பாட்டும் நானே! பாவமும் நானே! பகுதி 38: -'கம்பவாரிதி' இலங்கை ஜெயராஜ்-

கேள்வி 01:- தன்னுடைய தனிவாழ்வுப் பிரச்சனைக்காக மதுரை மாநகரை எரித்த கண்ணகியை, தீவிரவாதிகள் 'லிஸ்ரில்' அல்லவா சேர்க்க வேண்டும். அவளைப் போய்க் கடவுளாய்க் கும்பிடுகிறார்களே. இது நியாயமா? பட்டிமண்டப நடுவர் அவர்களே! நீங்களே ஒரு தீர்ப்பைச் சொல்லுங்கள்.
பதில்:-

என்ன கிண்டலா? 
முடிந்தால் ஒரு பட்டிமண்டபத்திற்குத் தீர்ப்பைச் சொல்லித்தான் பாருங்களேன்!
அப்போ தெரியும் நான் படுகிறபாடு. 
சரி இனி உங்கள் கேள்விக்கு விடை காண்போம். 
உங்கள் கேள்வியிலேயே பிழை இருக்கிறது. 
படிக்காமல் கேள்வி கேட்கக் கூடாது என்பது இதற்குத்தான்.
'அரங்கின்றி  வட்டாடியற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல்' என்று,
வள்ளுவப் பெருந்தகை உங்களைப் போன்றோரை நினைத்துத்தான் எழுதியிருக்கிறார் போல. 
கண்ணகி மதுரையை எரித்ததாய் உங்களுக்கு யார் சொன்னது? 
அவள் மதுரையைத் தூய்மையல்லவா செய்தாள்.
அக்கினியை அழைத்த கண்ணகி என்ன கட்டளையிட்டாள் என்று உங்களுக்குத் தெரியுமா?
'பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப் பெண்டிர், மூத்தோர், குழவி எனும்
இவரைக் கைவிட்டுத் தீத்திறத்தார் பக்கமே சேர்க!' என்பதுவே,
கண்ணகி அக்கினிக்கு இட்ட கட்டளை என்கிறார் இளங்கோவடிகள். 
தீயவர்களை அழித்துவிடு! என்ற அவளது உத்தரவால் மதுரை தூய்மையானது தான் உண்மை. 
ஒரு நகரத்தைத் தூய்மை செய்த அவளைக் கடவுளாய்க் கும்பிடுவதில்,
என்ன தவறு இருக்கிறதாம்?

😏உலகநாதரின் ஒப்பீனியன்​: 📣  'சூப்பர் தீர்ப்புங்கோ'. நெடுக அரசியல் எழுதுவதை விட்டிட்டு வாரிதியார் இப்பிடியும் கொஞ்சம் எழுதலாமே!
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 02:- சைவராகிய நீர் எதற்கெடுத்தாலும் 'சுமந்திரன், சுமந்திரன்' என்று பஜனை பாடுகிறீரே! அந்தக் கிறிஸ்தவர், சைவத்திற்கு எதிரானவர் என்பது உமக்குத் தெரியாதா? 
பதில்:-

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு திருக்கேதீஸ்வரத்தில் ஆலயத்தின் சார்பாக,
சிவராத்திரிக்கென்று அமைக்கப்பட்ட வரவேற்பு வளைவை, 
ஒரு பாதிரியார் தலைமையிலான கூட்டத்தினர் வந்து உடைத்து அட்டூழியம் பண்ணினார்கள். 
அதை எதிர்த்துப் போடப்பட்டுள்ள வழக்கில்,
திருக்கேதீஸ்வர நிர்வாக சபைக்குச் சார்பாக வழக்குத் தொடுத்து, 
நீதிமன்றத்தில் வக்கீல் ஒருவர் வாதிட்டுக் கொண்டிருக்கிறாராம். 
நுண்மையான அவரது வாதத்திறமையை நீதிமன்றமே பாராட்டுகிறதாம். 
நீங்கள் சொன்ன சைவத்திற்கு எதிரான சுமந்திரன் என்னும் கிறிஸ்தவர்தான்,
அந்த வழக்கை நடத்தும் வக்கீல் என்கிறார்கள். 
தெரியாமல் உங்களை ஒன்று கேட்கிறேன், 
ஈழ விடுதலை கேட்கும் நீங்கள் அந்த ஈழத்திற்குள்,
சைவ ஈழம், கிறிஸ்தவ ஈழம், இஸ்லாமிய ஈழம் என்று,
இன்னும் எத்தனை பிரிவுகள் தான் செய்யப் போகிறீர்கள்? 

 😂உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 'யாரங்கே! அந்தக் கிறிஸ்தவ வக்கீலுக்கு வாரிதியாரின் சார்பாக ஒரு பொன்னாடையைப் போர்த்தி விடுங்கள்!' ஹி..ஹி..
 ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 03:- கூட்டமைப்புக்குள் பகை வளர்ந்து கொண்டிருப்பது வெளிப்படை. அதைத் திரும்பத் திரும்பப் பேசி என்ன பயன்? இன்றைய நிலையில் கூட்டமைப்பைப் பலப்படுத்துவதற்கு ஏதேனும் வழி இருந்தால் அதைச் சொல்லுங்கள் சாமி?
பதில்:-

வழி இல்லை என்று யார் சொன்னது? 
இருக்கும் வழியை நடைமுறைப்படுத்துவதற்கு,
அங்கு உள்ளவர்களுக்கு மனம் இல்லை என்பது தான் உண்மை.
நான்கு தூண்கள் தான் ஒரு வீட்டைத் தாங்கி நிற்கும். 
அதுபோல, ஓர் அரசியல் கட்சியையும்,
அறிவு, அனுபவம், ஆதரவு, ஆற்றல் எனும் நான்கு தூண்கள் தான் தாங்கி நிற்க வேண்டும். 
இந்த நான்கு தூண்களும் ஒன்று சேர்ந்தால்த்தான் ஒரு கட்சி பலம் பெறும். 
ஒரு வீட்டைத் தாங்கும் நான்கு தூண்களில் ஒன்று அசைந்தாலும்,
அந்த வீடு பலமிழந்து விடுவது போல, 
ஒரு கட்சியிலும் மேற் சொன்ன நான்கு விடயங்களில் ஒன்று தளர்ச்சியுற்றாலும்,
அக்கட்சி ஆட்டங்காணத் தொடங்கிவிடும்.
நம் ஈழத்தமிழர்க்கான அரசியல்கட்சிகளில், 
மேற்சொன்ன நான்கு தகுதியும் ஒருசேர அமைந்திருப்பதுதான்,
கூட்டமைப்பினுடைய இன்றைய தனிப்பலம். 
மற்றைக் கட்சிகள்போல மேற்சொன்னவற்றில்,
ஒன்று இருந்தால் இன்னொன்று இல்லாமலிருக்கும் குறைபாடு கூட்டமைப்பில் இல்லை. 
பாராளுமன்ற இருக்கைகள் பலவற்றை இழந்துவிட்ட இன்றைய நிலையிலும்,
ஈழத்தமிழர் பிரச்சனைபற்றிப் பேச வரும் அனைத்து நாட்டவரும், 
அதனால்த்தான் முதலில் கூட்டமைப்புடனேயே பேசுகிறார்கள்.
இந்த உண்மையை மற்றவர்கள் விளங்குகிறார்களோ இல்லையோ, 
கூட்டமைப்பினரே விளங்காதிருப்பதுதான் கொடுமை. 
கூட்டமைப்புக்குள் இந்த நான்கு ஆற்றலும் ஒருமித்துப் பொருந்தியவராய்,
தனி ஒருவரை இனங்காட்ட முடியாது போனாலும்,
தனித்தனி இவ் ஆற்றல்களைக் கொண்டவர்கள் அங்கு இருக்கத்தான் செய்கிறார்கள். 
கட்சியின் அறிவுப் பகுதியைச் சுமந்திரன் சிறப்பாக நிறைவு செய்கிறார். 
அனுபவத்திற்கு சம்பந்தன், மாவை போன்றோர் இருக்கிறார்கள். 
மக்கள் ஆதரவை சிறீதரன், சுமந்திரன், சித்தார்த்தன், 
அடைக்கலநாதன், சாணக்கியன் போன்றோர் பூர்த்தி செய்கின்றனர். 
ஆற்றலுக்கு இன்றைய இளைஞர்களின் 'ஹீரோவான' சாணக்கியனும்,
கூட்டமைப்பின் 'இராஜதந்திரியான' சுமந்திரனும் முக்கியமானவராகின்றனர். 
இந்த நான்கு ஆற்றல்களையும் தனித்தனியே கொண்டு நிற்கும் தலைவர்கள்,
தம்முள் கைகோர்த்தால், கூட்டமைப்பை யாராலும் அசைக்க முடியாது. 
ஆனால் துரதிர்ஷ்டவசமாகக் கட்சியில் இருக்கும் மேற்சொன்ன ஒவ்வொருவரும்,
தாம் பெற்றிருக்கும் பலத்தைத் தகுதியாய்க் கொண்டு, 
தத்தம் ஆற்றலை மட்டும் முதன்மைப்படுத்தி இயங்கப் பார்க்கிறார்கள். 
இதுதான் பிரச்சனை. 
நாலு காலில் ஓடுகிற மாட்டை எவராலும் ஒரு காலில் ஆற்றலுடன் ஓடவைக்க முடியாது. 
இவ் உண்மையை இக் கட்சியில் இருக்கும் மேற் சொன்ன தகுதியாளர்கள் உணர வேண்டும்.  
இன்றைய நிலையில் முதல் வேலை, 
உடைந்து கொண்டிருக்கிற வீட்டை (கட்சியை) நிலை நிறுத்த வேண்டும் என்பதேயாம். 
அதற்குப் பிறகுதான் வீட்டிற்கு யார் தலைவர் என்பதை முடிவு செய்யும் தேவை வரும்.
முட்டாள்த்தனமாக வீடு இடிந்தாலும் பரவாயில்லை,
நான்தான்  தலைவராய் வர வேண்டும் எனும் ஆசையால் ஒவ்வொருவரும், 
அவ்வீட்டின், தத்தமக்கு வாய்ப்பான தூண்களை உலகறிய அசைக்க முனைகிறார்கள். 
அதுதான் பிரச்சனை. ஊரில் சொல்லுமாற்போல,
'ஆடு அறுப்பதற்கு முன்பு எதையோ அறுக்க நினைக்கின்ற கதைதான்' இது. 
இந்த யதார்த்த உண்மையைக்கூடப் புரிந்து கொள்ளாத இவர்கள்தான்,
தமிழினத்தைக் காக்கப் போகிறார்களாம்! சிரிப்புத்தான் வருகிறது. 
கட்சியைப் பலப்படுத்தத் தேவையான எல்லாம் கட்சிக்குள்ளேயே இருக்கின்றன. 
அவற்றை ஒன்றிணைக்க வேண்டியதுதான் இன்றைய தேவை. 
கூட்டமைப்பு, தமிழரசுக் கட்சி என்பவைகளின் தலைவர்களான,
சம்பந்தர், மாவை இருவரும் முதுமையின் எல்லையில் இருக்கிறார்கள். 
அதுமட்டுமன்றி நடுநிலையின்றியும் அவர்கள் இயங்கத் தலைப்படுகிறார்கள். 
அதனால் இவ் ஆற்றல்களை ஒன்றிணைக்கும் அக்காரியத்தை,
அவர்களால் செய்யமுடியாதென்பது திண்ணம். 
எனவே, அவ்விருவரையும் அனுபவ ஆலோசகர்களாய் மட்டும் ஏற்று, 
ஏனைய ஆற்றலாளர்கள் தம்முள் ஒன்றிணைந்து கட்சியைப் பலப்படுத்த முன் வர வேண்டும்.
இன்றைய நிலையில், சுமந்திரன், சிறீதரன், சித்தார்த்தன், 
அடைக்கலநாதன், சாணக்கியன் போன்றோர் ஒருதரம் பகை மறந்து, 
அரசியல் சாராத சமூகப்பொது மனிதர்கள் சிலரின் முன்னிலையில் அமர்ந்து, 
மனந்திறந்து பேச வேண்டும். 
அந்தப் பேச்சு புத்தியால் நிகழ்த்தப்படாமல் இதயத்தால் நிகழ்த்தப்பட வேண்டும். 
அதைச் செய்தால், அடுத்த நாளே 'வீடு' உறுதியாகிவிடும். 
வீட்டை உடைத்து எல்லோரும் நடுவீதிக்கு வராமல்,
வீட்டைப் பலப்படுத்தி அதற்குள் வாழும் வாழ்க்கைதான் அவர்களுக்கும் நல்லது, 
தமிழினத்திற்கும் நல்லது. 
இதைச் செய்தாலே போதும் கூட்டமைப்பு பலம் பெற்றுவிடும் என்பது என் கருத்து.

🤗உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  'வெல்டன்' வாரிதியார்! நியாயமான 'அட்வைஸ்'. பேசாமல் நீங்களே அவர்களைக் கூப்பிட்டுப் பேசினால் என்ன?' ஊருக்கு உழைத்திடல் யோகம்' என்ற பாரதியாரின் கவிதையை நினைவு கொள்ளுங்கள். 

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 04:- என்ன? உமது சுமந்திரனை விடச் சாணக்கியன் மக்கள் செல்வாக்கில் உயர்ந்து கொண்டு போவதால்த்தான் மெல்ல அவரைக் குட்டிக் குறைக்கப் பார்க்கிறீரா?
பதில்:- இந்தக் கோணல்ப் புத்திதான் எங்கள் மக்களின் சொந்தப் புத்தி போல் ஆகிவருகிறது.
சாணக்கியனின் ஆற்றலை இனங்கண்டு அரசியலுக்கு அழைத்து வந்தவர் சுமந்திரன்தான். 
இந்த உண்மை தெரியாமல் பேசினால் நீங்கள் நரகத்திற்குத்தான் போவீர்கள்! 
தனது மும்மொழி ஆற்றலாலும், ஆளுமையாலும்,
இன்றைய இளைஞர்களின் மனம் கவர்ந்த 'ஹீரோவாகிக்' கொண்டிருக்கிறார் சாணக்கியன். 
அந்தப் புகழால் அவரது சமநிலை கெட்டுவிடக் கூடாது என்பதுதான் என்னுடைய விருப்பம். 
பொய்யான ஆதரவும் பிழை. பொய்யான எதிர்ப்பும் பிழை. 
அமிர்தலிங்கத்தை ஒருகாலத்தில் இதுபோலத்தான்,
பெரிய 'ஹீரோவாய்ப்' பாராட்டியது நம் இனம். 
பின்னர் அவரைச் சுட்டுப் போட்டிருந்தபோது,
அதையும் அதே இனம் வேடிக்கை பார்த்தது. 
சாவகச்சேரி பொலிஸ் ஸ்ரேஷன் அடித்தபொழுது, 
ரெலோ தலைவர்களை நம் இனத்தார் 'ஹீரோ' ஆக்கினார்கள். 
பின்னர் அவ் அமைப்பின் தலைவர் ஸ்ரீ சபாரட்ணம்,
துரத்தித் துரத்திச் சுடப்பட்டபோது, 
அதனையும் வேடிக்கை பார்த்தார்கள். 
பிற்காலத்தில் பிரபாகரனைக் கடவுள்போல் ஆக்கிய நம்மவர்கள், 
பின்னர் அவரைச் சுட்டுப் போட்டிருந்தபோது,
அதனையும் சாதாரணமாக ஜீரணித்தார்கள். 
பிரபாகரன் கொல்லப்பட்ட செய்தி வந்ததும் தீக்குளிக்க வேண்டாம், 
டீ குடிக்காமலாவது யாராவது இருந்தார்களா? 
இந்தப் பொய்மைதான் வேண்டாம் என்கிறேன். 
ஒருவர் புகழடைந்து உயர்ந்து வரும்போது,
அவருடைய தவறுகளைத் திருத்துவதுதான் நேர்மை. 
அதைத்தான் நான் செய்கிறேன். 
வெல்கிற போதும் கைதட்டி, வீழ்கிற போதும் கைதட்டி ரசிக்கும் கீழ்மையை,
ஒருக்காலும் நான் செய்யமாட்டேன். 

👌உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  'இடிக்குந் துணையாரை யாள்வாரை யாரே கெடுக்குந் தகைமையவர்.' எப்பூடி? நாங்களும் வாரிதியாற்ற திருக்குறள் மாணவர்கள் தானாக்கும்.'

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 05:- சீனாவுக்கு ஒரு பகுதி. அமெரிக்காவுக்கு ஒரு பகுதி. இந்தியாவிற்கு மற்றொரு பகுதி என இன்றைய அரசு இலங்கையைக் கூறு போட்டு விற்பதாய்க்கூறி, சிங்களப் பேரினவாதிகள் கொதிப்பதைப் பார்த்தீர்களா? ​  
பதில்:-

பார்த்தேன். நன்றாகப் பார்த்தேன். 
தம் தாயக உரிமை வேற்றாரின் கைகளுக்குப் போகிறபொழுது ஏற்படும் வேதனையை,
இப்போதாவது அவர்கள் உணர்ந்து கொள்ளட்டும். 
தமிழர்களுக்கு அவர்களின் உரிமையைக் கொடுக்க மறுத்தவர்கள். 
அதற்கு விலையாகத் தமது உரிமையை,
இன்று யார் யாருக்கோ எங்கெங்கோ விற்கும் நிலைமைக்கு ஆளாகியிருக்கிறார்கள். 
இதைத்தான் காலத்தின் கோலம் என்பது.

👍உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  'எளியாரை வலியார் வாட்டினால்'  பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள்?

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

ஹலோ... உங்களைத்தான்!.....
பாட்டையும் பாவத்தையும் மட்டும் இரசித்துவிட்டுப் போகாமல்,
நீங்களும் கச்சேரியில் இணைந்து கொண்டு,
சமூகம், தமிழ் மற்றும் சமயம் சார்ந்த உங்கள் கே
ள்விகளையும் அனுப்பி வையுங்கள்.
மின்னஞ்சல் முகவரி: mailuharam@gmail.com

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்