மனுநீதிகண்ட சோழன்: பகுதி 4-கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-

வேதம் பல சமயங்கட்கும் பொதுவாக அமைந்து, அவரவர் கொள்கைகளை விரித்தற்கு இடமளிப்பதால், அதனையும் வளரும் தன்மை கொண்டதாய் வருணிக்கிறார் சேக்கிழார். வேதத்தினதும் புற்றினதும், தொடர்விரிவினைக் குறிக்க, பொங்கும் எனும் சொல் பாடலில் இடப்பட்டிருக்கிறது. இறைவன் குறித்த ஓர் இடத்தில் அமர்ந்தனன் என உரைப்பின், அவனது வியாபகத் தன்மைக்குக் குறை உண்டாகும் எனக்கருதி, புற்றிடம் கொண்டவர் எனச் சொன்ன மாத்திரத்தில், எங்கும் ஆகி இருந்தவர் என்பதையும் உடன்கூறுகிறார் அவர். இறைவனின் ஒன்றாய், வேறாய் நிற்கும் தன்மை இப்பாடலில் உணர்த்தப்படுகிறது.
🔔 🔔 🔔 🔔

லகுயிர் அனைத்தையும் காத்து அறநெறி வழுவாமல்,
மண்ணுளார்க்கும் விண்ணுளார்க்கும் மகிழ்வளித்து, 
தன் ஆணைச்சக்கரம் உலகெலாம் செல்ல,
சிவபக்தியோடு வாழ்ந்த அம்மன்னவனுக்கு,
இறையருளால் புத்திரப்பேறு நிகழ்வதை,
அடுத்தபாடல் கூறுகிறது.

அறம் பொருள் இன்பமான அறநெறி வழாமற் புல்லி
மறம் கடிந்து, அரசர்போற்ற, வையகம் காக்குநாளில்
சிறந்த நற்தவத்தால் தேவி திருமணி வயிற்றின் மைந்தன்
பிறந்தனன் உலகம் போற்றப் பேர்அரிக்குருளை அன்னான்.

புல்லி - அடைந்து, மறம் - பாவம், அரிக்குருளை - சிங்கக்குட்டி, பேர் - பெருமைபெற்ற

(அறநூல் வழியில் நின்று வழுவாமல் அறத்தினையும், பொருளினையும், இன்பத்தினையும்  மேற்கொண்டு, அவ்வறத்திற்கு மாறான பாவங்களைக் கடிந்து ஏனைய அரசர்கள் துதிக்கும்படியாக உலகத்தை இம்மன்னவன் காத்துவந்த நாளிலே, அவன் செய்த நற்தருமத் தவப்பயனாய் அவனது தேவியின் அழகிய திருவயிற்றிலே பெருமைபெற்ற இளம் சிங்கக்குட்டியை ஒத்த புதல்வன் ஒருவன் உலகம் போற்றுமாறு பிறந்தான்.) 

அறத்தினால் பொருளும், 
அவ்வறப்பொருளால் இன்பமும் துய்ப்பார்க்கே,
வீட்டு நிலை கைகூடும்.
ஆதலால் அறத்தினை மட்டுமன்றி,
பொருள் இன்பங்களையும்,
அறனெறிப்படி அனுசரிப்பதே நம்மரபு.
அந்நிலை உணர்த்த,
அறம், பொருள், இன்பமான அறநெறி,
என்று உரைக்கின்றார் தெய்வச் சேக்கிழார்.

🔔 🔔 🔔 🔔

புருடார்த்தங்களான,
அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கினுள்,
வீடு நூலால் உரைக்கத்தக்கது அன்று.
துறவறமாகிய காரணவகையாலன்றி,
இலக்கணவகையால், வீட்டினை உரைத்தல் எவர்க்கும் ஆகாதென்று,
திருக்குறள் உரையாசிரியர் பரிமேலழகர் தனது உரைப்பாயிரத்தில் குறிக்கின்றார்.
எனவே  நூலால் உரைக்கத்தக்கவை,
அறம், பொருள், இன்பம் எனும் மூன்றுமேயாம்.
அதுநோக்கியே, வீட்டினை விடுத்து,
அறம், பொருள், இன்பமான அறநெறி,
என்கிறார் தெய்வச்சேக்கிழார்.

🔔 🔔 🔔 🔔

அறம்,
விதித்தன செய்தல், விலக்கியன ஒழித்தல் என இருகூறுகளை உடையது.
இவ்விரண்டும் செய்தாலே அறம் முழுமையுறும்.
இவ்வரசன் அறநெறியில் முழுமையுற்றான் என்பதனை உணர்த்தவே,
நம் தெய்வச்சேக்கிழார்,
அறநெறி வழாமற் புல்லி, மறம் கடிந்து என,
அறத்தினது இருகூறினையும் இணைத்துச் சொல்லினர்.

🔔 🔔 🔔 🔔

அதுமட்டுமன்றி,
அறத்தினை தான் வழுவாது தழுவி,
மறத்தினைக் கடிந்தான் என்றதனால்,
இம்மன்னவன் வள்ளுவ நெறிப்படி,
தன்குற்றங் கடிந்து பின் பிறர்குற்றங் கடிந்தான்
எனும் கருத்தும் உணர்த்தப்படுகிறது.

🔔 🔔 🔔 🔔

மன்னன் செய்த தவத்தால் இம்மைந்தன் பிறந்தான்.
மன்னனது இத்தவம்,
நற்புதல்வனைப் பெற்றான் எனப் போற்றச்செய்து,
இம்மையில் புகழ் என்னும் உலகியல்ச்சிறப்பு நல்கிற்று.
இம்மைந்தனால் சிவதரிசனம் கிடைக்கச் செய்து,
மறுமையில் வீடும் நல்கிற்று.
இவ்விரு சிறப்பையும் குறிக்க,
சிறந்த நற் தவம்  என,
தவத்திற்கு இரண்டு அடைமொழிகள் இடுகிறார் சேக்கிழார்.

🔔 🔔 🔔 🔔

மைந்து எனும் சொல்லிற்கு வலிமை என்று பொருள்.
வலிமையைத் தருபவன் என்பதால்,
புதல்வன், மைந்தன் எனப்படுகிறான்.
தந்தைக்கு இம்மையில் புகழும், மறுமையில் வீடும் தந்து,
வலிமை செய்யப்போகிறவன் இம்மகன் என்பதைக் குறிப்பாலுணர்த்த,
புதல்வன் பிறந்தான் எனக்கூறாது,
மைந்தன் பிறந்தனன் என்கிறார் தெய்வச் சேக்கிழார்.
அம்மைந்தனின் வலிமையை சிங்கக்குட்டியுடன் ஒப்பிட்டு,
அக்குறிப்பை மேலும் வலியுறுத்துகிறார்.
மைந்தனை சிங்கக்குட்டியாய் உவமித்ததன் மூலம்,
மன்னனை சிங்கமாயக் குறிப்பால் உவமித்த அழகு
இரசிக்கத்தக்கது

🔔 🔔 🔔 🔔

மன்னன் செய்த தவம்,
அரசியின் வயிற்றில் புதல்வனாய் உதித்தது.
என்றதன் மூலம்,
மன்னன் செய்த தவத்தினை தாங்கும் பேறு பெற்ற,
அரசியின் அறந்தவறாக் கற்புநிலையும்,
திருவயிறு என்றதனால் அவள் தெய்வ அழகும்,
மணிவயிறு என்றதனால் அவள் தவநிலையும்,
தெய்வச் சேக்கிழாரால் மறைமுகமாய் உணர்த்தப்பட்டன.
(மணிவயிறு - மணியான மைந்தனைத்தாங்கிய வயிறு)
சிறந்த நற்தவத்தால் தேவி திருமணி வயிற்றின் மைந்தன் பிறந்தனன் 
எனும் தொடரை, 
தேவி சிறந்த நற்தவத்தால்  திருமணி வயிற்றின் மைந்தன் பிறந்தனன்
என, கொண்டு கூட்டி, 
அவ்வரசியின் தவநிலையையும்; உணருதல் சிறப்பாம்.

🔔 🔔 🔔 🔔

பிறந்தனன் உலகம் போற்ற என்ற தொடரில்,
உலகம் போற்றும்படியாக இவன் பிறந்தான் எனும் பொருளும்,
உலகத்தைக் காக்க இவன் பிறந்தான் எனும் பொருளும்,
ஒன்றித்து நின்று மகிழ்வு தருகின்றன.
(போற்ற - வாழ்த்த, காக்க)

🔔 🔔 🔔 🔔

(சோழன் கதை தொடரும்)

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்