பாட்டும் நானே! பாவமும் நானே! பகுதி 27: -'கம்பவாரிதி' இலங்கை ஜெயராஜ்-

கேள்வி 01:- கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்கள் தனக்கு அடுத்து கட்சிக்குத் தலைமை ஏற்கப்போவது யார் என்று அடையாளம் காட்டாமல் இருக்கிறாரே, ஒரு ஜனநாயக அமைப்பு இங்ஙனம் செயல்படுவது சரியாகுமா? இதையெல்லாம் நீங்கள் கண்டிக்கமாட்டீர்களா?

பதில்:-

உங்களின் ஒரு கேள்வியிலிருந்து எனக்குப் பல கேள்விகள் உதயமாகின்றன. 
அவற்றைக் கீழே வரிசைப்படுத்துகிறேன்.
கூட்டமைப்பு ஜனநாயகம் பேணும் ஒரு கட்சிதானா? 
சம்பந்தர் வெளிப்படையாய் அடுத்த தலைவரை இனங்காட்டவில்லையே தவிர, மறைமுகமாய் இனங்காட்டாமல் இருக்கிறாரா? 
அடுத்த தலைவரைச் சம்பந்தர் இனங்காட்டினால் கூட்டமைப்பு, தொடர்ந்து கூட்டு அமைப்பாய்ச் செயற்படுமா?
சுயம் பேணத்தக்க, ஆளுமையும் துணிவுமுடைய ஒரு தலைவரை நியமிக்க உலக, பிராந்திய வல்லரசுச் சக்திகள் இடந்தருமா? 
கூடியிருக்கும் கட்சிகளுக்குப் பாராளுமன்றில் பேசவே அனுமதி வழங்கப்படாத நிலையில் அக்கட்சிகளிலிருந்து ஒருவரைத் தலைவராக்குதல் நடவாது என்பது திண்ணம். எனவே அதை விட்டுவிடலாம். தமிழரசுக்கட்சிக்குள்ளேனும் குறித்த ஒருவரைத் தலைவராக்க அங்கிருக்கும் மற்றவர்கள் இடந்தருவார்களா?
இக்கேள்விகளுக்கு விடைகாண்பது கடினம் என்றே நினைக்கிறேன். 
கடைசியாக நீங்கள் கேட்ட ஒன்றிற்குப் பதில் சொல்ல வேண்டும். 
அடுத்த தலைமையைத் தீர்மானிக்காத கூட்டமைப்பை,
ஏன் கண்டிக்கவில்லை என்று கேட்கிறீர்கள்? 
உங்களிடம் திரும்ப ஒன்றை நான் கேட்கவேண்டியிருக்கிறது. 
தமிழ்க்கட்சிகளின் தலைவர்களுக்குள் வேறு எந்தக் கட்சியின் தலைவர்தான்,
தனக்கு அடுத்த தலைவர் இவர்தான் என அறிவித்திருக்கிறார்? 
இதற்கு நீங்கள் பதில் சொன்னால் அதற்குப் பிறகு நான் சம்பந்தரைக் கண்டிக்கிறேன்.

😂உலகநாதரின் ஒப்பீனியன்​: 📣 'சும்மா இரு சொல் அற' என்ற அருணகிரியார் வாக்கே இன்று நம் சம்பந்தனாரின் கொள்கை ஆகும். பலர் பேசி வாழ்விழக்கிறார்கள். சம்பந்தர் பேசாமலே வாழ்வுபெறுகிறார். கெட்டிக்காரர் தானுங்கோ!

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 02:- மரபிலக்கியக்காரராய் உங்களை அடையாளப்படுத்துகிறீர்கள். யதார்த்தம் பேசுகிற நவீன இலக்கியங்களைவிட உங்கள் மரபிலக்கியத்தில் அப்படி என்னதான் இருக்கிறது?

பதில்:-

உங்கள் கேள்விக்குப் பல காரணங்களைப் பதிலாய்ச் சொல்லலாம். 
ஆனால் பதில் சற்று நீளக்கூடும்.
அதனால் முக்கியமானவற்றை மட்டும் சொல்ல முயல்கிறேன். 
சமூகப் பிரச்சனைகளை நவீன இலக்கியங்கள் அணுகும் முறை வேறு,
மரபிரலக்கியங்கள் அணுகும் முறை வேறு. 
நவீன இலக்கியங்கள் வெளிப்பட்டுத் தெரியும் காரியங்களை மட்டுமே கண்டிக்கின்றன. 
மரபிலக்கியங்கள் அக்காரியங்களின் காரணங்களைத் தேடி அவற்றைக் கண்டிக்கின்றன. 
விளங்கவில்லையா? உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்கிறேன்.
நவீன இலக்கியங்கள் பொறாமையின் விளைவைக் கண்டிக்கும். 
மரபிலக்கியங்கள் பொறாமையைக் கண்டிக்கும். 
விடயம் இவ்வளவுதான்!
காரியங்களைக் கண்டிக்கும்போது நவீன இலக்கியங்கள்,
அதிக அழுக்குகளைப் பதிவு செய்கின்றன. 
அதைப் படிப்போர் மனதில் அவ் அழுக்குகள் பற்றிய ஆர்வமும் உண்டாக வாய்ப்பிருக்கிறது. 
காரணங்களைக் கண்டிக்கும் மரபிலக்கியங்களில் அப்பிரச்சனை இல்லை.
🎯 🎯 🎯
அதுபோலவே நவீன இலக்கியங்கள் பலவற்றில் கெட்டவனின் வெற்றி வழிமொழியப்படுகிறது. 
அதனால் கற்போர்க்கு கெட்டவனாகவும் வாழலாம் எனும்,
  பிழையான வழிப்படுத்தலை அது செய்துவிடுகிறது. 
மரபிலக்கியங்களிலும் பிழையானவற்றின் பதிவுகள் சில உள்ளன தான். 
ஆனால் முடிவில் அப்பிழைகளின் தோல்வி அங்கு நிச்சயம் பதிவு செய்யப்படும்;.
🎯 🎯 🎯
நடந்தவற்றை மட்டும் பதிவு செய்யும் நவீன இலக்கியத்தில்,
அக்கால கிழவிகளின் ஊர்க்கதை பேசும் கவர்ச்சி மட்டுமே உண்டு. 
நடந்தவற்றை வைத்து நடக்கவேண்டியவற்றைக் காட்டும் மரபிலக்கியங்களில்,
கற்றோரின் நெறிப்படுத்தல் உண்டு. 
🎯 🎯 🎯
சிற்றினம் சேராமை எனும் குறள் அதிகாரத்தில்,
சிற்றினத்தை அடையாளம் காட்டும் பரிமேலழகர் எனும் அறிஞர்,
நல்லதன் நன்மையும் தீயதன் தீமையும் இல்லை என்று உரைப்பாரே,
சிற்றினத்தார் என உரைக்கிறார். 
அதேபோல பெரியாரைத் துணைக்கோடல் எனும் குறள் அதிகாரத்தில்,
பெரியார் யார் என வரைவு செய்யும்போது,
அவர், தீ நெறியில் இருந்து விலக்கி,
நன்னெறியில் செலுத்தும் பேரறிவாளரே பெரியோர் எனக் குறிப்பிடுகிறார். 
நவீன இலக்கியங்கள் பெரும்பாலும்,
தமது பாதிப்புக்கு அறம் மீறியேனும் பழிவாங்க நினைக்கும்,
சிற்றினத்தாரையே அறிமுகம் செய்கின்றன. 
மரபிலக்கியங்கள் பெரும்பாலும் தமது பாதிப்பைக் கடந்து,
உயர்ந்து நிற்கும் பெரியோரையே அறிமுகம் செய்கின்றன. 
தன் மனைவியைக் கடத்தியவன் போரில் தோற்று நிற்கும்போது,
'இன்று போய்ப் போர்க்கு நாளை வா!' என உரைக்கும் இராமனையும் 
வஞ்சகமாய்த் தமது அரசினைப் பறித்த துரியோதனனிடம்,
'ஐந்து வீடேனும் தா' எனக்கேட்கும் தர்மனையும்,
மேற்சொன்ன கருத்துக்குச் சாட்சியங்கள் ஆக்கலாம்.
🎯 🎯 🎯
நவீன இலக்கியங்களை, பாதிப்புற்றவர்களே பெரும்பாலும் எழுதுகிறார்கள்.
மரபிலக்கியங்களை, சமூகத்தை நெறிப்படுத்தக்கூடிய கற்றவர்களே எழுதியிருக்கிறார்கள். 
ஐம்பது, நூறாண்டுகளைக் கூடக் கடப்பதற்கு முன்,
இறந்துபோகிற நவீன இலக்கியங்கள் எங்கே?
ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து நிற்கக்கூடிய மரபிலக்கியங்கள் எங்கே? 
இது ஒன்றே, மரபிலக்கியங்களுக்கான கால அங்கீகாரத்தைக் காட்டுகின்றதல்லவா? 
அக்கால அங்கீகாரமே மரபிலக்கியங்களின் பெருமைக்குச் சான்றாம்.
🎯 🎯 🎯
தாம் யதார்த்த சமூகத்தைப் பேசுவதாக,
நவீன இலக்கியங்கள் சொல்லிக் கொண்டாலும்.
இன்றுவரை வாழ்வியல் உதாரணத்திற்கு,
பொதுமக்கள் அவன் தர்மன், இவன் இராமன், அவள் சூர்ப்பணகை, இவள் கூனி என,
மரபிலக்கியப் பாத்திரங்களைத் தான் கையாள்கிறார்கள்.
விளங்காத இலக்கியங்கள் என நவீன இலக்கியவாதிகள் கிண்டல் செய்யும் மரபிலக்கியங்கள்,
மக்களுக்கு விளங்கியிருக்கின்றன. 
விளங்கும் வகையில் எழுதியதாய்ச் சொல்லும் நவீன இலக்கியங்கள்,
மக்களிடம் செல்லவில்லை என்பதற்கு மேற்சொன்ன ஒன்றே போதுமான சாட்சியாம். 
இவ்வளவும் போதாதா நான் மரபிலக்கியங்களை விரும்ப.

 😉உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 'இது பதிலா? பதில் கட்டுரையா? பதில் ரொம்பத்தான் நீளமுங்கோ!'

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 03:- இந்த ஒரு பதவிக்காலத்துடன் விலகிவிடுவேன் என்று சொல்லிக் கொண்டிருந்த நம் ஜனாதிபதி திடீரென அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் தான் போட்டியிடுவேன் என்கிறாரே, பார்த்தீர்களா?

பதில்:-

இதிலென்ன புதுமை இருக்கிறது? 
இதுபற்றிக் கம்பன் அன்றே சொல்லிவிட்டான். 
கைகேயியின் மனதை மாற்ற நினைக்கும் கூனி,
'இராமன் ஆட்சிக்கு வந்தால் உன் வாழ்வு சிதைந்து போகும்' என்கிறாள். 
அதற்குக் கைகேயி, 'இராமன் நல்லவன் அவன் அப்படிச் செய்யமாட்டான்.' 
எனப் பதில் உரைக்கிறாள். 
அவளின் கருத்தை மறுத்துப் பதிலுரைக்கும் தீய கூனியின் வாயினூடாக,
ஒரு தூய கருத்தைப் பதிவு செய்கிறான் கம்பன். 
'அறம் நிரம்பிய அருளுடை அருந்தவர்க்கேனும் 
பெறலரும் திருப்பெற்றபின் சிந்தனை பிறிதாம்'  என்பதே, 
கூனியின் வாயிலிருந்து வரும் கருத்தாம்.
அனைவரையும் நேசிக்கும், அருளைப் பண்பாகக் கொண்ட,
அரிய தவங்களைச் செய்தவர்க்கும், கிடைத்தற்கரிய செல்வம் கிடைத்தால்,
சிந்தனை மாறிவிடும் என்பது அப்பாடல் அடிகளின் பொருள். 
அருளுடைய, தவம்செய்வாரின் கதியே இதுவென்றால், 
நமது ஜனாதிபதியின் மனம் மாறியதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? 
அப்பதவியைக் கொத்தும் ஆசையுடன் சொண்டைக் கூராக்கிக் கொண்டிருந்த,
கழுகுகளின்பாடுதான் கவலைக்கிடமாய் ஆகியிருக்கிறது.
முக்கியமான ஒன்று, 
தேர்தலில் நிற்பது அவரது உரிமை. 
அதே போல வெற்றியைத் தருவது மக்களின் உரிமை. 
இனியும் தருவார்களா? 

👌உலகநாதரின் ஒப்பீனியன்: 📣   'நித்தம் நித்தம் மாறுவது எத்தனையோ நெஞ்சில் நினைப்பதிலே நடப்பதுதான் எத்தனையோ' சினிமாக் கவிஞனின் தீர்க்கதரிசனம் வாழ்க!'

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 04:- எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த, எரிபொருள் அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடைந்துவிட்டதே?

பதில் :-

எப்போதோ தெரிந்த முடிவுதான் இது. 
ஆனாலும், எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிரான தமது பிரச்சாரத்தை,
மக்கள் மத்தியில் கொண்டு செல்ல இந்தப் பிரேரணைமீதான விவாதத்தை 
நல்லபடி பயன்படுத்திக்கொண்டன. 
அந்த அளவில் எதிர்க்கட்சிகளுக்கும்,
இது ஏதோ ஒருவகையில் வெற்றி என்று தான் சொல்ல வேண்டும்.

😂 உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  'முதல் முதலாக அவரைப் பகிரங்கமாய்க் கண்டித்த அவரது கட்சியின் செயலாளர் என்ன செய்யப் போகிறாராம்?'

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆
கேள்வி 05:- கிளிநொச்சி கௌதாரி முனையில் சீன நிறுவனம் அமைத்துள்ள கடலட்டைப் பண்ணைபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில் :-

பெரும் இலாபம் தரக்கூடிய தொழில் அது என்கிறார்கள்.
நம்மவர்க்கு அத்தொழிலில் பயிற்சி இல்லை என்பதையும் ஒத்துக் கொள்கிறார்கள். 
இந்நிலையில் மற்றவர்கள்மூலம் கிடைக்கும் பொருளாதார வாய்ப்பை,
நாம் உதற வேண்டும் என்று சொல்லமாட்டேன். 
அங்கு சென்ற கடல் தொழில் அமைச்சர் டக்ளஸூம் இதனையே சொல்லியிருக்கிறார். 
ஆனால் இப்பிரச்சனையில் மூன்று விடயங்கள் மனதை நெருடுகின்றன. 

நம் தமிழ்ப்பிரதேசத்தின் நிலப் பகுதிகளைத் தமிழ்த் தலைவர்களுடன் ஆலோசிக்காமல்,
வேற்றொருவருக்கு வழங்கியது குற்றம் என்பது ஒன்று,
 
இந்தக் கடலட்டைப்பண்ணை அனுமதி வழங்கலில்,
சரியான முறைமை கடைப்பிடிக்கப்படாதது ஏன்? என்பது மற்றொன்று.
 
இந்தியாவை அண்மித்திருக்கும் வடபகுதிக்குள் சீனாவைப் பிரவேசிக்கச் செய்வதன் மூலம், இந்தியாவின் பகை விலைக்கு வாங்கப்படுகிறதா? என்பது இன்னொன்று.

இவை மூன்றுமே இத்தேசநலனைச் சிதைப்பது பற்றிய விடயங்கள். 
இவற்றுக்குச் சரியான பதில் காணத் தவறுவோமாயின்,
பிற்காலத்தில் நாடு பேரழிவைச் சந்திக்க வேண்டி வரலாம்.

😊உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 'கடலட்டையும் இரத்தம் உறிஞ்சுமா? ஹி..ஹி..'

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

ஹலோ... உங்களைத்தான்!.....
பாட்டையும் பாவத்தையும் மட்டும் இரசித்துவிட்டுப் போகாமல்,
நீங்களும் கச்சேரியில் இணைந்து கொண்டு,
சமூகம், தமிழ் மற்றும் சமயம் சார்ந்த உங்கள் கே
ள்விகளையும் அனுப்பி வையுங்கள்.
மின்னஞ்சல் முகவரி: mailuharam@gmail.com

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்