பாட்டும் நானே! பாவமும் நானே! பகுதி 40: -'கம்பவாரிதி' இலங்கை ஜெயராஜ்-

கேள்வி 01:- சுமந்திரன் தலைமையில் நடைபெற்ற மீனவர் வாழ்வாதாரப் போராட்டம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 
பதில்:-

அதுபற்றிச் சொல்வதற்கு முன்பு சுமந்திரன்,
'டான் ரீவி'க்கு அளித்த பேட்டி பற்றிச் சொல்லவேண்டும். 
அந்தப் பேட்டியில், தான் புதிய அவதாரம் எடுக்கத் தொடங்கியிருப்பதை,
சுமந்திரன் மெல்ல வெளிப்படுத்தியிருக்கிறார். 
'இந்தப் போராட்டம் கூட்டமைப்பினரது போராட்டமும் அல்ல, 
தமிழரசுக்கட்சியினது போராட்டமும் அல்ல' என்று சொல்லியிருப்பது, 
சம்பந்தர் ஐயாவின் நிர்வாகத்தில் இருந்த குறையையும் வெளிப்படையாக விமர்சித்திருப்பது,
மற்றைக் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடாதது பற்றிய கேள்விக்கு,
அத் தலைவர்களின் முகத்திரையைக் கிழித்துத் துணிவாய்ப் பதில் சொல்லியிருப்பது என,
மனுஷன் அந்தப் பேட்டியில் உருவாடியிருக்கிறார். 
(அவருக்கு வேப்பிலை அடித்து உருவாட வைத்த அந்த தாடிக்காரப் பேட்டியாளரைத் தனியே பாராட்டவேண்டும். பேட்டி எடுப்பவரை நோகச் செய்யாமல் அதே நேரத்தில் உதட்டுச் சுழிப்புச் சிரிப்புக்குள் எதிராளியை உசுப்பேத்தும் அவரது பாணி அனைவரையும் ரசிக்கவைக்கிறது.)
இனி உங்களின் கேள்வி சம்பந்தமான எனது பதிலைத் தொடங்குகிறேன். 
இப்பொழுதுதான் சுமந்திரனுக்குத் தன்னுடைய பலம் என்ன என்று தெரியவந்திருக்கிறது. 
வாலாக மட்டுமல்லாமல் தன்னால் தலையாகவும் இருக்கமுடியும் என்று,
காட்டத் தொடங்கியிருக்கிறார். 
பாகனிடம் அகப்பட்ட யானைக்குத் தன் பலம் தெரியாதென்பார்கள். 
அதுபோலத்தான் சம்பந்தர் பாகனிடம் சுமந்திரன் இதுவரை இருந்து வந்தார். 
இப்பொழுது யானைக்கு மதம் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. 
இனி அது தன் (தனி) வழி செல்லும் போல் தெரிகிறது. 
சிறீதரன், சாணக்கியன் போன்றோரின் இணைப்பு, 
ஆற்றலாளர்களின் இணைப்பாய் மகிழ்வு தருகிறது. 
இப் பயணத்தைச் சுமந்திரன் என்றோ தொடங்கியிருக்கவேண்டும். 
இன்றாவது தொடங்கியதில் மகிழ்ச்சிதான். 
அறிவல்ல, ஆண்மைதான் தலைமையின் சரியான அடையாளம். 
அதனைச் சுமந்திரனிடம் கண்டு மகிழ்கிறேன். 
இது தொடரவேண்டும் என்றும் பிரார்த்திக்கிறேன். 

😜உலகநாதரின் ஒப்பீனியன்​: 📣 நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்' 'எங்கவீட்டுப்பிள்ளை' எம்.ஜி.ஆர் சவுக்கைக் கையில் எ.டு.த்.தி.ட்.டா.ரு.ங்.கோ! சூப்பரோ சூப்பர்'
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 01:- ஆயிரம்தான் சொல்லுங்கள், இலங்கை அரசின் மனித உரிமை மீறலுக்குச் சமமாக நமது புலிப் போராளிகளின் செயல்களையும் ஆராய அனுமதித்து சம்பந்தர் ஐயா கடிதம் எழுதியது  தவறில்லையா? 
பதில்:-
யதார்த்தவாதி வெகுசனவிரோதி என்பார்கள். 
நானும் அத்தகைய வெகுசனவிரோதிகளின் வரிசையில் சேருவதாய் முடிவு செய்துவிட்டேன்.
அதனால் துணிந்து சொல்கிறேன். 
சம்பந்தர் ஐயா எழுதியதில் தவறில்லை என்பதுதான் என் கருத்து. 
நான் ஆயிரம் உண்மையைச் சொன்னாலும் நீங்கள் ஏற்கப்போவதில்லை. 
ஆனாலும் சில உண்மைகளைச் சொல்லவேண்டியது என் கடமையாகிறது.
போராளிகளால்த்தான் நம் ஈழமக்களின் உரிமைப் பிரச்சினை உலகளாவி விரிந்தது என்பது,
மறுக்கமுடியாத உண்மை. 
அந்த விடயத்தில் புலிகளின் பங்களிப்பு மிக முக்கியமானது என்பதையும்,
யாரும் நிராகரிக்க முடியாது. 
இந்தச் சாதனைக்காக உயிர் துறந்த இளைஞர்களின் தியாகத்தை,
யாரும் என்றும் மறுக்கப் போவதில்லை. 
மறுத்தால் அவர்கள் மனிதர்களாய் இருக்கப் போவதும் இல்லை. 
ஆனால் இப்போதைய பிரச்சனை அதுவல்ல. 
ஆயுதப் போரில் நாம் தோற்றுவிட்டோம் என்பது யதார்த்த உண்மை. 
அந்த உண்மையை முதலில் நாம் நிதர்சனமாய்த் தரிசிக்கவேண்டும். 
வெறும் உணர்ச்சிக் கூச்சல்களால் ஒன்றும் ஆகப்போவதில்லை. 
உண்மையைத் தரிசித்தால்த்தான் நம் எதிர்காலத்தையாவது நாம் உறுதி செய்துகொள்ளலாம்.
இன்றைய நிலையில் பேரினவாதிகளிடமிருந்து,
நம்மைப் பாதுகாக்கும் ஒரே சக்தியாய்ச் சர்வதேசத்தின் கைகொடுப்பு மட்டும் தான் இருக்கிறது.
இவ்வுண்மையை நாம் மறந்துவிடக்கூடாது. 
நமது நாட்டில் நிகழ்ந்த போர்க்குற்றம் பற்றி ஆராய,
ஐ.நா.மனித உரிமை சபைச் செயலாளரால்,
தனிப்பட்ட ரீதியில் நியமிக்கப்பட்ட குழுவினால் வெளியிடப்பட்ட 'தருஷ்மன் அறிக்கை'
அரசினரும் புலிகளும் மனித உரிமை மீறல்களைச் செய்திருக்கிறார்கள் என்ற செய்தியை,
பத்தாண்டுகளுக்கு முன்பே தெளிவாக உலக அரங்கில் பதிவாக்கிவிட்டது.
சர்வதேசம், மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கிற பொழுது, 
மனிதஉரிமையை எவர் மீறினாலும் அது அதனைக் கண்டிக்கத்தான் செய்யும். 
அதனையும் நாம் புரிந்து கொள்ளத்தான் வேண்டும்.
ஆயுதப் போராட்டத்தில் மனிதஉரிமை மீறல் என்பது,
தவிர்க்க முடியாத ஒன்றாகிறது என்பது வேறுவிடயம். 
ஆனால் சர்வதேசத்திடம் நீதி கோரும் நாங்கள்,
'எதிரிகளை மட்டும் விசாரி! எம்மவரை விசாரிக்காதே!' என்று கோரிக்கை வைப்பதை,
சர்வதேச சமூகம் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளாது.
முக்கியமான ஒன்றை நாம் மறந்துவிடக்கூடாது. 
சர்வதேச சமூகம் பாதிப்புற்ற அப்பாவித் தமிழர்களுக்காகவே,
இன்றுவரை குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது. 
அக்குரல் புலிகளின் ஆதரவுக் குரல் அல்ல என்பதை நாம் தெரிந்து கொள்ளவேண்டும். 
நம்மைப் பொறுத்தவரை புலிகள் தியாகக் குழுவாய் இருக்கலாம். 
ஆனால் சர்வதேசம் அவர்களை அப்படிப் பார்க்காது. 
ஒருவேளை நீங்கள் சர்வதேசத்தின் ஆதரவு புலிகளுக்கு இருந்ததே என்பீர்கள். 
அதிலும் நாம் ஒரு உண்மையைத் தெரிந்து கொள்ளவேண்டும். 
புலிகளை அழிக்கும் விடயத்தில் இருபதுக்கு மேற்பட்ட உலகநாடுகள்,
நம் அரசாங்கத்திற்கு உதவியதாய்ச் சொல்லப்படுகிறது. 
இதிலிருந்து சர்வதேச சக்திகள் புலிகளைத் தம் தேவைக்காய்ப் பயன்படுத்தினவே தவிர,
அவர்களது கொள்கையை அவை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது வெளிப்படையாகிறது.
இந்நிலையில் உலக அரங்கில் புலிகளின் மனித உரிமை மீறல்களை நியாயப்படுத்தி,
நம் இனத்திற்கான சர்வதேச சமூகத்தின் ஆதரவினை இழப்பதா? 
அல்லது சர்வதேசத்தின் நிபந்தனைகளை ஏற்று, 
நம் இனத்தை அவர்களின் துணையோடு பேரினவாதிகளிடமிருந்து காப்பதா? 
என்ற கேள்வி எழுமானால், 
இரண்டாவது நிலைக்குத்தான் நான் ஆதரவளிப்பேன்.
அதனைத்தான் சம்பந்தன் ஐயாவும் தன் கடிதம் மூலம் செய்திருக்கிறார். 
இவ்வளவும் ஏன்? இனமா? தனிமனிதர்களா? என்று கேள்வி எழுமானால், 
எந்த உண்மைப் போராளியும் கூட, 
இனத்தின் நன்மை என்ற முடிவுக்குத்தான் வருவான் என்பது நிச்சயம். 
அதனால்த்தான் சம்பந்தன் ஐயா எழுதிய கடிதத்தில் பிழை இல்லை என்று துணிந்து சொல்கிறேன்

🧐உலகநாதரின் ஒப்பீனியன்​: 📣 இவர் எழுதியவருக்காகப் பேசுகிறாரா? கையொப்பமிட்டவருக்காகப் பேசுகிறாரா? 'யாம் அறியோம் பராபரமே' ஹி...ஹி...


❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 02:- வியாபாரிகளின் இஷ்டத்திற்கு விலை உயர்வைத் தீர்மானிக்க விட்டிருக்கிறார்களே! நாடு உருப்படுமா?​​ 
பதில்:-

அந்த அநியாயத்தை ஏன் கேட்கிறீர்கள்! 
அனைத்தும் என் கட்டுப்பாட்டிற்குக் கீழ்தான் எனக் காட்ட விரும்பிய நம் புதிய அரசாங்கம்,
மக்கள் நலம் காப்பதாகச் சொல்லி இராணுவத் துணையோடு,
ஒரு புதுவிதமான நிர்வாகத்தை நடத்த முனைந்தது. 
மக்களின் உணர்வை நிராகரித்து அவர்கள் பல விடயங்களில் காட்டிய கெடுபிடிகள்,
பலரையும் முகம் சுழிக்க வைத்தன. 
அந்தக் கெடுபிடிகளில் கடுமையான விலைக்கட்டுப்பாடுகள் விதித்ததும் ஒன்றாயிற்று. 
இன்று அனைத்தும் கைமீறிய நிலையில் ஏதும் செய்யமுடியாமல் தடுமாறி, 
'வைத்தால் குடுமி' என்று கோஷமிட்டவர்கள்,
இன்று 'சிரைத்தால் மொட்டை' என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள். 
கண்ணனை நம்பித் துகிலைக் கைவிட்ட பாஞ்சாலி போல், 
இன்று தனியாரிடம் விலை நிர்ணய உரிமையை விட்டுவிட்டுக் கைதூக்கி நிற்கிறது நம் அரசு.
ஒரே ஒரு வித்தியாசம். பாஞ்சாலி கண்ணனை நம்பித் துகிலைக் கைவிட்டாள். 
நம் அரசோ கள்வரை நம்பிக் கைவிட்டிருக்கிறது. 
வியாபாரிகளுக்குத் தமது இலாபம் தான் முக்கியம். 
மக்கள் நலம் முக்கியமில்லை.
 மக்கள் நலம் காக்கவேண்டிய அரசே,
அத்தகைய வியாபாரிகளிடம் விலை நிர்ணய உரிமையைக் கொடுத்துவிட்டு நிற்பதென்பது, 
அரசின் வீழ்ச்சிக்கான கட்டியம்தான் என்பதில் எந்த ஐயத்திற்கும் இடமில்லை.  

 🙂உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  '

'நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ 
நெஞ்சில் நினைப்பதிலே நடப்பது தான் எத்தனையோ
கோடு போட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ
கொண்ட குறியும் தவறிப்போனவர்கள் எத்தனையோ'

 ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 03:- மற்றவர்களைப் போல் அல்லாமல் நான் யாழ் மண்ணில் இருந்தே என் மக்களுக்காகப் பாடுபடுவேன். என்று 'வாய்ச்சவடால்' விட்ட முன்னாள் முதலமைச்சரை இப்போதெல்லாம் யாழின் பக்கம் காண்பதே அரிதாய் இருக்கிறதாமே?அவருக்குக் கொடி பிடித்தவர்கள் இப்போ என்ன சொல்லப் போகிறார்கள்? 
பதில்:-

எனக்கு எப்போதுமே ஏமாற்றுகிறவர்களை விட, 
ஏமாறுகிறவர்களில்த்தான் அதிகம் கோபம் வரும். 
தன்னை அரசியலுக்கு அழைத்து வந்த கட்சியையே குற்றம் சாட்டி,
அதன் உடைவுக்குக் காரணமாய் இருந்தது, 
பாரபட்சமாக நடந்தது, பிழையானவர்களைத் தன் அருகிருத்திக் கொண்டது, 
ஆட்சிக் காலத்தில் எந்த ஒன்றையும் சாதிக்காமல் விட்டது, 
மற்றவர்களைக் குறை சொல்வதிலேயே காலம் கழித்தது, 
கடைசி நாள்வரை தன் பதவிச் சுகத்தை அனுபவித்துவிட்டு,
பதவி போன மறுநாளே புதுக்கட்சி ஆரம்பித்தது என, 
கோளாறுக்கு மேல் கோளாறுகள் செய்த முன்னாள் முதலமைச்சரை,
அவரது பொய்மையான வார்த்தைகளை நம்பி ஆதரித்து,
பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்த தமிழ்மக்கள் மீதுதான் எனக்குக் கோபம் வருகிறது. 
எத்தனை காலம் தான் இந்த இனம் இப்படி ஏமாறப்போகிறதோ?  
 

😄உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 

'கண்டா வரச் செல்லுங்கா கையோட கூட்டி வாருங்க 
அவரை கண்டா வரச் செல்லுங்கா கையோட கூட்டி வாருங்க'

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 04:- புலம்பெயர் தமிழர்களால் அவர்கள் வாழும் நாடுகளிலெல்லாம் நம் தமிழ்மொழி தொடர்ந்து வாழும் என்று நினைக்கிறீர்களா? 
பதில்:- 
வாழவேண்டும் என்று நினைக்கிறேன்! 
ஆனால் யதார்த்த நிலைமைகளைப் பார்த்தால் அப்படி நடக்கும் என்று தோன்றவில்லை.
இங்கிருந்து போனவர்கள், காட்டுகிற தமிழ் உணர்ச்சியில் எல்லாம்,
உண்மை இருப்பதாய்த் தெரியவில்லை. 
அங்கு சென்ற பெரும்பான்மையினர் தம் பிள்ளைகளை,
வெள்ளைக்காரர்களாய் ஆக்கத்தான் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். 
அங்கு தோன்றியிருக்கும் நம் புதிய தலைமுறையும் அப்படித்தான் வாழ நினைக்கிறது. 
அங்கு அவர்கள் செய்யும் கலை, இலக்கிய முயற்சிகள் எல்லாம்,
அந்நாட்டவர்களிடம் எம்மைத் தனித்துக் காட்டும் முயற்சியாகவே தோன்றுகிறது. 
அங்கு நம் தமிழ்மொழி நிலைக்கவேண்டுமானால்,
முதலில் வீட்டில் அனைவரும் தமிழ்மொழியைப் பேசிப்பழகட்டும். 
அதுவே இல்லாமல் தமிழ் அங்கு வாழும் என நினைப்பது கற்பனைதான்.

😟உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  ' செந்தமிழ் வாய் திறந்து பேசிடுவாய்!' ஹி..ஹி..

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 05:- சீனாவின் பக்கமாகப் பறந்து கொண்டிருந்த இலங்கைக் கொடி மீண்டும் மெல்ல மெல்ல இந்தியாவின் பக்கமாய்ப் பறக்கத் தொடங்கியிருக்குமாப் போல் தோன்றுகிறதே?​ ​  
பதில்:-

பறக்குமாப் போல் தோன்றுகிறது என்பது பிழையான தொடர். 
அதில் ஐயக் கருத்துப் பொதிந்திருக்கிறது. 
இன்று ஐயத்திற்கே இடமில்லாமல் இந்தியாவை நோக்கி,
இலங்கைக் கொடி பறக்கத் தொடங்கியிருப்பது வெளிப்படை. 
இந்தியாவின் மௌனத்தின் ஆற்றலும் அதன் இயங்கு பலமும் இப்பொழுதுதான்,
நம் ஆட்சியாளர்களுக்குத் தெரியத் தொடங்கியிருக்கிறது என்று நினைக்கிறேன். 
இலங்கையின் சில முன்னாள் பிரதமர்களும், ஜனாதிபதிகளும்,
இந்தியாவை விட்டு விலகப்பார்த்துத் தோற்று அடங்கிப் போன அனுபவத்தை,
நம் ஆட்சியாளர்கள் மறந்தது அதிசயம்தான்! 
அந்நாளில் அமெரிக்கச் சார்பெடுக்க முனைந்த முன்னாள் ஜனாதிபதி 'ஜே.ஆரை',
படை பட்டாளத்துடன் வந்து உட்காரவைத்து,
ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடச் செய்ததை, 
இவர்கள் எப்படித்தான் மறந்தார்களோ?
பிராந்திய வல்லரசாக மாறிவரும் இந்தியாவைப் பகைக்க நினைத்தது,
முட்டாள்த்தனத்தின் உச்சநிலை. 
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய வெளிவிவகாரச் செயலாளர்,
இங்குள்ளோர்க்கு 'வாசகதீட்சை' அளித்து பக்குவப்படுத்தி இருக்கிறார். 
அதனால்த்தான் கொடி மாறிப் பறக்கிறது. 
 

👍உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  'ஸ்பரிச தீட்சை' நடப்பதற்கு முன் திருந்தினால் நல்லது.

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 06:- சிறீதரன் எம்.பி, 'மாவை' தான் அடுத்த வடமாகாண முதலமைச்சராய் வரவேண்டும் என்கிறாரே?​ ​  
பதில்:-

மக்கள் ஆதரவு பெற்ற சிறீதரனால் மக்களின் உணர்வு புரியாமல்,
இதுபோல எப்படிப் பேசமுடிகிறது? 
நம் தலைவர்களுக்கு, 
இனத்தின் முன்னேற்றம் பற்றிய எந்தக் கவலையும் இருப்பதாய்த் தெரியவில்லை. 
ஏற்கனவே பாராளுமன்றத் தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவருக்கு,
இப்பதவியை வழங்கவேண்டிய தேவைதான் என்ன? 
இனத்தை உயர்த்தவேண்டிய பதவிகளை அதற்கான தகுதியுள்ளவர்களுக்கு வழங்காமல்,
தத்தம் உறவுகளைப் பேணுதற்கான பரிசுப்பொருள்களாய் இவர்கள் நினைக்கிறார்கள். 
இதுவும் ஒருவகையில் இனத்துரோகம்தான். 
மீண்டும் ஒருதரம் மாகாணசபை தோல்வியுறவேண்டும் என்பதுதான் சிறீதரனின் விருப்பமா?
 

😟உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  'எதிரிக்கு எதிரி எனக்கு நண்பன்' என்ற கதைதான் பாருங்கோ இது.

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

ஹலோ... உங்களைத்தான்!.....
பாட்டையும் பாவத்தையும் மட்டும் இரசித்துவிட்டுப் போகாமல்,
நீங்களும் கச்சேரியில் இணைந்து கொண்டு,
சமூகம், தமிழ் மற்றும் சமயம் சார்ந்த உங்கள் கே
ள்விகளையும் அனுப்பி வையுங்கள்.
மின்னஞ்சல் முகவரி: mailuharam@gmail.com

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்