பாட்டும் நானே! பாவமும் நானே! பகுதி 35: -'கம்பவாரிதி' இலங்கை ஜெயராஜ்-

கேள்வி 01:- சிறைச்சாலைக்குள் மதுபோதையிற் சென்று தமிழ் அரசியற்கைதிகளைத் துப்பாக்கி காட்டி மிரட்டிய அமைச்சர் லொஹான் ரத்வத்தையின் இராஜினாமா பற்றி?
பதில்:-
ஒரு இனத்தை இறைவன் அழிக்க நினைத்தால், பிழையானவர்களைச் சரியான பதவிகளில் உட்கார வைத்துவிடுவான் என்று முன்பு ஒருமுறை நான் சொன்னது உங்களுக்கு ஞாபகம் இருக்கும். அதைத்தான் நினைக்க வேண்டியிருக்கிறது. இது ஒரு ஜனநாயக நாடுதானா? என்று ஐயப்பட வைக்கிறார்கள். மரியாதைக்குரியவராய் இருக்க வேண்டிய அமைச்சர் ஒருவரின் இந்த அராஜகச் செயல், நாகரீகம் தெரிந்த அனைவரையும் தலை குனிய வைத்திருக்கிறது. வெலிக்கடை, அனுராதபுரம் என அலைந்து திரிந்து ஆட்டம் போட்ட அமைச்சரின் துணிவின் பின் யார் கொடுத்த அதிகாரம் வேலை செய்தது என ஆராய வேண்டியிருக்கிறது. இத்தனைக்கும் முன்னாள் அமைச்சரின் மகன் என்ற பெருமை வேறு! இம்மாபெரும் குற்றத்திற்குப் பதவிவிலகல் எனும் சமாதானம் எவ்வளவு விளையாட்டுத்தனமானது? ஆனால் ஒன்று! 'கேட்டிலும் உண்டு ஓர் உறுதி' என்று வள்ளுவர் சொன்னாற் போல, அமைச்சரின் செயலாலும் ஓர் உறுதி விளையத்தான் செய்திருக்கிறது. ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் இலங்கை  விமர்சனத்திற்கு ஆளாகியிருக்கும் இவ் வேளையில், அமைச்சர் உலக அரங்குக்குத் தன் செயல்மூலம் இலங்கையின் உண்மை நிலையை உணர்த்தியிருக்கிறார். அந்த வகையில் தமிழ் மக்கள் அவருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

😏உலகநாதரின் ஒப்பீனியன்​: 📣  'வாழையடி வாழையாய் வந்த 'தெருக்' கூட்டம்'
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 02:- சித்தார்த்தனையும் அடைக்கலநாதனையும், கூட்டமைப்புடன் இணைந்து நிற்கவில்லை எனக்  குறை சொல்லியிருந்தீர்களே! இப்போது தமிழரசுக்கட்சிக்குள் இருந்து கொண்டே ஐ.நா.வுக்கான தம் கட்சியின் கடிதத்துடன் முரண்;பட்டு அறிக்கை விட்டிருக்கும் சிறீதரனைப் பற்றி என்ன சொல்லப் போகிறீர்கள்?
பதில்:-'என்னத்தைச் சொல்ல? எல்லோரும் சமநிலை கெட்டு நிற்கிறார்கள். நம் இனத்திற்கும் காலம் சரியில்லைப் போலத்தான் தெரிகிறது. தமிழரசுக் கட்சிக்குள் என்னதான் நடக்கிறது என்று தெரியவில்லை. முக்கியமான ஒரு விடயம் பற்றி முடிவெடுப்பதற்கு முன்னர் கட்சியின் தலைவர்,  உறுப்பினர்களுடன் ஒன்று கூடி ஆராய மாட்டாரா? கட்சி நிர்வாகம்  அப்படித்தான் நடக்கிறதென்றால், சிறீதரன் அதற்காக அல்லவா முதலில் குரல் கொடுத்திருக்க வேண்டும். கட்சித் தலைமை தன் இஷ்டப்படி நடப்பதும், உறுப்பினர்கள் தம் இஷ்டப்படி நடப்பதும்தான் தமிழினம் பேணப் போகிற ஜனநாயகமாய் இருக்கப் போகிறதா? கூட்டமைப்பின், மக்கள் செல்வாக்குப்பெற்ற தலைவர்களில் ஒருவராய் இருக்கும் சிறீதரன், தன் செயற்பாடுகளில் இன்னும் நிதானம் காட்ட வேண்டும். அவர் புலி ஆதரவை வெளிப்படுத்திப் புகழ் பெற நினைப்பது நிரந்தரப் பெருமைக்குக் காரணமாய் இருக்கப்போவதில்லை. ஐ.நா.விற்கான தனிக் கடித ஆக்கம், பின் சரவணபவனால் அச் செய்தி கசிவாக்கப்பட்ட விடயம், பின்னர் அக் கடித மறைப்பு எனத் தேவையில்லாத குழப்பங்களும்  விமர்சனங்களும் சிறீதரனின் உயர்வை நிச்சயம் பாதிக்கும். கட்சி என்பது ஒரு உடம்பு. உறுப்பினர் என்பவர் அவ் உடம்பின் ஓர் அங்கம். உடம்பிற்கும் உறுப்பிற்குமான முரண்;பாடு கேட்டிற்கான அறிகுறி. முன்னவர்களுக்குச் சொன்னதைத்தான் இங்கும் சொல்ல விரும்புகிறேன். ஒன்று ஒற்றுமையுடன் ஒன்றாய் இருக்க வேண்டும், இல்லையேல் விலகி வெளிவந்துவிட வேண்டும். அரசியலில் வேகமாய் வளர்ந்து கொண்டிருக்கும் சிறீதரனும் இதை உணர்ந்து நடப்பது அவசியம்! 

 😂உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 'அட எங்கொப்பிரானே! கூட்டமைப்பிற்கும் தலைமை என்று ஒன்று இருக்கிறதா?'
 ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 03:- எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் முன்பு போல் இல்லாமல், தமிழ்த்துறைகள் தாழ்ந்துவிட்டதாய் அடுத்தடுத்து எழுதுகிறீர்கள். உங்கள் கழகத்தின் பிரசாந்தனும் ஒரு பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் தலைவராய் அமர்ந்திருப்பதை மறந்துவிட்டீர்களா?

பதில்:-நிச்சயமாய் மறக்கவில்லை! அதை நினைவில் வைத்துக் கொண்டுதான் அந்தப் பதில்களை எழுதினேன். என் மாணவன் என்பதற்காக பக்கச்சார்பாய் நிச்சயம் நான் எழுதமாட்டேன். நீங்கள் கேட்டபடியால் பிரசாந்தன் பற்றிய என் அபிப்பிராயத்தைச் சொல்கிறேன்.  கற்பதற்குரிய விருப்புத்தான், கல்வித்துறைக்குள் புக விரும்புபவர்க்கான முதற் தகுதி. அது பிரசாந்தனுக்கு நிறையவே இருக்கிறது. தமிழ்த்துறைகளில் உள்ள பலபேருக்கு அந்தத் தகுதிகூட இல்லை என்பது மனவருத்தத்திற்கு உரிய செய்தி. 

மாணவர்களை வழி நடத்த கல்வி மட்டும் போதாது. அதனோடு கூடிய ஆளுமையும்  அவசியம். நம்முடைய பழைய பண்டிதர்களில் பலர், பேராசிரியர்களைவிடத்  தமிழறிவை அதிகம் பெற்றிருந்தார்கள். அப்படியிருந்தும் பேராசிரியர்கள் அப்பண்டிதர்களை ஓரம் கட்டியதற்குக் காரணமாய் இருந்தது, அப் பண்டிதர்களின் ஆளுமையின்மைதான்.  அந்த ஆளுமை விடயத்தில் பிரசாந்தன் இன்னும் நிறைய வளர வேண்டியிருக்கிறது. அந்த ஆளுமையைப் பெறாமல் அறிவுலகில் அவன் தன்னைத் தனித்து நிலை நிறுத்த முடியாது. 

பிரசாந்தனும் அங்குள்ள மற்றவர்கள் போல் சமூகக் கலப்பின்றி வாழப் பார்க்கிறான். சமூக விடயங்களில் ஓர் உயர் கல்வியாளனாய் அவன் கருத்துக்கள் பதிவாவதில்லை. சமூகத் தொடர்பாற்தான் வித்தியானந்தன், கைலாசபதி, சிவத்தம்பி போன்றோர் தம் அறிவு நிலையை அடையாளப்படுத்தினர் .பிரசாந்தன்,  கற்பித்தல், சோதனை வைத்தல், பேப்பர் திருத்துதல் எனத் தன்னை ஒரு நிர்வாகக் கல்வியாளனாய் மட்டும்  ஒடுக்கிக் கொள்ளப் பார்க்கிறான் போற் தெரிகிறது. அவனது இப் பிழையான போக்கால்  நான் நிறையக் கவலைப்படுகிறேன். இன்று வரைக்கும் கம்பன் கழக அடையாளத்துடன்தான் பிரசாந்தன் சமூகத்திற்குள் பதிவாகியிருக்கிறான். அதைத்தாண்டி இன்னும் ஒரு பேராசிரியனாய், தனித்து அவன் தன்னை நிலைநிறுத்தவில்லை.

முக்கியமான ஒன்றைச் சொல்ல வேண்டும்.  பல்கலைக்கழக தமிழ்த்துறைகளில் நவீனம், மரபு என இரண்டு நிலைகளை வகுத்திருக்கிறார்கள். அங்குள்ள பெரும்பான்மையோர் நவீனம் சார்ந்தவர்களாய்த்தான் இருக்கிறார்கள். அத் துறையில் இருந்தால் அதிகம் சிரமப்பட்டுக் கற்க வேண்டியதில்லை என்பதுதான் அவர்களின் நவீனத்தின் மீதான காதலுக்குக் காரணம். அங்கு மரபு சார்ந்தவர்களாய்த் தம்மைச் சொல்லிக் கொண்ட ஓரிருவர்கூடத் தம்மை நவீனத்துடன் தொடர்புபடுத்தி அடையாளப்படுத்தவே விரும்பினார்கள். அத்தகையோர் 'அர்த்தநாரிகளாய்த்' தனி அடையாளமின்றித்தான் இருக்க வேண்டி வந்தது.

பிரசாந்தன் மரபுப்பலம் பெற்ற கம்பன் கழகத்துடன் இணைந்து வளர்ந்தவன். அதனால் துறை சார்ந்;தவர்களால் அவன் மரபுத்தமிழின் பிரதிநிதியாகவே பார்க்கப்படுகிறான். மரபுத் தமிழ் ஆட்சி என்பது, குறையோ குற்றமோ அல்ல என்பதை பிரசாந்தன் புரிந்து கொள்ள வேண்டும். நவீனகாரர், பலர் என்பதற்காகத் தானும், அவர்களோடு தன்னை அடையாளப்படுத்த விரும்பினால் அவனும் அடையாளமற்ற 'அர்த்தநாரியாய்த்தான்' போவான்.

 பல காலமாய் பல்கலைக்கழக தமிழ்த் துறைகள் மரபுத்தமிழ் ஆட்சியை இழந்து நிற்கின்றன. புதிதாய் வந்திருக்கும் பல விரிவுரையாளர்கள் நவீன பலமும் இல்லாமல், மரபுப் பலமும் இல்லாமல் பெயருக்கு அங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். பிரசாந்தன் முதலில் தன் பலம் எது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். பின்னர் அந்தப் பலத்தை வைத்து, தன் தமிழ்த்துறைக்குப் புத்துயிர் கொடுக்க வேண்டும். தமிழ்த்துறையின் இன்றைய அவசியத்தேவைகளில் ஒன்றாக மரபுத்தமிழ் ஆட்சி வேண்டப்படுவதை பிரசாந்தன் உணர்ந்துகொள்ள வேண்டும். நவீனம், நவீனம் என்று போய், உயர் சித்தி பெற்ற விரிவுரையாளர்கள்கூட ஒரு சுத்தமான கவிதையையோ, இலக்கணப் பிழை இல்லாத ஒரு கட்டுரையையோ எழுத முடியாமல் இருக்கும் அவலத்தைக் கண்டு அறிஞர்கள் வருந்தி நிற்கிறார்கள். இவற்றை எல்லாம் தெரிந்து பிரசாந்தன் தன் ஆற்றலைத் தமிழ்த்துறைக்குள் முழுமையாய்ப் பிரயோகிக்க வேண்டும். இது வரை  பிரசாந்தன் இவற்றை முழுமையாய்; விளங்கியதாய்த் தெரியவில்லை.
பிரசாந்தனும் போலிச் சமரசத்திற்காக இரண்டு தோணியில் கால் வைக்கப் புறப்பட்டால் வீணாய் 'இரண்டுமிலித்தமியனாய்' ஆவான். புகழ்பெற்ற அறிஞர் 'சொக்கன்' அவர்கள் மரபுத்தமிழ்த் துறையில் ஆற்றல் பெற்றிருந்தார். அதே நேரத்தில் நவீனத்திலும் தன்னால் செயற்பட முடியும் என முயன்று காட்டினார். அதனால் ஏற்பட்ட முடிவு வருத்தத்திற்கு உரியதானது. புகழ்பெற்ற பண்டிதர்களும் அவரை முழுமையாய் மரபாளராய் ஏற்றுக் கொள்ளவில்லை. புகழ் பெற்ற பேராசிரியர்களும் அவரை முழுமையாய் நவீன அறிஞராய் ஏற்றுக் கொள்ளவில்லை. கடைசிவரை அப்படியே அவர் காலம் கழிந்து போனது. எல்லோரையும் சமாளிக்க நினைத்த ஆளுமையின்மையே அதற்காம் காரணமாயிற்று. இந்த முன்னுதாரணத்தைப் பிரசாந்தன் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். 

அதனால் நான் முன் சொன்ன விடயத்தில் எந்த மாற்றமும் இல்லை. இந்த எதிர்ப்பு அலைகளைத் தாண்டி பிரசாந்தன் தனித்து மேலே வந்தால், மகிழ்ச்சியோடு அவரைப் பாராட்டக் காத்திருக்கிறேன். 

🤗உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  'சூப்பர்' நேர்மையான பதில்! அதனால் 'நோ' கிண்டல்!  

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 04:- ஐ.நா.மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையால் நம் தமிழர்க்குச் சார்பாய் ஏதேனும்   நிகழுமா? 
பதில்:- ஒன்றைச் சரியாகப் புரிந்து கொள்ளுங்கள். ஈழத் தமிழ் மக்கள் சார்பான ஐ.நா.சபை சார்ந்த அத்தனை விடயங்களும், எதிரிகளிடமிருந்து எம்மைக் காவல் செய்யும் கேடயங்களாய் இருக்க முடியுமே தவிர அவை ஆயுதங்களாகி எமக்காக என்றும் போராடப் போவதில்லை. ஐ.நா.சபை என்பது உலகத்திற்கான பொதுச் சபை என்று பேசப்பட்டாலும், அது வெறும் பெயரளவிலான உண்மைதான்.   வல்லரசு நாடுகளின் கண் அசைவிற்தான் அச்சபையின் இயக்கங்கள் நிகழும் என்பது வெளிப்படையான உண்மை. இலங்கைக்கும் வல்லரசுகளுக்குமான உறவு, பகை என்பவற்றைப் பொறுத்துத்தான் அச்சபையில் நமது நிலை தீர்மானிக்கப்படும். அது தவிர இச்சபையின் அறிக்கைகளால் பெரிதாய் ஆகப்போவது ஒன்றும் இல்லை என்றே கருதுகிறேன். எம் மண்ணில் உரிமையுடன்கூடிய நம் இருப்பைப் பெறுவதற்கு, நாம்தான் முயற்சி செய்ய வேண்டும். அது நோக்கி திட்டமிட்டுச் செயற்படுவோரைக் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காணமுடியவில்லை. ஓரிருவர் அங்ஙனம் முயன்றாலும் மற்றவர்கள் அவர்களை விட்டுவைப்பதாயும் தெரியவில்லை. இனி நாம் செய்யக் கூடியது ஒன்றே ஒன்றுதான். பகையால் முயன்று தோற்றுவிட்டோம். உலகம் நம்மேல் கொண்ட இரக்கம் முடிவதற்கு முன்  நட்பால் அதனைச் சாதிக்க முடியுமா என்று முயல வேண்டும். அது ஒன்றேதான் வழி.

👌உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  யாரங்கே! இந்தத் தேசத்துரோகியை நாடு கடத்துங்கள்  ஹீ....ஹீ... ஹீ....

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 05:- கர்தினால் மல்கம் ரஞ்சித் அவர்கள் மிரட்டிய மிரட்டலில், அரசு இத்தாலி வரை ஓடியிருப்பது பற்றி?​  
பதில்:-
இரண்டு விடயங்களை விளங்க முடிகிறது. ஒன்று கிறிஸ்தவ மதத்தின் பலம். மற்றது, நடந்த சம்பவங்களில் பதிந்திருக்கும் பெரிய கைகளின் தொடர்பு. முன்பாகட்டும் இன்றாகட்டும் இவ்விடயம் சம்பந்தமான அரச நிர்வாகங்களின் பதில்களில், 'அப்பா வைக்கற் பட்டடைக்குள் இல்லை' என்ற செய்தி தான் தெரியவருகிறது.  பெரும்பாலும் கர்தினாலின் கேள்விக்கான பதில் வெளிப்பட்டுவிட்டது. இனி, அப் பதிலுக்குரிய நபர்களைத்தான் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். எவராலும் உண்மையை அதிக நாளுக்கு மறைக்க முடியாது.  

🤨உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  'பரலோகத்தில் இருக்கும் பிதாவே  யார் அந்த  யூதாஸ்?'

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 06:-  புலிகள் மீதும் விசாரணை நடாத்த வேண்டும் என, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தைக் கூட்டமைப்பின் கடிதம் கோரியிருக்கிறதாமே?   
பதில்:-
இக் கேள்விக்கான பதிலை சுமந்திரன் மிகத் தெளிவாகச் சொல்லிவிட்டார். ஈழப் போர் பற்றிய பிரச்சனையை ஆராய்ந்த  'தருஸ்மன்' அறிக்கை, அரசும் புலிகளும் மனித உரிமை மீறல்களைச் செய்ததை எப்போதோ வெளிப்படுத்திவிட்டது. இந்நிலையில் இவ்விருசாராரினதும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆய்வு செய்வது தவிர்க்க முடியாததாகிறது. 'மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம்' என்பது பக்கச்சார்பு பற்றிய கருத்து. நடுநிலைக் கருத்தில் இப் பக்கச் சார்பிற்கு இடமில்லை. எனவே அரசின் மனித உரிமை மீறலை மட்டும் ஆராயுங்கள் என்று நாம் சொன்னால், அது பேரினத்தாரைப் போலவே நம் தமிழினத்தாரும் நடுவுநிலை தவறி இயங்குவதாய்க் காட்டிவிடும். ஆனால் ஒன்று! அவர்களின் நடுநிலை ஆராய்ச்சியில் மறைந்த போராளிகள் குற்றம் சாட்டப்பட்டால், அதனால் ஆகப் போவது ஒன்றுமில்லை. ஆனால் அவ் ஆராய்ச்சியில் அரசின் குற்றம் வெளிவந்தால் அதனால் ஆகப் போவது நிறைய இருக்கிறது. அந்த நன்மை நோக்கிக் கூட்டமைப்பு எழுதிய பதிலில் நியாயம் இருப்பதாகவே கருதுகிறேன்.  

🤪உலகநாதரின் ஒப்பீனியன்: 📣   'சுமந்திரனின் நாதஸ்வரத்திற்கு வாரிதியாரின் தாளம் இது! ஹீ....ஹீ... ஹீ....'

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

ஹலோ... உங்களைத்தான்!.....
பாட்டையும் பாவத்தையும் மட்டும் இரசித்துவிட்டுப் போகாமல்,
நீங்களும் கச்சேரியில் இணைந்து கொண்டு,
சமூகம், தமிழ் மற்றும் சமயம் சார்ந்த உங்கள் கே
ள்விகளையும் அனுப்பி வையுங்கள்.
மின்னஞ்சல் முகவரி: mailuharam@gmail.com

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்