பாட்டும் நானே! பாவமும் நானே! பகுதி 32: -'கம்பவாரிதி' இலங்கை ஜெயராஜ்-

கேள்வி 01:- ஒரு நல்ல குடும்பப் பெண்ணை எதைவைத்து இனங்காணலாம்?
பதில்:-

அவளது கணவன் நல்லவனாய் வாழ்வதை வைத்து இனங்காணலாம். 
ஒரு நல்ல குடும்பப் பெண்ணால் நிச்சயம் தன் கணவனை நல்லவழியில் செலுத்த முடியும்.   
இதுதானே ஆண்களின் வழக்கம். 
எல்லாப் பழியையும் பெண்கள்மேல் போட்டுவிட்டு,
அவர்கள் தப்பிக்கப் பார்க்கிறார்கள் என்கிறீர்களா?
மற்றவிடயங்களில் எப்படியோ எனக்குத் தெரியாது. 
மேலே நான் சொன்னதுமட்டும் சத்தியமான உண்மை. 
ஒருபெண், தேவைகளையும் ஆசைகளையும் கட்டுப்படுத்திக் கொண்டு,
அறவழிநடப்பது என்று முடிவுசெய்துவிட்டால்,
நிச்சயம் அவள் கணவன் அவளைப் பின்தொடர்ந்துதான் ஆக வேண்டும். 
இது அனுபவபூர்வமான உண்மை. 
விதிவிலக்காக ஒருசிலர் இருக்கலாமே தவிர, 
பெரும்பான்மைபற்றி இதுவே சாஸ்வதமாம். 
கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை அவர்கள்,
பெண்ணால்த்தான் அறம் நிலைக்கும் எனும் இச்செய்தியை,
தனது 'மங்கையராய் வந்து பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா! 
அவர் பங்கயக் கைநலம் பார்த்தல்லவோ இந்தப் பாரில் அறங்கள் வளருதம்மா!' 
கவிதையில் பதிவுசெய்கிறார். 
கம்பனும் இச்செய்தியை ஆமோதிக்கிறான். 
இராமனுக்கு முடிசூட்டலாமா? என ஆன்றோர் சபையைக் கூட்டித் தசரதன் வினவுகிறான்.
அதற்குப் பதில் அளிக்க எழுந்த வசிட்ட மாமுனிவர்,
'சீதை நல்லவள், ஆகவே இராமனுக்கு முடிசூட்டலாம்' என்று கூறுவதாய்,
காட்சி அமைத்திருக்கிறார். 
ஒரு குடும்பத்தைப் பொறுத்தவரை ஆண்தான் அதைத் தாங்கும் அச்சு. 
பெண்தான் அதனை நகர்த்தும் சக்கரம். 
பாரத்தைத் தாங்கும் அச்சையும் சேர்த்து நகர்த்துவது சக்கரம் தான்.
அதனால்த்தான் கணவனுடைய நன்மையை வைத்து,
பெண்ணினுடைய பெருமையை உணரலாம் என்றேன்.  

🤗உலகநாதரின் ஒப்பீனியன்​: 📣   'பெண்ணின் பெருந்தக்கயாவுள?' வள்ளுவரும் சொல்லியிருக்காருங்கோ, எப்பூபூபூடீ

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 02:- கூட்டுக்கட்சிகள் அரசாங்கத்தைக் கைவிடத் தொடங்கியிருப்பது போலத் தெரிகிறதே கவனித்தீர்களா?
பதில்:-

கவனிப்பதென்ன கவனிப்பது? 
ஆட்சியாளர்கள் அதனை வாய்விட்டே சொல்லத் தொடங்கிவிட்டார்களே! 
வேற்றுநாடுகள் உட்புகுந்துவிளையாடத் தொடங்கிவிட்டதாய் வேறு புலம்பியிருக்கிறார்கள். 
நீர் நிறைந்திருக்கும் மட்டும் குளத்தில் மகிழ்வோடு இருக்கும் பறவைகள்,
அது வற்றியதும் அதனை விட்டுப் பறந்துபோய்விடும் என்கிறாள் ஒளவை. 
'அற்றகுளத்தில் அறுநீர்ப்பறவைபோல்' என்பது ஒளவையின் கவிதைஅடி. 
எங்களது அரசகுளமும் (குலமல்ல) பலவிதத்தாலும் வற்றத் தொடங்கிவிட்டது. 
சீனர்களும் எவ்வளவுக்கென்றுதான் கைகொடுக்க முன்வருவார்கள். 
இலங்கைவல்லரசுகளின் போட்டிக் களமாய் மாறியிருக்கும் இன்றைய நிலையில்,
தளரும் இடத்திலெல்லாம் கழுகு கொத்தத்தான் பார்க்கும். 
ஆனால் ஒன்று, இதனால் ஆட்சியாளர்களுக்கு ஓர் நன்மையும் கிடைத்திருக்கிறது. 
அது என்ன நன்மை என்கிறீர்களா? 
'கேட்டினும் உண்டு ஓர்உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல்' என்று,
வள்ளுவர் சொன்னதுபோல இந்தக் கேடு,
ஆட்சியாளர்களுக்கு உண்மை நண்பர்களை இனங்காட்டியிருப்பதைத்தான் சொல்கிறேன்.

 😒உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 'புல்லரெலாம் ஒன்றுபட்டால் சூது நடக்கும்' -  கண்ணதாசன் வாழ்க!

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 03:- மங்கள சமரவீரவின் மரணம்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்:-

இன பேதமற்றுச் சிந்தித்தும் பேரினமக்களின் ஆதரவைப் பெற்றிருந்த,
ஓர் அதிசயத்தலைவர் அவர். 
நல்லவர்களைக் காலம் கவர்ந்துவிடுவதில் இருந்து, 
இந்தத் தேசத்திற்கு இன்னும் நல்லகாலம் பிறக்கவில்லை என்று தெரிகிறது. 
முன்பு ஒருமுறை ஓர் குசும்புக்காரநண்பன் என்னிடம், 
நல்லவர்கள் எல்லாம் விரைவாக இறந்துவிடுகிறார்கள், 
ஆனால் கெட்டவர்கள் பலகாலம் வாழ்கிறார்கள் அது ஏன் தெரியுமா? என்றுகேட்டான். 
நான் பேசாமலிருக்க பிறகு அவனே, நரகம் எப்போதும் ஹவுஸ்புல்லாய் இருப்பதால்,
யமனால் கெட்டவர்களுக்கு உடன் ரிக்கெற் கொடுக்க முடிவதில்லையாம். 
சொர்க்கத்தில் இருக்கைகள் எல்லாம் உட்கார ஆட்களின்றி வெறுமனே இருப்பதால்,
நல்லவர்களுக்கு உடனே ரிக்கெற் கிடைத்துவிடுகிறதாம். 
அதனாற்றான் அப்படிஎன்றான். 
அன்றைக்கு அவனின் பதிலைக் கேட்டு முறைத்தேன். 
இன்றைக்கு அவன் சொன்னதிலும் நியாயம் இருக்குமோ? என்று எண்ணத் தோன்றுகிறது.

😜உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  'அப்பகெட்டவனாய் மாறினாபோச்சு! ஹி...ஹி.... ஹி....' 

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 04:- உலகம் முழுவதும் எதிர்த்து நிற்கும் தலிபான்களை இலங்கை அரசு ஆதரிப்பதாய்ச் சொல்கிறதே?
பதில்:- 

சொல்லாமல் அவர்கள் வேறு என்னதான் செய்வது? 
உலகத்தையே எதிர்த்து, சீனா தலிபான்களை ஆதரிக்கிறது. 
பட்டம் பறக்க அதற்கு வால் கட்டுவார்கள். 
அந்த வால் பட்டம் பறக்கும் இடமெல்லாம் தானும் பறக்கவேண்டியதுதான். 
சீனப் பட்டத்திற்கு இலங்கையை வாலாக்கிவிட்டார்கள் 
(பாழாக்கிவிட்டார்கள் எனினுமாம்). 
எனவே இலங்கை அப்படித்தான் இனிச் சொல்ல முடியும். 
'நக்கினார் நாவிழந்தார்' என்று நம் மூதாதையர்கள் சும்மாவா? சொன்னார்கள்.

😉உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  'நீபோகும் இடமெலாம் நானும் வருவேன்  போ! போ! போ!' சினிமாபாட்டுக்காரனும் சரியாத்தான் எழுதியிருக்கிறான். ஹி....ஹி... ஹி....

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 05:- மகாராஜா நிறுவனஅதிபர் ராஜமகேந்திரன், பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர போன்ற வசதிமிக்க பிரமுகர்களை எல்லாம் கூடக் கொரோனா விழுங்கிவிட்டதே? இதிலிருந்து என்ன தெரிகிறது?
பதில்:-

பணத்தாலும் வசதிகளாலும் மரணத்தை வெல்ல முடியாது என்பதைத்தான்,
மேல் மரணங்கள் உணர்த்துகின்றன. 
கணினியில் குறித்த புறோக்கிராமை (Programme) புகுத்திவிட்டால்,
அந்தப் புறோக்கிராம் முடிந்ததும் கணினி தானாக நின்றுவிடும். 
அதுபோல ஒவ்வொரு உயிருக்குள்ளும் ஒருபுறோக்கிராம் அமைக்கப்பட்டிருக்கிறது போல. 
அது முடிந்ததும் அந்தந்த உயிர்கள் அணைந்து போகின்றன. 
அந்தப் புரோக்கிராமர் (Programmer) யார் என்கிறீர்களா? 
நாங்கள் கடவுள் என்கிறோம். 
வேறுசிலர் அதை ஏற்கிறார்கள் இல்லை. 
எது எப்படியோ பணத்தாலோ படிப்பாலோ பதவியாலோ மாற்றமுடியாத,
இயற்கையின் அந்த இரகசிய ஒழுங்கால்தான்,
மனிதன் கொஞ்சமாவது கடவுளுக்குப் பயந்து நடக்கிறான்.   

🤔உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  'ஆடும் வரை ஆடுவார்  மூடு திரைபோடுவான்  மேடை அவன் மேடை அல்லவோ'  - சூப்ப்ப்பர்ர்ர்

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 06:-  ஊரடங்கு வாழ்வு எப்படி இருக்கிறது?
பதில்:-

போர்க் காலத்தில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவர்களுக்கு ஊரடங்கு வாழ்வு ஒன்றும் புதிதல்ல.
ஆனால் அந்த ஊரடங்குவாழ்வு இந்தளவு அச்சம் தரவில்லை. 
அப்போதைய ஊரடங்கு வாழ்வில் தீமை செய்யக்கூடிய எதிரி யார்என்று தெரிந்திருந்தது. 
அவன் எங்கிருந்து வருவான் என்று தெரிந்திருந்தது. 
அவனிடமிருந்து தப்ப எங்கு ஒழிய வேண்டும் என்றும் தெரிந்திருந்தது. 
நம்மைக் காத்துக்கொள்ள வேறுநாடுகளுக்குத் தப்பிச்செல்லும் வழியும் இருந்தது. 
இப்போதைய ஊரடங்கில் எதிரி கண்ணுக்குத் தெரிவதில்லை. 
அவன் எங்கிருந்து வருவான் என்று தெரிவதில்லை. 
அவனிடமிருந்து தப்ப எங்கு ஒழிவதென்றும் தெரிவதில்லை. 
வேறுநாடுகளுக்குத் தப்பிச் செல்லவும் வழியில்லை. 
முன்னையது நாம் ரசித்த ஊரடங்கு இப்போதையது நம்மை நடுங்கவைக்கும் ஊரடங்கு.

😟உலகநாதரின் ஒப்பீனியன்: 📣   கண்ணுக்குத் தெரியாத நடுங்க வைக்கும் எதிரி

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 07:- கொரோனாவால் மனித இனமே அழிந்துபோய் விடுமோ?
பதில்:-

கொரோனா மனித இனத்தைச் சூழ்ந்திருக்கும் பேரிருள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. 
ஆனால் ஒரேஒரு நிம்மதி, 
இருள் என ஒன்று வந்தால் அடுத்து ஒளி வரும் என்பது இயற்கை நியதி. 
அதை வைத்துச் சொல்லுகிறேன் அஞ்சாதீர்கள். 
மனித இனம் இந்த இருளையும் கடந்துவாழும்.

😇உலகநாதரின் ஒப்பீனியன்: 📣   'இடுக்கண் வருங்கால் நகுக அதனை 
                                                            அடுத்தூர்வது அஃது ஒப்பதில்'

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

ஹலோ... உங்களைத்தான்!.....
பாட்டையும் பாவத்தையும் மட்டும் இரசித்துவிட்டுப் போகாமல்,
நீங்களும் கச்சேரியில் இணைந்து கொண்டு,
சமூகம், தமிழ் மற்றும் சமயம் சார்ந்த உங்கள் கே
ள்விகளையும் அனுப்பி வையுங்கள்.
மின்னஞ்சல் முகவரி: mailuharam@gmail.com

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்