பத்துத் தலை படும்பாடு: பகுதி 2 -பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன்-

டந்த வாரப் பதிவின் தொடர்ச்சியை வளர்த்துச் சென்று, காவியத்தின்படி இராவணன் உண்மையில் (?) யார்? என்பது பற்றி எழுதலாம் என்பதுதான் என் எண்ணமாக இருந்தது.
ஆனால், நினைப்பதெல்லாம் நடப்பதில்லையே.

கடந்த வாரம் செய்தியாகவும் செய்தியாளர் மாநாட்டுக் கருத்தாகவும் விளம்பரமாகவும் வெளிவந்த விடயங்கள் மூன்று, என்னை அலைக்கழித்து விட்டன.  
அவ்வளவு இலகுவாகக் கடந்துவிட முடியாத அவற்றைப் பதிவிடுவதை தார்மீகக் கடமையாகக் கருதுகிறேன்.

முதலாவது ஒரு செய்தி.
'இராவணன் ஒரு மாயை' எனப் பெரிய எழுத்தில் சிரித்தது தலைப்புச் செய்தி ஒன்று.
இக்கருத்தைக் கூறியவர், இலங்கைத் தொல்பொருளியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் செனரத் திஸாநாயக்க. 
தொன்மை குறித்துச் சொல்லக்கூடிய பதவி நிலை அவருக்கு.
'இராவண இராஜ்ஜியம் எனக்கூறப்படுவது எல்லாம் கற்பனை கதையாகும்' என்பது அவரது திடமான முடிபு.

'இராவணன் வாழ்ந்ததற்கான எந்தவொரு தொல்லியல் சான்றுகளும் கிடைக்கவில்லை. நாட்டில் உள்ள தொல்பொருட்களில் அரைவாசிக்கும்மேல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இதுவரையில் இராவணன் தொடர்பில் எமக்கு எந்தவொரு சாட்சியும் கிடைக்கவில்லை.' என்று  வரலாற்றாய்வாளருக்குரிய அடையாளத்தோடு அவர் கருத்துரைக்கிறார்.
அவர் சொல்வது உண்மைதான். 

இவ்வளவு காலமும் இராவணனை மூதாதையாகக் கொண்டவர்கள் எல்லாம் காட்டிய ஆதாரங்கள் இரண்டுதான். 
ஓன்று, வான்மீகி உருவாக்கித் தந்த மாகாவியம். அதன் தொடர்ச்சியாகத் தென்னகத்தைக் கவர்ந்திழுக்கும் கம்பராமாயணம். இன்ன பிற இராமாயணங்கள் மற்றும் ஈழத்தில் எழுந்த கோணேசர் கல்வெட்டு முதலிய சில நூல்கள்.

இவ் விராமாயணங்கள் தந்த செய்திகளை வைத்தே, இராவணன் இலங்கையன் என்றும், இந்து சமயத்தினன் என்றும் சொல்லப்பட்டு வந்துள்ளது.
காவியமானது, வரலாறா? கற்பனையா? – என்பதை யாரும் கருதிப் பார்ப்பதில்லை.

இரண்டாவது, இலங்கையில் காணப்படும் இடங்களின் பெயர்கள் இராவணனோடு தொடர்புபட்டிருப்பது. அவ்வகையில் இராவணன் வெட்டு, இராவணன் அருவி, இராவணன் குகை முதலியவாகப் பல இடங்களைச் சுட்டலாம்.

இவ்விடங்களில் சில இன்று பெரும்பான்மையினர் வாழும் பிரதேசங்களில் இருப்பதால், இராவணன் அங்கு – அதாவது தமதிடத்தில் வாழ்ந்த தம் முன்னோன் என அவர்கள் கருதுகிறார்கள். தாம் பின்னே வந்து அவ்விடங்களில் குடியேறியதை மறந்துவிட்டு...
இவ்விடப் பெயரிடுதல்களுக்குப் பின்னால் இருப்பவை நம்பிக்கைகளே தவிர அவை நிரூபணங்கள் அல்ல.

எனவேதான் தொல்பொருளியல் திணைக்களப் பணிப்பாளர், 'இதுவரையில் இராவணன் தொடர்பில் எமக்கு எந்தவொரு சாட்சியும் கிடைக்கவில்லை. குறிப்பாக இராவணனுக்கு தொடர்புடையது எனக்கூறப்படும் இடங்களில்கூட எந்தப் பொருளும் கிடைக்கவில்லை' என்று கூறி, அவனை மாயை என்கிறார்.

இங்கு சிக்கல் எங்கே தோன்றுகிறது என்றால், இராமன் தொடர்பில் இந்திய தொல்லியல் துறைகளும், அவற்றின் வழியில் அறிவுத்துறைகள் பலவும் கொண்டுள்ள உறுதிப்பாட்டில்தான். 
அங்கு இந்தியாவில் இராமன் உண்மையான – வரலாற்றில் வாழ்ந்த வீர புருசன் என்கிறது அதிகாரபூர்வமான தொல்லியல் துறை. அதன்படி இராமன் உண்மையெனின், இராவணன் உண்மையாகத்தானே இருக்க வேண்டும்.

ஆனால், இங்கு இலங்கையிலோ இராவணன் மாயை என்கிறது நம் தொல்லியல் துறை. இதன்படி, இராவணன் மாயை எனின், இராமனும் மாயையாகத்தானே இருக்க வேண்டும்.
யார் கூறுவது சரி? அவர்களா? இவர்களா?
நாமறியோம். 
✈️ ✈️ ✈️

இரண்டாவது ஒரு செய்தியாளர் மாநாடு
அதை நிகழ்த்தியவர் உலமாக் கட்சி சார்ந்த மௌலவி ஒருவர். 
அவரது நகைச்சுவை 'இராவணன் ஒரு முஸ்லிம்' என்பது.
அத்தோடு அவர் நிற்கவில்லை.
'இராவணன் ஒரு முஸ்லிம் மன்னன், அவனைத் திருத்த வந்த ராமர் ஒரு இறை தூதர்.' 
அதற்கு அவர் காட்டிய ஆதாரங்களைப் பார்க்கவேண்டுமே. அவை, பெயர்கள். இடப்பெயர்களல்ல, மானுடர்க்கு இடப்பட்ட பெயர்கள்.

'இறைத்தூதரான ராமன் என்பவர் ரஹ்மான், சீதா என்பவர் சய்யிதா ஆகும். மரபுரீதியாக பேச்சு வழக்கு மாறிய போதே பெயர்களும் மாறிவிட்டன' என்று தொடர்கிறது அவரது அரிய ஆராய்ச்சி. (?)
பாவம் அந்த மௌலவி, அவர் எந்த அரசியல் நிகழ்ச்சி நிரலில் செயற்படுகிறார் என்று தெரியாது. 
ஏன் இப்படி பொய்க் குண்டுகளை வீசித் தாக்குகிறார்? என்றும் தெரியாது.

இராவணன் குறித்த உண்மையான சான்றுகள் கிடைக்கவில்லை என்று தொல்பொருளியல் திணைக்களமே சொன்னவுடன், அவருக்கு ஒரு துணிவு பிறந்திருக்க வேண்டும்.
சான்று இல்லைத்தானே! 
அப்படியானால் கற்பனைக் குதிரையை எப்படியும் தட்டி விடலாம் என்று நினைத்து விட்டார். 
அவரது குதிரை கொஞ்சம் ஓவராகத் துள்ளிப் பாய்ந்து விட்டது. 
அதனால், நடுநிலையான முஸ்லிம் அறிஞர்களாலேயே நகைக்கப்படும் நிலையில் இன்று அவர்.
எனவே, அவர் கருத்துக்களால்
ஒரு பொல்லாப்பும் இல்லை.
✈️ ✈️ ✈️

மூன்றாவது ஒரு விளம்பரம்.
இது அண்மையில் பத்திரிகையில் வெளிவந்திருந்தது.  
விளம்பரத்தை வழங்கியிருந்தவர்கள் 'சிவில் விமான சேவை அதிகார சபை' யினர். 

இராவணன் குறித்த கட்டுரைக்கும் சிவில் விமானசேவை அதிகார சபைக்கு என்ன சம்பந்தம் என, மூளையைக் கசக்கிட வேண்டாம். 
அவர்களுடைய விளம்பரம் உலகின் முதலாவது விமான ஓட்டி பற்றியது. 
யார் அந்த விமானி? 
வேறு யார்? சாட்சாத் இராவணன்தான்.

'மன்னன் இராவணன் மற்றும் வான் ஆதிக்கத்தில் நாம் இழந்த உரிமைகள்' என்ற விடயம் சம்பந்தமாக ஆராய்ச்சிகளை நடத்த ஆரம்பித்துள்ளதாகவும், ஆதாரங்களை வைத்திருப்பவர்கள் தந்துதவும்படியும் அந்த விளம்பரம் சொல்கிறது.
கூடவே, தம்மிடம் மறுதலிக்கமுடியா ஆதாரங்கள் உள்ளதாகவும், அது கூறுகிறது. 
இங்கு கவனிக்கப்படவேண்டியது இராவணன் குறித்து வெளியான விடயங்கள் இரண்டு தம்முள் ஒன்றுடன் ஒன்று முரண்படுகின்றமைதான்.
'இராவணன் ஒரு கற்பனைப் பாத்திரம் - மாயை' என்கிறது தொல்லியல் துறை. 
'இராவணன்தான் உலகின் முதலாவது விமான ஓட்டி என்பதற்கு வலுவான ஆதாரம் எம்மிடம் உள்ளது' என்கிறது சிவில் விமான சேவை அதிகார சபை. 
யார் கூறுவது சரி? 
அவர்களா? இவர்களா?
யாரறிவார்?
ஓன்று மட்டும் நிச்சயம்.

தொல்லியல் துறை இராவணனை மறுப்பதற்குக் காரணம் இன்றைய நிலையில் மக்கள் நம்பும் அவனது இன, மத அடையாளங்கள் தற்போதைய பெரும்பான்மைக்கு  உவப்பில்லாதவையாக இருப்பதுதான்.
அதற்கிடையில் சிவில் விமான சேவை அதிகார சபை  முந்திக்கொண்டு, 'எம்மிடம் ஆதாரம் உள்ளது மேலும் ஆராய்கிறோம்' என்று கிளம்பியிருப்பது, தமக்கு பிடித்தமான முறையில் இராவணனைக் கண்டுபிடிப்பதற்குத்தான்.

இத்தனை நூற்றாண்டுகள் கடந்த பின்பும் - கடற்கோள், புயல், பெருவெள்ளங்களைக் கடந்தும் - அழியாத இராவணனின் விமான ஓடுபாதை இனி இவர்கள் விழிகளுக்குத் தட்டுப்படும். 
ஆம், எங்கிருந்தேனும் பெரும்பான்மை இன, மத அடையாளங்களுடன் புட்பக விமான எச்சங்கள் இனி கண்டுபிடிக்கப்படும். (?) 
அது, எப்பவோ முடிந்த காரியம்.


🛫🛫🛫 

 

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்