பாட்டும் நானே! பாவமும் நானே! பகுதி 39: -'கம்பவாரிதி' இலங்கை ஜெயராஜ்-

கேள்வி 01:- முகநூலில் சுமந்திரனின் விவசாயி வேடம் பார்த்தீர்களா?
பதில்:-

அந்தக் கண்றாவியை நானும் பார்த்துத் தொலைத்தேன். 
அது மட்டுமல்ல, அதைத் தொடர்ந்து வந்த 'மீம்ஸூ'களையும் பார்த்து ரசித்தேன். 
வயல் உழவும், நெல் விதைக்கவும் இங்கு பலபேர் இருக்கிறார்கள். 
சுமந்திரன் தன் வேலையைச் சரியாய்ப் பார்த்தாலே போதுமானது. 
சுமந்திரனை யாரோ தவறாக வழிப்படுத்த முனைகிறார்கள் போலத் தெரிகிறது. 
இந்த நாடக வேலைஎல்லாம் நம் மண்ணில் ஒரு நாளும் எடுபடாது. 
அறிவாளியாய்த் தன்னை அடையாளப்படுத்தியிருக்கும் சுமந்திரனுக்கு,
இந்த மாறுவேடப் போட்டியெல்லாம் மிகை என்பதுதான் என் கருத்து.
 

🎭உலகநாதரின் ஒப்பீனியன்​: 📣  நாடகத்தால் உன் அடியார்போல் நடித்து நானும் உந்தன் 'வீடு' அகத்தே புகுந்திடுமான் மிகப்பெரிதும் விளைகின்றேன் -'மச்சான்ஸ்' திருவாச்சகம் எப்பூபூபூடி
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 02:- நல்லூர் எஜமானது மறைவையொட்டிய உங்களது எண்ணங்களைப் பதிவு செய்யுங்களேன்?​ 
பதில்:-

ஆலய தர்மகர்த்தாக்கள் எப்படி இருக்க வேண்டும்? என்பதற்கான,
ஒரு 'மொடல்' வடிவத்தை உருவாக்கியவர் அவர். 
எஜமான் என்ற வார்த்தைக்குத் 'தொண்டன்' எனும் புது அர்த்தத்தைக் கொடுத்த புரட்சிமனிதர்.
கோயிலுக்குள் தன்னையும், தனக்குள் கோயிலையும் அமைத்துக் கொண்ட உண்மை பக்தர்.
முருகனைக் கேட்டு நிர்வாகம் நடத்திய முதல் தர்மகர்த்தா. 
முருகன் தம்மைக் காக்க வேண்டும் என்று நினைப்போர் மத்தியில், 
தான் முருகனைக் காக்க வேண்டுமே எனும் தவிப்போடு வாழ்ந்தவர். 
கோயிலின் நன்மைக்காக உலகையும், உறவையும் துறந்து வாழ்ந்த ஒப்பற்ற மனிதர்.
அடக்கத்தோடு ஆளுமையும் காட்டத் தெரிந்த அதிசயர். 
அர்ச்சனைக் கட்டணத்தை இன்றுவரை ஒரு ரூபாய்க்கு மேல் உயர்த்தாத ஏழைப் பங்காளர்.
தேவலோகத்திலும் கிடைக்கமுடியாத கௌரவத் தோற்றத்தினை,
முருகனுக்கு ஆண்டுதோறும் கொடுக்கும் 'மேக்கப்மான்'. 
மௌனத்தின் பெருமை உணர்ந்து - உணர்த்திய மஹோன்னதர். 
ஆலய நிர்வாகக் கட்டுப்பாடுகளை எப்பேர்ப்பட்ட சக்திக்கும் விட்டுக் கொடுக்காத வீரியர்.
முருகனிடம் தன்னை முழுமையாக ஒப்புக் கொடுத்த முழுமனிதர். 
கோயிலைப் பொறுப்பெடுத்த நாள் முதல், 
தான் வகித்த உயர்பதவியையும் துறந்துவிட்டுக் கோயிலே கதி என்று வாழ்ந்த இல்லறத்துறவி.
கையில் ஒரு தனிக்குடையும் கரையில்லா வேட்டியுமாய்க் காலம் கழித்த,
இன்னொரு 'குடைச்சாமியார்'. 
தன் கண்ணில்படும் நல்லவற்றையெல்லாம் முருகனுக்காய் ஆக்கியும், 
ஆக்கியவற்றில் ஏதேனும் குறை கண்டால் உடனே அவற்றை நீக்கியும் செயலாற்றிய துணிவாளர்.
'கிரியையில் ஞானம்' என்று சொல்லப்படும் வழிபாட்டு நிலைக்கு,
உதாரணமாகத் திகழ்ந்த ஒரே மனிதர். 
அதனால்த்தான் அவரால் கிரியைகளை மரபு தவறாமல் பேணவும் முடிந்தது. 
தேவை ஏற்பட்டபொழுது அவற்றை மீறவும் முடிந்தது. 
'அர்ச்சனைக் கட்டணத்தை உயர்த்தி,
அதன் மூலம் வரும் வருமானத்தின் ஒரு பகுதியை எங்களுக்குத் தாருங்கள்!'
என,
இயக்கங்கள் நிர்ப்பந்தித்தபோது, 
'அது அடியார்கள் முருகனுக்குத் தரும் பணம், 
என் கையால் அதனை வேறு தேவைகளுக்கு எடுத்துத் தரமாட்டேன்! 
வேண்டுமானால் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்'
என்று சொல்லி,
சாவிக் கொத்தை எடுத்து நீட்டிய விறல் மிக்க வீரர். 
வல்லதோர் வித்தை உருவாக்கித் தந்துவிட்டு வழிப்பயணம் சென்றிருக்கிறார். 
முருகனும் சில நிமிடம் அழுதிருப்பானோ! என்று எண்ணத் தோன்றுகிறது.  

 🙏உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  'அத்தனையும் சத்திய வார்த்தைகள்'
 ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 03:- சுமந்திரனை இந்த அளவு புகழ்கிறீர்கள். பலரது எதிர்ப்பையும் தாண்டி ஆதரிக்கிறீர்கள். ஓர் இலக்கியவாதியாய் உங்கள் மனச்சாட்சியில் கைவைத்துச் சொல்லுங்கள். உங்கள் கண்ணுக்கு அவரில் எந்தக்குறைகளும் தெரியவில்லையா? 
பதில்:-

ஏன் தெரியாமல்? தாராளமாகத் தெரிகின்றன. 
அதுபற்றி முன்னைய என்னுடைய அரசியல் கட்டுரைகளில் தெளிவாக எழுதியும் இருக்கிறேன்.
சுமந்திரன் மீதான என்னுடைய ஆதரவு ,
'ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூச் சர்க்கரையேனும் வேண்டும்'
எனும் கொள்கையால் விளைந்ததுதான். 
இன்றைய நிலையில் சுமந்திரனது தேவையை நிரப்பக் கூடிய ஒருவர், 
கட்சிக்குள் மட்டுமல்ல நம் இனத்திற்குள்ளேயே இருப்பதாய்,
என் கண்ணுக்கெட்டியதூரம் வரை தெரியவில்லை. 
இனத்தின் முன்னேற்றத்திற்கு அவரது ஆற்றல் அவசியமானதால்த்தான்,
நான் அவரைத்  தொடர்ந்து வழி மொழிந்து கொண்டிருக்கிறேன். 
ஒரு தலைவனிடம் செருக்கு, சினம், மிகுதியான காமம், உலோபம், முடிக்க முடியாததாயினும், 
தான் நினைப்பதை முடித்தே தீருவேன் எனும் பிடிவாத அதிமானம், 
ஆகிய ஆறு குற்றங்களும் இருக்கக்கூடாது என்கிறார் வள்ளுவர். 
சுமந்திரனிடம் இக்குற்றங்களில் சில இருப்பதாய்த்தான் தோன்றுகின்றது. 
குறை என்று பார்த்தால், மற்றவர்களை அணைத்துச் செல்லத் தெரியாததுதான்,
அவரது முதல் குறையாகிறது. 
கட்சிக்குள் இருக்கும் மற்றவர்களைவிட தான் அறிவாளி என அவர் நினைக்கிறார். 
அந்த நினைப்பில் பிழை இருப்பதாய்ச் சொல்லமாட்டேன். 
ஆனால் ஒரு நல்ல அறிவாளி தன் நிலையினின்றும் இறங்கி வந்து,
பலரையும் தன்னோடு அணைத்துச் செல்லவே விரும்புவான். 
அறிவைக் காரணமாய் வைத்து வீணாகப் பகை தேட ஒருநாளும் விரும்பமாட்டான். 
சுமந்திரன் தெரிந்து கொள்ளவேண்டிய முதல் விடயம் இது.
கட்சிக்குள் இருக்கும் மற்றைத் தலைவர்களை,
உதாசீனப்படுத்தி நடத்தும் சுமந்திரனது இயல்பு மிகத்தவறானது. 
அந்தப்போக்கு ஜனநாயகத்திற்கு ஒருநாளும் சரிவராது. 
மற்றவர்களை உதாசீனப்படுத்துவதன் மூலம்,
அவர் எதனைச் சாதிக்க விரும்புகிறார் என்று தெரியவில்லை. 
இன்றைய அவரது பகைக்கெல்லாம் இவ் இயல்புதான் காரணம் என்று தோன்றுகிறது. 
அண்மையில் நடந்த ஐ.நா.வின் மனித உரிமைப் பேரவைக்கு,
தன்னால் எழுதப்பட்ட கடிதத்தைக் கடைசி நேரம்வரை வைத்திருந்துவிட்டு,
பின்னர் கட்சி உறுப்பினர்களுக்கு அதனைச் சாட்டுக்காய்த் தெரிவித்ததும், 
அதுபற்றி ஆராயவேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டபோது, 
அக்கடிதம் ஏலவே அனுப்பப்பட்டு விட்டதாகச் சொன்னதுமான சுமந்திரனின் செயல்,
உடன் நிற்கும் தலைவர்களை அலட்சியப்படுத்தியமைக்கான கடைசிச் சான்று. 
முன்னரும் இதுபோல் பலதரம் நடந்ததாய் மக்களும் முறையிடுகிறார்கள். 
அருந்தவபாலன் அதிகவாக்குப் பெற்றும் தோற்றுப்போன நிலையில் ஊர்மக்கள் எல்லாம்,
அவருக்கு நியமனப் பதவியையாவது வழங்கவேண்டும் என்று கேட்டுக் கொண்ட போது,
பதவிக்காலத்தை இரண்டாகப் பிரித்து,
ஒரு பகுதியை அவருக்கு வழங்குவதாக மக்கள் மத்தியில் வாக்களித்துவிட்டு,
அந்த வாக்கைக் கடைசிவரை அலட்சியப்படுத்தியபோதும்,
அச்செயலுக்குக் காரணமானவராய் சுமந்திரனே முன்னிறுத்தப்பட்டார். 
இப்படி எத்தனையோ உதாரணங்கள். 
சம்பந்தன் ஐயாவின் தட்டிக்கொடுத்தலே,
அவரை இப்போக்கில் மிகையாய் இயங்க வைப்பதாய்த் தோன்றுகிறது. 
தனது இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள சுமந்திரனையும் தட்டிக் கொடுத்து, 
மற்றவர்கள் முறையிட்டால் அவர்களையும் தட்டிக்கொடுத்து,
இரட்டை வேடம் போட்டுக் கொண்டிருக்கிறார் சம்பந்தர். 
இது அவரது கட்சிக்கு மட்டுமன்றி, 
நம் இனத்திற்கும் உகந்ததல்ல என்பது உறுதி. 
சம்பந்தரின் ஆதரவை நம்பிச் சுமந்திரன் இன்று எல்லா நட்பையும் இழந்து நிற்கிறார். 
என் ஆற்றலுக்கு முன் இவர்கள் சிறுபகைவர்கள் தானே எனும் நினைப்பால், 
தன்னுடைய பகைவர் 'லிஸ்ரை' அவர் நீட்டித்துக் கொண்டேயிருக்கிறார். 
சம்பந்தர் ஐயாவினுடைய இருக்கை காலியாகிற பொழுது, 
மற்றவர்களால் தான் அரசியல் அனாதையாகிற நிலைமையை அடையலாம் என்பதனைப் பற்றி,
சுமந்திரன் ஆழச் சிந்திக்கவேண்டும். 
பிரச்சினைகளைத் தன் தலையில் கட்டிவிட்டு, 
ஒவ்வொரு முறையும் சம்பந்தர் தப்பித்துக்கொள்வதை,
சுமந்திரன் இதுவரை உணராதிருப்பது அதிசயம்தான். 
அவர் அதனை, உடனடியாகப் புரிந்துகொள்ளாவிட்டால்,
அது அவரது அரசியல் வாழ்வுக்குக் கேடுவிளைவிக்கும் என்பது நிச்சயம்.  
இது ஓர் ஜனநாயகக் கட்சிதானா? என மற்றவர்கள் நினைக்கும் வண்ணம், 
தம்மோடு இணைந்தவர்களை ஓர் பொருட்டாயும் மதியாமல் முடிவுகளை எடுப்பதும்,
அம்முடிவுகளைச் சுமந்திரனைக் கொண்டு அறிவிப்பதுமாக, 
கூட்டமைப்புக்குள் சம்பந்தர் செய்துவரும் சர்வாதிகார நாடகம் மிகத் தவறானது. 
பிரச்சினைகள் வரும்போது அப் பழியினைச் சுமந்திரனின் தலையில் ஏற்றி, 
வருங்காலத்தில் மிளிரக்கூடிய, இனத்திற்குத் தேவையான ஒரு தலைவனை, 
பலரும் வெறுக்கும்படி செய்திருக்கும் சம்பந்தரது செயற்பாடு மிகவும் கண்டிக்கத் தக்கதாம்.
தான் இருக்கும் காலம்வரை 'பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டி', 
தன் தலைமையை நிலைநிறுத்த அவர் நினைப்பது கேவலத்திலும் கேவலம். 
அவரது இந்தச் சுயநலத்திட்டத்திற்கு,
அறிவாளியான சுமந்திரன் பலியாகி வருவது ஆச்சரியம் தருகிறது. 
தனித்தனிப் பேசிப்பார்த்தால் எல்லாத் தலைவர்களும்,
சுமந்திரனின் தேவையை ஒத்துக் கொள்கிறார்கள். 
சம்பந்தரை நம்பி மற்றவர்களை மதிக்காத அவரது 'விட்டேத்தியான' குணத்தினால்த்தான்,
அவர்கள் அவரை எதிர்க்கிறார்கள் என்பது தெரிகிறது. 
அக்காரணத்தில் உண்மையும் இருப்பதாகவே படுகிறது. 
அங்ஙனம் சுமந்திரனைப் பின்னின்று இயங்க வைக்கும் சம்பந்தரிடமே சென்று,
பாதிக்கப்பட்டவர்கள் முறையிடுவதுதான் பெரிய வேடிக்கை.
எவ்வளவுதான் தனிமனித ஆற்றல் இருந்தாலும்,
ஜனநாயக அமைப்பில் நான் என்று இயங்குவதைவிட,
நாம் என்று இயங்குவதுதான் பொருத்தமானதாய் இருக்கும். 
இதனைச் சம்பந்தர் விளங்குகிறாரோ இல்லையோ? 
அறிவாற்றல் மிக்க சுமந்திரன் விளங்கி, 
மிகவிரைவில் அதனை நடைமுறைப்படுத்திக் காட்டவேண்டும்.
ஜனநாயக ஆட்சியில் மக்கள் முட்டாள்களாக இயங்கினாலும்கூட,
அவர்கள் தான் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்திகளாக இருப்பர் எனும்,
அடிப்படை உண்மையைச் சுமந்திரன் புரிந்து கொள்வது அவசியமாம்.
மக்களின் உணர்வைப் புரியாத சுமந்திரனின் இயல்புக்கு, 
புலிகள்மேல் அவர் அடிக்கடி ஆற்றிவரும் எதிர்வினைகள் இன்னொரு சான்றாகிறது.
சுமந்திரனைத் தமிழ்மக்களின் எதிரிபோல் காட்ட,
அவரது எதிரிகளுக்கு இந்த விடயம்தான் பெரிதும் பயன்பட்டது. 
புலிகள் பற்றிய அவரது கருத்துக்கள் சரியா? பிழையா? என்பது,
 இன்றைய நிலையில் தேவையில்லாத விடயம் என்பது என் கருத்து. 
எனக்கு ஒன்று புரியவில்லை. 
தனிப்பட்ட ரீதியில் புலிகளால் சுமந்திரன் பாதிப்புற்றதாக செய்திகள் ஏதும் இல்லை. 
பின்னர் ஏன் தேவையில்லாமல் அவர்கள் பற்றி எதிர்க்கருத்துக்களை விதைத்து,
மக்களின் பகையை அவர் சம்பாதிக்கிறார் என்பது பெருங்கேள்வியாக எழுகிறது. 
வேறு எவரேனும் போட்டுக் கொடுத்த 'சிலபஸ்ஸின்' படி அவர் நடக்கிறாரோ என்று,
ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. 
சுமந்திரன் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். 
'புலிகள்' என்பது பிரபாகரனை மட்டும் குறிக்கும் ஒரு சொல் அல்ல. 
அது பல இளைஞர்களின் தியாகத்தைக் குறிக்கும் ஒரு சொல். 
எத்தனையோ இளைஞர்கள், தம் உணர்ச்சிகளை எல்லாம் மழுங்கடித்து,
எம் இன விடுதலைக்காகத் துறவிகளிலும் மேலாக நின்று,
தம் உயிரையும் பொருட்படுத்தாமல் செயற்பட்டிருக்கிறார்கள். 
அதனால்த்தான் புலிகளால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கூட,
புலிகளுக்கான தம் ஆதரவை இன்றும் மாற்றிக் கொள்ளவில்லை. 
இந்தத் தியாகப் பதிவை இன்னும் பல தசாப்தங்களுக்கு,
தமிழினம் மறக்கப்போவதில்லை என்பது சத்தியமான உண்மை. 
இந்நிலையில் பதவி சார்ந்து, தமிழ் மக்களின் அரசியலுக்குள் நுழைந்த சுமந்திரன்,
போராளிகளின்மேல் வைக்கும் விமர்சனங்கள்,
அவருக்குப் பொதுமக்களின் எதிர்ப்பைத் தேடித் தருமேயன்றி, 
வேறு எந்தப் பயனையும் தரப்போவதில்லை. 
அவரது இச்செயலையும், 
மக்களின் நாடி பிடிக்கத் தெரியாத செயல் என்றே கருதவேண்டியிருக்கிறது. 
அவரது விமர்சனங்கள் முழுவதும் பிழையானவை என்றும் நான் சொல்லமாட்டேன். 
ஆனால் இந்த விமர்சனங்களை, 
அவர் காலம் அறியாது வைத்துக் கொண்டிருக்கிறார் என்பது தான் பிரச்சினை.
மேற்சொன்ன விடயங்கள் பற்றிச் சுமந்திரன் மீளாய்வு செய்தே ஆகவேண்டும். 
அவர் மக்களின் எதிர்ப்பைத் தேடிக்கொள்வது என்பது,
அவரது எதிர்கால அரசியல் வாழ்வுக்கு மட்டுமன்றி, 
நம் இனத்தின் எதிர்காலத்திற்கும் உகந்ததல்ல எனும் எண்ணத்தால்த்தான்,
இவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன். 
 

🤗உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  'பழி ஓரிடம் பாவம் ஓரிடமுங்கோ'ஹி..ஹி..ஹி..' 

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 04:- புலம்பெயர் தமிழர்களை ஆட்சிக்கு வந்ததும் அலட்சியப்படுத்திய நம் ஜனாதிபதி, இப்போது ஐ.நா.சபை உரையில் அவர்களை வெற்றிலை வைத்து வரவேற்கிறாரே. இதனால் மானம் போவது கூடவா அவருக்குத் தெரியவில்லை?
பதில்:- 
'மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை, தானம், தவம், முயற்சி, தாளாண்மை, 
தேனின் கசிவந்த செல்லியர் பால் காமுறுதல் பத்தும் பசிவந்திடப் பறந்து போம்'
என்று 
நம் தமிழ்க்கிழவி எப்பொழுதோ சொல்லிவிட்டாள். 
இப்பொழுது ஜனாதிபதி உரையில் 'மானம்' மட்டும்தான் பறந்திருக்கிறது. 
இன்றைய நிலை தொடர்ந்தால் மிச்ச ஒன்பதும் கூட விரைவில் பறப்பதைப் பார்க்கலாம்.
 

😆உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  'ஆடாத ஆட்டமெல்லாம் ஆடினவன் மண்ணுக்குள்ளே போன கதை உனக்குத் தெரியுமா?'

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 05:- சீனாவின் பக்கமாகப் பறந்து கொண்டிருந்த இலங்கைக் கொடி மீண்டும் மெல்ல மெல்ல இந்தியாவின் பக்கமாய்ப் பறக்கத் தொடங்கியிருக்குமாப் போல் தோன்றுகிறதே?​ ​  
பதில்:-

பறக்குமாப் போல் தோன்றுகிறது என்பது பிழையான தொடர். 
அதில் ஐயக் கருத்துப் பொதிந்திருக்கிறது. 
இன்று ஐயத்திற்கே இடமில்லாமல் இந்தியாவை நோக்கி,
இலங்கைக் கொடி பறக்கத் தொடங்கியிருப்பது வெளிப்படை. 
இந்தியாவின் மௌனத்தின் ஆற்றலும் அதன் இயங்கு பலமும் இப்பொழுதுதான்,
நம் ஆட்சியாளர்களுக்குத் தெரியத் தொடங்கியிருக்கிறது என்று நினைக்கிறேன். 
இலங்கையின் சில முன்னாள் பிரதமர்களும், ஜனாதிபதிகளும்,
இந்தியாவை விட்டு விலகப்பார்த்துத் தோற்று அடங்கிப் போன அனுபவத்தை,
நம் ஆட்சியாளர்கள் மறந்தது அதிசயம்தான்! 
அந்நாளில் அமெரிக்கச் சார்பெடுக்க முனைந்த முன்னாள் ஜனாதிபதி 'ஜே.ஆரை',
படை பட்டாளத்துடன் வந்து உட்காரவைத்து,
ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடச் செய்ததை, 
இவர்கள் எப்படித்தான் மறந்தார்களோ?
பிராந்திய வல்லரசாக மாறிவரும் இந்தியாவைப் பகைக்க நினைத்தது,
முட்டாள்த்தனத்தின் உச்சநிலை. 
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய வெளிவிவகாரச் செயலாளர்,
இங்குள்ளோர்க்கு 'வாசகதீட்சை' அளித்து பக்குவப்படுத்தி இருக்கிறார். 
அதனால்த்தான் கொடி மாறிப் பறக்கிறது. 
 

👍உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  'ஸ்பரிச தீட்சை' நடப்பதற்கு முன் திருந்தினால் நல்லது.

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 06:- சிறீதரன் எம்.பி, 'மாவை' தான் அடுத்த வடமாகாண முதலமைச்சராய் வரவேண்டும் என்கிறாரே?​ ​  
பதில்:-

மக்கள் ஆதரவு பெற்ற சிறீதரனால் மக்களின் உணர்வு புரியாமல்,
இதுபோல எப்படிப் பேசமுடிகிறது? 
நம் தலைவர்களுக்கு, 
இனத்தின் முன்னேற்றம் பற்றிய எந்தக் கவலையும் இருப்பதாய்த் தெரியவில்லை. 
ஏற்கனவே பாராளுமன்றத் தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவருக்கு,
இப்பதவியை வழங்கவேண்டிய தேவைதான் என்ன? 
இனத்தை உயர்த்தவேண்டிய பதவிகளை அதற்கான தகுதியுள்ளவர்களுக்கு வழங்காமல்,
தத்தம் உறவுகளைப் பேணுதற்கான பரிசுப்பொருள்களாய் இவர்கள் நினைக்கிறார்கள். 
இதுவும் ஒருவகையில் இனத்துரோகம்தான். 
மீண்டும் ஒருதரம் மாகாணசபை தோல்வியுறவேண்டும் என்பதுதான் சிறீதரனின் விருப்பமா?
 

😟உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  'எதிரிக்கு எதிரி எனக்கு நண்பன்' என்ற கதைதான் பாருங்கோ இது.

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

ஹலோ... உங்களைத்தான்!.....
பாட்டையும் பாவத்தையும் மட்டும் இரசித்துவிட்டுப் போகாமல்,
நீங்களும் கச்சேரியில் இணைந்து கொண்டு,
சமூகம், தமிழ் மற்றும் சமயம் சார்ந்த உங்கள் கே
ள்விகளையும் அனுப்பி வையுங்கள்.
மின்னஞ்சல் முகவரி: mailuharam@gmail.com

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்