மனுநீதிகண்ட சோழன்: பகுதி 3 -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-

வழிபாடு, காமிகம், நிஷ்காமிகம் என இருவகைப்பட்டது. காமிகவழிபாடு தன்விருப்பம் நோக்கிச் செய்யப்படுவது. நிஷ்காமிக வழிபாடு விருப்பின்றி பயன்நோக்காது செய்யப்படுவது. புத்திர காமேஷ்டி யாகம் போன்றவை, தன்னுயர்வெண்ணிச் செய்யப்படும் யாகங்கள். இவை காமிக யாகங்களாம். இம்மன்னவன் தன்னுயர்வு எண்ணாது, உலகின் உயர்வெண்ணி நிஷ்காமியமாய், பல யாகங்களை சிறப்பாகச் செய்தான் என, முன் உரைத்தவாறு பொருள் கொள்ளுதல் உயர்வாம்.

🔔 🔔 🔔 🔔

லகம் வியக்கும் மனுநீதி கண்டசோழன் தன் காதையின்,
அடுத்தபாடல் இம்மன்னவனின் ஆட்சிச் சிறப்பை எடுத்துக் கூறுகிறது.

கொற்ற ஆழி குவலையம் சூழ்ந்திடச்
சுற்று மன்னர் திறை கடைச் சூழ்ந்திடச்
செற்றம் நீக்கிய செம்மையின் மெய்ம்மனுப்
பெற்ற நீதியும் தன் பெயராக்கினான்  

கொற்ற ஆழி - ஆணைச்சக்கரம், குவலையம் - உலகம், திறை - வரிப்பொருள், கடை - கடைவாயில், செற்றம் - கோபம்

(தனது ஆணைச்சக்கரம் உலகத்தைச் சூழ்ந்து நிற்கவும், தன்னைச் சூழும் மன்னர்கள் தந்த திறைப்பொருட்கள் அரண்மனைக் கடைவாயில் வரை சூழ்ந்திருக்கவும், கோபத்தை நீக்கி, செம்மையினாலே உண்மையின் வடிவான ஆதி மனுச்சக்கரவர்த்தி பெற்ற மனுநீதி எனும் பெயரைத் தன் பெயர் ஆக்கிக்கொண்டவன்.)

இப்பாடலுக்கு கீழிருந்து மேலாகப்பொருள் காண விழைகிறோம்.
நீதிகளைத் தொகுத்த மனுவேந்தன் இவனல்லன்.
இவன் அம்மனுவேந்தன் வழி வந்தவன்.
செம்மையுற யாவர்க்கும் நீதி செய்ததால் வந்த,
அம்மன்னர்க்குரிய 'மனுநீதி' எனும் சிறப்புப் பெயரை 
இவன் தனதாக்கிக் கொண்டான் என்கிறது இப்பாடல்.
மெய்ம்மனுப் பெற்ற நீதியும் தன் பெயராக்கினான்
இவனையே மனுவென மயங்குவாரைத் தெளிவிக்க,
இக்கருத்தை பதிவு செய்கிறார் சேக்கிழார்.
நீதியும் எனும் சொல்லில்வரும் இறந்ததுதழீஇய எச்ச உம்மை,
மனுநீதி கண்ட சோழனின், நீதியைப் பெயராய் மட்டுமன்றி,
வாழ்வாயும் இவன் ஆக்கினான் என்பதை உரைத்து நின்றது.

🔔 🔔 🔔 🔔

இனி இப்பாடலின் முதலிரண்டு அடிக்கான பொருளைக் காண்கிறோம்.
கொற்ற ஆழி குவலையம் சூழ்ந்திடச்
சுற்று மன்னர் திறை கடைச் சூழ்ந்திடச்
இம்மன்னனின் ஆணைச் சக்கரம் உலகைச் சூழ்ந்தது எனவும்,
அவ்வாணைக்கு உட்பட்ட மன்னர்கள் அவனைச் சூழ்ந்தனர் எனவும்,
அம்மன்னர்களால் தரப்பட்ட திறைப்பொருட்கள் அரண்மனைக் கடைவாய்வரை சூழ்ந்தன எனவும்,
இவ்விரு அடிகளும் பொருள் தந்து நிற்கின்றன.
இவ் அடிகளுள் பொதிந்த சில நுட்பப் பொருள்களைக் காணும்முன்,
இவ்வடிகளால் விழையும் ஓர் ஐயத்தைத்தீர்க்க முனைவோம்.

🔔 🔔 🔔 🔔

பாடலின் முதல் அடிகளால் விழையும் அவ் ஐயம்தான் என்ன?
உலகம் முழுவதும்,
இவன் ஆணையின் கீழ் இயங்கிற்று என்கிறது இப்பாடல்.
இக்கூற்று முதற்பாடல் கருத்தோடு முரண்பட்டு,
ஓர் ஐயத்தைக் கிளப்புகிறது.
உலகம் முழுவதையும் தன் ஆணையின் கீழ் இவன் வைத்திருந்தானாயின்,
அது போர் வலிமையினால் அன்றோ சாத்தியம் ஆகியிருக்கும்.
அனைத்து உயிர்களிலும் அன்பு செலுத்தும் இம்மன்னவன்,
போரால் மற்றவரைப் பணியச் செய்திருப்பானா?
மண்ணில் வாழ்தரு மன்னுயிர்கட்கு எலாம்
கண்ணும் ஆவியும் ஆம் பெருங்காவலன்
என உரைக்கப்பட்ட இவ்வரசன்,
எவரையும் வருத்தி உலகைத்தன் வயப்படுத்தியிருப்பானா? 
இதுவே கேள்வி.
இக்கேள்விக்காம் பதில் என்ன?
இக்கேள்விக்காம் பதிலை இப்பாடலின் மூன்றாம் அடி குறிப்பால் உரைக்கிறது.
செற்றம் நீக்கிய செம்மையின்  என்றதனால்,
இவன் ஆணை உலகைச் சூழ்வதும்,
இவனை மற்றைய மன்னர் சூழ்வதும்,
இவன் கடைவாய் வரை மற்றைய மன்னர்தம் திறை சூழ்வதும்,
போர் வலிமையாலன்றி அன்பின் வலிமையினாலே என்பது,
குறிப்பால் நமக்கு உணர்த்தப்படுகிறது.

🔔 🔔 🔔 🔔

செற்றம் நீங்கிய என்று உரைக்காமல்,
செற்றம் நீக்கிய எனக் கூறியதால்,
இவன் தன்னிடத்திலேயும்,
தன்னாணை சூழ்ந்த யாவரிடத்திலேயும், 
கோபமாகிய தீய குணத்தை முயன்று நீக்கினான் என்பது தெரிகிறது.
நீங்கிய என்னாது நீக்கிய என்றதனால்,
இக்கருத்து வலியுறுத்தப்படுகிறது. 

🔔 🔔 🔔 🔔

இனி இக்கருத்தை முன் இரண்டு அடிகளும் கூட,
மறைமுகமாய் உணர்த்தி நிற்பதைக்கண்டு இரசிக்கலாம்.
மற்றைய வேந்தர்கள் இவனைச் சூழ்ந்தனர் எனவுரைக்கும் சேக்கிழார்,
சுற்று மன்னர் என வினைத்தொகையால் அச்செய்தியைப் பதிவாக்குகிறார்.
வினைத்தொகையால் அச்செய்தி சொல்லப்பட்டதால்,
இவன் அன்புக்கு ஆட்பட்ட மன்னர்கள்,
முன்பும் இவனைச் சூழ்ந்தனர்.
இப்போதும் இவனைச்சூழ்கின்றனர்.
இனியும் இவனைச்சூழ்வர் என்பதனைக் குறிப்பால் நாம் உணர்ந்து கொள்கிறோம். 
திறை கடைச் சூழ்ந்திடச் எனச்,
சூழும் தொழில் திறைமேல் ஏற்றப்பட்டதால்,
அத்திறை கட்டாயத்தாலன்றி,
விரும்பி அளிக்கப்பட்டது என்பதும் புலனாகிறது.

🔔 🔔 🔔 🔔

தொடரும் அடுத்த பாடல்,
இம்மன்னனின் சிவபக்தியை எடுத்தியம்புகிறது.

பொங்கு மா மறைப் புற்றிடம் கொண்டவர்
எங்கும் ஆகி இருந்தவர் பூசணைக்(கு) 
அங்கன் வேண்டும் நிபந்தம் ஆராய்ந்(து) உளான்;
துங்க ஆகமம் சொன்ன முறைமையால்.

பொங்கும் - மேன்மேல் வளரும், மறை - வேதம், புற்றிடம் கொண்டவர் - புற்றினை இடமாய்க்கொண்டவர், (வன்மீகநாதர், வன்மீகம் - கறையான்), நிபந்தம் - அறக்கட்டளை, துங்க - பரிசுத்தமாகிய 

(வேதத்தின் வடிவினதாகிய, தொடர்ந்து வளர்கின்ற, புற்றினை இடமாகக் கொண்டவரும் எங்கும் பரவியிருப்பவருமாகிய வன்மீகநாதருடைய பூசணைக்கு வேண்டிய பொருட்களை சிவாகமங்கள் விதித்தவாறு ஆராய்ந்து நியமித்தான்.)

வான்மீகநாதர் எனப்பெயர் கொண்ட சிவனார்,
புற்றினை இடமாய்க் கொண்டு அமர்ந்தவர்.
தனக்குள் இறைவனைப் பொதித்திருத்தலாலும்,
மென்மேலும் வளர்வதாலும்,
புற்று வேதத்துடன் ஒப்பிடப்பட்டது.
வேதம் பல சமயங்கட்கும் பொதுவாக அமைந்து,
அவரவர் கொள்கைகளை விரித்தற்கு இடமளிப்பதால்,
அதனையும் வளரும் தன்மை கொண்டதாய் வருணிக்கிறார் சேக்கிழார்.
வேதத்தினதும் புற்றினதும், தொடர்விரிவினைக் குறிக்க,
பொங்கும் எனும் சொல் பாடலில் இடப்பட்டிருக்கிறது.
இறைவன் குறித்த ஓர் இடத்தில் அமர்ந்தனன் என உரைப்பின்,
அவனது வியாபகத் தம்மைக்குக் குறைஉண்டாகும் எனக்கருதி,
புற்றிடம் கொண்டவர் எனச் சொன்ன மாத்திரத்தில்,
எங்கும் ஆகி இருந்தவர் என்பதையும் உடன்கூறுகிறார் அவர். 
இறைவனின் ஒன்றாய், வேறாய் நிற்கும்; தன்மை இப்பாடலில் உணர்த்தப்படுகிறது.

🔔 🔔 🔔 🔔
(சோழன் கதை தொடரும்)

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்