பாட்டும் நானே! பாவமும் நானே! பகுதி 21: -'கம்பவாரிதி' இலங்கை ஜெயராஜ்-

கேள்வி 01:-
தனது எதிரி நாடான சீனா, அயலிலுள்ள இலங்கையில் மெல்லமெல்ல ஆழமாய்க் கால் பதிப்பதை அறிந்தும் இந்தியா அமைதியாய்ப் பார்த்துக்கொண்டு இருப்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்:-
இலங்கை தன்னாதிக்கமுள்ள ஒரு சுதந்திர ஜனநாயக நாடு. 
அதற்குத் தனது வளர்ச்சிபற்றிச் சுதந்திரமாய் முடிவெடுக்கும் உரிமை உண்டு. 
இந்த உரிமையை உலகநாடுகள் அங்கீகரித்திருக்கின்றன. 
இந்நிலையில் இந்தியா இலங்கையின் முடிவுகளில் வெளிப்படையாய்த் தலையிட முடியாது. 
ஆனால் அது தனது பாதுகாப்பையும் புறந்தள்ளிவிட முடியாது.
'உனது சுதந்திரம் எனது மூக்குநுனிவரை தான்' என்ற தொடரை 
இந்தியா இலங்கைக்கு நினைவூட்டவேண்டிய காலம் இது என்றே நினைக்கிறேன். 
தற்போதைய இந்தியாவின் அமைதி ஆபத்தானது. 
இது புயலுக்கு முன்னால் வருகின்ற தாழமுக்கம் போன்றது என்றே தோன்றுகிறது.

😇உலகநாதரின் ஒப்பீனியன்​: 📣  'சிந்தியா இந்தியா'

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆


கேள்வி 02:-

சொற்பொழிவுகளுக்குப் பெருந்தொகை காசுவாங்கித் தமிழை விற்றுப் பிழைக்கிறார் என்று, பலர் உங்கள்மேல் குற்றம் சாட்டுகிறார்களே?

பதில்:-

'கவிதை நமக்குத் தொழில்' என்றான் பாரதி. 
எனக்கும் பேச்சு தொழில்தான். 
சன்மானம் இல்லாமல் தொழில் செய்வது எப்படியாம்? 
நான் சொற்பொழிவிற்குப் பணம் வாங்கத் தொடங்கிய பின்தான் 
யாழ்ப்பாணம் எனது பேச்சைக் கேட்கவும், மதிக்கவும் தொடங்கியது. 
கேள்வி கேட்பவர்களின் முன் ஒரு விண்ணப்பம். 
எனது தனிச் செலவிற்கு ஒரு மாதத்திற்கு 
40,000 இல் இருந்து 50,000 ரூபா வரை தேவைப்படுகிறது. 
கம்பன் கழகத்தின் நாளாந்தச் செலவுக்கென மாதாந்தம் ஒரு இலட்சம் வரை தேவைப்படுகிறது. 
கேள்வி கேட்பவர்களில் யாராவது ஒருவர், 
இந்த ஒன்றரை இலட்சம் ரூபாவை மாதாமாதம் தர முன்வந்தால், 
அடுத்தநாளே பேச்சிற்குக் காசுவாங்குவதை நிறுத்திவிடுகிறேன். 
தமிழ்ப்பற்றுமிக்க இவர்களிடம் இந்த ஒப்பந்தத்திற்குத் தயாரா? என்று 
நீங்களே கேட்டுச் சொல்லுங்கள்.

☺️உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  'சபாஷ்! சரியானபோட்டி' 

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 03:-

விவசாய அமைச்சின் செயலாளர், சீனாவில் இருந்து செயற்கைஉரம் இறக்குமதி செய்வதுபற்றிய பிரச்சனையால்த்தான் தனது பதவியை இராஜினாமாச் செய்துவிட்டதாய்ப் பேசப்படுகிறதே?

பதில்:-

இக் கேள்விக்கு நான் எப்படிப் பதில் சொல்ல முடியும். 
ஆனால் ஒன்று தமக்கு உடன்பாடில்லாத ஒரு விஷயத்திற்கு, 
அரசிற்குப் பயந்து தலையாட்டாமல் ஒரு பெரும்பதவியை இராஜினாமாச் செய்த 
(அதற்காகச் செய்திருந்தால்) அவரது துணிவைப் பாராட்டாமல் இருக்க முடியாது. 
இந்தத் துணிவுள்ளவர்கள் எவரேனும் இன்று நம்மவர்களில் இருக்கிறார்களா?

🤗உலகநாதரின் ஒப்பீனியன்: 📣'மன்னவனும் நீயோ? வளநாடும் உன்னதோ?'

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 04:-

எரியும் கப்பல் மர்மம்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில் :-

ஏதோ மர்மம் இருக்கிறதென்று நினைக்கிறேன்!

🤪 உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 'இதைச் சொல்ல இவர் வேணுமாக்கும்....'

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆
கேள்வி 05:-
நம் நாட்டில் கடலாமைகள் எல்லாம் அநியாயமாக இறப்பது பற்றி?

பதில் :-

மனிதர்களின் இறப்புக்கள் பற்றியே கவலைப்படாத நாட்டின் அருகில் வந்தது, 
அவற்றின் குற்றம்.

🐢உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  அறி 'ஆமையின்' விளைவு. ஹி..ஹி..

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆
கேள்வி 06:-

இந்திய கொரோனாத் தடுப்பு ஊசியின் இரண்டாவது டோஸ் கிடைக்குமா? கிடைக்காதா?
பதில் :-
பரலோகத்தில் இருக்கும் பிதாவே இப்பாவிகளைக் காப்பாற்றுவீராக!

💉உலகநாதரின் ஒப்பீனியன்: 📣   'ஆமென்'
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 07:-
நம் நாட்டில் உரம் கிடைக்காமல் விவசாயிகள் வாடுகிறார்களே?

பதில் :-
விவசாயிகள் மட்டுமா வாடுகிறார்கள்?

🤦உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  'விவசாயமும் வாடுகின்றது என்கிறாரோ?' ஹி..ஹி..
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 08:-
இதை உங்களிடம் கேட்கக் கூடாதுதான், ஆனாலும் கேட்கிறேன். இப்போது சந்தைக்கு வரும்  மீன்களைச் சாப்பிடலாமா? கூடாதா?

பதில்:-

ஏன் கேட்கக் கூடாது? தாராளமாகக் கேட்கலாம். 
இப்போது சந்தைக்கு வரும் மீன்களை என்றில்லை 
எப்போதும் சந்தைக்குவரும் மீன்களையும் சாப்பிடக் கூடாது 
என்பதுதான் என் கட்சி.

🐠உலகநாதரின் ஒப்பீனியன்​: 📣'அவை மீனா? இல்லை வீணா? ஹி..ஹி..'

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 09:-
நயினை நாகம்மாளின் திருவிழாவை நடத்துவதா? இல்லையா? என்ற குழப்பத்தில் நிர்வாகத்தினர் இருந்தபோது ஆலயத்தில் நாகம் தரிசனம் தந்த அதிசயம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில் :-
நாத்திகர்கள் இதனைத் தற்செயற் சம்பவம் என்பார்கள். 
ஆத்திகர்கள் இதனை அன்னையின் அருட்காட்சி என்பார்கள். 
அவரவர் பார்வைக்கேற்பதான் முடிவு. 
இந்த உலகத்தில் நம் அறிவுக்கு அப்பாற்பட்ட 
எத்தனையோ அதிசயங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. 
அதனாற்றான் உலகின் எல்லா மொழி அகராதியிலும் 
நம் அறிவிற்கு அப்பாற்பட்ட விஷயத்தைக் குறிப்பதான 
அர்த்தந் தருவதாய் 'அதிசயம்' என்ற சொல் பதிவாகி இருக்கிறது. 
எல்லா உண்மைகளும் எல்லோருக்கும் விளங்குவதில்லை. 
இதனையும் அத்தகு உண்மைகளில் ஒன்றாகவே பார்க்கிறேன்.

🐍உலகநாதரின் ஒப்பீனியன்: 📣   'நாதர் முடிமேல் இருக்கும் நல்லபாம்பே!'
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 10:-
அடுத்த பிரதமர் 'நாமல்' தான் என்கிறார்களே?

பதில்:-

'நடக்கும் என்பார் நடக்காது. நடக்காது என்பார் நடந்துவிடும். 
கிடைக்கும் என்பார் கிடைக்காது. கிடைக்காது என்பார் கிடைத்துவிடும்.' 

பழைய பாட்டுத்தான் ஞாபகத்திற்கு வருகிறது. 
இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை இராமன் ஆண்டால் என்ன? 
இராவணன் ஆண்டால் என்ன? என்ற கதைதான். 
வந்தால் அவருக்கும் வாழ்த்துரைப்போம்!

😮உலகநாதரின் ஒப்பீனியன்​: 📣'எல்லாம் எப்பவோ முடிந்த காரியம்.'

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 11:-

தற்போதைக்குக் கொரோனா பற்றி உங்கள் மண்டையைக் குடையும் கேள்வி என்ன?

பதில்:-

அதையேன் கேட்கிறீர்கள். 
ஒவ்வொரு நாளும் தொலைக்காட்சியில் செய்தியைத் திறந்தால் 
இன்றைக்கு இத்தனைபேர் தொற்றுக்கு ஆளானார்கள் 
இன்றைக்கு இத்தனைபேர் மரணித்தார்கள் என்று பட்டியல் வாசிக்கிறார்கள். 
எனக்குள் எழுகின்ற கேள்வி என்னவென்றால், 
தொற்றியவர்களுக்குள்ளும் இறந்தவர்களுக்குள்ளும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களும் 
அடங்கியிருக்கிறார்களா, இல்லையா? என்பதேயாம். 
அடங்கியிருக்கிறார்கள் என்றால், 
அவர்கள் ஒரு ஊசியை மட்டும் போட்டவர்களா, 
இரண்டு ஊசியும் போட்டவர்களா? என்ற கேள்விக்கும், 
அவர்கள் போட்டுக் கொண்டது எந்த ஊசி? என்ற கேள்விக்கும் 
விடைகாண மனம் துடிக்கின்றது. 
ஊடகக்காரர்கள் இதை உரியவர்களிடம் கேட்டு அறிவிக்கிறார்கள் இல்லை. 
இத்தனை சந்தேகமும் எதற்காக என்கிறீர்களா? வேறொன்றும் இல்லை, 
நான் 'கொவிட்ஷீல்' ஒரு ஊசி மட்டும் போட்டுவிட்டு இருக்கிறேன். 
அதனால்த்தான் ஐயா இத்தனை கேள்விகளும்.

😷உலகநாதரின் ஒப்பீனியன்​: 📣 'சுயநல வாரிதியார்.'

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

ஹலோ... உங்களைத்தான்!.....
பாட்டையும் பாவத்தையும் மட்டும் இரசித்துவிட்டுப் போகாமல்,
நீங்களும் கச்சேரியில் இணைந்து கொண்டு,
சமூகம், தமிழ் மற்றும் சமயம் சார்ந்த உங்கள் கே
ள்விகளையும் அனுப்பி வையுங்கள்.
மின்னஞ்சல் முகவரி: mailuharam@gmail.com

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்