கூரையேறிக் கோழி பிடித்தல் - பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன்

🐔 🐔 🐔
பெருமழைக்குப் பிந்திய அமைதி இருக்கும், தேர்தலுக்குப் பின்பு என்றால்
அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது.
குறிப்பாக, தேர்தலில் போட்டியிட்டு, பெற்ற தோல்வியில்
அல்லது அடைந்த தோல்வியில்
உள்ளது வாக்கெண்ணும் சூழ்ச்சி என்றெழுந்த
பரபரப்பு அலை மெல்லமெல்ல வடிவதற்கிடையில்
தொடங்கிவிட்டது தேசியப்பட்டியல் விவகாரம்.
ஆருக்கு அந்த அரியாசனம்?
'கூட்டமைப்பின் சீற், இந்த முறை அம்பாறைக்கு.'
'இல்லையில்லை மாவை அண்ணனுக்கு'
'அதுவுமில்லை பெண் பிரதிநிதியாகிய சசிகலாவுக்கு'
என்று ஆளுக்காள் ஆரூடம் சொல்லத் தொடங்கும் முன்பாகவே
அம்பாறைக்குத் தேசியப் பட்டியல் ஆசனம்
என்ற முடிவு வெளிவந்து விட்டது.
யாரும் எதிர்பார்க்கவில்லை என்பதற்கு முதல்
சுமந்திரன், ஸ்ரீதரன் தவிர்ந்த
தமிழரசுக் கட்சி முக்கியஸ்தர்களுக்கே இது தெரிந்திருக்கவில்லை.
வழமையாக எந்தவொரு முடிவையும் ஆறஅமர இருந்து
ஆறிய கஞ்சி பழங்கஞ்சி ஆனதற்குப் பிறகே எடுக்கின்ற
சம்பந்தர் தலைமையில், இப்படியொரு மாற்றமா?
என மூக்கில் விரல் வைத்தது, உலகம்.
ஓன்றுமில்லை,
இந்த விரைவு முடிவிலும் வெளிப்பட்டது
கட்சியின் அசிங்கமான உள்முரண்பாடுதான்.
தமிழரசுக் கட்சியின் தலைவருக்கே தெரியாமல் 
வந்திருந்தது முடிவு. 
முடிவு கண்டு, 
கூட்டணியின் பிறகட்சித் தலைவர்கள்
சித்தார்த்தன், செல்வம் ஆகியோர்
தமக்குத் தெரியாமல் முடிவு செய்யப்பட்டது தவறென
ஊடகங்களின் முன்னால் புலம்ப,
வழமைபோலவே,
'செயலாளர் எடுத்த முடிவுதான்' என்று எஸ்கேப் ஆனார் சம்பந்தர்.
'இது என் தனிப்பட்ட முடிவல்ல' எனப் பதிலுக்குச்
செயலாளர் அறிக்கைவிட,
'அட போங்கப்பா' 
ஒரு சீற்றை பகிரவே இத்தனை பாடு,
இவர்கள் ஒற்றுமையாய் நின்று
எங்களுக்கு அதிகாரப் பகிர்வை பெற்றுத் தருவார்களா?
என்று சலித்தது ஸ்ரீமான் பொதுசனம்.
 
🐔 🐔 🐔
 
சரி இவர்களது அதிகாரப் பகிர்வை விட்டு விடுங்கள்
நமக்கு ஒரு தேசத்துள்
இரு நாடு என்று கோசித்து,
நாட்டையே பெற்றுத்தர இரண்டுபேர் சைக்கிளில்
ஜயவர்த்தனபுரக் கோட்டைக்குப் புறப்பட்டார்களே,
அவர்களுக்குப் பின்னால் போவோம்
என்றால்,
அங்கேயோ பெரிய விபத்து.
சைக்கிள் குப்புறக் கிடக்க, 
உருண்டோடி தொலைவில் தனியே கிடந்தது, மணி.
ஒரு சிறு வெற்றியையே தாங்க முடியாத
தலைகால் புரியாத ஓட்டம்.
நிதானம் என்கிற பிரேக், இல்லை.
உண்மையில் சைக்கிளின் இந்த முறை
வெற்றிக்குப் பெரிதும் பாடுபட்ட -
குறிப்பாக, இளம் வாக்காளர்களைக் கவர்ந்து
தன் மீதான நம்பிக்கையால் கட்சிக்குப் பலம் சேர்த்த
ஒருத்தரை,
விரல் மை காய்வதற்குள்ளாகவே பதவியைப் பறித்து
நடு றோட்டில் விட்டது கட்சி.
அவர்மீது பல குற்றச்சாட்டுக்களை இன்று சுமத்துகிறது அது.
என் கேள்வியெல்லாம் இந்தக் குற்றவாளியையா(?)
மக்கள் பிரதிநிதியாகத் தேர்தலில் நிறுத்தினீர்கள்?
உங்கள் தேவை நிறைவேறும்வரை ஒருவன் வேட்பாளன்.
தேவை நிறைவேறிவிட்டால் அவன் குற்றவாளி.
என்ன அரசியலறமோ தெரியவில்லை.
அந்தக் கட்சியில்
இன்று பாராளுமன்று செல்லவிருக்கும் இருவருக்கும்
யாழில் என்றைக்கும் மதிப்பு இருந்ததில்லை.
அவர்களுக்குமே 
தன் இளவட்டத்தால் 
வாக்கு விழச் செய்த ஒருத்தருக்கு
இவ்வாறு இழைக்கப்பட்ட துரோகம்
'அட! இவங்களும் இப்படித்தான்' 
என்ற சலிப்பையே விதைத்திருக்கிறது.
தங்கள் வேட்பாளர் ஒருவரது பிரச்சினையையே 
கதைத்துப் பேசித் தீர்க்க முடியாதவர்கள்,
சர்வதேச நாடுகளிடம் பேசி,
ஒரு நாடு பெற்றுத் தருவார்களாம்.
பார்ப்போம், .. இத்தனை காலமும் பொறுத்துவிட்டோம்
இன்னுமொரு .. ஐந்து வருசத்தைப் பொறுக்க மாட்டோமா என்ன?
ஒரு பழமொழிதான் ஞாபகம்
வந்துவந்து  தொலைக்கிறது
கூரையேறிக் கோழி பிடிக்க முடியாதவன்
வானமேறி வைகுந்தம் போனானாம்.
🐔 🐔 🐔
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்