பாட்டும் நானே! பாவமும் நானே! பகுதி 18: -'கம்பவாரிதி' இலங்கை ஜெயராஜ்-

கேள்வி 01:-
காலமாகிவிட்டீர்களாமே?​​
பதில்:-
அப்படியா? 
😜உலகநாதரின் ஒப்பீனியன்​: 📣 'காலத்தை வென்றவன் நீ !'
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 02:-
'உயிரோடு இருக்கும்போதே இறந்துவிட்டதாய்ச் செய்தி போட்டவர் மேல் உங்களுக்குக் கோபம் வரவில்லையா?'
 
பதில்:-
முதலில் வந்தது. 
முகம் தெரியாத எத்தனைபேர் என்மேல் அன்பு வைத்திருக்கிறார்கள் என்பதைத் 
தெரிந்துகொள்ளஅதுவே காரணமானபோது பின்னர் அக்கோபம் மாறிவிட்டது. 
தொலைபேசியில் பதறியவர்கள், பரிதவித்தவர்கள், ஆத்திரப்பட்டவர்கள், 
அரற்றி அழுதவர்கள் என அன்பு கொண்டவர்களிடம் 
வெளிப்பட்ட அதிர்வுகள் என்னை ஆச்சரியப்படுத்தின. 
எனக்குள் என் சமூகவாழ்க்கை சரியாக அங்கீகரிக்கப்படவில்லையோ என்ற 
ஓர் ஐயம் இருந்தது. இப்பொழுது இவ்வளவு அங்கீகரிப்பா? என வியப்பேற்பட்டிருக்கிறது. 
இவர்களுக்காக இன்னும் வாழ வேண்டும் எனும் ஆசையும் பிறந்திருக்கிறது. 

🥰உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 'நூறாண்டு காலம் வாழ்க! நோய் நொடியில்லாமல் வளர்க!!'
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 03:-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்?
பதில்:-
ஏந்தி வைத்திருக்கத் தக்க நினைவுகளா அவை? 
🪔உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 'நினைத்தாலே நெஞ்சு சுடும்.'
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 04:-
ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்தது காணாதென்று அவர்களுக்கு அஞ்சலி செலுத்தக் கூட அனுமதிக்கவிரும்பாத அரசின் செயற்பாடுபற்றி 
என்ன நினைக்கிறீர்கள்?
பதில் :-
அட்டூழியத்தின் உச்சம் அது. 
'நாங்கள் மக்களைக் கொல்லவில்லை, போராளிகளைத்தான் கொன்றோம்' என்கிறார்கள் அவர்கள்.
உண்மையில் போராளிகளைக் கொன்றதற்கும் அவர்கள் கவலைப்படவேண்டாமா? 
போராளிகளா வன்முறையை முதன்;முதலில் தொடங்கினார்கள். 
இந்நாட்டில்  1956, 1977, 1981, 1983 ஆகிய ஆண்டுகளில் 
தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைகளை வரலாறு மறக்குமா? 
எந்தக் காரணமுமின்றி தமிழர்களைப் புழுக்கள்போலக் கொன்று குவித்தும் 
அவர்களின் சொத்துக்களைச் சூறையாடியும் 
பேரினத்து இனவாதிகள் அக்கலவரங்களின்போது செய்த அட்டூழியங்கள் கொஞ்சநஞ்சமா? 
அப்போது இந்நாட்டின் அரசும், நீதித்துறையும் சரியாக இயங்கியிருந்தால், 
போராட்டம் என்ற ஒன்றே தோன்றியிருக்காதே. 
பட்டப்பகலில் வெட்டவெளிச்சத்தில் தமிழர்களை 
வீதி, வீதியாக வெட்டியும் குத்தியும் எரித்தும் கொன்றுகுவித்த வக்கிரத்தால்த்தானே 
தமிழ் இளைஞர்களும் ஆயுதம் ஏந்த வேண்டி வந்தது. 
ஓர் தமிழ் இளைஞனை நிர்வாணப்படுத்தி 
சிங்கள இளைஞர்கள் சூழநின்று வதைக்கும் புகைப்படங்கள் 
இன்றும் இணையத்தில் பதிவாகிக்கிடக்கின்றன. 
புகைப்படச்சாட்சியோடு வதைகள் செய்யும் இவர்களில் எவரையாவது
இந்நாட்டு நீதித்துறை முறைப்படி தண்டித்ததா? 
1977 இல் அமிர்தலிங்கம் கொணர்ந்த 
ஒத்திவைப்புப் பிரேரணையின்போது பதிலளித்துப் பேசிய 
அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். அவர்கள் 
'போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம்' என்று
அறைகூவல் விடுத்து இந்நாட்டில் ஒரு இனப்போருக்கான அத்திவாரத்தை இட்டார் என்பதை
எவராலும் மறுக்கமுடியுமா? 
பின்னாளில் திருநெல்வேலியில் 13 இராணுவத்தினர் போராளிகளின் 
கண்ணிவெடிக்குப் பலியானபோது வன்முறைக்குத் தூபமிட்டு
1983 கலவரத்திற்கு காரணராய் இருந்த அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆருக்கு, 
அதற்கு முன்னைய கலவரங்களில் அநியாயமாய்க் கொல்லப்பட்ட 
தமிழர்களும் இந்நாட்டின் பிரஜைகள்தான் என்று தெரியாமல் போனது ஏன்? 
போராளிகள் இராணுவத்தினரின் மேல் மேற்கொண்ட தாக்குதலுக்கு
பொதுமக்களை அழிக்கும் அனுமதியை 
அப்போது இராணுவத்தினர்க்கு யார் அளித்தார்கள்? 
அக்காலத்தில் நிகழ்ந்த கலவரங்களை 
அரச தலைவர்களே முன்னின்று நடத்தியமையையும், 
யாழ்ப்பாணத்தில் நூலகம் முதலியவற்றை எரித்து ஊழிக்கூத்து ஆடியதையும் 
இவர்களால் எப்படி நியாயப்படுத்த முடியும்?
இவர்களது செயல்கள்தான் 
இந்நாட்டில் நிகழ்ந்த வன்முறைகள் எல்லாவற்றிற்குமான காரணங்களாயிற்று. 
அந்தக் காரணங்களால் விளைந்த காரியம்தான் 
தமிழ் இளைஞர்களின் ஆயுதப்போராட்டம். 
இன்றுவரை அக்காரணங்களை நீக்க நினைக்காது 
காரியத்தைத் தண்டிக்க நினைப்பது எவ்விதத்தில் நியாயமாகும்?  
இப்படி ஆயிரம் கேள்விகள் மனதில் எழுகின்றன. 
பலம்பெற்ற சிங்களக் கட்சிகளெல்லாம்கூட 
இந்த அநியாயங்களைத் தட்டிக்கேட்க விரும்பாமல் 
தமிழருக்கு எதிரான வன்முறைகளை ஆதரித்து, 
தமது அரசியல் வெற்றிகளை உறுதிப்படுத்த நினைத்தமைதான் 
கொடுமையிலும் கொடுமை. 
இன்றைக்கும் அநியாயமாய் இறந்துபோன நம்மவர்களுக்கு 
அஞ்சலி செலுத்தும் உரிமையைக்கூட வழங்க மறுத்து நிற்கும் இவர்களது போக்கு 
இந்த நாட்டில் இவர்கள் உண்மை அமைதியை வரவிடமாட்டார்களோ?
என்று எண்ண வைக்கிறது. 
காலம் என்றும் ஒரே மாதிரியாய் இருக்கப் போவதில்லை என்பதை 
இவர்கள் உணர்ந்தாக வேண்டும்! 
😕 உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 'நித்தம் நித்தம் மாறுகின்ற எத்தனையோ'
 
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 05:-
முள்ளிவாய்க்காலில் நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் துடிதுடித்து இறந்துபோனதாய்ச் சொல்லப்படுகிறதே. அவலத்திற்குப் பதில் ஏதும் கிடைக்காதா?
பதில் :-
வள்ளுவரின் கருத்தைத்தான் இக்கேள்விக்குப் பதிலாய்ச் சொல்லவேண்டியிருக்கிறது. 
'அல்லல்பட்டு ஆற்றாது அழுதகண்ணீர் அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை' 
என்கிறார் வள்ளுவர். 
தனது குறள்களில் ஒரு சொல்லைத்தானும் தேவையில்லாமல் போட விரும்பாதவர் தெய்வப்புலவர்.
இக்குறளில் வரும் ஆற்றாது என்ற ஒரு சொல்
மேலதிகமாய் இருக்குமாப்போல் தோன்றுகிறது. 
அல்லல் பட்டு அழுத கண்ணீர் அன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை  என்று
சொல்லியிருந்தாலும் குறளின் கருத்து முழுமைபெற்றிருக்கும் அல்லவா? 
ஆனால் ஆற்றாது என்ற சொல்லைத் திருவள்ளுவர் வேண்டுமென்றே போட்டிருக்கிறார். 
ஒருவர் மற்றொருவருக்குக் கொடுமை செய்ய அதனால் மற்றவர் வருந்தி அழுவதைவிட, 
அந்தத் துன்பத்தைச் சொல்லி ஆறுதல்படக்கூட 
ஒருவரும் இல்லாது வருந்தி அழுவதே ஆற்றாது அழுவதாம். 
அது மிகப்பெரிய கொடுமை என்பதைக் குறிக்கவே 
அச்சொல்லை வள்ளுவர் இட்டிருக்கிறார் என்று எண்ணத் தோன்றுகிறது. 
உண்மையில் அத்தனைபேரை இழந்தும் 
நமக்காகப் பேச யாரும் இல்லாத அனாதைகளாய்த்தான் 
ஈழத்தமிழர்கள் கண்ணீர் வடித்தபடி இன்றும் இருக்கிறார்கள். 
அந்தக் கண்ணீர் மிகவும் பொல்லாதது. 
அறத்தை மனிதர்கள் காக்கத் தவறும் பட்சத்தில், 
இயற்கை அந்தப் பொறுப்பைத் தான் ஏற்றுக்கொள்ளும். 
அங்ஙனம் இயற்கை அப்பொறுப்பை ஏற்று பிழைசெய்தவர்களைத் தண்டிக்கத் 
தலைப்பட்டால் அதனை எந்த வலிமை உள்ளவர்களாலும் தாங்க முடியாது.
மிகச் சீக்கிரத்தில் தமிழர்களுக்கான நீதியை வழங்கத் தவறும் பட்சத்தில் 
இயற்கையின் தண்டனையைப் பேரினத்தார் ஏற்கவேண்டி வரும். 
அப்போது அது மிகக் கொடுமையாய் இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.
🙏உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  'சின்னக்குறள் பெரிய விஷயம்!'
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆
 
கேள்வி 06:-
நாட்டுமக்களைக் காப்பது தானே அரசின் பொறுப்பு. அவ் அரசே நாட்டுமக்களைத் துன்புறுத்தினால் என்ன செய்வது? அத்தகைய செய்திகள் ஏதேனும் உங்கள் தமிழ் இலக்கியங்களில் எங்கேனும் பதிவாகியிருக்கிறதா?
பதில் :-
இல்லாமல் என்ன? ஒரு தலைவன் தன் தலைவியைவிட்டு 
வேற்றூருக்குச் செல்லத் தலைப்படுகிறான். 
அவனைத் தன்னை விட்டுப் பிரிந்து செல்ல வேண்டாம் என்று 
தடுக்கும்படி சொல்லத் தோழியை அவனிடம் அனுப்புகிறாள் தலைவி. 
தலைவனிடம் வரும் தோழி அவனிடம்,
மற்றவர்களால்த் துன்பம் வந்தால், 
என் தலைவி தலைவனான உன்னிடம் உரைத்து ஆறுதல் தேடுவாள். 
இப்போது ஆறதல் தரவேண்டிய நீயே அவளை வருத்த நினைப்பது, 
ஆட்சியாளரே தன் நாட்டுமக்களை அலைக்கழிப்பதற்கு ஒப்பானது 
('ஆழ்பவர் கலக்குற அமைவுற்ற நாடுபோல்') என்கிறாள். 
சங்கப்பாடல்களில் எங்கோ இப்பாடல்வரி பதிவாகியிருக்கிறது.
😃உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  'சூசூசூ சூப்பர்'
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆
 
கேள்வி 07:-
பயணத்தடைக்கும் ஊரடங்குச்சட்டத்திற்கும் என்னதான் வித்தியாசம்? சொல்லும் பார்க்கலாம்.
பதில் :-
சின்னச் சின்னக் கேள்விகளுக்குத்தான் என்னால் பதில் சொல்ல முடியும். 
இத்தகைய பெரிய கேள்விகளுக்கு அரசாங்கம் தான் பதில் சொல்ல வேண்டும். 
ஹி..ஹி... (உபயம் உலகநாதர்)
🤣உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 'கழுதைக்கு சிங்கம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அவ்வளவும்தான்!'
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆
 
கேள்வி 08:-
இலங்கையிலுள்ள தனது நிறுவனங்கள் மும்மொழிக்கொள்கையைப் பின்பற்ற வேண்டும் எனச் சீன அரசாங்கம் உத்தரவிட்டிருக்கிறதாமே?
பதில்:-
இந்த உத்தரவை இலங்கை அரசாங்கமல்லவா இட்டிருக்க வேண்டும். 
😝உலகநாதரின் ஒப்பீனியன்​: 📣 'சீனா, இது ஒரு 'சீன்' ஆ?.. ச்சும்மா.. ச்சும்மா..'
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 09:-
இஸ்ரேல், பாலஸ்தீன மோதலில் அமெரிக்காவின் போக்கு இஸ்ரேலுக்குச் சார்பாக இருப்பதைப் பார்த்தீர்களா?
பதில் :-அதுதான் 'கழுகின்' நீதி.
☺️உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  'சபாஷ்'
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆
 
கேள்வி 10:-
இந்திய ஊசியா? சீன ஊசியா? ரஷ்ய ஊசியா? எது பெரிதும் சிறந்தது என்று ஒரு பட்டிமன்றம் நடத்தினால் நீங்கள் நடுவராய் இருப்பீர்களா?
பதில்:-
தாராளமாய் இருப்பேன்! இந்திய ஊசியை விட சீன ஊசி சிறந்தது என்று 
முதலில் சொல்வேன். பின்னர் சீன ஊசியை விட இந்திய ஊசி சிறந்தது என்பேன். 
அடுத்ததாக இவ்விரண்டினையும் விட ரஷ்ய ஊசி சிறந்ததென்பேன். 
முடிவாக மூன்று ஊசியும் சிறந்ததுதான் எனத் தீர்ப்பளிப்பேன். 
இன்றுவரை எந்த ஊசி சிறந்தது என்று எவராலும் உறுதியாய்ப் பதில் சொல்ல முடியாமல் இருப்பதால்
நான் முன்னுக்குப் பின் முரணாகச் சொல்லும் இந்தத் தீர்ப்பை 
இன்றைய நிலைமையில் எவராலும் மறுக்கமுடியாதாக்கும். எப்படி என் தீர்ப்பு. 

😝உலகநாதரின் ஒப்பீனியன்​: 📣 'வழக்கமான அவிச்ச வெண்டிக்காய்த் தீர்ப்புத்தான். இதுக்கும் காசு கேட்பாரோ?'
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆
 
 
ஹலோ... உங்களைத்தான்!.....
பாட்டையும் பாவத்தையும் மட்டும் இரசித்துவிட்டுப் போகாமல்,
நீங்களும் கச்சேரியில் இணைந்து கொண்டு,
சமூகம், தமிழ் மற்றும் சமயம் சார்ந்த உங்கள் கே
ள்விகளையும் அனுப்பி வையுங்கள்.
மின்னஞ்சல் முகவரி: mailuharam@gmail.com
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்