமாறு அமைகின்றன.

📌பாரம்பரியமிக்க ஜனநாயகக் கட்சியின் தலைமையில்  இயங்கும் ஓர் அமைப்பு என்ற பலம்.

📌பலகாலம் இனப்பிரச்சினையில் ஈடுபட்ட சம்பந்தன் போன்ற, ஒரு மூத்த தலைவரின் வழிகாட்டலில்  இயங்கும் அமைப்பு என்ற பலம்.

📌இன்று இலங்கையில் உள்ள சட்டத்துறை ஆற்றலாளரான சுமந்திரனை  உள்ளீர்த்து, பெரும்பான்மையின அரசையும், உலக அரசியல் சக்திகளையும், காலத்தேவை அறிந்து கையாளும் அமைப்பு என்ற பலம்.

📌போராளிகளால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு எனும் அங்கீகாரப் பலம்.

📌கடந்த காலங்களில் தமிழ்மக்களின் ஒருமித்த ஆதரவைப் பெற்ற அமைப்பு என்ற பலம்.

மற்றைய கட்சிகளுடனான ஒப்பீட்டில்,
மேற்சொன்னவை, கூட்டமைப்புக்கு இருக்கும் தனித்தகுதிகளாய் மக்களால் கருதப்படுகின்றன.
🎯 🎯 🎯
இன்றைய அரசியல் களத்தில், இக்கட்சிக்கு எதிரான நிலைப்பாடுகளும் பதிவாகவே செய்கின்றன.
சிலரது தூண்டுதல்களாலும், சுயநலத் தேவைகளாலும் இவர்களது கட்சிக்குள்ளேயே,
சுமந்திரனுக்கு எதிரான பிரச்சாரம் அண்மைக்காலமாக மிகக் கடுமையாக நடைபெற்று வருகிறது. 
சுமந்திரனை மக்கள் மனதிலிருந்து ஓரம் கட்டவேண்டும் என,
எதிர் அணியினருக்கு நிகராக இவர்களது கட்சிக்குள்ளேயே சிலர் செய்து வரும்,
அருவருப்பான முயற்சிகள் மக்கள் மத்தியில் பெரும் வெறுப்பை உண்டாக்கியிருக்கின்றன.
இன உணர்வு விடயத்தில் பாராளுமன்றில் தீவிர உணர்ச்சியோடு இயங்கும்,
சுமந்திரன், ஸ்ரீதரன் போன்றோரை நோக்கிய இக்குழுவினரின் திட்டமிட்ட தாக்குதல்கள்,
கூட்டமைப்புக்குள் ஆற்றலாளர்களுக்கு இடமில்லையோ? என,
மக்களை அதிருப்தியுறச் செய்திருக்கிறது.
🎯 🎯 🎯
உலக அளவிலும், நம் தேச அளவிலும்,
இனப்பிரச்சினை விடயங்களைக் கையாள்வதில் சுமந்திரன் அளவு ஆற்றல் பெற்ற,
அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்ற ஒருவர், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள்ளேயோ,
அன்றி மாற்று அணிகளுக்குள்ளேயோ இருக்கின்றாரா? எனும் கேள்விக்கு,
'இல்லை' என்பதே வெளிப்படையான, உறுதியான பதிலாய் அமைகிறது.
🎯 🎯 🎯
போரழிவுக்குப் பின் இக்கட்டான நிலையில் நிற்கும் நம் இனத்திற்கு,
சர்வதேசங்களின் ஆதரவு கட்டாயமாகத் தேவைப்படும் இன்றைய சூழ்நிலையில்,
அவற்றால் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஒருவரை நிராகரிப்பது,
எத்தனை  மடத்தனமான செயல் என்பதை நம் இனம் அறிதல் வேண்டும்.
பதவிகளுக்காக கட்சிவிட்டுக் கட்சி தாவிக்கொண்டிருக்கும் மாற்றணித் தலைவர்களும்,
தாம் முன்னணிக்குவர சுமந்திரனின் ஆளுமை முட்டுக்கட்டையாக இருப்பதாய் உணரும்,
கூட்டமைப்பின் சில தலைவர்களுமே வீண் பழிகள் சொல்லி,
சுமந்திரனுக்கான மக்கள் ஆதரவை நீக்க, முயன்று வருகிறார்கள்.
இதனைத் தமிழினம் உணர்ந்து கொள்ளவேண்டும்.
🎯 🎯 🎯
சூழ நின்று, எதிரிகள் எம் இனத்தை விழுங்கக் காத்திருக்கும் இன்றைய நிலையில்,
இதுவரை இனப்பிரச்சினையைக் கையாண்ட முன் அனுபவம் அவசியமாகிறது.
அதுபோலவே அதனைக் கையாள்வதற்குரிய ஆற்றல்மிக்க சுமந்திரனின் இருப்பும்,
இன்றைய நிலையில் மிகமிக அவசியமாய்க் கணிக்கப்படுகிறது.
இத்தகுதிகளை உட்கொண்டிருக்கும் தமிழர் தேசியக் கூட்டமைப்பை ஆதரிப்பதைத் தவிர,
தமிழ்மக்களுக்கு வேறு வழி இருப்பதாய்த் தெரியவில்லை.
🎯 🎯 🎯
இருக்கக் கூடிய பாராளுமன்றப் பதவிகளை,
பதவி ஆசைக்காகவும், தமது தனி உயர்வுக்காகவும் பங்குபோட நினைக்கும்,
தலைவர்களுக்கு ஆட்பட்டு,
நமது பாராளுமன்றப் பலத்தைச் சிதைப்போமானால்,
நிச்சயம் எதிர்காலத்தில் நம் இனம் தாழ்ச்சியுறும்.
எனவே, சரியோ, பிழையோ குறித்த ஒரு அணியை வெற்றிபெறச் செய்து,
அதன் மூலம் நம் ஒற்றுமையை வெளிப்படுத்தி,
தமிழினத்தின் பேரம் பேசும் சக்தியை நாம் வளர்த்தேயாகவேண்டும்.
அந்த வகையிலும் தமிழ்மக்களுக்கு இப்போதைக்கு 'உள்ளதில் வல்லிசாய்' இருப்பது,
தமிழ் தேசியக் கூட்டமைப்பேயாம் என்பதில் எவ்வித ஐயமில்லை.
🎯 🎯 🎯
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்