பாட்டும் நானே! பாவமும் நானே! பகுதி 31: -'கம்பவாரிதி' இலங்கை ஜெயராஜ்-

கேள்வி 01:- நாளுக்கு நாள் கொரோனா காவு கொள்ளும் உயிர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறதே. என்னாகப் போகிறது நம் மக்களின் வாழ்வு?
பதில்:-

இதைப் பற்றி நீங்களும் நானும் பேசி என்ன பயன் இருக்கப் போகிறது. 
சுகாதார அதிகாரிகள் ஊரை முடக்கும்படி தலைதலையாய் அடிக்கிறார்கள். 
அவர்கள் சொல்லையே யாரும் கேட்பதாய்த் தெரியவில்லை. 
நீங்களும் நானும் பேசியா பயன் வரப்போகிறது. 
விதிவிட்ட வழி என்று நடக்கவேண்டியது தான்.  

😊உலகநாதரின் ஒப்பீனியன்​: 📣  'யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க' ஹி..ஹி..'​

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 02:- அமைச்சரவை மாற்றத்தால் பயன் ஏதும் விளையுமா?
பதில்:-

அமைச்சர்களைத் தனித்து இயங்கவிட்டால் ஒருவேளை பயன் ஏதும் விளையலாம். 
அப்படி நடப்பதாய்த் தெரியவில்லை. 
நூல் நுனியைத் தன் கையில் வைத்துக்கொண்டு ஜனாதிபதி இயக்க,
பெரும்பான்மையான அமைச்சர்கள் பொம்மலாட்ட பொம்மைகளாய்த்தான் இயங்கி வருகிறார்கள். 
இந்நிலையே தொடர்ந்தால், அமைச்சரவை மாற்றம் எந்தப் பயனும் தரப்போவதில்லை. 
அமைச்சரவை மாற்றத்தில் புதிய சமையல் ஏதும் நடந்ததாய்த் தெரியவில்லை. 
கத்தரிக்காய்க்குப் பதிலாய் பூசணிக்காய். 
பூசணிக்காய்க்குப் பதிலாய்க் கத்தரிக்காய் என்பதாய்த்தான் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. 
இந்த நிலையில் பயன் விளைந்தால் அது ஆச்சரியம் தான்.

 😉உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 'உன் கையில் அந்த நூலா நீ சொல்லு நந்தலாலா.' பழைய பாட்டு சூப்ப்ப்ப்பருங்கோ!'

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 03:- கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேசப்போவதாய்ச் செய்தி அடிபடுகிறதே?
பதில்:-

கூட்டமைப்பிடமிருந்து பதில் ஏதும் வராததாலும், 
அறிக்கை விட்டிருக்கும் அடைக்கலநாதன் நிபந்தனைகளுடன் பேச வேண்டும் என்று,
சொல்லியிருப்பதாலும் அதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாய்த்தான் தெரிகிறது. 
அமெரிக்கத் தூதர் அரசுத் தலைவர்களுக்கும் கூட்டணித் தலைவர்களுக்கும்,
விருந்தளித்ததாய் வந்த செய்தியின் பின்தான்,
இத்தகைய ஒரு செய்தி பரவத் தொடங்கியிருக்கிறது. 
நான் முன்பு ஒருமுறை சொன்னதுபோல,
'ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா' என்பதுதான் யதார்த்தம் போல்த் தெரிகிறது.
அந்தக் 'கிசுகிசு' உண்மையாய் இருந்தால், உங்கள் கேள்வியை, 
'கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேசப்போவதாய் செய்தி அடிபடுகிறதே' என்பதற்குப் பதிலாக,
கூட்டமைப்பை அரசாங்கத்துடன் பேச வைக்கப் போகிறார்களாமே? 
என்று மாற்றவேண்டியிருக்கும். 
போரில் தோற்று நிற்கும் நம் இனத்தார்க்கு,
வல்லரசுகள் காட்டும் வழியை மீறி நடப்பது சாத்தியமில்லாத ஒன்றுதான். 
இன்றைய நிலையில் நம் இனம் செம்மறியாடகத்தான் இயங்கவேண்டியிருக்கிறது. 
வலிமையுள்ள யார் மேய்த்தாலும் மேயவேண்டியதுதான்.

🤗உலகநாதரின் ஒப்பீனியன்: 📣   'பிச்சைக்காரர்கள் தேர்ந்தெடுப்பவர்களாக முடியாது. (Beggars can't be choosers.) என்பது இதைத்தானுங்கோ.'

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 04:- ஆப்கானிஸ்தான் அரசை அமெரிக்கா கைவிட்டதையும், அமெரிக்காவின் கையாளாய் இருந்த அந்நாட்டு ஜனாதிபதி நாட்டைவிட்டு ஓடியதையும், அமெரிக்க ஆதரவாளர்களாய் இருந்த ஆப்கானியர்கள் அச்சத்தால் நாட்டை விட்டு ஓட விமான நிலையங்களில் குவிந்திருப்பதையும் பார்த்தீர்களா?

பதில்:- 

உலகமே பார்க்கிறதே, நான் பார்க்காமல் இருப்பேனா? 
அக்காட்சிகளைக் காண நெஞ்சு பதறுகிறது. 
1995 ஆம் ஆண்டு இராணுவம் உள்நுழைவதாய்ச் செய்தி வர, 
எட்டு இலட்சம் தமிழ் மக்கள் மழை நேர இரவில்,
தென்மராட்சி நோக்கி ஓடிய அந்தப் பயங்கர அனுபவம்,
மீண்டும் மனதில் வந்து அதிரச் செய்தது. 
அமெரிக்காவை நம்பி ஆட்சி நடத்திக் கொண்டிருந்த ஜனாதிபதி அஷ்ரப் கானி, 
ஆபத்;து நெருங்கியதும் தனது ஆடம்பர மாளிகையிலிருந்து,
ஹெலிக்கொப்டர் மூலம் தப்பி ஓடிய  செய்தி, 
அவரை நம்பியிருந்த மக்களையும் படைவீரர்களையும் மனதளவில் வீழ்த்திவிட்டது.
அதனால்த்தான் சி.ஐ.ஏ. போன்ற வலிமை மிக்க,
அமெரிக்கப் புலனாய்வுத் துறையினரின் கணிப்புக்களைப் பொய்யாக்கி,
ஒரே வாரத்தில் ஆப்கானைத் தலிபான்கள் கைப்பற்றிவிட்டார்கள்.
ஆப்கானிஸ்தானுக்குள் வலியப் புகுந்த அமெரிக்கா, 
இன்று அவர்கள் பிரச்சனையை நாம் ஏன் சுமக்க வேண்டும்? என்று கேள்வி கேட்கிறது. 
பிற தேசங்களின் வலிமையை நம்பி ஆட்சி நடத்துவதால் வரும் ஆபத்தினை,
கண்கூடாக நாம் பார்க்கமுடிந்தது. 
இவ்வுண்மை நிலையை உணரவேண்டியவர்கள் உணர்வார்களா?

😞உலகநாதரின் ஒப்பீனியன்: 📣   அரசனை நம்பிப் புருஷனைக் கைவிட்ட கதைதானுங்கோ.

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 05:- நமது மாணவர்களின் கல்வி தடைப்பட்டுக் கிட்டத்தட்ட இரண்டு வருடம் ஆகப்போகிறதே. இதற்கு என்னதான் முடிவு? அரசாங்கம் ஏதும் செய்யாதா?

பதில்:-

யாரையும் இதற்காக நாம் குற்றம் சாட்ட முடியாது. 
யார் இப்போது அரசுப் பொறுப்பில் இருந்தாலும் இதைத்தான் செய்திருக்க முடியும். 
கல்வி முக்கியம் தான். 
ஆனால் உயிருக்கு அடுத்தபடியாகத்தான் அதனை நாம் போற்ற முடியும். 
இது உலகளாவித் தோன்றியிருக்கும் பிரச்சனை. 
இதற்கு வெறுமனே அரசாங்கத்தைக் குற்றம்சாட்டிப் பிரயோசனம் இல்லை.
இந்நோய்க்கான சரியான தடுப்பினைக் கண்டுபிடிக்கும் வரையும்,
நிலைமை இப்படித்தான் இருக்கப்போகிறது. 
முடிந்த அளவு புதிய பாடப்புத்தகங்களை வாங்கி வைத்து,
தெரிந்தவர்களின் துணையோடு மாணவர்கள் கல்வியில் தம்மைப் பலப்படுத்துவதைத் தவிர,
வேறு வழி இருப்பதாய்த் தெரியவில்லை.  

🧐உலகநாதரின் ஒப்பீனியன்: 📣   வாரியார் எப்ப அரசாங்கத்தின் 'சப்போட்டர்' ஆனார்?

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 06:-  ஒரு மனிதனுக்கு அருள் தேவையா? பொருள் தேவையா?
பதில்:-

தேடுகிறவனின் தேவையைப் பொறுத்த விடயம் அது. அதை நீங்களும் நானும் முடிவு செய்ய முடியாது.

👌உலகநாதரின் ஒப்பீனியன்: 📣   நானும் வாரியாரை வழிமொழியிறனுங்கோ.

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 07:- தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு, இந்து ஆலயங்களில் தமிழில் அர்ச்சனை செய்யலாம் என்றும், அந்தணர்கள் அல்லாதோரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்றும், பெண்களும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்றும் சட்டம் கொண்டு வந்தது பற்றி உங்கள் அபிப்பிராயம்.
பதில்:-

கேள்விப்பட்டேன். நல்ல காரியம் தான். 
ஆனால் ஒன்றே ஒன்று தான் மனதை நெருடுகிறது. 
பாரதம் இந்துமதத்தாருக்கு மட்டும் உரியதல்ல. 
எல்லா மதத்தாருக்கும் உரியது என்று,
தற்போதைய பாரத அரசின் இந்துத்துவக் கொள்கையைக் கடுமையாக எதிர்ப்பவர்கள்,
திராவிட முன்னேற்றக் கழகத்தினர். 
அப்படிச் சொல்கிற அவர்கள் மட்டும்,
தமது மாநிலத்தில் இந்துமதத்திற்கு மட்டும் இந்தத் தனிச் சலுகையை வழங்கலாமா? 
இந்து மதத்தில் சீர்திருத்தம் கொண்டு வந்தது போல,
இஸ்லாமிய, கிறிஸ்தவ மதங்களிலும் அதனைக் கொண்டுவர வேண்டியதுதானே. 
தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் ஆயிரம் இருக்க,
தேவையில்லாத பிரச்சனைக்கு வழி சமைக்கிறார்கள். 
வேண்டாத வேலை! 

🤣உலகநாதரின் ஒப்பீனியன்: 📣   முதலில் புதிய முதலமைச்சரின் பெயரைத் தமிழில் மாத்தச் சொல்லவேணும். ஹி..ஹி..

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 08:- வடமாகாண முன்னாள் முதலமைச்சர் மீண்டும் சுமந்திரனை சீண்டியிருப்பதைப் பார்த்தீர்களா?

பதில்:- 

பாவம் அவரும்தான் என்ன செய்வார்? 
ஏமாந்த யாழ் மக்கள் அவரை எம்.பி. பதவி கொடுத்து,
கொழும்புக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். 
அவருக்கும் பொழுதுபோகவேண்டுமே,
பலநாளாய் அவரது சத்தஞ்சந்தடியைக் காணவில்லை என்று நினைத்தேன். 
அப்போதுதான் அறிக்கை வந்திருக்கிறது. 
சுமந்திரனும் இல்லாவிட்டால்,
மீண்டும் கூட்டமைப்புக்குள் நுழைந்து விடலாம் என்று நினைக்கிறார் போலும். 
முன்னர் அவர் வகித்த பதவிக்கும் அவருக்குமான தொடர்பின் தூரம்,
அதிகமாகிக் கொண்டே போகிறது.

🤓உலகநாதரின் ஒப்பீனியன்: 📣   சொந்தக் காசில சூனியம் வைக்கிறதெங்கிறது இதத்தானோ?

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 09:- உலகமே கண்டு அஞ்சி நிற்கின்ற தலிபான்களின் புதிய அரசைச் சீனா முந்திக்கொண்டு ஆதரித்திருப்பதைப் பார்த்தீர்களா? 
பதில்:- 

அது தலிபான்களுக்கான ஆதரவல்ல. 
அமெரிக்காவிற்கான எதிர்ப்பு. 
எதிரிக்கு எதிரி எனக்கு நண்பன் என்ற கதைதான் அது. 
அமெரிக்காவிற்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவைக் கண்டு,
சீனா கைகொட்டி ஆர்ப்பரிக்கிறது. 
மேற்கு நாடுகள் இந்தப் பிரச்சனையைச் சும்மா விடப் போவதில்லை என்பதை,
G7 நாடுகளின் கூட்ட முடிவுகள் வெளிப்படுத்தியிருக்கின்றன. 
வென்ற நண்பனை அங்கீகரித்திருக்கிறது சீனா. 
அதற்குப் பதிலாக அமெரிக்கா சீனாவின் வேறொரு நண்பனை விழுத்தி பழிதீர்க்க முயலலாம். 
அந்த நண்பனாக நாம் இருந்துவிடக் கூடாது என்பது தான் என் பிரார்த்தனை.

😁உலகநாதரின் ஒப்பீனியன்: 📣   அப்ப எதிரிக்கு நண்பன் எனக்கு எதிரியோ! கதை சோக்காத்தான் போகுதுங்கோ

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

ஹலோ... உங்களைத்தான்!.....
பாட்டையும் பாவத்தையும் மட்டும் இரசித்துவிட்டுப் போகாமல்,
நீங்களும் கச்சேரியில் இணைந்து கொண்டு,
சமூகம், தமிழ் மற்றும் சமயம் சார்ந்த உங்கள் கே
ள்விகளையும் அனுப்பி வையுங்கள்.
மின்னஞ்சல் முகவரி: mailuharam@gmail.com

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்