பாட்டும் நானே! பாவமும் நானே! பகுதி 24: -'கம்பவாரிதி' இலங்கை ஜெயராஜ்-

கேள்வி 01:- என்ன? விஷேசமொன்றும் இல்லாமல் திடீரென ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறாரே? 

பதில்:-

விஷேசமில்லை என்று யார் சொன்னது? 
ஆட்சிப் படகிற்குள், 
பயணக்கட்டுப்பாட்டு எதிர்ப்பு,
உரமின்மை எதிர்ப்பு, கடல்மாசு எதிர்ப்பு, சீன எதிர்ப்பு, 
எரிபொருள் விலையேற்ற எதிர்ப்பு, உட்கட்சிப்பூசல் என 
பலபக்கங்களிலும் ஓட்டைகள் விழத் தொடங்கிவிட்டன. 
அவற்றை அடைப்பதற்கு அவரது குடும்பக் கரங்களும் 
இராணுவக் கரங்களும் போதாது என்று தெரிவதால்,
மீண்டும் மக்கள் கரங்களின் துணை தேடவேண்டிய அவசியம் வந்துவிட்டது. 
அதுதான் ஜனாதிபதியின் திடீர் உரையின் காரணம் என்று நினைக்கிறேன். 
இம்முறையும் மக்கள் ஏமாறுவார்கள் என்று தோன்றவில்லை. 

😝உலகநாதரின் ஒப்பீனியன்​: 📣 'சோழியன் குடுமி சும்மா ஆடாதுங்கோ'

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 02:-
கடவுளின் மேலேயே கோபம் வருகிறது. ஒரு சின்னக் கிருமி இத்தனை இலட்சம் பேரைக் கொல்வதைப் பார்த்துக் கொண்டு அவர் பேசாமல் இருப்பது எப்படி நியாயமாகும்?

பதில்:-

உங்கள் கேள்விக்குப் பிறகு வருகிறேன். 
அண்மையில் ஒரு செய்தி படித்தேன். 
சுவீடனில் இயங்கும் அமைதிக்கான ளடநசi என்ற அமைப்பு 
ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டிருக்கிறது.
அவ்வறிக்கையின்படி இன்று உலகில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட அணுகுண்டுகள் 
எந்த நிமிடமும் வெடிக்கத் தயாரான நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றனவாம். 
இதைத் தவிர 3825 அணு ஏவுகணைகளும் 
கண்டம் விட்டுக் கண்டம் பாய எப்போதும் தயார் நிலையில் இருக்கின்றனவாம். 
சென்ற ஆண்டைவிட இவ் ஏவுகணைகளின் தொகை 105 ஆல் அதிகரித்திருக்கிறதாம். 
சோவியத், அமெரிக்க பனிப்போரின்போது உருவாக்கப்பட்ட 
இவ் அணுகுண்டுப் போர் முறை இப்பொழுது பன்மடங்காய் அதிகரித்து 
உலகத்தை ஆபத்தின் விளிம்புக்குக் கொண்டு வந்திருப்பதாய் அவ் அறிக்கை கூறுகிறது. 
இவ் அறிக்கையை வெளியிட்ட அவ் அமைப்பின் அதிகாரி ஒருவர், 
இன்றைய நிலையில் அணு யுத்தம் ஒன்று தொடங்கினால், 
இந்தப் பூமி இருக்குமா? என்பது சந்தேகம் தான் என்று கூறியுள்ளார்.
சரி, இனி உங்கள் கேள்விக்கு வருவோம். 
மனிதனே மனிதனை அழிக்க இத்தனை அநியாயங்களைச் செய்து
பாடுபட்டுக் கொண்டிருக்கிறபொழுது, 
அவனை அடக்க இயற்கையை ஏவுவதைத் தவிர
கடவுளுக்கு வேறு என்ன வழிதான் இருக்கிறது? 
நீங்களே சொல்லுங்களேன்!

😟உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  'கொரோனா பயப்பிடுத்திறது போதாதெண்டு இவர் வேற பயப்பிடுத்திறார்.'

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 03:-
நாட்டுமக்களுக்கான ஜனாதிபதியின் உரையில் தமிழ்மக்கள் பிரச்சனைபற்றி ஒன்றும் பேசவில்லையே?

பதில்:-

தமிழ்மக்களால் வந்த உலகப் பிரச்சனை இரண்டாம் பட்சமாகி 
சிங்கள மக்களால் கிளம்பியிருக்கும் உள்ளூர்ப் பிரச்சனை 
முதலிடத்தைப் பிடித்துவிட்டது. 
அதனால்த்தான் அதற்கு முக்கியம் தரும் அவசரத்தில் 
இதனை மறந்திருப்பார் போல.

👎உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  'எல்லாம் இருகோட்டுத் தத்துவம் தான்.'

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 04:-
'பொசனை' முன்னிட்டு விடுதலை செய்யப்பட்ட கைதிகளின் பட்டியலில் இவ்வளவு நாளும் இல்லாமல் தமிழ் அரசியல் கைதிகளின் பெயர்களும் இணைக்கப்பட்டுள்ளதே! திருந்தத் தொடங்கிவிட்டார்களா?

பதில் :-

'கங்கைக்குள் காகம் கவிண்டு கவிண்டு மூழ்கினாலும் அன்னமாகாது' 
என்று சும்மாவா சொன்னார்கள். 
இந்தக் கருணை எல்லாம் ஐரோப்பிய ஒன்றியத்தின் 
'புளு பிளஸ்' வரிச்சலுகை அழுத்தத்தால் விளைந்தது தானே தவிர 
வேறொன்றும் இல்லை என்கிறார்கள்.

🦊 உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 'ஓநாயின் அழுகை!'

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆
கேள்வி 05:-
பாராளுமன்றத்தில் நாமல் அவர்கள், தமிழ் அரசியல் சிறைக்கைதிகள் பல ஆண்டுகளாய்ச் சிறைக்குள் வாடுவதாகவும், அநியாயமாகச் சிறைக்குள் அகப்பட்டிருக்கும் துன்பத்தை நல்லாட்சிக் காலத்தில் நானும் அறிந்துஅகொண்டேன் எனவும் பேசி, அவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததைக் கேட்டீர்களா?

பதில் :-

கேட்டுச் சிலிர்த்தேன். 
பேரினத்தின் புதிய தலைமுறைத் தலைமைகள் 
உண்மையாய் இங்ஙனம் மனமாற்றம் கொண்டால் 
நாடு விரைவில் உருப்பட்டுவிடும். 
சிலகாலத்திற்கு முன்பு 
'சிறைக்குள் தமிழ் அரசியல் கைதிகளே இல்லை' என்று சொன்ன 
பெரியமனுசன் தன் முகத்தை எங்கே கொண்டுபோய் வைத்திருக்கிறாரோ தெரியவில்லை. 
நல்லாட்சிக் காலத்தில், சிறைக்குள் குற்றம் செய்யாமல் தான் வாடியது பற்றி நாமல் பேசியதும், 
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா எழுந்து, 
நாமலின் கருத்தை வழிமொழிவதாய்ச் சொல்லி, 
முன்பு இவர்கள் தன்னை அநியாயமாய் உள்ளே வைத்த கதையைச் சொன்னதுதான் 
அன்றைய நிகழ்வின் உச்சம்!

🥱உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  'அப்பாவின் அடிக்கு மகன் போட்ட மருந்து.'

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆
கேள்வி 06:-
தமிழ்க் கட்சிகளை ஒன்றுபடுத்த அடைக்கலநாதன் அவர்கள் எடுத்த முயற்சி பிசுபிசுத்துப் போய்விட்டதே?

பதில் :-

கூட்டமைப்புக்குள் தங்களுக்கான மதிப்பு 
நாளுக்குநாள் குறைந்து வருவதைக் கண்டு, 
ஏதும் செய்யமுடியாமல் மனம் வருந்தி, 
அதற்கான மாற்று மருந்தைக் கண்டுபிடித்தார் அடைக்கலநாதன்.
அம்மருந்துதான் கட்சிகளின் இணைப்பு முயற்சி. 
அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை ஒழுங்கு செய்து 
மற்றவர்களின் இணைப்பில் தங்களின் இருப்பை உறுதி செய்ய முயற்சித்தார் அவர். 
மற்றவர்கள், இந்த இணைப்பால் தங்கள் கட்சிகளுக்கு, 
மக்கள் மத்தியில் இன்று இருக்கும் ஓரளவான ஆதரவும் 
குறைந்துவிடும் என்று அஞ்சி, 
'பிச்சை வேண்டாம் நாயைப் பிடி' என மெல்ல நழுவிவிட்டார்கள். 
அதனால் அடைக்கலநாதனின் நிலை 'திரிசங்கு சொர்க்கமாகி' இருக்கிறது.

🙆🏻உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  'அடைக்கலத்தைத் தவிர வேறு வழியில்லை போல...'
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 07:-
இலங்கைக் கடற்பரப்பில் இன்னொரு கப்பலும் எரியப் பார்த்ததே? 

பதில் :-

கடவுள்தான் காத்தார். 
இல்லாவிட்டால் கப்பல் மூழ்கியிருக்குமோ என்னமோ?
இன்றைய ஆட்சி மூழ்கியிருக்கும்!

🚢🌊உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 'கப்பல் தப்பியதா? கடல் தப்பியதா?'
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 08:-
உரத்தட்டுப்பாடு பிரச்சினைபற்றி என்ன நினைக்கிறீர்கள்?  
பதில்:-

நோக்கம் சரி என்றே படுகிறது. 
காலமும் வலியும் அறியாமல் செயல்படுத்தியதில்த்தான் 
தவறு இருப்பதாய் நினைக்கிறேன். 
இந்த ஆண்டுக்கான உரம் கையிருப்பில் இருப்பதாய் நினைத்;ததாகவும் 
அதில் தவறு நேர்ந்துவிட்டதாகவும் கூறி 
அமைச்சர் அதற்காக விவசாயிகளிடம் மன்னிப்புக் கோருகிறார். 
அரச நிர்வாக ஓட்டைகள் வரவரப் பெரிதாவதையே
அமைச்சரின் மன்னிப்பு எடுத்துக் காட்டுகிறது. 
உண்மையில் இயற்கை உரம் மனிதருக்கும் மண்ணுக்கும் நல்லதுதான். 
(நான் சீனர்களின் கழிவைச் சொல்லவில்லை). 
அதை நம்பித்தான் முன்பு நம் விவசாயிகள் வாழ்ந்;தார்கள். 
அதனால் இலை, குழைகளுக்காக மரங்களையும்,
எருவுக்காக ஆடு, மாடுகளையும் வளர்த்தார்கள். 
அம் முயற்சிகளால் வளிமண்டலம் சுத்தமானது. 
விலங்குகளால் கிடைக்கும் பால் முதலிய பயனும் மக்களைப் பலப்படுத்தியது. 
விலங்குகளின் எருக்களால் பயிர்கள் வளர்ந்தன. 
பயிர்களின் தழைகளால் விலங்குகள் வளர்ந்தன. 
இன்று செயற்கை உரம் வந்ததும், 
விவசாயிகளிடம் மரங்களை வளர்க்கும் ஆர்வமும் 
ஆடு, மாடுகளை வளர்க்கும் ஆர்வமும் குறைந்துவிட்டது. 
இருக்கும் மரங்களின் இலை தழைகளையும்
விவசாயிகள் சேமித்துப் பயன்படுத்த நினைப்பதில்லை. 
ஆடு, மாடுகளை வளர்க்காததால் நெல்லிலிருந்து 
கிடைக்கும் வைக்கோலை எல்லாம் வயலிலேயே போட்டுக் கொளுத்துகிறார்கள்.
அதனால் மேலும் வளி மாசடைகிறது. 
உடன் பயன்தரும் செயற்கை உரங்களால் நிலத்தின் 
அமில, காரத் தன்மைகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. 
இதனால் விரைவில் நம் நிலங்கள் எல்லாம் 'மலடாய்ப்' போகப் போகின்றன. 
நம் விவசாயிகளும், மண்ணைப் பற்றியும் மக்களைப் பற்றியும் நினைக்காமல், 
விரைவில் கிடைக்கக்கூடிய அதிக இலாபம் பற்றியே நினைக்கிறார்கள். 
அதனால் இயற்கை உர முறை மீண்டும் வருவது மக்களுக்கும் மண்ணுக்கும் நல்லதேயாம். 
இயற்கை உரப்பாவனையில், 
ஓராண்டில் இடப்படும் இயற்கை உரம் மண்ணை வளம்படுத்த 
இரண்டாண்டுகளாவது செல்லும். 
அந்த இரண்டாண்டு கால விளைச்சல் பற்றி அரசு திட்டமிட்டிருக்க வேண்டும். 
வேறு திட்டங்கள் கைவசம் இல்லையெனின், 
அந்த இரண்டாண்டுகளுக்கு விவசாயிகளுக்கு 
மானியங்கள் வழங்கும் ஆயத்தமாவது செய்திருக்க வேண்டும். 
இவை எதனையும் பற்றிச் சிந்திக்காமல் 
இத்திட்டத்தைக் கொண்டு வந்ததுதான்  தவறு.
மற்றும்படிக்கு இயற்கை உரப் பாவனைத் திட்டத்திற்கு நான் ஆதரவளிக்கிறேன்.

🌱உலகநாதரின் ஒப்பீனியன்​: 📣'சுப்பர்' - விவசாய வாரிதியார்.

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

ஹலோ... உங்களைத்தான்!.....
பாட்டையும் பாவத்தையும் மட்டும் இரசித்துவிட்டுப் போகாமல்,
நீங்களும் கச்சேரியில் இணைந்து கொண்டு,
சமூகம், தமிழ் மற்றும் சமயம் சார்ந்த உங்கள் கே
ள்விகளையும் அனுப்பி வையுங்கள்.
மின்னஞ்சல் முகவரி: mailuharam@gmail.com

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்