தாயோடு தனையர்களைத் தேற்றுகின்றேன்! -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

எங்கள் குருநாதரின் சென்னை உயர் வள்ளுவ வகுப்பு மாணவனும் அகில இலங்கைக் கம்பன் கழகக் குடும்ப உறுப்பினருமான திரு. நா. இளங்கோ அவர்களின் தந்தை திரு. நாராயணசுவாமி அவர்கள் 29.04.2020 அன்று இறைவனடி சேர்ந்தார். அவரது ஆத்ம சாந்திக்காய் அகில இலங்கைக் கம்பன் கழகம் தனது அஞ்சலியைத் தெரிவித்து நிற்கிறது.

னை ஈன்ற தந்தையவன் உலகைவிட்டு
ஓங்கு புகழ் விண்ணடைந்தான் என்னும் செய்தி
எனை வாட்ட வந்ததுவாம் ஏக்கம் கொண்டேன்
என் இனிய மாணவனை ஈன்ற ஏந்தல்
தனைக் காலம் கொண்டதனால் தளர்ந்து நிற்கும்
தாயோடு தனையர்களைக் காண உள்ளம்
நினைத்தாலும் முடியாத நிலையில் இன்று
நிற்பதனை என் சொல்ல? விதியே அம்மா!

சிங்கமென ஆண் மகவு இரண்டை ஈன்று 
சேர் புகழால் தலை நிமிர்ந்து நின்ற ஐயன்
பங்கமிலாக் கருணையினால் தாயே ஆகி
பாசமழை பொழிந்தவரை வளர்த்த ஐயன்
அங்கமெலாம் தளர்ந்துடலம் சரிந்தபோதும்
ஆதரவாய் அருகிருந்து காத்த ஐயன்
பொங்குகிற துயர் விடுத்துப் போனதாலே
பொசுங்குகிற என் மகவைத் தேற்றுகின்றேன். 
 
எங்கிருந்து வந்தானோ? என்னைக் கண்டு
எதனாலே அன்புமழை பொழிந்தான்?அந்தத்
தங்கமகன் இளங்கோவும் தாயாய் என்னைத் 
தாங்குகிற கருணையினை என்ன சொல்வேன்?
பங்கமிலா இறையவனே இவனை எற்கு
பாசமிகு பிள்ளை என ஆக்கித் தந்தான்
அங்கவனும் இழப்பாலே அதிர்ந்து நிற்க 
அருகிருக்க முடியாத பாவியானேன்.
 
சிந்தனையில் பெரியன் இவன் சேரும் நல்ல
செகம் முழுதும் நண்பர்களைப் பேணும் அன்பன்
வந்தனையால் திருவண்ணாமலையில் வாழ்ந்து
வான்சேர்ந்த ரமணரிஷி பாதம் தோய்வோன்
பந்தமிகு பாசத்தால் இதயந் தன்னில் 
பற்றோடு காதலியைப் பதித்து நிற்போன் 
எந்தமக்கு இது போதும் என்று சொல்லி 
ஏற்றமுடன் நிறைவெய்தும் இனிய பண்பன்.
 
கடல் கடந்து பெரும் செல்வம் தேடச் சென்று
கண் இமைக்கும் நேரத்தில் உதறி மீண்டு
தடம் அதனைத் தாய் மண்ணில் தேடி வந்தோன்
தாழ்வில்லா மனச் செல்வம் தன்னைக் கொண்டோன்
அட! இவனைப் போல் ஒருவன் இன்று வாழ்தல் 
அதிசயமே என நினைந்து அதிர்ந்து நிற்பேன்
திடமுடனே அவன் தேறி நிமிர்வான் இந்தத் 
தீவினையின் துயர் அறுத்துத் தெளிவு கொள்வான்.
 
வள்ளுவரின் தொடர்பாலே வாய்த்த இந்த 
வளமிகுந்த உறவதனை தந்து ஆண்ட 
நல்இறையின் பதம்நினைந்து வாழ்த்துகின்றேன்
நலம் மிகுந்து அவர் வாழ்வு சிறக்க வேண்டி
இல் அதனில் துயர் நீங்கும் இதயம் தன்னில்
ஏற்றமிகு தந்தையவன் இருந்து வாழ்வான்
நல்ல மனம் உடையார்க்குத் துன்பமில்லை
நான்மறையின் தீர்ப்பு இது நலிவு நீங்கும்.
 
ஈழத்துக் கம்பனவன் குடும்பத்தாரும் 
இளங்கோ உன் துன்பதனில் பங்கு கொண்டார்
ஆழத்து அன்பதனால் இதயம் சேர்ந்த 
ஐய! உன் துயர் நீங்க வேண்டி நின்றார்
வாழத்தான் வந்தவர்கள் மீண்டும் செல்லல்
வாழ் உலகின் இயற்கை என அறிந்து நீங்கள்
நீளத்தான் இறைவனடி போற்றி நித்தம் 
நிம்மதியைத் தேடிடுவீர் நிறையும் வாழ்வு.
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்