'அனைவர்க்கும் தாழ்வு' :பகுதி 02-கம்பவாரிதி இலங்கை.ஜெயராஜ்-

🏮  🏮  🏮
தேர்தலின் பின்னான பேட்டி ஒன்றில், தான் எந்தெந்த இடங்களில்,
எத்தனை எத்தனை சீற்றுகளை எதிர்பார்த்தேன் என்று வெளிப்படையாய்ச் சொல்லி,
தன் மனக்கவலையை விக்னேஸ்வரன் அவர்கள் வெளியிட்டிருந்தார்.
பாவம் அவருக்குப் பெரிய அதிர்ச்சிதான்.
பத்திரிகைகளின் ஆதரவு, பிறகட்சிகளின் ஆதரவு, இணைய ஊடகங்களின் ஆதரவு என,
சுமந்திரனுக்கு இருந்த எதிர்ப்பின் அளவான ஆதரவைப் பெற்றும்,
அவரால் மக்கள் மனதை வெல்லமுடியவில்லை என்பது வெளிப்படையாயிற்று.
இத்தனை முயற்சிகளுக்குப் பின் அவருக்கிடைத்திருக்கிற மொத்த வாக்குகள் 21,554தான்.
அவற்றைக் கூட அவரது தனி ஆதரவு வாக்குகள் என நிச்சயம் சொல்லமுடியாது.
இம்முறை தென்மராட்சியில் பலர் அருந்தவபாலனை வெற்றி பெறவைக்க படாதபாடு பட்டனர்.
பதவிக்காக கட்சி மாறிய அருந்தவபாலனும் இரத்தபாசம் பொங்குபவர் போல்,
முதலமைச்சரின் நிழலாய்த் திரிந்து செய்த முயற்சியின் பயனாக 12,674 வாக்குகளைப் பெற்றுக்கொண்டார்.
அவரை ஆதரித்த அனைவருமே அவருக்காக நீதியரசருக்கு வாக்களித்தது மறுக்கமுடியாத உண்மை.
அதுபோலவே மு. முதலமைச்சரின் கட்சியில் அணிசேர்ந்திருந்த பிரபல வேட்பாளர்களான,
சுரேஷ் பிரேமச்சந்திரன் (7756), சிவாஜிலிங்கம் (10121), அனந்தி (9193) போன்றோரும்,
தமது ஆதரவாளர்களைக் கொண்டு முதலமைச்சருக்கும் வாக்கிட வைத்திருந்தனர்.
மேற் சொன்னோரது ஆதரவு வாக்குளை நீக்கிப் பார்த்தால்,
முதலமைச்சரின் தனிப்பட்ட ஆதரவு வாக்குகளின் சிறுமையை நாம் உணர்ந்து கொள்ளலாம்.
🏮  🏮  🏮
எப்படியோ பலரது முதுகுகளிலும் கால் வைத்து தனி ஒருவராகக் கப்பலில் ஏறியிருக்கிறார் முதலமைச்சர்.
'முதலமைச்சர், தேர்தலில் தோற்றால் வென்றுவிடுவார்' 'வென்றால் தோற்றுவிடுவார்' என,
தேர்தலின் முன் என் நண்பர்களிடம் சொல்லியிருந்தேன்.
பாவம் அவருக்கு விதி துணைபுரியாததால் வென்றுவிட்டார்.
இனித்தான் அவரது கஷ்டகாலம் தொடங்கப்போகிறது.
இதுவரை மக்களை ஈர்க்கவேண்டும் என்பதற்காய் சர்வஜன வாக்கெடுப்புப் போன்ற,
நடைமுறைக்குச் சாத்தியமில்லாத பலவற்றைச் சொல்லி வந்த இவர்,
இனி, பாராளுமன்றத்தில் அதைச் சாத்தியப்படுத்திக் காட்டவேண்டும்.
மாகாணசபையில்  தமிழ் உறுப்பினர்களுக்கு மத்தியில் விட்ட 'விடுகைகளை',
பாராளுமன்றத்தினுள் சிங்கள உறுப்பினர்களுக்கு மத்தியில் எப்படி விடப்போகிறார் என்பதுதான் கேள்வி.
பாவம், கஜேந்திரகுமாரோ, டக்ளஸோ, அங்கஜனோ இவருக்குத் துணை செய்யப்போவதில்லை.
தமது உரிமைக்காக இவர் நடத்தப் போகிற சர்வஜனவாக்கெடுப்பைக் காண,
தமிழ்மக்கள் ஆவலோடு காத்திருக்கப் போகிறார்கள் என்பது மட்டும் நிச்சயம்.
இன நன்மைக்காய் இணைந்து செயற்படுவோம் என்ற,
சுமந்திரனின் கோரிக்;கையை நீதியரசர் எதிர்கொண்டிருக்கும் முறைமையே,
அவர் திருந்தப் போவதில்லை என்பதை உறுதிபட உரைக்கின்றது.
🏮  🏮  🏮
அடுத்து நாம் ஆராயவேண்டியது,
கஜேந்திரகுமார் அவர்களின் அணி பெற்றிருக்கும் வெற்றியைப் பற்றியது.
கூட்டமைப்பு, பதவி தராத கோபத்தில் அதிலிருந்து வெளியேறிய கஜேந்திரகுமார்,
மிகக் கடுமையாக முயற்சி செய்து இம்முறை பாராளுமன்றத்திற்குள் நுழைகிறார்.
இம்முறை அவர் அணிக்கு இரண்டு 'சீற்றுகள்' கிடைத்திருக்கின்றன.
கூட்டமைப்புக்குள் ஏற்பட்ட குழப்பங்களும் இவர்களது வெற்றிக்குக் கைகொடுத்திருக்கின்றன.
முகநூலில், 'பத்தாண்டு தவத்தின் பலன்' என்று இவரது வெற்றியைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இக்கூற்றில், அவர்களது மனதிலிருந்த பதவி நோக்கிய ஏக்கம் தெளிவாய்ப் புரிகிறது.
எவ்வாறாயினும் இவர்களது வெற்றி பாராட்டத் தக்கதேயாம்.
ஆனால் இவர்களால் மக்கள் மத்தியில் முன்வைக்கப்பட்ட, 
'ஒரு நாடு இரு தேசம்' என்ற தீர்வும்,
'சர்வதேச ஆதரவுடன் போர்க்குற்ற விசாரணை' என்ற கொள்கையும்,
நிச்சயம் இவர்களை சங்கடப்படுத்தப் போகின்றன.
போர் நடத்திப் புலிகளை வென்ற அணியினர்,
பெரும்பான்மை வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்திருக்கும் நிலையில், 
அறிவிக்கப்பட்ட தமது கொள்கையில் நூறில் ஒரு பங்கைத் தானும்,
இவர்களால் நிறைவேற்ற முடியுமா?
'முடியாது!' என்பதே யதார்த்தமான பதிலாய்த் தோன்றுகிறது.
இதுவரை வெளியில் இருந்துகொண்டு,
சுலபமாய் கூட்டமைப்பிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்த இவர்கள்,
தமிழ் மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இனித்தான் இவர்களது சங்கடம் தொடங்கப் போகிறது.
🏮  🏮  🏮
அண்மையில் கள்ளவாக்குப்  பற்றி கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு,
பதிலளித்த கஜேந்திரகுமார் அவர்கள், 
பொது வாக்களிப்பு எண்ணிக்கையில் அது சாத்தியமில்லை.
விருப்புவாக்கு எண்ணுதலில் அது சாத்தியம் என்றும் சொல்லி,
மாவையை அதற்கு முன்னுதாரணமாய்க் காட்டியிருக்கிறார்.
அப்படியானால் அந்த இரகசியத்தைத் தெரிந்திருந்த அவரது கட்சியிலும்,
அத்தகைய விளையாட்டுக்கள் நடந்தனவா? என்ற கேள்வியும்,
அதனால்த்தான் பலராலும் எதிர்பார்க்கப்பட்ட மணிவண்ணன்,
மூன்றாம் இடத்தை அடைந்தாரா? என்ற கேள்வியும் எழுந்தால்,
அதற்கு கஜேந்திரகுமார் என்ன பதில் சொல்லப்போகிறார்?
🏮  🏮  🏮
தேர்தல் முடிவுகள் வெளியானபோதும்,
சுமந்திரன்மீதான கருத்துத்  தாக்குதல்கள் தொடர்ந்தன.
வாக்குகள் எண்ணும் களத்தில் ஒருவர் வீதியில் நின்று,
முதலில் சுமந்திரன் வாக்கு எண்ணும் இடத்திற்கு வராமை பற்றி குற்றம் சொன்னார்.
பின்னர் சுமந்திரன் அவ்விடத்திற்கு வந்ததும், வந்தது பற்றிக் குற்றம் சொன்னார்கள்.
சசிகலாவுக்கும் சுமந்திரனுக்குமான பிரச்சினை கூட்டமைப்பின் உட்கட்சிப் பிரச்சினை.
ஆனாhல், அதுபற்றி கூட்டமைப்புக் கவலைப்பட்டதை விட,
சிவாஜிலிங்கமும் ஸ்ரீகாந்தாவும் கவலைப்பட்டதுதான்  அதிகம்.
களத்தில் நின்று 'உருவாடிய' அவர்களின் செயல்,
அவர்கள் பற்றிய மதிப்பைக் குறைத்தது.
🏮  🏮  🏮
விருப்பு வாக்குகளின் எண்ணிக்கை முழுமையாய் வெளிவருவதற்கு முன்னரே,
'அவர் வென்று விட்டார், இவர் வென்றுவிட்டார்' என்று,
முகநூல்களில் வெளிவந்த செய்திகள் தேவையில்லாமல் மக்களைக் குழப்பின.
இடைநிலையில் வெளிவந்த தேர்தல் முடிவுகளைக் கொண்டு,
தத்தம் அணிசார்ந்த தலைவர்களுக்கு வாழ்த்துக்கள் போடுவதில்,
முகநூல் போராளிகள் முன் நின்றனர்.
அருந்தவபாலன் வென்றுவிட்டதாய் முதலில் செய்தி வந்தது.
பின்னர் விக்னேஸ்வரன் வென்றதாய் அம்முடிவு மாற்றி உரைக்கப்பட்டது.
அதேபோலத்தான் சசிகலா வெற்றி பெறுவதாக முதலில் வந்த செய்தி, 
பின்னர் அவருக்கு நான்காம்  இடம்தான் கிடைத்ததாய் மாறி, உண்மை உரைத்தது.
இந்நிலையில் சுமந்திரன், வாக்குகளைத் தனக்குச் சாதகமாக மாற்றிவிட்டார் என்று,
மேற் சொன்ன பிரமுகர்கள் போர்க்கொடி தூக்கத் தொடங்கினர்.
முதலில் வந்த அருந்தவபாலனின் வெற்றிச் செய்தி,
முதலமைச்சரின் வெற்றிச் செய்தியாய் மாற்றப்பட்டபோது,
இதே குற்றச்சாட்டை முதலமைச்சர்மேல்  ஏன் சாட்டக்கூடாது? என்பதற்கான பதிலை,
தாம் தராமலேயே மேற் குழுவினர் சுமந்திரன்மீது குற்றம் சாட்டி நின்றது  நகைப்பைத் தந்தது.
🏮  🏮  🏮
மு.முதலமைச்சரோடு இணைந்த மாற்றணியினர் தேர்தலுக்குப் பின் செய்துகொண்டிருக்கும்,
அநாகரிகச் செயல்கள் மக்களை முகம் சுழிக்க வைத்திருக்கின்றன.
திருமதி சசிகலா அவர்களின் தோல்வியை வைத்து,
அவர்கள் நடிக்கும் நாடகங்களால் சமுதாயத்திற்குள் ஏகப்பட்ட குழப்பங்கள்.
சுமந்திரனின் ஆதரவாளர்கள் சசிகலாவை மிரட்டுவதாகவும்,
சுமந்திரனால் வாக்கு எண்ணிக்கை மாற்றப்பட்டதாகவும்,
விருப்புவாக்கு எண்ணிக்கைமுடிவு இறுதியாய் வெளிவருவதன் முன்னரே,
இவர்கள் பண்ணிய குழப்பத்தில் சசிகலா அவர்களே தடுமாறிப் போனது உண்மையாம்.
மாற்றணியினரின் திட்டமிடப்பட்ட முகநூல் பிரச்சாரத்தால்,
மக்களும்கூட மேற் சொன்ன விடயங்கள் எல்லாம் நடந்து விட்டதாய் எண்ணிக் கொந்தளித்தனர்.
🏮  🏮  🏮
ஆனால் இன்று உண்மை பகிரங்கமாகிவிட்டது.
சசிகலா அவர்களே மேற் சொன்ன எதுவும் நடக்கவில்லை எனப் பேட்டி அளித்திருக்கிறார்.
இவ்விடயத்தில், துணிவானவர் என நான் மதிப்பு வைத்திருந்த,
சிவாஜிலிங்கம் அவர்களின் நடவடிக்கைகள் பெரிதும் கவலை தந்தன.
மாற்றணியின் பிரச்சினை என்று தெரிந்தும், பிரச்சினைகளைக் கிளப்பவேண்டும் என்பதற்காக,
வெட்கமே இல்லாமல் சிவாஜிலிங்கம், அனந்தி, அங்கஜன் போன்றோர்,
சசிகலாவின் வீடு தேடிச்சென்று நடத்திய நாடகம் அருவருப்பைத் தந்தது.
மேலிடத்தின் ஆதரவோடுதான் வாக்கெண்ணிக்கையில் சுமந்திரனால்,
மாற்றம் செய்யமுடிந்திருக்கிறது என்று,
மேலிடத்தின் ஆளான அங்கஜனிடமே சிவாஜிலிங்கம் முறையிட,
பாவம், அங்கஜன் சங்கடப்பட்டு நெளிந்து கொண்டிருந்தார்.
🏮  🏮  🏮
இதேபோல், தேசியப்பட்டியல் விடயத்தில் விலக்கப்பட்ட மாவையின் இல்லத்திற்கு,
சிவாஜிலிங்கமும் ஸ்ரீகாந்தாவும் சென்று செய்த 'வால்முறுக்கல்களும்,'
அநாகரிகத்தின் வெளிப்பாடாகவே மக்களால் பார்க்கப்பட்டன.
குண்டு இருப்பவன் துப்பாக்கியால் சுடுவான்,
இல்லாதவன் 'சோங்கால்' தான் அடிக்க முயல்வான் என்பார்கள்.
அந்தக் கதைதான்  இங்கும் நடந்தது.
'சோங்கால்' அடிக்க முற்பட்ட இக்கூட்டத்தின் முயற்சிகள் கூட,
பெரும்பாலும் மக்கள் மத்தியில் தோற்றுத்தான் போய்விட்டன.
பொய்மையைத் திட்டமிடுவதில் இந்தக் கூட்டம் காட்டிய வீரியம்,
தமிழினத்தின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்பது மட்டும் நிச்சயம்.
🏮  🏮  🏮
இவ்விடயத்தில் முதலமைச்சரின் கட்சியில் இணைந்திருக்கும்,
சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்கள் காட்டும் நிதானம் மகிழ்வைத் தருகிறது.
முன் சொன்ன குழப்பங்கள் எதிலும் கலந்து கொள்ளாத அவர்,
அண்மையில் வெளியிட்ட ஓர் அறிக்கை,
அவரைப் பொறுப்புமிக்க ஒரு தலைவராய் இனங்காட்டியிருக்கிறது.
அத்தகையோரை வைத்து மீண்டும் இன ஒற்றுமையை உருவாக்க,
கூட்டமைப்பு முயல்தல் நன்றாம்.
அதேபோல இம்முறை தேர்தல் களத்திலும் வெற்றியின் பின்னுமாக,
எதிரணிகளை விமர்சிக்காத டக்ளஸ் தேவானந்தா அவர்களும்,
பாராட்டுக்குரியவராகிறார்.
🏮  🏮  🏮
எல்லாம் முடிந்துவிட்டது.
முன்னாள் முதலமைச்சர் செய்த திட்டமிட்ட கூத்துக்களாலும்,
கூட்டமைப்பில் தமிழரசுக்கட்;சி செய்த சில எதேச்சாதிகார முடிவுகளாலும்,
ஒன்றாய் இருந்த தமிழினம் இன்று பலவாக உடைந்துவிட்டது.
தனது வழமையான  வெற்றியிலிருந்து தாழ்ந்து,
கூட்டமைப்பு இம்முறை பத்து இடங்களை வென்றிருக்கிறது.
கஜேந்திரகுமார் அணியினர் இரண்டு இடங்களையும்,
முன்னாள் முதலமைச்சர் அணியினர் ஒரு இடத்தையுமாக,
மொத்தம் பதின்மூன்று இடங்களை தமிழ்த்தேசியம் பேசும் கட்சிகள் பெற்றுள்ளன.
சிலகாலத்தின் முன்பு கூட்டமைப்பு 22 இடங்களைப் பெற்று,
தமிழ்மக்களின் ஒருமித்த குரலாய் பாராளுமன்றத்திற்குள் நுழைந்தது.
இன்று பேரினக்கட்சி ஒன்றுபட்டு பலத்தோடு உள் நுழைந்த நிலையில்,
நம் தமிழ்த்தலைவர்கள் பிரிவுபட்டு நிற்கின்றார்கள்.
புதிய அரசாங்கம் பதவிப்பிரமாணம் செய்தகையோடு,
தமிழ்க்கூட்டமைப்பினர் தமிழ்மக்களின் பிரதிநிதிகள் அல்ல என்றும்,
சமஷ்டி, அரசியல் கைதிகள் விவகாரம், வடகிழக்கிற்கான மக்கள் வாக்கெடுப்பு,
இராணுவத்தை அகற்றுதல் போன்ற பேச்சுக்கே இடமில்லை என்றும்,
நமது தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தினதும் கோரிக்கைகளை நிராகரித்து,
அதிரடியாய் அறிவித்திருக்கிறது.
இனி என்ன செய்யப்போகிறார்கள் நம் தமிழ்த்தலைவர்கள்?
🏮  🏮  🏮
பல் குழுவும் பாழ் செய்யும் உட்பகையும் வேந்து அலைக்கும்
கொல் குறும்பும்  இல்லது நாடு
ஒரு இனம் உருப்பட வள்ளுவன் சொன்ன இலக்கணம் இது.
வேறுபட்ட குழுக்களும், ஒருவர்க்கொருவர் இடையிலான உட்பகையும்,
தலைவனுக்குத் தீமை செய்யவல்ல எதிராளிகளும் இல்லாத,
நாடும் இனமுமே உருப்படும் என்கிறான் வள்ளுவன்.
வள்ளுவன் நீக்கச் சொன்ன இவை அனைத்தும்,
எங்கள் தமிழினத்திடம் நீங்காது நிறைந்து கிடக்கின்றன.
தந்தை செல்வா சொன்ன கடவுள் வந்தாலும்,
இனி நம் இனத்தைக் காக்க முடியுமா? 
தெரியவில்லை!
🏮  🏮  🏮
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்