பாட்டும் நானே! பாவமும் நானே! பகுதி 25: -'கம்பவாரிதி' இலங்கை ஜெயராஜ்-

கேள்வி 01:- உங்களைப் பலபேர் கண்டபடி திட்டவும் செய்கிறார்களே? அதைப் பார்க்கும் போதும் நீங்கள் கவலைப்படமாட்டீர்களா?​ 

பதில்:-

கவலையா? சந்தோஷமல்லவா பட வேண்டும். 
என்னைத் திட்டுகிறார்கள் என்றால், 
சமூக நன்மைக்காக எழுத்தாலும் பேச்சாலும் நான் கொடுக்கும் மருந்துகள், 
வேலை செய்யத் தொடங்கிவிட்டது என்றல்லவா அர்த்தம். 
அதனால்த்தான் அத்திட்டுக்களைக் கேட்டு நான் சந்தோஷப்படுகிறேன். 
ஒரு சிலபேர் எனதும் கழகத்தினதும் வளர்ச்சி கண்டு, 
பொறாமையாலும் என்னைத் திட்டுகிறார்கள். 
அது அவர்களின் கீழ்மையின் வெளிப்பாடு. 
அதற்காக அவர்கள் கவலைப்படவேண்டுமே தவிர,
நான் ஏன் கவலைப்பட வேண்டும்? 
ஒருவேளை உண்மையிலேயே நான் ஏதாவது பிழை செய்து,
அதற்காக யாரேனும் என்னைத் திட்;டுகிறார்கள் என்றால், 
அவர்கள் சுட்டிக்காட்டும் பிழைகளை உடனேயே திருத்திக்கொள்வதோடு, 
எனது பிழையை அக்கறையோடு இப்படிச் சுட்டிக்காட்டுகிறார்களே என, 
அதற்கும் மகிழ்வேன். 
மொத்தத்தில் மகிழ்ச்சியைத் தவிர கவலை என்பதேயில்லை.

😇உலகநாதரின் ஒப்பீனியன்​: 📣 'வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா!'

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 02:-
'பஸில்' பாராளுமன்றத்திற்குள் நுழைந்துவிட்டதை வைத்து, இனி நாட்டின் பிரச்சனைகளும் கட்சியின் பிரச்சனைகளும் நீங்கிவிடும் என, அவரது கட்சிக்காரர்கள் கொண்டாடுகிறார்களே. அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்:-

அமெரிக்காவிலிருந்து மந்திரக்கோல் எதையாவது வாங்கி வந்திருக்கிறாரோ என்னவோ? 
இத்தனை பேரும் சேர்ந்து தீர்க்கமுடியாத பிரச்சனைகளை,
தனியொருவராய் அவர் எப்படித் தீர்க்கப்போகிறார் என்பது கேள்வியாகவே இருக்கிறது. 
ஒருவேளை அப்படிப் பிரச்சனைகளை அவர் தீர்த்துவிட்டால்,
  நிச்சயம் அவரது ஆற்றலைப் பாராட்டத்தான் வேண்டும். 
(தமிழர் பிரச்சனை உட்பட). 
ஒரே ஒரு கேள்வி மட்டும் மனதை உறுத்துகிறது. 
'பஸிலு'க்கான இந்தப் பாராட்டில், 
கையாலாகாதவர் எனும் ஜனாதிபதிக்கான இகழ்ச்சியும் கலந்திருப்பது, 
கட்சிக்கார்களுக்குத் தெரியாமல் போனது எப்படி?

😉உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 'உன்னால் முடியும் தம்பி தம்பி! இந்த உலகம் இருக்கு உன்னை நம்பி!'

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 03:-
சக்தி தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில், சம்பந்தனுக்குப் பிறகு கூட்டமைப்புக்கு நீங்கள் தலைமையேற்பீர்களா? என்று கேட்கப்பட்டபோது, ஆம்!, இல்லை! என்று உறுதியாய்ப் பதில் சொல்லாமல் சம்பந்தன் தற்போது நல்ல உடல், உள ஆரோக்கியத்தோடு இருக்கிறார் என்றபடியால் அதுபற்றி இப்போது சிந்திக்கத் தேவையில்லை என்று சித்தார்த்தன் பதிலுரைத்ததை கவனித்தீர்களா? அவர் என்னதான் சொல்ல வருகிறார்?

பதில்:-

ஆசை யாரைத்தான் விட்டது? 
அவர், தலைவர் பதவியை ஏற்பது ஒருபுறம் இருக்கட்டும்.
அவரைத் தமிழர்களும் கூட்டுக் கட்சியினரும் தலைவராய் ஏற்பார்களா? 
என்பதுதான் முக்கிய கேள்வி. 
தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு,
இல்லை என்று அவர் பதில் சொல்லியிருந்தால் கௌரவமாய் இருந்திருக்கும். 
அதிக வாக்குகளைப் பெற்று வந்தவரில் ஒருவரான அவர், 
ஏன் தலைமை ஏற்கக் கூடாது என்று சிலர் கேட்கலாம். 
இங்கே ஒரு உண்மை மறைந்திருக்கிறது.
அவர் பெற்ற வாக்குகளில் கணிசமான தொகை மறைந்த அவரது தந்தையாரான, 
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தருமலிங்கம் சேர்த்து வைத்தது என்பதை,
நாம் மறந்துபோகக் கூடாது

🐐உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  'ஆசை இருக்கு அரசாள அம்சம் இருக்கு ஆடு மேய்க்க' ச்சும்மா.. ச்சும்மா. . ஹி.. ஹி..

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 04:-
பொய் சொல்வதற்கா, உண்மை சொல்வதற்கா அதிக ஆற்றல் வேண்டும்?

பதில் :-

பொய் சொல்வதற்குத்தான் அதிக ஆற்றல் வேண்டும் என்று நினைக்கிறேன். 
நடந்ததை அப்படியே சொல்வது உண்மை. 
இல்லாததை இட்டுக் கட்டிச் சொல்வது பொய். 
உள்ளதை உள்ளபடி சொல்வதற்கு ஆற்றல் ஒன்றும் தேவையில்லை. 
உள்ளதை மாற்றிச் சொல்லத்தான் நிறைய ஞாபகசக்தி வேண்டும். 
ஒருதரம் சொன்ன பொய்யைத் தொடரந்து ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும் அல்லவா?
இல்லாவிட்டால் ஒரே நபரிடம் முன் ஒன்றும் பின் ஒன்றுமாகச் சொல்லி,
மாட்டிக் கொள்ளவேண்டி வரும். 
முன்பு எனது ஏ.எல். பரீட்சை முடிவுகளை, 
ஒருவரிடம் பொய்யாய்ச் சொல்லித் தப்பித்தேன். 
பின்னர் இரண்டு மாதம் கழித்து அதே நபர் மீண்டும் எனது பரீட்சை முடிவைக் கேட்க, 
முன் சொன்னதை மறந்து வேறு பதில் சொல்லி மாட்டிக்கொண்டு அசடு வழிந்தேன். 
அந்த அனுபவத்தை வைத்துத்தான் இப்பதிலைச் சொல்கிறேன். 

👏 உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  'பொய்மையும் வாய்மை இடத்த'- வள்ளுவக் கிழவனாருக்கு தாங்ஸூங்கோ!

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆
கேள்வி 05:-
பிக்குகளுக்கும் அரசுக்குமான மோதல்கள் வரவர அதிகமாகிறதே! அண்மையில் பிக்கு ஒருவர் அரசுக்குக் 'கெடு' வைத்துப் பேசியதைக் கேட்டீர்களா? 

பதில் :-

என்னத்தைச் சொல்ல? 
இலங்கையில் பல நூற்றாண்டுகளாய்,
அரசை ஆட்டிப்படைக்கும் அதிகாரத்துடன்தான், 
மகா சங்கத்துப் பௌத்த பிக்குகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. 
'கல்கி' கூட தனது 'பொன்னியின் செல்வன்' கதையில், 
இலங்கையைக் கைப்பற்றிய சோழ அரசர்கள் இங்கு நிர்வாகம் நடத்துவது பற்றி, 
மகாசங்கங்களின் பௌத்த துறவியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாய் எழுதியிருக்கிறார்.
அரசுகளை ஆட்டிப்படைக்கும் இந்த சக்தியை,
எந்த இடத்தில்? எப்படி? யாரால்? அவர்கள் தக்;க வைத்திருக்கிறார்கள் என்பது,
  இன்றுவரை யாருக்கும் விளங்காத மர்மச் சூத்திரமாய்த்தான் இருக்கிறது. 
ஆனால் ஒன்று, பௌத்தம், சிங்களம் என்ற இரண்டிற்கும் அவர்கள் முக்கியத்துவம் கொடுத்தாலும்,
நாட்டை எவருக்கும் விட்டுக்கொடுக்க அவர்கள் அனுமதிப்பதில்லை என்பது மட்டும் உண்மை. 

🤦உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 'துறந்தார் பெருமை'

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆
கேள்வி 06:-
அண்மையில் எங்களது கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலயக் கலைவிழாவுக்குப் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட பிரமுகர், மாணவர்கள் விரைவாகச் சீன மொழியைக் கற்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார். சிங்கள அரசுடன் கைகோர்த்து நிற்கும் சீனர்களின் மொழியை நாம் கற்கத்தான் வேண்டுமா?

பதில் :-

இது போன்ற முட்டாள்த்தனமான கேள்விகளை நிறுத்தினால்த்தான்,
எங்கள் தமிழினம் உருப்படும்.
மொழி, உணர்வுகளைப் பரிமாறும் ஒரு கருவிமட்டும்தான். 
அதை வைத்து அரசியல் செய்யத் தொடங்கியதால்த்தான்,
எங்கள் நாடு நாசமாய்ப் போயிற்று. 
சிங்களத்தைக் கற்க மாட்டேன் என்று,
உணர்ச்சி வசப்பட்டு நாட்டைவிட்டு ஓடிய பலரும், 
இன்று, போன இடங்களில் எல்லாம் அந்தந்த நாட்டுப் பாஷைகளைப் படித்து,
'விளாசித்' தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். 
சிங்களத்தை நாமும், தமிழைச் சிங்களவர்களும் கற்றிருந்தால்,
ஒருவரையொருவர் விளங்கி ஒற்றுமையாய் இருந்திருக்கலாம். 
அரசியல்வாதிகளின் 'சுத்துமாத்துக்கள்' பயனற்றுப் போயிருக்கும்.
உங்களுக்குப் புத்தி சொன்ன அந்தப் பிரமுகரின் தீர்க்கதரிசனமான கருத்தை,
நான் ஆதரிக்கிறேன். 
வருங்காலத்தில் என்ன நடக்கப்போகிறதோ தெரியவில்லை. 
இன்றைய நிலையை வைத்துப் பார்த்தால் சீனா, தன் அதிகாரத்தை,
இலங்கை முழுவதுமாகப் பரவச் செய்யப்போவதில் எந்த ஐயமுமில்லை. 
இந்நிலையில் அம்மொழியை இப்போதே கற்று அதில் நாம் ஆட்சிபெற்றால்,
பொருளாதாரத்தில் மட்டுமன்றி அரசியலிலும் நாம் பலம் பெறலாம் என்பது உண்மையே.

🐉உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 'எவ்வது உறைவது உலகு உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு'- வள்ளுவத் தாத்தா மீண்டும் உங்களுக்கு ஒரு 'டாங்ஸ்'
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 07:-
மும்மூர்த்திகளும் பாராளுமன்றத்திற்குள் வந்துவிட்டார்கள். இனி என்ன? நாடு உருப்பட்டுவிடும் தானே. 

பதில் :-

இந்தக் கிண்டல் தானே வேண்டாமென்கிறது! 
நீங்கள் யாரைச் சொல்கிறீர்கள் என்று தெரிகிறது. 
மும்மூர்த்திகளின் வேலை படைப்பதும், 
படைத்தவற்றைக் காப்பதும், 
பின் அவற்றை அழிப்பதும் தான் என்று புராணங்கள் சொல்கின்றன.
இந்த உண்மை தெரியாமல்த்தான்,
மும்மூர்த்திகளாய் அவர்களை நீங்கள் வர்ணித்தீர்களா?
அல்லது தெரிந்தேதான் வர்ணித்தீர்களா? 
மும்மூர்த்திகள் மட்டுமல்ல 'பிள்ளை'யாரும்,
ஏலவே உள்ளிருப்பதை மறந்துவிட்டீர்களா?

🤞உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 'ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய்'
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 08:-
தமிழ்க்கட்சிகளை ஒன்றுபடுத்தப் போகிறார்களாமே? ஒன்றுபடும் என்று நினைக்கிறீர்களா? 
பதில்:-

ஒன்றுபட்டால் சந்தோஷம் தான்! 
அங்ஙனம் ஒன்றுபடவேண்டுமாயின், 
கட்சிப்பற்று, பதவிஆசை, நான் எனும் ஆணவம்,
எல்லாவற்றையும் துறந்து இன நன்மைக்கான தியாக மனநிலை உருவாக வேண்டும். 
எனக்கென்னவோ இப்போதைய நம் தலைவர்களிடம்,
அத்தகைய மனநிலை உருவாகும் என்று தோன்றவில்லை.

🙏உலகநாதரின் ஒப்பீனியன்​: 📣 'ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே! வேற்றுமையை வளர்ப்பதினாலே விளையும் தீமையே!'

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

ஹலோ... உங்களைத்தான்!.....
பாட்டையும் பாவத்தையும் மட்டும் இரசித்துவிட்டுப் போகாமல்,
நீங்களும் கச்சேரியில் இணைந்து கொண்டு,
சமூகம், தமிழ் மற்றும் சமயம் சார்ந்த உங்கள் கே
ள்விகளையும் அனுப்பி வையுங்கள்.
மின்னஞ்சல் முகவரி: mailuharam@gmail.com

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்