பாட்டும் நானே! பாவமும் நானே! பகுதி 13: -'கம்பவாரிதி' இலங்கை ஜெயராஜ்-

கேள்வி 01:-
சுமந்திரன், சாணக்கியன் கூட்டு பலரையும் எரிச்சலடைய வைத்திருப்பதைக் கவனித்தீர்களா?  
 
பதில்:-
அறிவும் ஆளுமையும் ஒன்றுசேர்ந்தால், 
அவை இல்லாதவர்களுக்கு வயிறு சற்று எரியத்தானே செய்யும்.
பாராளுமன்றத்திற்குள் நுழைந்து எட்டே மாதங்களான நிலையில் 
உலகம் தன்னைத் திரும்பிப் பார்க்கும்படி செய்திருக்கிறார் சாணக்கியன். 
தங்களால் இதைச் செய்யமுடியாமல் போனதை வைத்தே, 
சாணக்கியனின் ஆளுமையை, 
பலகாலமாய் வெறுமனே உள்ளே இருந்தவர்கள் கணிக்கவேண்டும். 
அதுபோலவே மொழிஅறிவு, விடயஅறிவு, சட்டஅறிவு எனும் தகுதிகளைவைத்து 
இன்று உலக இராஜதந்திரிகள் எவரானாலும் 
நம் பிரச்சினை பற்றிச் சுமந்திரனோடு தான் பேசுகிறார்கள்.
இத்தகைய அங்கீகாரம் தமக்குக் கிடைக்காததன் காரணத்தை 
மற்றவர்கள் உணர்வார்களேயானால், 
சுமந்திரனின் அறிவாற்றலையும் அவர்கள் புரிந்து கொள்ளலாம்.
இந்நிலையில் அவ்விருவரையும் பிரிக்க நினைக்காமல் அங்கீகரித்து, 
அவர்களோடு சேர்ந்து கட்சியையும் இனத்தையும் பலப்படுத்த நினைப்பதுதான் 
அறிவுடைமை என்று நினைக்கிறேன்.

🥱உலகநாதரின் ஒப்பீனியன்​: 📣 'பிறர் ஆக்கம் கண்டு பொறாமை. ஹி.. ஹி..'
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 02:-
அறம் வெல்வது நிச்சயமா?
 
பதில்:-
பாவம் தோற்பது நிச்சயம்!

🤣உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 
 'தலையைச் சுற்றி மூக்கைத் தொடுறார்.'
 
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 03:-
மொட்டுக் கட்சிக்குள் பிரிவுகள் வெடித்திருக்கிறதே. கூட்டுக்கட்சிகள் தனித்துக் கூட்டம் நடத்தியது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 

பதில்:-
மொட்டுகள் பிரிந்தால்த்தானே மலர்கள் கிடைக்கும்.
🙃உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 'அப்படிப் போடு மச்சான் அரிவாளை! சும்மா...சும்மா...'
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 04:-
செய்மதி, செய்மதி என்று சொல்கிறார்களே. அதுபற்றி உங்களுக்கு ஏதேனும் தெரியுமா?  

பதில் :-
தெரியுமாவாவது! அண்மையில்த்தான் அதுபற்றி ஒரு கட்டுரை வாசித்து 
அதிர்ந்து போய் இருக்கிறேன்.
மனிதர்கள் காற்றையும் நீரையும் நிலத்தையும்தான் 
அசுத்தப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் என்று நினைத்திருந்தேன். 
அக் கட்டுரையைப் படித்ததும்தான் ஆகாயத்தையும்
அவர்கள் விட்டுவைக்கவில்லை என்பது தெரியவந்தது. 
இன்றைய நிலையில் கிட்டத்தட்ட ஆறாயிரம் செய்மதிகள் 
வானில் சுற்றிக் கொண்டு இருப்பதாகவும், 
தொலைக்காட்சி, தொலைபேசி, வழிகாட்டி (கூகுள்; மப்) என்பவையெல்லாம்
இச் செய்மதிகளால்த்தான் இயங்குவதாகவும், 
இவை தவிர படமெடுத்து அனுப்புபவை, வேவுபார்ப்பவை என்பவையான செய்மதிகளும் 
பறந்து கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. 
'றொக்கட்' மூலம் சரியான தூரத்தில் 
சரியான வேகத்தில் பறக்கவிடப்படும் இச்செய்மதிகள்
அந்த வேக, தூரக்கணக்கில் ஏதேனும் பிழை நிகழ்ந்தால் 
பிரபஞ்சத்தில் மிதந்து காணாமல் போய்விடுமாம். 
சரியான இடத்தில் பொருத்தப்பட்டும் சரியான வேகத்தைக் கொடுக்கவில்லை என்றால் 
அவை புவியீர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு எரிந்து கரியாகிவிடுமாம். 
இவைதவிர தீர்மானிக்கப்பட்ட அவற்றின் வாழ்வு முடிந்து காலாவதியானால் 
அவற்றை உந்துவிசை இயந்திரத்தைக் கொண்டு 
கல்லறை வட்டம் (பசயஎநலயசன ழசடிவை) என்று அழைக்கப்படும் பகுதிக்குள் தள்ளிவிடுகிறார்களாம். 
முன்சொன்ன பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கும் 6000 செய்மதிகளில் 
பாதி அளவுதான் பயன்பாட்டில் இருக்கின்றனவாம். 
மற்றவை நமது சில அரசியல்வாதிகள்போல 
எவருக்கும் பயனின்றி வெறுமனே சுற்றிக் கொண்டிருக்கின்றனவாம்.
இவையெல்லாம் வான் குப்பைகளாய்க் கருதப்படுகின்றன. 
காலப்போக்கில் வான்வெளிக் குப்பை பொறுக்கும் வண்டி வந்தாலும் வரும் என்று
அக்கட்டுரை ஆசிரியர் எழுதியிருக்கிறார். 
வான்வெளியை ஆக்கிரமிக்கும் இவ் விளையாட்டை 
இரண்டாம் உலகப்போர் முடிந்து பத்து வருடங்களுக்குப் பின் 
1957 ஒக்டோபர் 04 அன்று 'ஸ்புட்நிக்' செயற்கைக்கோளை 
முதல்முதலாக அனுப்பியதன் மூலம் சோவியத்; யூனியன்தான் தொடக்கி வைத்ததாம். 
இப்படி இன்னும் பல செய்திகள் கைவசம் இருக்கின்றன. 
நீங்கள் கேட்கத் தயாரானால் நான் சொல்லத் தயார். 

😒உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 '
'கூகுள் கூகுள் பண்ணிப்பார்த்தேன் உலகத்துல'...
சீ போங்கோ! இரண்டாவது வரி வேண்டாமாக்கும்.'
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 05:-
சீனாவால் உருவாக்கப்படும் துறைமுக நகரத்திற்கு இலங்கையின் சட்ட நிர்ணயத்தின் 11 விடயங்களிலிருந்து விதிவிலக்கு அளித்து அரசு கிட்டத்தட்ட ஓர் தனிநாட்டிற்கான உரிமையை வழங்க முயற்சிப்பதாய் ஜே.வி.பி.யின் அநுரகுமார விமர்சித்ததைப் பார்த்தீர்களா?

பதில் :-
உரிமை உள்ளவர்களுக்கு உரிமை தர மறுப்பவர்கள், 
உரிமை இல்லாதவர்களுக்கு உரிமை தரத் துடிக்கிறார்கள். 
கொட்டகைக்குள் ஒட்டகத்திற்கு இடம் கொடுக்கும் முயற்சி. 
அறியாமையின் உச்சம். 
அம்முயற்சியின் ஆபத்தை அரசு உணராவிடினும் 
சிங்களமக்கள் உணரத் தொடங்கியிருப்பது நிம்மதி தருகிறது. 
மற்றவர்கள் அழ, அழ நம்மால் பறிக்கப்பட்டவை எல்லாம்
நாம் அழ, அழ வேறொருவரால் பறிக்கப்படும் என்று, 
என்றோ வள்ளுவர் சொல்லிவிட்டார். 
(அழக் கொண்டதெல்லாம் அழப்போம்.) வாழ்க வள்ளுவர்.

🥱உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  (சப்பை) மூக்கை நுழைக்கப் பார்க்கிறார்கள். நுழையுமா?
 
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆
 
கேள்வி 06:-
முதலமைச்சர் பதவிக்கு மாவை பொருத்தமானவர் அல்ல என்று முன்னாள் முதலமைச்சர் சொல்லியிருக்கிறாராமே? 
  
பதில் :-
நானும் கேள்விப்பட்டேன். 
யார், யார் எதையெதைச் சொல்வது என்று இல்லாமல் போய்விட்டது.
கள்ளுக்கொட்டிலுக்குள் இருந்த ஒருவன் குடித்துக் கொண்டிருந்த மற்றவனுடன் 
கோபித்துக் கொண்டு கள்ளு விற்றவனைப் பார்த்து 
'அவன் கிடக்கிறான் குடிகாரன்! நீ என்ர பிளாவுக்குள்ள கள்ளை ஊத்து' 
என்ற கதைதான் ஞாபகத்திற்கு வருகிறது.
 
😃உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 
 'சட்டியைப் பார்த்துத் தாச்சி சிரிச்ச கதை இதுதானோ?'

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆
 
கேள்வி 07:-
செய்திகளில் எங்கு பார்த்தாலும் அரசுக்கு எதிரான பௌத்த பிக்குகளின் ஆவேச உரைகள் கேட்கின்றனவே?

பதில் :-
அவர்களின்றி (இங்கு) அணுவும் அசையாது. 
 
🤠உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 
'அரசும் அசையாதோ?'

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆
 
கேள்வி 08:-
பிரதமரின் உடல்நலக் குறைவு பற்றிப் பரவலாய்ப் பேசப்படுகிறதே? 
 
பதில்:-
அதுபற்றிய உண்மைநிலை எனக்குத் தெரியாது. 
ஆனால் ஒன்று. 
அரசின் நிலைப்புக்கு அவரின் இருப்பு அவசியம் என்றே தோன்றுகிறது. 

😝உலகநாதரின் ஒப்பீனியன்​: 📣 'வாழ்ந்து போதீரே!'
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆
 
கேள்வி 09:-
தாயை இழிவுபடுத்திப் பேசிய தமிழ்நாட்டு அரசியல்வாதி பற்றிச் சென்றவாரம் தான் சொன்னீர்கள். இந்த வாரம் அத்தவறை அமைச்சர் ஜீவன் தொண்டமான் செய்திருக்கிறாரே. அதுபற்றி?​ 
 
பதில்:-
தமிழ்நாட்டின் உதயநிதி ஸ்ராலின் போல, 
இவரும் தயாரிக்கப்பட்ட தலைவர் தான். 
அவரின் தடுமாற்றம் ஆச்சரியப்படத் தக்க ஒன்றல்ல. 
ஆனாலும் பிழையுணர்ந்து மன்னிப்புக் கோரியதை மதிக்கத்தான் வேண்டும். 
         
😉உலகநாதரின் ஒப்பீனியன்​: 📣 'தகுமோ? இது தர்மம் தானோ?'
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆
 
கேள்வி 10:-
யாழ் மேயர் மணிவண்ணன் கைது? ​ 
 
பதில்:-
அரசின் தடுமாற்றத்தின் அடுத்த அசைவு. 
இலங்கையில் நடப்பது மக்கள் ஆட்சிதானா? எனும் ஐயம் எழுந்துள்ளது. 
நீதிமன்றம் பிணை வழங்கியபிறகு 
ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியதாய்த் தெரிவிப்பது பெரிய வேடிக்கை. 
         
😉உலகநாதரின் ஒப்பீனியன்​: 📣 'மணி வண்ணருக்கு நீலம் பிடித்ததில் என்ன பிழையாம்? ஹி.. ஹி...'
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆
 
ஹலோ... உங்களைத்தான்!.....
பாட்டையும் பாவத்தையும் மட்டும் இரசித்துவிட்டுப் போகாமல்,
நீங்களும் கச்சேரியில் இணைந்து கொண்டு,
சமூகம், தமிழ் மற்றும் சமயம் சார்ந்த உங்கள் கே
ள்விகளையும் அனுப்பி வையுங்கள்.
மின்னஞ்சல் முகவரி: mailuharam@gmail.com
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்