ஆகமம் அறிவோம்: பகுதி 7 -கம்பவாரிதி இலங்கை.ஜெயராஜ்-

லகம் உய்ய வழிசமைக்கும்,
நமது ஆகம நூல்கள்பற்றிய அறிவை
பலரும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காய்,
'ஆகமம் அறிவோம்'எனும் தொடரை
'உகரம்' தொடங்கிய காலத்தில் எழுதத் தொடங்கினேன்.
பின்னர் சிலகாரணங்களால் அத்தொடர் நின்றுபோயிற்று.
தற்போதைய உலகச் சூழ்நிலை காரணமாக
எனக்குக் கணணிப்பதிவு செய்துதரும் சகோதரி
வேலைக்கு வரமுடியாமல் போனதால்,
நான் முன்பு எழுதிய சிலகட்டுரைகளை
உகரத்தின் பிரதம ஆசிரியர் திரு.ஜெ.ஜெயராம் அவர்கள் 
மீள் பதிவுசெய்து வருகிறார்.
அந்தவகையில் 'ஆகமம் அறிவோம்' கட்டுரைகளும்
கடந்த சிலவாரங்களாய் மீள வெளியிடப்பட்டன.
 
என்னவோ தெரியவில்லை! 
ஆரம்பத்தில் இல்லாத வரவேற்பு
இம்முறை இக்கட்டுரைகளுக்கு அதிகம் ஏற்பட்டிருப்பதை
வாசகர்களின் கருத்துப்பகிர்வுகள் உணர்த்துகின்றன.
அதனால் விட்ட இடத்திலிருந்து இக்கட்டுரைத் தொடரை
மீளவும் தொடரநினைக்கிறேன்.
நான் எழுதிய ஆச்சாரிய இலட்சணம் எனும் பகுதியைப் படித்துவிட்டு,
திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஸ்கந்தகுரு வித்தியாலயத்தைச் சேர்ந்த,
சிவஸ்ரீ ஜி.கார்த்திகேயசிவம் சிவாச்சாரியார் அவர்கள்
ஓர் சிறு திருத்தத்தைச் சுட்டிக்காட்டி எழுதி இருக்கிறார்.
அவர் எனது அன்பிற்கும் மரியாதைக்கும் உரியவர்.
நான் எழுதியிருந்த ஆச்சாரிய இலட்சணங்கள்
பெரும்பாலும் தீட்சை, கும்பாபிஷேகம் ஆகியவற்றை இயற்றும் 
பிரதம ஆச்சாரியர்களுக்கே உரியவை என்றும்,
ஆலய வழிபாட்டு நிலையில் உள்ள
ஆசாரியர், அர்ச்சகர், வாசகர், அலங்கிறுதர், சாதகர் எனும்
ஐவகை அந்தணர்களுக்கும் 
முன் சொன்ன ஆச்சாரிய இலட்சணங்களை வலியுறுத்துவது,
சற்று மிகையாகும் எனவும் அறியத் தந்திருக்கிறார்.
அவரது கருத்தை நிரூபிக்கும் ஆகமம் அல்லது ஆகமம் சார்ந்த
நூற்பிரமாணம் எதனையும் தரமுடியுமா ?எனக் கேட்டிருக்கிறேன்.
அனுப்பிவைப்பதாய்ச் சொல்லியிருக்கிறார்.
அவர்மேல் எனக்குப் பூரண நம்பிக்கை உண்டு.
நூற்பிரமாணம் கேட்டதன் நோக்கம் 
நூற்பிரமாணத்தோடு ஒரு கருத்து உறுதிப்படுத்தப்பட்டுவிட்டால்,
அதன்பின்னர் அவரவர் ஊகக் கருத்துக்களுக்கு இடம் இல்லாமல் போகும்.
இன்று பல பிரச்சனைகளுக்குக் காரணம் 
பலரும் தத்தமது ஊகக் கருத்துக்களை
ஆகமக் கருத்துக்களாய் வெளியிட்டு வருவதேயாம்.
அதுநோக்கியே மேற்கோரிக்கையை சிவாச்சாரியாரிடம் 
முன்வைத்திருக்கிறேன்.
அவரது பதில் வந்ததும் வாசகர்களுக்கு அதனைத் தெரிவிப்பேன்.
இக்கட்டுரைத் தொடரின் நோக்கம்
எவரையும் இழிவுசெய்வதோ குற்றம் சாட்டுவதோ அல்ல.
மற்றைச் சமயங்களைவிட,
நமது சமயத்தில் கிரியைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்.
நமது கிரியைகள் அர்த்தபூர்வமானவை.
அக்கிரியைகளின் பிரமாணமாய் இருப்பதுவே நமது ஆகம நூல்கள்.
இன்று அவ்வாகம நூல் அறிவு
ஆலயக் கிரியைகளில் ஈடுபடும் பெரும்பாலான அந்தணர்களுக்கும் இல்லை.
ஆலயங்களைப் பொறுப்பேற்று நடாத்துகின்ற தர்மகர்த்தாக்களுக்கும் இல்லை.
இவ்விருவர் தம் செயற்பாடுகளுக்கும் வழிகாட்டும்,
சட்டப் புத்தகங்களே ஆகம நூல்களாம்.
ஒரு ஊரில் எத்தனை காவல் நிலையங்கள் இருந்தால் என்ன?
எத்தனை நீதிமன்றங்கள் இருந்தால் என்ன?
சட்டப் புத்தகங்கள் இல்லாவிடின் அவை வீணேயாம்.
அது போலத்தான் ஆயிரம் ஆலயங்கள் இருந்தால் என்ன ?
அவற்றில் ஆயிரம் கிரியைகள் நடந்தால் என்ன?
பிரமாண நூல்களாகிய ஆகம அறிவு இல்லாவிட்டால்,
அவையும் பயனற்றுப் போகும் என்பது திண்ணமாம்.
அது நோக்கியே என் கைக்குக் கிட்டிய
ஆகம நூல்கள் சொல்லும் செய்திகளை
இத்தொடரில் பதிவுசெய்கிறேன்.
இவ்விடயத்தில் எனது  அறிவும் மிகக் குறைவானதே
ஆகம அறிவுமிக்க பெரியோர்கள் 
இக்கட்டுரையின் போக்கில் இடைபுகுந்து
நூற்சான்றுகளோடு அதனை நெறிசெய்ய வேண்டிநிற்கிறேன்.
(தொடரும்)
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்