பாட்டும் நானே! பாவமும் நானே! பகுதி 11: -'கம்பவாரிதி' இலங்கை ஜெயராஜ்-

கேள்வி 01:-
கடந்தவாரம் அமரபுர மஹா நிக்காய மகாநாயக்க தேரரின் மறைவையொட்டி அரசாங்கம் நாடுபூராவும் துக்கதினத்தை அறிவித்திருந்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
 

பதில்:-
பாராட்டவேண்டிய விடயம்தான். துறவிகளுக்கு முதன்மை கொடுப்பதை
தமிழர் பண்பாடும் ஏற்கிறது. 
அதனால்த்தான் நம் வள்ளுவக் கடவுளார் தன் நூலின் ஆரம்பத்திலேயே
'நீத்தார் பெருமை' எனும் அதிகாரத்தை அமைத்திருக்கிறார். 
ஆனால் ஒன்று, துறவை நாம் உண்டாக்கக் கூடாது. 
அது ஆன்ம பக்குவத்தால் தானாக உண்டாக வேண்டும். 
சமயங்களெல்லாம், என்றைக்குத் துறவையும் நிர்வாகமயப்படுத்தத் தொடங்கினவோ
அன்றைக்கே துறவின் புனிதம் போய்விட்டது. 
நான் எல்லா மதத்தாரையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். 
இஸ்லாமிய மதம் மட்டும் இவ்விடயத்தில் விலகி நிற்கிறது. 
துறவிகளை அருளின் குறியீடாய்க் காணவேண்டுமே தவிர 
அரசியலின் குறியீடாய்க் காணலாகாது. 
மறைந்த துறவிபற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. 
மேலே நான் சொன்ன அருட்தகுதி அவருக்கு இருந்திருந்தால் 
ஒரு நாளென்ன இரண்டு நாள்க்கூட அவருக்காய் 
தமிழர்களும் சேர்ந்து துக்கதினம் கொண்டாடலாம். 
இவ்விடத்தில் மனத்தினுள் எழும் கேள்வி ஒன்றைக் கேட்காமல் இருக்கமுடியவில்லை. 
துறவிகளுக்கு மதிப்பளிக்கும் விடயத்தில் 
அரசு பௌத்த துறவிகளுக்கு மட்டுமாய் அம்மதிப்பை வழங்குவது ஏன்? 
இதுவே என் கேள்வி. 
அரசு, அந்த மரியாதையை மற்றைய மதத்துத் துறவிகளுக்கும் 
வழங்கக் கடமைப்பட்டிருக்கிறதல்லவா? 
ஆனால் அது நடப்பதாய்த் தெரியவில்லை. 
நல்லை ஆதீன முதல் குருமுதல்வரோ, 
சிவத்தமிழ்ச் செல்வி அன்னை தங்கம்மா அப்பாக்குட்டியோ மறைந்தபோது 
இத்தகைய மரியாதையை அரசு செய்திருக்க வேண்டியது அவசியமல்லவா?
இதே போலத்தான் சிறந்த சிங்களப் பாடகர் அமரதேவா மறைந்த போதும் 
அரச அளவில் மரியாதை செய்தார்கள். 
இந்த மரியாதையை உலக அளவில் புகழ் பெற்றிருந்த 
எங்களது தவில் வித்வான்கள் தட்சணாமூர்த்தி, சின்னராசா, 
நாதஸ்வர வித்வான் பத்மநாதன் போன்றவர்களுக்கு அவர்கள் வழங்கவில்லை.
இந்த நாடும் அரசும் எல்லா இனத்தார்க்கும், 
எல்லா மதத்தார்க்கும் உரியதென்றால் இந்தப் பாரபட்சத்தை அவர்கள் எப்படிச் செய்ய முடியும்? 
இது நியாயமாகுமா? எங்கள் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் 
இத்தகைய சம உரிமைகளைக்கூடக் கோராமல் 
அங்கு என்னதான் செய்து கொண்டிருக்கிறார்கள்? 
இவர்கள் பாராளுமன்றத்தைப் பசிதீர்க்கும் இடமாய் மட்டும் கருதுகிறார்களோ என்னவோ?
அரசின் இந்தப் பாரபட்சம் தான் இன, மத பேதங்களை உருவாக்குகிறது. 
இனிமேலேனும் இவர்கள் மாறுவார்களா?
         

😝உலகநாதரின் ஒப்பீனியன்​: 📣 'உண்மையிலே இதுதான் நம் வாழ்வில் காணா 
சமரசம் உலாவும் இடமே' ஹி...ஹி...'
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 02:-
ஐ.நா. மனிதஉரிமைச் சபை தீர்மானத்தால் நாட்டுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று ஆட்சியாளர்கள் சொல்லி வருகிறார்களே?
 
பதில்:-
உண்மையிலேயே பாதிப்பில்லை என்றால், 
போன மாதம் முழுவதும் உலகத் தலைவர்களிடம் ஆதரவு கோரி 
இவர்கள் ஆலாய்ப் பறந்து திரிந்தது எதற்காகவாம்?
'ஊரொடு பகைக்கின் வேரொடு கெடும்' என்பது தமிழ்ப் பழமொழி. 
இவர்கள் உலகத்துடனேயே பகைக்க நினைக்கிறார்கள். 
அச்சமாக இருக்கிறது. 

🤣உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 
'உலகத்தார் உண்டென்ப இல்லென்பான் வையத்து
அலகையாய் வைக்கப்படும்' அலகை என்றால் பேயாம்
-வள்ளுவருக்கு ஒரு சல்யூட்!
 
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 03:-
உலகநாடுகளிடம் இருக்கும் மனிதாபிமானத்தினால்த்தானே எங்களைப் போன்ற சிறிய இனத்திற்காகவும் ஐ.நா. மனிதஉரிமைகள் சபை குரல் எழுப்புகிறது. உலகத்திற்கு நாம் பெரிய கடமைப்பட்டிருக்கிறோம் அல்லவா?

பதில்:-
எமக்காகக் குரல்கொடுத்த நாடுகளுக்கு நாம் 
நன்றியுடையவர்களாக இருக்கவேண்டியது அவசியந்தான்! 
அவர்களின் குரல்கொடுத்தலுக்குக் காரணமாய் 
மனிதாபிமானம் மட்டும் இருந்திருந்தால் இன்னும் மகிழ்ந்திருக்கலாம். 
கதறக் கதற இங்கு நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டபோது 
(அப்படித்தான் சொல்கிறார்கள்) இந்த நாடுகளின் மனிதாபிமானம் எங்கே போயிற்றாம்? 
போர் முடிந்து 11 ஆண்டுகள் கழியும் வரை 
இந்நாடுகளெல்லாம் என்னசெய்து கொண்டிருந்தனவாம்? 
இக்கேள்விகள் மனதைக் குடையத்தான் செய்கின்றன.
சீனாவிற்கு இலங்கைஅரசாங்கம் சிவப்புக் கம்பளம் விரிக்கத் தொடங்கிய பின்தான் 
இந்நாடுகளின் மனிதாபிமானம் வெளிப்படத் தொடங்கியிருக்கிறது. 
இந்த மனிதாபிமானத்தைக் கருணையால் விளைந்ததென்பதா? 
கணக்குவழக்கால் விளைந்ததென்பதா? தெரியவில்லை!
இவர்களது கருணை, கணக்குவழக்கால் விளைந்ததேயானலும் 
கேட்பாரின்றி வீழ்த்தப்பட்டுக் கிடக்கின்ற எமக்கு 
இன்றைய நிலையில் இக்கருணையும் தேவையாய்த்தான் இருக்கிறது.
இவர்களின் சுயநலத்துடன் கூடிய மனிதாபிமானத்தை, 
அறம் முற்று முழுதாய் அழியாது என்பதற்கான சாட்சியாகவே நான் பார்க்கிறேன். 
🤨உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 'எல்லாம் மாயை தானா? ஏழை எந்தன் வாழ்வும் வீணா?'
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 04:-
மியன்மாரில் நடக்கும் கலவரத்தில் மியன்மார் இராணுவம் நானூறு பேர்வரை கொன்றுவிட்டதாகவும் அதனால் உலகநாடுகள் அந்நாட்டைக் கண்டிக்க வேண்டும் எனவும் ஐ.நா. சபையின் செயலாளர் விட்ட அறிக்கையைப் பார்த்தீர்களா?

பதில் :-
ஐ.நா.சபையைப் பொறுத்தவரை நாற்பதாயிரத்தை விட 
நானூறு பெரிய எண்ணிக்கையாய் இருக்கிறது என்று நினைக்கிறேன். 

😒உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 'மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஓவியம். 
        நீ சொன்னால் காவியம்.'
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 05:-
இந்தியாவின் கொரோனா மருந்து வரத் தாமதமாகும் இந்நேரத்தில் இலங்கைக்குச் சீனா ஐந்து இலட்சம் கொரோனா மருந்துகளைத் தரச் சம்மதித்து இருப்பது பெரிய விடயம் இல்லையா?

பதில் :-
நகைச்சுவை நடிகர் தங்கவேலு நடித்த பழைய படமொன்றில் 
மாமியாரும் மருமகளும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு, 
ஒரு பிச்சைக்காரனுக்கு வீட்டில் உள்ள அரிசியை எல்லாம் அள்ளிக் கொடுப்பார்கள். 
பிச்சைக்காரன் மகிழ்ந்து போவான். 
பின்னர் அவர்களுக்குள் முரண்பாடு நீங்கியதும் 
அவ்விருவரும் கொடுத்த அத்தனை அரிசியையும் மீண்டும் பறித்துக் கொள்வார்கள். 
நான் பிச்சைக்காரன் என்றும் மாமியார் என்றும் மருமகள் என்றும் 
யார் யாரைச் சொல்கிறேன் என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். 
என்றைக்குத் தந்தவர்கள் மீண்டும் பறிக்கப் போகிறார்களோ
என்பதுதான் என் கவலை.

🥱உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  'கொடுத்தவனே பறிச்சுக்கிட்டாண்டி மானே' கதைதானோ?
 
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆
 
கேள்வி 06:-
இம்முறையும் இந்தியா எம்மைக் கைவிட்டுவிட்டதே?
பதில் :-
நான் அப்படி நினைக்கவில்லை. 
இந்தியா பிரேரணைக்கு வாக்களிக்காமல் விட்டதை 
இலங்கைக்கான ஆதரவாய்க் கொள்ள முடியாது. 
பிராந்திய வல்லரசாய்க் கருதப்படும் இந்தியாவால் 
சில விடயங்களை வெளிப்படையாகச் செய்ய முடியாது. 
அதன் நடுவுநிலைமையில் ஈழத் தமிழர்களுக்கான 
ஆதரவின் சாயலையே காணமுடிகிறது. 
இந்தியாவின் கண் அசைவு இல்லாமல் நேபாளம் போன்ற நாடுகள் 
இலங்கைக்கு ஆதரவளிக்காமல் நடுநிலைமை வகித்திருக்க நியாயமில்லை. 
வாக்களிப்பில் கலந்து கொள்ளாவிட்டாலும் தமிழர்களுக்கான ஆதரவை 
இந்தியா இம்முறை வெளிப்படையாகக் காட்டியிருப்பதை நாம் கவனிக்க வேண்டும். 
அது பெரிய விடயம் என்பது என் கருத்து. 
பிரதமர் மோடியினுடைய உரையிலும் 
ஐ.நா. மனிதஉரிமைகள் சபை இந்தியப் பிரதிநிதியின் உரையிலும் 
ஈழத்தமிழர்கள் பற்றியும் அவர்களது உரிமை பற்றியும் 
அதற்கு இந்தியா பொறுப்பேற்றுள்ளமை பற்றியும் பேசப்பட்ட விடயங்கள் 
மிக முக்கியமானவை என்று கருதுகிறேன். 
அதுபோலவே மத்திய அரசாங்கத்தோடு கூட்டுச் சேர்ந்து 
தேர்தலுக்கு முகம் கொடுக்கும் தமிழ்நாடு அ.தி.மு.க. கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் 
ஈழத்தமிழர்களின் விடிவுக்காய் தனித்தமிழீழம் வரை பேசப்பட்டிருப்பதையும் 
நாம் கவனிக்காமல் விட முடியாது. 
இவற்றையெல்லாம் கூட்டிப்பார்த்தால் இந்தியாவின் நடுவுநிலைமையின் 
பக்கச் சார்பை நாம் அறிந்து கொள்ளலாம்.  
 
🤫உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 
எந்த 'றோ' மஹானு பாவுலு
        அந்தரீக்கி வந்தனமு...

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆
 
கேள்வி 07:-
மனிதஉரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகள் 22. நடுநிலை வகித்த நாடுகள் 14. ஆதரித்து வாக்களித்த நாடுகள் 11. வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனே நடுநிலை வகித்த நாடுகளோடு ஆதரவளித்த நாடுகளையும் கூட்டி, தமக்கு 25 நாடுகளின் ஆதரவு இருப்பதாகவும் அதனால் இலங்கை தோல்வி அடையவில்லை என்றும் சொல்கிறாரே. இந்தக் கணக்கிற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?

பதில் :-
நான் ஏன் பதில் சொல்ல வேண்டும்? 
சஜித் பிரேமதாசாதான் அதற்கு அழகாகப் பதில் சொல்லிவிட்டாரே. 
கடந்த ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதிக்குக் கிடைத்த வாக்குகள் 
அறுபத்து ஒன்பது இலட்சம் என்றும் 
தனக்குக் கிடைத்த வாக்குகள் ஐம்பத்து ஐந்து இலட்சம் என்றும் 
தேர்தலில் வாக்களிக்காமல் விட்டவர்களின் தொகை 
இருபத்தாறு இலட்சம் என்றும் அண்ணளவாய்க்கூறி 
தினேஷ் குணவர்த்தனவின் கணக்குப்படி வாக்களிக்காமல்விட்டவர்களின் ஆதரவு
தனக்குத்தான் என்றும் கொண்டால் 
தான்தான் இப்பொழுது இலங்கை ஜனாதிபதியாக இருக்க வேண்டும் என்று 
பகிடி விட்டிருக்கிறாரே. 
அதை நீங்கள் பார்க்கவில்லையா?
 
🤠உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 விழுந்தும் மீசையில மண் ஒட்டாத கதைதான்.
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆
 
 
ஹலோ... உங்களைத்தான்!.....
பாட்டையும் பாவத்தையும் மட்டும் இரசித்துவிட்டுப் போகாமல்,
நீங்களும் கச்சேரியில் இணைந்து கொண்டு,
சமூகம், தமிழ் மற்றும் சமயம் சார்ந்த உங்கள் கே
ள்விகளையும் அனுப்பி வையுங்கள்.
மின்னஞ்சல் முகவரி: mailuharam@gmail.com
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்