பாட்டும் நானே! பாவமும் நானே! பகுதி 02:- 'கம்பவாரிதி' இலங்கை ஜெயராஜ்

கேள்வி 01:-
மறைந்த 'மல்லிகை' ஆசிரியர் டொமினிக் ஜீவா பற்றி ஓரே வார்த்தையில் சொல்லுங்கள்?
பதில்:-
கனிமரத்தோப்பு

🙏உலகநாதரின் ஒத்தூதல்: 📣 இலக்கிய ஆலமரம் என்கிறார் போல.
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 02:-
கொரோனா தந்த ஓராண்டு வீட்டுச்சிறை அனுபவம் எப்படி?
பதில் :-
ஆனந்தமாய் அனுபவித்தேன். வாரம் ஒரு பயணம், வாரம் ஒரு சொற்பொழிவு என 'டென்ஷனாகவே' போய்க்கொண்டிருந்த வாழ்வு திடீரென அமைதிப்பட்டுவிட்டது. அதனால் நான் அடைந்த ஆனந்தத்திற்கு ஓரளவில்லை. ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு விதமாய் வாழும் கட்டாயத்தில் இருந்த எனக்கு  வழிபாடு, பூசை, படிப்பு எனத் தினமும் ஒரே மாதிரியாய் வாழமுடிந்தது ஒரு கொடை. அதனால் அகமும், புறமும் தூய்மைப்பட்டிருக்கிறேன். கொரோனாவுக்கு எனது நன்றி கலந்த 'சல்யூட்'.

☺️உலகநாதரின் ஒத்தூதல்: 📣 இழப்பின் இனிமை
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 03:-
இணையத்தினூடு நடைபெறும் நிகழ்ச்சிகள்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்:-
ஆபத்திற்குப் பாவமில்லை! ஒரு சபையின் முகம் பார்த்துப் பேசுவதற்கும் இப்படிப் பேசுவதற்கும் எவ்வளவோ வித்தியாசம் இருக்கிறது. காதலியோடு அருகிருந்து கைபிடித்துப் பேசுவதும் கைபேசியில் பேசுவதும் ஒன்றாகுமா? 
😛உலகநாதரின் ஒத்தூதல்: 📣 இதெல்லாம் இவருக்கு எப்படித் தெரியும்? ச்சும்மா.. ச்சும்மா..
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 04:-
தமிழர் வழிபட்ட தெய்வச் சந்நிதிகளை பலவந்தமாய்க் கைப்பற்றித் தமக்காய் மாற்றுகிற அரசின் நடவடிக்கைகள் எங்கு போய் முடியும்?
பதில் :-
எளியாரை வலியார் வாட்டினால் வலியாரை வாசற்படி வாட்டும் என்கிறது பழமொழி. 
'அழக்கொண்டதெல்லாம் அழப்போம்' என்கிறார் வள்ளுவர். 
'அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும'; என்கிறார் இளங்கோ அடிகள்.
உயர்ந்தோர் வாக்கு பிழைக்க வாய்ப்பில்லை.

🙂உலகநாதரின் ஒத்தூதல்: 📣 'அறம் வெல்லும் பாவம் தோற்கும்' கம்பனை விட்டுவிட்டாரே
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 05:-
தமிழ் சோறு போடும் என்று நினைக்கிறீர்களா?
பதில் :-
தமது வளர்ச்சிக்காக அன்றி தமிழின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டால் தமிழ் சோறு மட்டுமல்ல வேறு என்னென்னவோ எல்லாம் கூடப் போடும்.

🤓உலகநாதரின் ஒத்தூதல்: 📣 தனக்குப் போட்டதை வைத்துச் சொல்லிறாராக்கும்.
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 06:-
மூத்த இயல் அறிஞர்களான சாலமன் பாப்பையா, சுப்பு ஆறுமுகம், ஆகியோரின் 'பத்மஸ்ரீ' விருதுபற்றி ஏதாவது சொல்லுங்களேன்? 
பதில் :-
நம் தமிழுக்கு இவ்விருவரும் மரியாதை வாங்கித் தந்திருக்கிறார்கள். 
  • சினிமாக்காரர்களே போற்றப்படுபவர்களாய் இருக்கும் இன்றைய உலகில்  சினிமாக்காரர்களாளேயே போற்றப்படும் தமிழ் அறிஞராய் இருப்பவர் பாப்பையா அவர்கள். திருக்குறளையும் பட்டிமண்டபங்களையும் பாமரமக்களிடமும் சேர்ப்பித்ததில் இவரின் பங்கு முக்கியமானது. தீபாவளிக்கும் பொங்கலுக்கும் பட்டையோ, பட்டாசையோ எதிர்பார்க்காத பெரியவர்களையும் சிறியவர்களையும் தனது பட்டிமண்டபங்களை எதிர்பார்க்க வைத்த சாதனையாளர். தமிழில் புதியன புகுத்தி வெற்றி கண்டவர்.
     
  • மறைந்த கொத்தமங்களம் சுப்பு என்கின்ற பேரறிஞனின் விழுதாய் இன்று வரைக்கும் நின்று பிடித்து, அந்த ஆலவிருட்சத்தின் அகலத்தைக் காட்டி நிற்பவர். தனது விரிந்த முத்தமிழ் அறிவைப் பயன்படுத்தி வில்லிசையினூடு கிராமமக்களுக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்து வரும் தக்கோர். எளிமையும் வலிமையும் அவர் தனிச்சிறப்பு. சுப்பு ஆறுமுகம் ஐயா அவர்கள் தனது சந்ததியையும் அவ்வழியில் நெறிப்படுத்தியிருக்கிறார் என்பது போற்றப்படவேண்டிய உபரிச்செய்தி.
☺️உலகநாதரின் ஒத்தூதல்: 📣செந்தமிழை நம்தமிழ் ஆக்கியவர்கள்.
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 07:-
முட்டிமோதி நின்ற மூன்று தலைவர்களும் ஐ.நா. வுக்காக ஒன்று சேர்ந்திருக்கிறார்களே. இந்த நட்புத் தொடருமா?
பதில் :-
சேர்ந்திருக்கிறார்கள் என்பது தவறு. சேர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே உண்மை. 
அழுத்தும் கரங்கள் தொடர்ந்தும் அழுத்தினால் ஒருவேளை நட்புத் தொடரலாம்.
தொடர்வதாக! 'ஆமென்'
 
🤠உலகநாதரின் ஒத்தூதல்: 📣 கீரியும் பாம்பும் கிளிப்பிள்ளையும் ஒன்று சேர்ந்த கதைதான்.
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆
கேள்வி 08:-
ஆண்டவனது படைப்பில் ஆண்களா? பெண்களா? சிறந்தவர்கள். 
பதில் :-
ஆண்களின் பார்வையில் பெண்கள்தான் சிறந்தவர்கள்.
பெண்களின் பார்வையில் ஆண்கள்தான் சிறந்தவர்கள்.
அப்படியிருந்தால்த்தானே உலகம் இயங்கும். 
இறைவனின் படைப்பு நுட்பத்தை என்னென்பது? 

😇உலகநாதரின் ஒத்தூதல்: 📣 இவரது பார்வையில் எவர் சிறந்தவராம்?
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 09:-
கொரோனா பற்றி ஏதாவது சந்தேகம் தங்களுக்கு இருக்கிறதா? 
பதில்:-
ஒன்றா, இரண்டா எடுத்துச் சொல்ல? இதோ சந்தேகங்களை வரிசைப்படுத்துகிறேன்.
கொரோனா வந்ததற்கான முதல் அடையாளம் காய்ச்சல் தானா?
இல்லையென்றால் கிருமி தொற்றி எத்தனையாவது நாள் காய்ச்சல் வரும்?
காய்ச்சல் முடிந்துவிட்டால் கிருமித் தொற்று நீங்கிவிட்டது என்று அர்த்தமா?
மூக்கு, வாய், புலன்கள் எத்தனையாம் நாள் தொடக்கம் இயங்காது போகும்? எத்தனையாம் நாளிலிருந்து மீண்டும் இயங்கும்?
அவை இயங்கத் தொடங்கிவிட்டால் நோய்க்கிருமியின் வலிமை குன்றிவிட்டதாய்க் கொள்ளலாமா?
காய்ச்சலும் மேற்சொன்ன அடையாளங்களும் நீங்கியபிறகும் இந்நோயால் ஆபத்து விளையுமா?
ஆபத்தினுடைய விளைவு எத்தனை நாள்வரை தொடரும்?
இரண்டு வாரம் முடிய நோய்க்கிருமியின் நிலை என்னாகிறது?
ஒரே வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் ஒருவருக்கொருவர் தொற்று மீண்டும் மீண்டும் உருவாகாதா?
இனங்காணப்பட்டு அழைத்துச் செல்லப்படுபவர்களுக்கு என்ன வைத்தியம் செய்கிறார்கள்?
கேள்விகள் இன்னும் இருக்கின்றன. இப்போதைக்கு இக்கேள்விகளுக்கு யாராவது பதில் சொல்வார்களா? தொற்று ஏற்பட்டதும் ஏதோ மரணதண்டனைக் கைதியைப்போல்த்தான் பரிகரிக்கிறார்கள். மேற்சொன்ன கேள்விகளுக்குப் பதிலைச் சொன்னால்த்தானே நோயாளி துணிவாய் இருப்பான்.

🤨உலகநாதரின் ஒத்தூதல்: 📣 கேள்வியின் நாயகன்
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 10:-
'கொவி'ட்டால் மரணமடைந்த சடலங்களை எரிக்கக் கூடாது என்ற இஸ்லாமியர்களின் கோரிக்கையை ரு.N.ழு. விலிருந்து அறிக்கை வந்தபிறகும் பிடிவாதமாய் அரசு மறுப்பது சரியா?
பதில்:-
'மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா' என்பது பழமொழி. 

😃உலகநாதரின் ஒத்தூதல்: 📣 மூர்க்கர் என்கிறாரா? முதலை என்கிறாரா?
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 11:-
உங்களுக்கு ரொம்பப் பிடித்தவர் வள்ளுவரா? கம்பரா?
பதில் :-
வள்ளுவரை மதிக்கிறேன். கம்பரை நேசிக்கிறேன். அவ்வளவுதான்.

🤔உலகநாதரின் ஒத்தூதல்: 📣 அப்ப மற்றப் புலவர்களை??? ஹி..ஹி.. மாட்டினார் சாமி.
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 12:-
'பத்மஸ்ரீ' விருது பெற்ற இசைக்கலைஞர் பம்பாய் ஜெயஸ்ரீ அவர்களைப் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா? முடிந்தால் அவரைப் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்கள் பார்க்கலாம்.
பதில்:-
தெரியுமாவாவது? அவர் என் உடன்பிறவாச் சகோதரியாக்கும். இந்தப் பிறவியில் எனக்குக் கிடைத்த இறைவரங்களில் ஒன்றாகவே அவரது அன்புத் தொடர்பைக் கருதுகிறேன். ஏதாவது சொல்லமுடியுமா என்றா கேட்டீர்கள்? ஏதாவதென்ன ஏதாவது! எத்தனையோ சொல்லலாம். மனதில் வரும் ஒன்றிரண்டை மட்டும் இப்போதைக்குச் சொல்லுகிறேன்.
இன்றைய நிலையில் இசைத்துறை வளர்ச்சியடைந்திருக்கும் அளவுக்கு இயல் துறை வளர்ச்சி அடையவில்லை என்பதே என் கருத்து. ஆனாலும் ஒன்றைச் சொல்ல வேண்டும். இன்றைக்கு மூத்த, இளைய கலைஞர்கள் பலபேரும் மிக நன்றாகவே பாடுகிறார்கள். ஆனால் பரபரப்பும் ஆடம்பரமுமின்றி, சபைக்கவர்ச்சியை மட்டும் நோக்காது, தேவையற்ற அங்க அசைவுகள் நீக்கி, பெண்மை குன்றாமல், அடக்கத்தோடு இசைக்குள் தன்னைக் கரைத்து, தான் பெறும் இசை அனுபவத்தை அப்படியே இரசிகர்களுக்குத் தொற்றச் செய்வதில் ஜெயஸ்ரீக்கு நிகர் ஜெயஸ்ரீயே என்பேன். எம்.எஸ்.அம்மா, பட்டம்மாள், எம்.எல்.வி. போன்ற மூத்த தெய்வீகக் கலைஞர்களை இன்றும் நினைவூட்டிக் கொண்டிருப்பவர் அவர். இன்றைய பெரும்பாலான பாடகர்களை விளம்பரப்பிரியம் ஆட்கொண்டுவிட்டது. அதிலிருந்தும் விலகிநின்று தனித்துவம் பெறுபவர் ஜெயஸ்ரீ. எடுத்துக் கொண்ட இராகங்களைப் பாடும்போது அந்தந்த இராகங்களின் அதி தேவதையாகவே மாறிவிடுகிறார். இப்படி அவர்மீதான விருப்பிற்கு ரசிகர்கள் பல காரணங்களைச் சொல்கிறார்கள். எப்பவோ கிடைத்திருக்கவேண்டிய விருது பிந்திக் கிடைத்திருக்கிறது. என்னைக் கேட்டால் இவ்விருது அவருக்குப் போதாது என்பேன்.

🙂உலகநாதரின் ஒத்தூதல்: 📣 'கண்கள் பனித்திடப் பொங்கும் கீதம்'...
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

ஹலோ... உங்களைத்தான்!.....
பாட்டையும் பாவத்தையும் மட்டும் இரசித்துவிட்டுப் போகாமல்,
நீங்களும் கச்சேரியில் இணைந்து கொண்டு,
சமூகம், தமிழ் மற்றும் சமயம் சார்ந்த உங்கள் கே
ள்விகளையும் அனுப்பி வையுங்கள்.
மின்னஞ்சல் முகவரி: mailuharam@gmail.com
 
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்