பாட்டும் நானே! பாவமும் நானே! பகுதி 22: -'கம்பவாரிதி' இலங்கை ஜெயராஜ்-

கேள்வி 01:-
சித்தார்த்தனும் அடைக்கலநாதனும் மீண்டும் 'குமுறத்' தொடங்கி இருக்கிறார்களே. கவனித்தீர்களா?

பதில்:-
'பிளீஸ்' இனிமேல் இந்தக் கேள்வியைக் கேட்டு எனது நேரத்தை வீணடிக்காதீர்கள். 
திரும்பத் திரும்ப ஒரே பதிலைச் சொல்லிச் சொல்லி எனக்கு அலுத்தே போய்விட்டது. 
இவர்களை 'குருவிச்சைகள்' என்று சம்பந்தனார் நினைக்கிறார்.  
அதனால் கட்சிமரத்தில் ஓர் அளவிற்கு மேல் இவர்களை அவர் படர விடமாட்டார். 
இவர்களுக்கும் இதைவிட வசதியாய்ப்படர 
வேறிடம் கிடைக்காது என்று தெளிவாய்த் தெரியும். 
அதனால், இப்படியே 'குழறிக் குழறிக்' கொண்டு இவர்கள் இருக்க வேண்டியதுதான். 
தங்களுக்கான சுதந்திரத்தையே பெற முடியாத இவர்கள்தான், 
இனத்திற்கான சுதந்திரத்தைப் பெறப்போகிறார்களாம்!

😡உலகநாதரின் ஒப்பீனியன்​: 📣 'என்னோடு நீ வந்து மோதாதே, உப்புக்கல் வைரக்கல் ஆகாதே' - சம்பந்தரின் 'மைண்ட் வொய்ஸ்'

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 02:-

எரிபொருள் விலையேற்றத்திற்காக, எரிசக்தி அமைச்சர் உதயகம்மன்பிலவை இராஜினாமாச் செய்யும்படி பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சாகரகாரியவாசம் திடீரெனக் கேட்டுக்கொள்ள, அமைச்சரோ ஜனாதிபதியினதும், பிரதமரினதும் ஆலோசனைப்படிதான் அந்த விலையேற்றத்தைச் செய்ததாகச் சொல்கிறார். இப்போது இராஜினாமாச் செய்யவேண்டியது அமைச்சரா? அல்லது ஜனாதிபதியும் பிரதமருமா? முடிந்தால் சரியான பதிலைச் சொல்லும் பார்ப்போம்! 

பதில்:-

வேதாளத்திற்கு மட்டும் இக்கேள்வி தெரிந்திருந்தால், 
அதனை விக்கிரமாதித்தனிடம் கேட்டுப் பதில் சொல்ல முடியாமல் பண்ணி, 
மீண்டும் அது முருங்கைமரத்தில் ஏறியிருக்கும். 
நமது அரசும் அரசைச் சார்ந்த கட்சிகளும் குழப்பத்தின் உச்சியில் இருப்பதாய்த் தோன்றுகிறது.
என்னென்னவோ கனவுகளோடு ஆட்சியைப் பிடித்தார்கள். 
இன்றைக்கு அந்தக் கனவுகள் எல்லாம் ஒவ்வொன்றாய் இடிந்து விழத் தொடங்கியிருக்கின்றன.
இன்றைய நிலையில் 'கரடியை நான் விடத் தயார் கரடிதான் என்னைவிடுகுதில்லை' 
என்ற கதைதான் நடக்குமாற்போல் தெரிகிறது. 
சுருங்கச் சொன்னால், அத்திவாரம் ஆட்டம் காணத்தொடங்கியிருக்கிறது என்பதுதான் 
முடிவான பதிலாம். 
'அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்' என்று 
பௌத்தத் துறவி சும்மாவா சொல்லியிருப்பார்?

😜உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' - கிழவியும் கெட்டிக்காரிதானுங்கோவ்வ்வ்

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 03:-
தமிழர்பிரச்சனைத் தீர்வுபற்றிப் பேச, திடீர் எனச் சம்பந்தரை  ஜனாதிபதி அழைத்திருக்கிறாரே?

பதில்:-

சில பெண்களுக்குப் புளிமாங்காய் என்றால் பிடிக்கவே பிடிக்காது. 
பிள்ளைத்தாச்சியானால்  அதே மாங்காய் ஏனோ அவர்களுக்குப் பிடிக்கத் தொடங்கிவிடும்?
பிள்ளை பெற்றதும் மீண்டும் அம்மாங்காய் பிடிக்காமல் போய்விடும். 
நம் சிங்களத் தலைவர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். 
தமக்குப் பிரச்சினை என்று வந்தால்த்தான், 
அவர்கள் கண்களுக்குத் தமிழர் பிரச்சினை தெரியத் தொடங்குகிறது. 
தம் பிரச்சினை முடிந்ததும் மீண்டும் தமிழர் பிரச்சினையைக் 
'கிடப்பில்' போட்டு விடுகிறார்கள். 
சிங்களத்தலைவர்கள்தான் பிள்ளைத்தாச்சிகள். 
நம் தமிழ்த்தலைவர்கள்தான் மாங்காய்கள். 
இஸ்டப்படி கையாளவும் விடவும் சடப்பொருளான மாங்காய் இடம் கொடுக்கலாம்.
அறிவுள்ள (?) நம் தலைவர்கள் இடம் கொடுக்கலாமா?

🥭உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 "மாங்காய்களா? மாங்காய் மடையர்களா? 'ச்சொரி ச்சொரி' சும்மா சொல்லிப் பாத்தனான்"

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 04:-
அறம். அறம் என்று வாய்கிழியப் பேசும் உங்களிடம் ஒன்றைக் கேட்க வேண்டி இருக்கிறது? இலட்சக்கணக்கானவர்களை வக்கிரமாகக் கொன்று ஊழிக்கூத்தாடிய உகண்டாவின் முன்னாள் ஜனாதிபதி 'இடிஅமீன்', சவுதிஅரேபியாவில் கடைசிவரை எல்லாச் சுகங்களையும் அனுபவித்து இறந்தான். சத்தியத்தை உலகிற்குப் பறைசாற்றி, அகிம்சையைக் கடைசிவரை கடைப்பிடித்து வாழ்ந்த, மகாத்மா காந்தியோ சுடப்பட்டு துடிதுடித்து இறந்தார். இதற்குப் பிறகும் அறம்  என்று பேசுவதால் என்ன பயன் ?

பதில் :-

உங்கள் கேள்விக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, 
வள்ளுவன் என்கின்ற எங்களது முப்பாட்டக்கிழவர் பதில் சொல்லிவிட்டுப் போய் விட்டார். 
'அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப்படும்' 
என்பதே அவர் தந்த பதிலாம். 
அவரது பதிலைக் கொஞ்சம் விளக்கமாய்ச் சொல்கிறேன். 
நன்மையையோ, தீமையையோ செய்த ஒருவன், 
தான் செய்த அதே அளவான நன்மையையும் தீமையையும் 
அனுபவித்தே ஆக வேண்டும் என்பதே, நமது முன்னோர் கூறிய விதிக் கொள்கை. 
அந்த அனுபவிப்பு, குறித்த ஒரே பிறவியில் நடக்க வேண்டும் என்பதில்லையாம். 
செய்த பாவ புண்ணியத்திற்கு ஏற்ற பலன்களை
ஏதோ ஒரு பிறவியில் அவ்வுயிர் அனுபவித்தே ஆகும் என்கிறார்கள் அவர்கள். 
செய்த பாவ புண்ணியத்திற்கு அந்தந்த பிறவியிலேயே 
பலன் கிடைக்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோம். 
அதனால்தான் உங்களிடம் இந்தக் கேள்வி எழுந்தது. 
மேற்சொன்ன உண்மையைத் தெளிவுற உணர்ந்த வள்ளுவர், 
தீயவன் ஒருவனுக்கு நல்வாழ்வும், நல்லவன் ஒருவனுக்குக் கேடும் விளைகையில், 
இது இவர்களின் விதியால் நடந்தது என, உயர்ந்தவர்கள் நினைப்பார்கள் என்கிறார். 
'பேஸ்புக்' என்றும் 'யூடியூப்' என்றும் தேவையில்லாதவற்றுக்கெல்லாம் 
அதிக நேரம் செலவழிக்கும் நீங்கள் நம் வள்ளுவக் கிழவரையும் கொஞ்சம் படித்துப் பார்க்கலாமே! 

😆 உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 'தற்ஸ் ரூ' காமத்துப்பாலும் இருக்கிறதால் படிக்கலாம்தான். ஹி ...   ஹி.... 

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆
கேள்வி 05:-
காமமும் காதலும் இல்லாமல் மனிதனால் வாழ முடியுமா?

பதில் :-
மனிதனால் மட்டும் என்று இல்லை 
உயிருள்ள எந்த ஜீவராசிக்கும் அது முடியாத காரியம் என்பது திண்ணம். 

🤭உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  வாரிதியார் ஆழம் தெரியாமல் காலை வி..ட்...டு...ட்...டா..ர்!

 

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆
கேள்வி 06:-
'அமெரிக்க' ஜனாதிபதியும் 'ரஷ்ய' ஜனாதிபதியும் அண்மையில் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியாய் முடிந்திருக்கிறதாமே? வல்லரசுகளின் இந்த இணக்கப்பாட்டால் உலகிற்கு ஏதாவது நன்மை நடக்குமா?

பதில் :-
உலகிற்கு நன்மை நடக்கிறதோ இல்லையோ? 
இவர்களை வழிமொழிந்து அணிசார்ந்து நின்ற நாடுகளுக்கு விழிபிதுங்கப் போகிறது. 
போட்டி போட்டுக் கொண்டிருந்த இரு பகையாளிகள் 
காரணமின்றித் திடீரென ஒன்று சேர்கிறார்கள் என்றால், 
மூன்றாவது சக்தி ஒன்று பலம்பெறத் தொடங்கிவிட்டது என்பது தான் அர்த்தம். 
அது எந்தச் சக்தி என்று இப்போதுதான் எல்லோருக்கும் தெரியத் தொடங்கியிருக்கிறது. 
தனது எதிரி நாட்டைக் கடந்து வந்து 
அதன் எல்லையில் இருக்கும் நமது சிறிய நாட்டில் கூட 
காலூன்றிவிட்ட அந்தச் சக்தியின் பலத்தை, 
நம்மால் ஓரளவு ஊகிக்கமுடிகிறது. 
இந்த உண்மை தெரியாமல் நம்மவர்கள் வலியப் போய் 
அதன் பிடிக்குள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

🤔உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  'ஊழ்வினை உருத்து வந்து ஊட்டுகிறதோ?'
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 07:-
இந்த வாரத்தில் மீண்டும் கொரோனாக்கிருமி புதிய வடிவெடுத்திருக்கிறதாமே? இந்த உலகம் தப்பிப் பிழைக்குமா?

பதில் :-
இந்த, மாறுபடும் சூரனை வதைக்குமுகம் வருமா? 
எல்லோர் மனதிலும் இப்போது விஸ்வரூபம் எடுத்திருக்கும் கேள்வி இது. 
நிச்சயம் வரும் என்பதே பதிலாம். 
எப்படித்தெரியும் என்கிறீர்களா? 
இருள் வந்தால் ஒளியும், மாரி வந்தால் கோடையும் வருவது தவிர்க்க முடியாத இயற்கை நியதி.
எனவே இதற்கும் முடிவு வரும். எப்போது வரும் என்று மட்டும் என்னிடம் கேட்காதீர்கள்!

🙏உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 'கூறும் அடியார்கள் வினை' தீருமா?'
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 08:-
என்ன ஐயா! உங்களது கம்பன் கழகத்தின் ஐஸ்வர்ய லக்ஷ்மி  கோவிலில் சுவாமிக்கு மக்களே பால் வார்க்கிறார்களாமே? அதை நமது சமயம் ஏற்றுக் கொள்ளுமா?   
பதில்:-

உங்கள் கேள்வி புரியவில்லை. 
இங்கே மக்கள் பால் வார்க்கிறார்கள் என்றால் 
மற்றைக் கோயில்களில் பால் வார்ப்பவர்கள் மக்களில்லையா? 
ஐயர்மார்களிடம் நீங்கள் வீணாய் அடி வாங்கப் போகிறீர்கள். 
உங்களுக்கு ஒன்று தெரியுமா? நமது சைவசமய புராணங்களில், மக்கள் மட்டுமல்ல 
விலங்குகளும் லிங்கத்திற்குப் பால்வார்த்தும் பூசைசெய்தும் 
உயர்வடைந்திருப்பதாய்ப் சொல்லப்படுகிறது. 
அவற்றையும் வழிபடவிட்டால் என்ன என்றுதான் 
இப்போது நாங்கள் யோசித்துக் கொண்டிருக்கின்றோம். 
உங்களிற்கு ஏதாவதுவழி தெரிந்தால் சொல்லுங்களேன்! 
இவற்றை எல்லாம் சமயம் ஏற்றுக் கொள்கிறதோ இல்லையோ? 
இறைவன் நிச்சயம் ஏற்றுக் கொள்வான்.

🛕உலகநாதரின் ஒப்பீனியன்​: 📣அதுகளுக்கும் ரிக்கற் போடுவினம் போல. ஹி.....ஹி.... 

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

ஹலோ... உங்களைத்தான்!.....
பாட்டையும் பாவத்தையும் மட்டும் இரசித்துவிட்டுப் போகாமல்,
நீங்களும் கச்சேரியில் இணைந்து கொண்டு,
சமூகம், தமிழ் மற்றும் சமயம் சார்ந்த உங்கள் கே
ள்விகளையும் அனுப்பி வையுங்கள்.
மின்னஞ்சல் முகவரி: mailuharam@gmail.com

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்