பாட்டும் நானே! பாவமும் நானே! பகுதி 05: -'கம்பவாரிதி' இலங்கை ஜெயராஜ்-

கேள்வி 01:-
நம் ஆட்சியாளர்களுக்கிடையில் வெட்டுக்குத்துத் தொடங்கிவிட்டாற்போல் தெரிகிறதே. அதுபற்றி உங்கள் கருத்து?
பதில்:-
ஏறிய ஏணியை எட்டி உதைக்க நினைக்கிறார்கள். 
அறம் கூற்றாகத் தொடங்கியிருக்கிறது என்று நினைக்கிறேன்.

🙏உலகநாதரின் ஒத்தூதல்: 📣 'அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.'
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 02:-
யாழ் மக்களுக்கோ, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ ஏதும் சொல்லாமல் யாழ்ப்பாணத்தின் மூன்று தீவுகளில் மின்சார உற்பத்திக்காய் அரசு சீனாவுடன் உடன்படிக்கை செய்திருக்கும் முயற்சிபற்றி என்ன நினைக்கிறீர்கள்? 
பதில் :-
இது யாழ்ப்பாணத் தமிழர்களுக்கான சவால் இல்லை. இந்தியாவிற்கு விடப்பட்டிருக்கும் சவால்.
இந்தியாவுடன் வெளிப்படையாக முரண்படுவது என இலங்கை முடிவு செய்துவிட்டதாய்த் தெரிகிறது. 
இனி எங்கெல்லாம் ஆபத்துக்கள் விளையுமோ? ஆண்டவனுக்கே வெளிச்சம்!

☺️உலகநாதரின் ஒத்தூதல்: 📣 சிறு முயல் சிங்கத்தைச் சீண்டிப் பார்க்கிறது.
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 03:-
கொரோனா தடுப்பூசி போடத் தயாராகி விட்டீர்களா?
பதில்:-
போடுவதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால் ஆழ்மனதை சில ஐயங்கள் அரித்துக்கொண்டே இருக்கின்றன.  
  • தன் வடிவத்தை அடிக்கடி மாற்றிக் கொண்டிருக்கும் கொரோனாக்கிருமி எடுக்கப்போகும் புதிய அவதாரங்களையும் இவ் ஊசி தடுக்குமா?
     
  • அக்கிருமியின் மாற்றங்களுக்கேற்ப புதிய புதிய தடுப்பூசிகளைப் போடவேண்டுமாயின் எத்தனை ஊசிகளைத்தான் போடுவது?
     
  • அவசர அவசரமாய் வந்திருக்கும் இந்த ஊசியால் பிற்காலத்தில் வேறு நோய்கள் வராது என்பதற்கு ஏதாவது உறுதி இருக்கிறதா?

    பாரம்பரிய வைத்தியர்களின் மருந்துபற்றி ஆயிரம் கேள்விகள் கேட்கிறவர்கள், இந்தக் கேள்விகளுக்குப் பதில் உரைப்பார்களா?
😛உலகநாதரின் ஒத்தூதல்: 📣 இவர் பெரிய மரபின் காவலராக்கும். ஹி..ஹி..
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 04:-
பள்ளிக்கூடங்களைத் தொடங்கப் போகிறார்களாமே. அது புத்திசாலித்தனமான செயலாகுமா?
பதில் :-
புத்திசாலித்தனமான செயல் என்று எவரும் சொல்லமாட்டார்கள். 
கொரோனாவின் உண்மை நிலை இன்றுவரை எவருக்கும் முழுமையாய்த் தெரியவில்லை. 
அறிக்கைகள் விடுகிறவர்கள் சாத்திரக்காரர்களைப் போல் ஊகத்தில்த்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். 
இந்நிலையில், தொட்டால் பற்றிக்கொள்ளும் கிருமி ஊரெல்லாம் உலாவிக்கொண்டிருக்க,
மாணவர்களை ஒன்றுசேர அழைப்பது  எப்படி புத்திசாலித்தனமாகும்? 
 
ஆனால்  அரசாங்கத்திற்கும் இதைவிட்டால் வேறு வழி  இருப்பதாய்த் தெரியவில்லை. 
எத்தனை நாளைக்குத்தான் முடிவு தெரியாமல் கல்வி முயற்சிகளை முடக்கி வைப்பது? 
பலியாவார்கள் எனத் தெரிந்தும் வெற்றி நோக்கிய ஊகத்தால் 
போர்வீரர்களைப் போர்க்களத்திற்கு அனுப்பிவைக்கும் முயற்சி போன்றதுதான் இதுவும்.

🙂உலகநாதரின் ஒத்தூதல்: 📣 நம் இளைய சந்ததியினரைக் கடவுள் காப்பாராக!
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 05:-
என்ன? உமது சுமந்திரனின் பாதுகாப்பை நடைபயண ஊர்வலத்திற்கு அடுத்தடுத்த நாட்களிலேயே அரசாங்கம் நீக்கிவிட்டதாமே. அவர்களின் நோக்கம்தான் என்ன?
பதில் :-
ஒரு குழந்தைக்குக் கூட அவர்களின் நோக்கம் புரியும். 
வேலியை அறுத்துவிடுவதன் நோக்கம்
பயிரை மேய எப்போதும் வரலாம் என்று 
விலங்குகளுக்கு அழைப்பு விடுப்பதுதான் என்பதை யார்தான் அறியமாட்டார்கள்? 
சுமந்திரனை அடக்கினால் தமிழர்களை அடக்கிவிடலாம் என்று
அரசாங்கம் நினைக்கிறது. 
அரசாங்கத்திற்காவது சுமந்திரனின் பெறுமதி தெரிந்தது பற்றி மகிழ்ச்சிதான்!
எனது சுமந்திரன் என்றா சொன்னீர்கள்? 
ஓர் ஆற்றலாளனை எனக்கு உறவாக்கியமைக்கு நன்றி.

🤓உலகநாதரின் ஒத்தூதல்: 📣 சுமந்திரனை இவர் எப்ப விலைக்கு வாங்கினவர்?
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 06:-
இஸ்லாமியர்களின் 'ஜனாஸா' நல்லடக்கம் பற்றிய விடயத்தில் பிரதமரின் வாக்குமாறியதா? பிரதமருக்கு வாக்குமாறியதா? 
பதில் :-
இரண்டும் இல்லை. 
சிலபேரின் நோக்கு மாறியிருக்கிறது. அவ்வளவு தான்! 
இன்றைய அரசின் வெற்றிக்குக் காரணமாய் இருந்தவர் பிரதமர். 
சிங்கள மக்களுக்கு  இன்றும் அவர்தான் கதாநாயகர் (பிரபாகரனைக் கொன்றதால்). 
ஒரு உறையினுள், இரண்டு வாள்கள் இருக்கக் கூடாது என
இன்றைய ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள் போல. 
அதனால்த்தான் அவரை மட்டந்தட்டிப் பார்க்கிறார்கள் என்று நினைக்கிறேன். 
ஆனால் ஒன்று! வெளியில் எறியப்படப்போகும் வாள் எதுவென்று எவருக்குத்தான் தெரியும்?
 
 ☺️உலகநாதரின் ஒத்தூதல்: 📣இவர் ஏன் 'வாள்வாள்' என்று கத்துகிறார்?
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 07:-
தற்போதைய நம் ஜனாதிபதி, சரணடைந்த போர்க்கைதிகளைத் தாங்கள் கொன்றுவிட்டதாய் முன்பு தன்னிடம் ஒத்துக் கொண்டதாய் அமெரிக்க ராஜதந்திரி வெளியிட்டிருக்கும் அறிக்கைபற்றி?
பதில் :-
ஜனாதிபதி அலுவலகம்தான் அதனை உடனே மறுத்துவிட்டதே! 
இதுபற்றிய இரண்டு கேள்விகளுக்குப் பதில் காண வேண்டியிருக்கிறது. 

முறைப்படி சரணடைந்த போராளிகள் என்ன ஆனார்கள்? என்பது முதற்கேள்வி.

மேற்படி உண்மையை அந்த அமெரிக்க இராஜதந்திரி இவ்வளவு நாளும் வெளியிடாமல் ஐ.நா, மனித உரிமைகள் அமைப்பின் கூட்டம் மார்ச் மாதத்தில் நடக்க இருக்கும் வேளையில் வெளியிட்டதன் நோக்கம் என்ன? என்பது அடுத்தகேள்வி.
 
இன்னும் எத்தனை பூதங்கள் கிளம்பப் போகிறதோ?
 
🤠உலகநாதரின் ஒத்தூதல்: 📣 கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேடும் முயற்சி. ஹி.. ஹி..
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆
கேள்வி 08:-
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டேன் என்று கூறி விட்டாரே! 
பதில் :-
ஐயையோ! நாளை உலகம் அழிந்துவிடப்போகிறது. ஓடிப்போய் ஒளிந்து கொள்ளுங்கள்.

😇உலகநாதரின் ஒத்தூதல்: 📣 இந்த நக்கல்தானே வேணாங்கிறது.
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 09:-
விமல் வீரவன்ச வீட்டில் 12 தலைவர்கள் சந்தித்தமை பற்றி? 
பதில்:-
உரோமாபுரியில் 'யூலியர் சீஸரை' அழிப்பதற்காக முன்பு ஒரு கூட்டம் நடந்ததாம். 
அந்தக் கூட்டத்தில் சீஸரின் நண்பர்கள் பலரும்கூடக் கலந்து கொண்டனராம்.
முக்கியமாக ஒரு காலத்தில் சீஸரோடு நெருங்கி இருந்தவனான 
'புறூட்டஸ்' என்பவனும் அக்கூட்டத்தில் கலந்து கொண்டானாம். 
இந்;தச் செய்திகளை 'ஷேக்ஸ்பியர்' அற்புதமாய்த் தன் நாடகத்தில் விபரிக்கிறார். 
கொஞ்சம் பொறுங்கள்! கொஞ்சம் பொறுங்கள்! 
வந்த வேறொரு கேள்விக்கான பதிலை இந்த இடத்தில் தெரியாமல் அடித்துவிட்டேன். 
தயவு செய்து நீங்கள் அதனை மறந்துவிடுங்கள். 
'வெரி சொறி.'

🤨உலகநாதரின் ஒத்தூதல்: 📣 மறதிக்கு மருந்து மாதுளம் கொழுந்து.
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 10:-
நடிகர் கமலஹாசனின் அரசியல் பிரவேசம் பற்றிய உங்கள் அபிப்பிராயம்?
பதில்:-
அவர் நடிப்பிற்கு மட்டும் தான் உலகநாயகன். நாட்டுக்கல்ல.

😃உலகநாதரின் ஒத்தூதல்: 📣 உண்மை. உண்மை. வீட்டை (வீடுகளை) ஒழுங்காய் ஆளத் தெரியாதவர் நாட்டை  எப்படி ஆளப் போகிறாராம்?
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 11:-
பா.ஜ.க. வின் ஆட்சிக்குள் இலங்கையையும் நேபாளத்தையும் கொண்டு வர வேண்டும் என இந்திய உள்த்துறை அமைச்சர் அமித்ஷா நினைப்பதாய் திரிபுரா முதலமைச்சர் தெரிவித்துள்ள கருத்துப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 
பதில் :-
நேரு காலத்திலிருந்தே இந்தக் கனவு அவர்களுக்கு இருக்கிறது. 
இலங்கையினால் தங்கள் பாதுகாப்பிற்கு நெருக்கடி ஏற்பட, ஏற்பட 
ஆறிக்கிடந்த நெருப்பை மீளவும் ஊதத் தலைப்படுகிறார்கள். 
ஈழத்தமிழர்களுக்கும் இந்தியாவின் அந்த நோக்கம் உகந்ததல்ல என்பதே என்கருத்து.
ஈழத்தமிழர்கள் இந்தியாவின் நட்பை மட்டும் பெற்று, 
தமது பாரம்பரியத் தாய் மண்ணில் சுய உரிமையோடு வாழ்வதுதான் 
உகந்தது என்று நினைக்கிறேன். 

🤔உலகநாதரின் ஒத்தூதல்: 📣 வடை, சட்டியிலிருந்து நெருப்பிற்குள் குதித்த கதையாய் ஆகிவிடும்.
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 12:-
பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கானை இலங்கை இங்கு அழைத்திருக்கிறதே?
பதில்:-
விளையாட்டு வீரரை வைத்து விளையாடப் பார்க்கிறார்கள்.

🙂உலகநாதரின் ஒத்தூதல்: 📣 'ஸிக்சர்' அடிப்பாரா? 'டக் அவுட்' ஆவாரா?
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

ஹலோ... உங்களைத்தான்!.....
பாட்டையும் பாவத்தையும் மட்டும் இரசித்துவிட்டுப் போகாமல்,
நீங்களும் கச்சேரியில் இணைந்து கொண்டு,
சமூகம், தமிழ் மற்றும் சமயம் சார்ந்த உங்கள் கே
ள்விகளையும் அனுப்பி வையுங்கள்.
மின்னஞ்சல் முகவரி: mailuharam@gmail.com
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்