'அனைவர்க்கும் தாழ்வு' :பகுதி 01-கம்பவாரிதி இலங்கை.ஜெயராஜ்-

ருக்குலைந்து போய்விட்டது நம் தமிழ்த்தேசியம்.
நடந்துமுடிந்த தேர்தல் நம் தலைவர்களின் பொய்மையை மட்டுமல்லாமல்,
நம்மக்களது பொய்மையையும் தெளிவாய் வெளிப்படுத்தியிருக்கிறது.
நமது தேசியத்திலும் இன உரிமையிலும் அளவுக்கதிகமான பற்று வைத்திருப்பவர்கள்போல,
நடித்துக்  கொண்டிருந்த நம் மக்களின் பொய்மை முகத்தை,
தேர்தல் முடிவுகள் அசிங்கமாய் நிதர்சனப்படுத்தியிருக்கின்றன.
பதவித் தேவைக்காக எந்த அற வரையறைகளையும் தகர்க்கத் தயாராய் இருக்கிறோம் என,
நம் தலைவர்கள் தமது சுயரூபத்தைப் பகிரங்கமாக வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
நம்மண்ணின் உரிமைக்காக உயிர் துறந்த தலைவர்கள், போராளிகள், பொதுமக்கள் என,
அத்தனைபேரது ஆன்மாக்களும் நிம்மதி இழந்து, 'பேயாய்' அலையப்போகின்றன.
இந்த மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் தம் வாழ்வை இழந்த,
அத்தனைபேரும் இழிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்.
ஏதாவது அதிசயம் நிகழ்ந்தாலே ஒழிய, 'தொலையப் போகிறது நம் இனம்' என,
நான் முன் எழுதியது நடந்துவிடும் போலத்தான் இருக்கிறது.
🏮 🏮 🏮 
போர் நடந்தபோதும் சரி, போர் முடிந்த பின்பும் சரி,
இன உரிமையில் அத்தனை பற்று வைத்திருப்பவர்களாய்,
நம் மக்கள் அற்புதமாய் நடித்திருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறது.
'ஆயுதப் போராட்டத்தை ஏற்கிறீர்களா?' என்று கேட்கப்பட்ட கேள்விக்கு,
'இல்லை' என்று பதில் சொன்ன சுமந்திரனை, தேசப்பிரதிஷ்டை செய்கிற அளவுக்கு,
கொதித்துக் கொந்தளித்தார்கள் நம் மக்கள், கொந்தளிக்கச் செய்தார்கள் நம் தலைவர்கள்.
அவர்கள் கொந்தளித்த கொந்தளிப்பைப்  பார்த்தபோது,
'ஆஹா! போராளிகள் இறந்துபோய் போராட்டம் அடக்கப்பட்டால் என்ன?
இந்த தலைவர்களினதும் மக்களினதும் உணர்ச்சியைப் பார்த்தால்,
நாளை ஈழம் மலரப்போவது உறுதி' என்று எண்ணத் தோன்றியது.
எல்லாம் தேர்தல் முடிவு வரும்வரைதான்.
சிவாஜிக்கு 'நடிகர்திலகம்' என்று பட்டம் கொடுத்தவன் முட்டாள்.
அவரைவிட பன்மடங்கு சிறந்த நடிகர் திலகங்கள்,
நம் மண்ணில் அல்லவா உலாவி வந்திருக்கிறார்கள்.
ஏன் இத்தனை சலிப்பு என்கிறீர்களா? ஒவ்வொன்றாய்ச் சொல்லுகிறேன்.
🏮 🏮 🏮
போராளிகளையும் போராட்டத்தையும் பொதுமக்களையும்,
கொன்றொழித்தவர்கள் என்று இதுவரை நாம் கைகாட்டி நின்ற,
'மஹிந்த' அணியினரின் கூட்டான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில்,
இம்முறை தேர்தலில் போட்டியிட்ட 'அங்கஜன்' பெருவெற்றி அடைந்திருக்கிறார்.
வெற்றி என்றால் சாதாரண வெற்றியா?,
யாழ் மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்ட அத்தனை பேரிலும்,
அதிகூடிய விருப்பு வாக்குகள் பெற்று சாதனையே புரிந்திருக்கிறார்.
36,300 வாக்குகள் அவருக்குக் கிடைத்திருக்கின்றன.
அவரது அணிக்கு மொத்தமாக கிடைத்திருக்கும் வாக்குகள் 49,373.
பிரபாகரனின் சொந்த ஊரான வல்வெட்டித்துறையையும் உள்ளடக்கிய,
உடுப்பிட்டித் தொகுதியிலும் கூட அவருக்குத்தான் அதிகம் வாக்குகள் கிடைத்திருப்பதுதான்,
கொடுமையிலும் கொடுமை!
🏮 🏮 🏮
அன்றுதொட்டு இன்றுவரை போராட்டத்திலிருந்து விலகி நடந்தும்,
தனித்து நின்று புலிகளை எதிர்த்தும்,
பேரின அரசுகளோடு இணைந்து இயங்கியும் வந்த,
'டக்ளஸ் தேவானந்தா' அவர்களுக்கும்,
இம்முறை இரண்டு 'சீற்றுகள்' கிடைத்திருக்கின்றன.
யாழில் அவர் பெற்ற விருப்பு வாக்குகளின் தொகை 32,156.
யாழில் அவரது அணி பெற்ற வாக்குகளின் மொத்தத் தொகை 45,797.
அவரது அணி வன்னி மாவட்டத்தில் பெற்றிருக்கும் மொத்த வாக்குகள் 11,310.
மொத்தத்தில் வடமாகாணத்தில் டக்ளஸ் அணி பெற்ற மொத்த வாக்குகளின் தொகை 57,107.
இதுவரை, காட்டிக் கொடுத்தவர் என்று சில தலைவர்களாலும்,
குறிப்பிட்ட ஒருதொகை மக்களாலும் பழி சுமத்தப்பட்டு வந்த அவரது வெற்றியும்,
தமிழர்களின் இன்றைய நிலைபற்றி சிந்திக்க வைத்திருக்கிறது.
🏮 🏮 🏮
மொத்தத்தில் அவ்விருவர் பற்றி இதுவரை பதிவாகியிருந்த கருத்துக்களை உட்படுத்திப் பார்த்தால்,
போராட்டத்தை அழித்ததாயும், போராட்டத்தை எதிர்த்ததாயும் சொல்லப்பட்ட அணிகளுக்கு,
இம்முறை நம் மக்கள் மனமகிழ்வோடு மூன்று சீற்றுகளையும்,
1,06,480 வாக்குகளையும் அள்ளி வழங்கியிருக்கிறார்கள்.
இந்த முடிவுகளின் அடிப்படையில் நமக்குக் கிடைக்கும் உண்மை என்ன? என்று,
ஆராய வேண்டி இருக்கிறது.
🏮 🏮 🏮
மக்களுக்குப் பணம், பதவி, சலுகைகள் போன்ற இன்ன பிற உபகாரங்கள் வழங்கப்பட்டதே,
இவர்களின் வெற்றிக்குக் காரணம் எனப் பரவலாய்ப் பேசப்படுகிறது.
இதிலிருந்து நம்மக்களில் பெருமளவிலானோர் உரிமை அரசியலைத் துறந்து,
சலுகை அரசியலே இனி நமக்குத் தேவை என,
வெளிப்படையாய்ச் சொல்லிவிட்டது தெளிவாய்த் தெரிய வந்திருக்கிறது.
இந்தத் தேர்தலில் சலுகை அரசியலுக்கான பாதை திறந்திருக்கிறது.
அடுத்தடுத்த தேர்தல்களில் அங்கஜன் போன்றோரின் பயணம்,
மிகச் சுலபமாயும், விரிவாயும் நடக்கப்போவது உறுதி.
ஒருவரைப் பார்த்து ஒருவராய் அந்தப் பாதையில்,
இனி நம் மக்கள் குவிந்து நடைபோடப் போகிறார்கள்.
இன உரிமையாவது, சுதந்திரமாவது, இனி ஒரு மண்ணும் இருக்கப்போவதில்லை.
'ஆயுதப் போராட்டத்தை நிராகரிக்கிறேன்' என்று சுமந்திரன் சொன்னதற்காக,
கொதித்தெழுந்த மக்களின் நடிப்பு மிகத் தெளிவாய்த் தெரியவந்துவிட்டது.
'உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவோர்' தொகை,
நம் மண்ணில் கூடிக்கொண்டே போகிறது என்பதையே இஃது உணர்த்துகிறது. 
🏮 🏮 🏮
இனி, தலைவர்களின் நடிப்பை ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம்.
பெரும்பான்மை பற்றி, முதலில் கூட்டமைப்பை எடுத்துக் கொள்ளலாம்.
கட்டப்பொம்மனாய் வந்து எட்டப்பனாய் மாறிய நீதியரசரும்,
அவருக்கு வால் முறுக்குவோருமாக எதிரணியில் ஒரு கூட்டமும்.
முன்னாள் முதலமைச்சரால் ஒரு காலத்தில் சிபாரிசு செய்யப்பட்டு,
இத்தேர்தலில் அவரால் கைவிடப்பட்ட கஜேந்திரிகுமார் தலைமையிலான இன்னொரு கூட்டமுமாக,
இதுவரை நடந்த தேர்தல்களில் இல்லாதவகையில் எதிரணி பலம் பெற்றிருக்க,
அதை உணராமல் கூட்டமைப்புத் தலைவர்கள் சிலர் நடந்து கொண்ட முறை அநாகரிகத்தின் உச்சம்!
அரசியல் அரிச்சுவடியும் தெரியாத இழிவின் எல்லை என்றும் அதனைச் சொல்லலாம்.
🏮 🏮 🏮
சிறீதரன் போன்ற ஒருசிலரைத் தவிர,
கூட்டணித்தலைவர்கள் பலரதும் கையிலிருந்த அம்புகள்,
எதிராளித் தலைவர்களை விட்டுவிட்டு சுமந்திரனின் மார்பைக் குறிவைத்தபடியே இருந்தன.
அண்மையில் வெளிவந்த சுமந்திரனின் பேட்டியை வைத்து,
வெளிப்படத் தொடங்கிய அவர்களது உட்பகை,
தேர்தல் முடிந்த இன்றைய நிலையிலும் ஓய்ந்த பாடில்லை.
உலகமே கைகொட்டிச் சிரிக்கிறது!
🏮 🏮 🏮
அறிவாற்றல் மிக்க, காரியங்களை முன்னெடுக்கக் கூடிய, ஆளுமைமிக்க,
சுமந்திரனின் தகுதிப்பாடுகள்தான் இவர்களது பகையின் காரணங்கள்.
சுமந்திரனும், ஆரம்பகாலத்தில் சம்பந்தன் ஐயாவின் சலுகைகளை நம்பி,
இணைந்திருந்த மற்றைய அணியினரின் பகையைச் சம்பாதித்துக் கொண்டதும்,
மறுக்கமுடியாத உண்மையாம்.
ஆனாலும், இன்றைய நிலையில் தமது கட்சிக்கும் இனத்திற்கும் அவசியமாய்த் தேவைப்படும்,
சுமந்திரனது பங்களிப்பை, தமது பகை நோக்கியும் பதவி ஆசை நோக்கியும் நிராகரிக்க முற்பட்ட,
கூட்டமைப்புத் தலைவர்களின் செயற்பாடுகள், முட்டாள்த் தனத்தின் எல்லை தொட்டன.
பொது எதிரிகள் பலம் பெற்றாற்போல் மோதவர, அதுபற்றிய எந்தக் கவலையுமே இல்லாமல்,
தமக்குள் தாம், வெளிப்படையாக உட்பகை வளர்த்து நின்ற இவர்தம் செயல்கள்,
இனப்பற்றில்லா இவர்களின் இழிவை வெளிப்படுத்தின.
🏮 🏮 🏮
கூட்டமைப்பைச் சார்ந்த ரெலோ அமைப்பின் தலைவரான,
அடைக்கலநாதன் அவர்கள் ஒரு தேர்தல் கூட்டத்தில்,
'சுமந்திரனைத் தொலைக்கவேண்டுமானால் இன்னதைச் செய்யுங்கள்' என,
பேசியபேச்சு முகநூலில் காணொளியாய் வெளிவந்ததைக் காணமுடிந்தது.
மாற்றணியினர்களை மதிக்காத சுமந்திரனின் பழைய பகை அவர் நெஞ்சில்.
ஊடகப் போராளியாய்த் தன்னை வெளிப்படுத்தும்,
ஊடக முதலாளியான சரவணபவன் அவர்கள் தனது 'உதயன்' பத்திரிகை ஊடாக,
சுமந்திரனுக்கு எதிராக என்னென்ன செய்யமுடியுமோ அத்தனையும் செய்து தோற்றார்.
தோற்றது சுமந்திரனுக்கு எதிரான அவர் முயற்சிகளில் மட்டுமல்ல தேர்தலிலும்தான்.
இம்முறை தனக்கு 'சீற்' வழங்கக்கூடாது என்று சுமந்திரன் முன்மொழிந்ததால் வந்த கடுப்பு அவருக்கு.
இவர்கள் அளவு வெளிப்படையாய் இல்லாவிட்டாலும், 
தமிழரசுக்கட்சியின் தலைவரான மாவை அவர்களும் சுமந்திரன் எதிர்ப்பில் பங்குபற்றியது நிதர்சனம்.
அவருக்கு, தான் பரம்பரை ஆட்சி செய்ய சுமந்திரன் தடையாய் இருப்பதில் ஏற்பட்ட எரிச்சல்.
🏮 🏮 🏮
சுமந்தினுக்கு சார்பாய் சிறீதரன் பேச முற்பட,
அவரது மார்பும் உட்பகையாளிகளின் அம்புகளால் குறி வைக்கப்பட்டது.
'புல்லரெலாம் ஒன்றுபட்டால் சூது நடக்கும்' என்று எங்கோ ஒருபாடலைக் கேட்டதாய் ஞாபகம்.
இம்முறைத் தேர்தலில் கூட்டமைப்பில் அது பட்டவர்த்தனமாய் நடந்தது.
இவர்தம் அறியாமை அசிங்கங்களின் உச்சமாய் சிறீதரனுக்கும் சுமந்திரனுக்கும் எதிராக,
துண்டுப் பிரசுரங்கள் கூட அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டதாம்.
எதிராளிகளின் படை எதிரில் நிற்க,
உலகறிய தமக்குள் மோதிக்கொண்ட இவர்தம் மூடத்தனத்தை,
உலகில் வேறெங்கும் காணமுடியுமா? தெரியவில்லை!
🏮 🏮 🏮
'சூத்தைக்' கத்தரிக்காயின் பழுதடைந்த பகுதியை வெட்டி எறிந்துவிட்டு,
மிகுதியைப் பயன்படுத்தவேண்டும் என்றும்,
மரத்தில், குருவிச்சை பிடித்தால் அதனை வெட்டி எறிந்துவிட்டு,
மரத்தைக் காக்கவேண்டும் என்றும் சரவணபவன் பகிரங்கமாய்ப் பேசிய செய்தியை,
தேர்தலின் பின்னான தனது பத்திரிகையாளர் சந்திப்பில்,
சுமந்திரன் வெளிப்படையாய் எடுத்துச் சொன்னார்.
கத்தரிக்காயின் 'சூத்தைப்' பகுதி எது? என்றும் குருவிச்சை எது? என்றும்,
தெரிந்துவிட்ட காரணத்தால்த்தான் இத்தேர்தலில் சரவணபவனை,
மக்கள் தோற்கடித்தார்கள் என்று கிண்டலடித்து,
தனது பகையை சுமந்திரனும் பகிரங்கமாய் வெளிப்படுத்தினார்.
இன்றைய சூழலில் தமது உட்பகையை ஊடகங்கள் முன்னிலையில்,
அவர் வெளியிட்டதும் தவறேயாம்!
🏮 🏮 🏮
இம்முறை தேர்தலில் சுமந்திரனுக்கு எதிரணியில் நின்று செயற்பட்டவர்கள்,
வரையறையின்றிப் பலராய் விரிந்தனர்.
 
✒️முன்னாள் முதலமைச்சரும் அவர் குழுவினரும்
✒️கஜேந்திரகுமாரும் அவர் குழுவினரும்
✒️மாவை சேனாதிராஜாவும்  அவர் குழுவினரும்
✒️அடைக்கலநாதனும் அவர் குழுவினரும்
✒️சரவணபவனும் அவர் குழுவினரும்
✒️சுமந்திரனால் அழைத்துவரப்பட்டு அவருக்கு எதிராய்ச் செயற்பட்ட மேயர் ஆர்னோல்ட் அவர்களும்
✒️அச்சு ஊடகங்களில் உதயன், வலம்புரி, தினக்குரல் போன்ற சில பத்திரிகைகள்.
✒️சக்தி, டான் ரி.வி. ஐ.பி,சி போன்ற சில தொலைக்காட்சிகள்.
✒️முகம் தெரியாத முகநூல் போராளிகள் சிலர்.
✒️புலம்பெயர் நாடுகளிலிருந்து செயற்பட்ட குழுக்கள் சில, என
 
இத்தனை பேரும் சுமந்திரனுக்கு எதிராய் ஒருமித்து வசைபாட,
பொதுமக்கள் மனங்களிலும் தடுமாற்றம் ஏற்படத் தொடங்கியது மறுக்கமுடியாத உண்மையேயாம்.
இங்ஙனமாய் பெரும்படையே சுமந்திரனை வீழ்த்துவதில் முனைந்து போராட்டியது.
இத்தகைய எதிர்ப்புக்கள் வேறு எந்த வேட்பாளருக்கும் ஒருக்காலும் இருக்கவில்லை.
இத்தனை எதிர்ப்புகளையும் முறியடித்து சுமந்திரன் பெற்ற வெற்றி என்பது,
நிச்சயம் ஒரு சாதனைதான்! என்பதில் ஐயமில்லை.
ஒருமித்த இவ் எதிர்ப்புக்கள் இல்லாதிருந்திருந்தால்,
சுமந்திரன், முன்பு தான் ஒரு பேட்டியில் சொன்னாற்போல,
ஒரு இலட்சம் வாக்குகளைப் பெற்றிருப்பார் என்றுதான் தோன்றுகிறது.
🏮 🏮 🏮
சுமந்திரனையும் சிறீதரனையும் வீழ்த்தவென கூட்டமைப்புக்குள் முனைந்த பலர்,
இம்முறைத் தேர்தலில் தாம் தோற்றுப்போயினர்.
இத்தனை எதிர்ப்புக்களையும் ஒருமித்துப் பெற்ற சிறீதரன்,
35,884 விருப்பு வாக்குகளைப் பெற்று வாக்குத்தேர்வில் முதலாம்  இடத்தையும்,
சுமந்திரன்  27,734 விருப்பு வாக்குகளைப் பெற்று வாக்குத்தேர்வில் இரண்டாம் இடத்தையும் பெற்றது,
எதிரிகள் அத்தனைபேர் முகத்திலும் கரியைப் பூச வைத்தது. 
🏮 🏮 🏮
இதில் வேடிக்கை என்னவென்றால்,
இத்தனை அசிங்கங்களும் கட்சிக்குள் நடந்துகொண்டிருக்க,
'முத்தர் மனம் இருக்கும் மோனத்தே' என்றாற் போல,
கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் இவை எதுவுமே தெரியாதவராய்,
தேர்தல் பிரச்சாரத்தில் திடீரென வந்த உற்சாகத்தால்,
பேரினவாதக் கட்சியினருக்கு சாட்டை அடி கொடுத்துக் கொண்டிருந்தார்.
வெளிக்கட்சிகளை நோக்கி வீசப்பட்ட அவரது சாட்டையால்,
உட்கட்சிக்குள் ஒன்றும் செய்ய முடியவில்லை.
இருபத்திரண்டு  பதிநான்காகி பதினாறாகி பத்தாகியதற்கு அடிப்படைக் காரணம்,
சம்பந்தரின் இந்த ஆண்மையற்ற மௌனமேயாம்.
இனியேனும் அவர் மௌனம் கலைந்து துணிவு பெறுவாரா? என,
தமிழினம் எதிர்பார்த்துக் காத்து நிற்கிறது.
🏮 🏮 🏮
'புலி வருகிறது', 'பூதம் வருகிறது' எனும் அறிவித்தல்களால் மட்டும்,
மக்கள் மத்தியில் அதிரடி செய்துகொண்டிருந்த,
முன்னாள் முதலமைச்சரின் அணி பற்றி அடுத்து பார்க்கவேண்டும்.
உண்மையில் அவரை ஒரு அதிஷ்டசாலி என்றுதான் சொல்லவேண்டும்.
வஞ்சனை, திறமையின்மை, நடுவுநிலைமையின்மை, உண்மையின்மை என,
பல குறைபாடுகளைக் கொண்டிருந்தும் தன் தோற்றத்தால் மட்டும்,
மக்கள் மனதில் நல்லவர் இவர் எனும் ஓர் அபிப்பிராயத்தை அவர் உருவாக்கியிருந்தார்.
'வெள்ளையாய் இருப்பவன் பொய் சொல்லமாட்டான்' எனும் கதைதான் அது.
தேர்தலுக்கு முன்பாக 'கேள்விக்கு என்ன பதில்' எனும் தலைப்பில்,
'உகரத்தில்' நான் கேட்டிருந்த 23 கேள்விகளில்,
ஒன்றுக்குக் கூட முதலமைச்சரோ, அவரது ஆதரவாளர்ளோ பதில் சொல்ல முன்வரவில்லை.
இந்த இலட்சணத்தில் அறநெறியின் வேலிகளை நான் தகர்த்துவிட்டதாய்,
'வலம்புரி' பத்திரிகையில் அதன் ஆசிரியர் என் மீது கண்டனக்கணை தொடுத்திருக்கிறார்.
அவரை நினைக்கப் பரிதாபமாக இருக்கிறது.
தான் செய்துவரும் காரியத்தை நான் செய்வதாய் எழுதி,
பொய்மையைப் புடமிடும் அவர் அறியாமையை என் சொல்ல?
ஒரு காலத்தில் 'உதயன்' பத்திரிகை நடுநிலை தவறிச் செயற்படுவதாய்,
ஒப்பாரி வைத்து வந்த இவர், இன்று அதே காரியத்தைத் தானும் செய்து,
பத்திரிகாதர்மத்தை மட்டுமல்லாமல் பொது தர்மத்தையும் மீறிச் செயற்படுகிறார்.
தன் மைத்துனருக்கு முன்னாள் முதலமைச்சரின் கட்சியில் சீற் வாங்கிக் கொடுத்த நன்றிக்கடன் அது.
'நக்கினார் நாவிழந்தார்' என்பது இதனைத்தான் போலும்.
என்றோ ஒருநாள் இவர்கள் காலத்துக்கும் இனத்திற்கும் பதில் சொல்லவேண்டி வரும்.
🏮 🏮 🏮
புலம்பெயர் தமிழர்களிடமும் ஊர் மக்களிடமும் இரந்து கேட்டுப் பெற்றுக் கொண்ட பணத்தால்,
இம்முறை முதலமைச்சரின் தேர்தல் விளம்பரங்கள் களைகட்டின.
யாழ்ப்பாணப் பத்திரிகைகளில் மட்டுமல்லாது கொழும்புப் பத்திரிகைகளிலும்,
கால்ப்பக்கம்,  அரைப்பக்கம், முழுப்பக்கம் என வந்த விளம்பரங்களைக் கண்டு,
தன் வெற்றி நிச்சயம் என நினைந்த முன்னாள் முதலமைச்சர்,
திருகோணமலையில் சம்பந்தன் ஐயா இளைஞனான ரூபனுக்கு,
விட்டுக்கொடுத்து ஓயவேண்டும் என்று அறிக்கை விட,
இவ் இளைஞரின் உற்சாகம் கண்டு ஊரே சிரித்தது.
🏮 🏮 🏮நாளை நிறைவுறும்...
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்