மனுநீதிகண்ட சோழன்: பகுதி 2-கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-

அங்ஙனமன்றி வாழ், தரு என இச்சொல்லைப் பிரித்து, மன்னுயிர்கட்கெல்லாம் மண்ணில் வாழ் தரு எனக் கொண்டு கூட்டி, உயிர்க்கட்கெல்லாம், மண்ணில் வாழ்கின்ற கற்பகத்தருவாய் பயன் செய்பவன் எனவும், இவ்வடிக்குப் பொருள் கொள்ளல் கூடும்.

🔔 🔔 🔔 🔔

லகிலுள்ள மனிதர்களுக்கு மட்டுமன்றி, 
எல்லா உயிர்களுக்கும் வரும் துன்பம் போக்கிக் காவல் செய்பவனே,
அரசனாவான் என்பது தமிழர் தம் நீதி.
அவ்வுண்மையை இப்புராணத்தில் வரும்,
கழறிற்றறிவார் நாயனார் கதையில் காணலாம்.
மனிதர் தவிர்ந்த மற்றைய உயிர்களதும் பாதுகாப்புப் பற்றி,
இன்றுதான் நவீன அறிவுலகம் சிந்திக்கிறது.
இக்கருத்தை என்றோ உட்கொண்ட சைவத் தமிழ் மரபில் வந்த நாம்,
நிச்சயம் பெருமை கொள்ளலாம்.

🔔 🔔 🔔 🔔

இனி, 
கண்ணும் ஆவியுமாம் பெரும்காவலன் எனும் தொடருக்காம்,
பொருள் காணப்புகுகின்றோம்.
கண்ணையும் உயிரையும் போல அவதானித்து மக்களைக் காத்தனன் என்பது,
இந்த அடிக்காம் பொதுப்பொருள்.

🔔 🔔 🔔 🔔

கண்ணும் ஆவியுமாம் பெரும்காவலன் எனும் தொடரிற்கு,
ஆழ்ந்த வேறோர் அர்த்தமும் உண்டு.
புற உறுப்புக்களுள் கண்ணையும்,
அக உறுப்புக்களுள் உயிரையும்,
காவல் செய்வதில் நாம் முதன்மை காட்டுகிறோம்.
கண்ணும் ஆவியுமாம் பெரும்காவலன் என்றதனால்,
இவ்வரசன் தன் மக்களை,
புற உறுப்புக்களில் கண்ணைக் காப்பது போல,
புறப் பகையிலிருந்து காத்தனன் என்றும், 
அக உறுப்புக்களில் உயிரைக் காப்பது போல,
அகப் பகையிலிருந்து காத்தனன் என்றும் பொருள் கொள்ளலாம்;.

🔔 🔔 🔔 🔔

இந்த உவமை மூலம் இம்மன்னன் புற, அறமாகிய நீதியை கண்ணைப்போலவும்,
அக அறமாகிய தர்மத்தை தன்னுயிரைப் போலவும் காத்தனன் என்பதும் புலனாகிறது.
கண்ணா? உயிரா? எனும் நிலைதோன்றின்,
உயிர் காத்துக் கண்ணை அர்ப்பணிப்பது உலகியல்பு.
இம்மன்னவனும்,
நீதியா தர்மமா, எனும்நிலை தோன்ற,
தர்மத்தைக் காத்து நீதியைப் புறக்கணித்துத் தெய்வநிலை உற்றான் என்பது காதை.
அக்கதைக்குறிப்பையும் இவ் உவமையூடு,
தெய்வச்சேக்கிழார் பதிவாக்குவது அற்புதத்திலும் அற்புதமாம்.

🔔 🔔 🔔 🔔

இனி, கண்ணும் ஆவியுமாம் பெரும்காவலன் எனும் இவ் அடிக்கு,
தத்துவார்த்த அடிப்படையில் மற்றோர் பொருளைக் காணலும் பொருந்தும்,
கண்ணொளியும், உயிரொளியும்; கலந்தே,
ஆன்ம போதத்தை (அறிவை) நமக்கு உருவாக்குகின்றன.
அதுபோலத் தன் நாட்டு மக்களுக்கு,
கண்ணொளியாய் நின்று நல்லவற்றைக் காட்டியும்,
உயிரொளியாய் நின்று நல்லவற்றை உணர்த்தியும்,
அறிவூட்டி ஏற்றம் செய்தான் இவ் அரசன் எனவும்,
இவ் அடிக்குப் பொருள் கொள்ளலாம்.
முதற் சொன்ன பொருள் புறக் காவலையும்,
இஃது அகக் காவலையும் உணர்த்திற்று.

🔔 🔔 🔔 🔔

கண்ணொளியுடன் சூரிய ஒளி கலந்தாலே காட்சி நிகழும்,
நிகழும் அக்காட்சி பின் உயிரொளியால்  உணரப்படும்.
எனவே உயிரொளியால் காட்சி உணரப்பட கண்ணொளியும்,
கண்ணொளியில் காட்சி நிகழச் சூரிய ஒளியும் அவசியமாம்.
ஆதலால், சூரிய ஒளியே,
கண்ணில் காட்சி நிகழவும் உயிரில் காட்சி உணரப்படவும்,
காரணமாய் நிற்கின்றது. 
அதுபோல, சூரியமரபுதித்த இம் மன்னனும்,
அச் சூரியஒளி போல், தன்னாட்டு மக்களுக்கு,
கண்ணில் நற்காட்சிகளையும் உயிரில் நல்லுணர்வையும் பதிப்பித்தான்
என்பதாயும் இவ் அடிக்குப் பொருள் கொண்டு மகிழல் கூடும்.

🔔 🔔 🔔 🔔

இனி, இப்பாடலில் வரும்,
விண்ணுலார் மகிழ்வெய்திட வேள்விகள் எனும் தொடருக்கு,
பொருள் காணப் புகுவோம்.
இம் மன்னவன் பல வேள்விகளையும் செய்து,
விண்ணவரையும் மகிழ்வித்தான் என்பது,
இவ் அடிக்காம் பொதுப்பொருள். 
வேள்விகளில் வழங்கப்படும் அவிர்பாகமே,
தேவர்களுக்கு உணவாகும் என்பது நம்பிக்கை.
இம்மன்னவன் செய்த வேள்விகளில் வழங்கப்பட்ட,
அவிர்பாகங்களைப் பெற்று,
தேவரும் மகிழ்ந்தனர் என்பது இத்தொடருக்காம் பொருள்.
வேள்விகளால் மகிழும் தேவர்கள்,
அவ்வேள்விக்குரிய மண்ணில் மழையைப் பெய்விப்பார்கள்.
அம்மழையால் மக்கள் எல்லா நலனும் பெற்று செழிப்பர்.
மேற்தொடரின் மூலம்,
தேவர்கள் மகிழ்ச்சியுரைக்கப்பட்டு,
அதனால் விழைந்த மழை உணர்த்தப்பட்டு,
முன் அடியில்,
கற்பகத்தருவாய் அனைத்தும் தந்து, 
மக்களைக் காத்தனன் என்று உரைத்ததை, 
நிரூபணம் செய்கிறார் தெய்வச் சேக்கிழார்.
சூரியன், மேல் நின்று கீழ் உலகைக் காப்பவன்.
அவன் வழிவந்த இம்மன்னவன்,
கீழ் நின்று, மேல் உலகையும்; காத்தான் என்று உரைத்ததன் மூலம்,
சூரிய மரபின் பொருத்தப்பாடும் இத் தொடரால் உணர்த்தப்படுகிறது.

🔔 🔔 🔔 🔔

இனி, நிறைவாக
எண்ணிலாதன மான இயற்றினான். 
எனும் அடிக்குப் பொருள் காண்பாம்.
இவ்வடியில் வரும் எண்ணிலாதன எனும் தொடரிற்கு, 
அளவிடமுடியாத எனப் பொருள் கொண்டு,
அளவுரைக்க முடியாத பல யாகங்களை இவன் செய்தான் என,
பொதுப் படப் பொருளுரைக்கலாம்.

🔔 🔔 🔔 🔔

அங்ஙனமின்றி எண்ணிலாதன என்னும் தொடரை, 
எண் - நிலாதன எனப்பிரித்து,
ஒரு எண்ணுக்குள்ளே நிற்காதவை எனப்பொருள் கொண்டு,
அளவிடற்கரிய பல யாகங்களைச் செய்தான் இவன் என்பதை, 
மீளவும் வலியுறுத்தியதாகவும் பொருளுரைத்து மகிழலாம்.

🔔 🔔 🔔 🔔

அதுவுமன்றி, 
எண்ணிலாதன எனும் தொடரை,
எண் - இலாதன எனப்பிரித்து,
எண் என்ற சொல்லுக்கு எண்ணம் எனப்பொருள் கொண்டு,
தனக்கென்று ஒரு பயனை எண்ணிச் செய்யாது,
உலகின் நன்மைக்காய் யாகங்கள் இயற்றினான் எனவும்,
பொருள் கொள்ளலாம்.

🔔 🔔 🔔 🔔

வழிபாடு, காமிகம், நிஷ்காமிகம் என இருவகைப்பட்டது.
காமிகவழிபாடு தன்விருப்பம் நோக்கிச் செய்யப்படுவது.
நிஷ்காமிக வழிபாடு விருப்பின்றி பயன்நோக்காது செய்யப்படுவது.
புத்திர காமேஷ்டி யாகம் போன்றவை,
தன்னுயர்வெண்ணிச் செய்யப்படும் யாகங்கள்.
இவை காமிக யாகங்களாம்.
இம்மன்னவன் தன்னுயர்வு எண்ணாது,
உலகின் உயர்வெண்ணி நிஷ்காமியமாய்,
பல யாகங்களை சிறப்பாகச் செய்தான் என,
முன் உரைத்தவாறு பொருள் கொள்ளுதல் உயர்வாம்.

🔔 🔔 🔔 🔔

(சோழன் கதை தொடரும்)

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்