'அருந்தமிழின் உயர்வெல்லாம் அறிந்த ஐயன்...' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

ளமெல்லாம் பேரதிர்ச்சி கொண்டதம்மா!
ஒப்பற்ற பெருங்கலைஞன் மறைவைக் கேட்டு
நிலமெல்லாம் ஈழத்தின் பெருமை சொல்ல
நிமிர்வோடு இசைக் கலையின் நுட்பம் கற்று
வளமிகுந்த தன் குரலால் பலரும் போற்ற
வாரித்தான் இசைக்கொடையை வழங்கி நின்ற
பலர் புகழ்ந்த எம் ஐயன் பாரை நீத்தான்
பதறித்தான் இசை உலகம் வாடிற்றம்மா!
 
எப்போதும் இசைக்கடலில் மூழ்கி நின்றோன்
ஏற்றமிகு மனத்தாலும் வாக்கதாலும் 
தப்பேதும் இல்லாது இசையைப் போற்றி
தான் பெற்ற பெரும் சொத்தைப் பலருக்கீந்தோன்
முப்போதும் இசையன்றி வேறு எண்ணம் 
முனையளவும் இல்லாத பெரிய ஏந்தல்
இப்போது விண் சேர்ந்தான் இவனைப் போல
இனியார் தான் இங்குள்ளார்? இழந்து போனோம்.
 
கம்பனது கழகமதைக் கண்ணாய்ப் போற்றி
கற்றவர்கள் மத்தியிலே உயர்வு தந்தோன்
தம் பெரிய இசையாலே எமக்காய்ப் பாடி 
தனிப் பெருமை கழகத்திற்காக்கித் தந்தோன்
நம்பி எமைப் பிள்ளைகளாய்ப் போற்றி நின்றோன்
நலமிகுந்த தம் வரவால் உறவு செய்தோன்.
எம் பெரிய வளர்ச்சிக்கு வேராய் நின்று
ஏற்றங்கள் செய்தோரில் உயர்ந்து நின்றோன்.
 
சுரங்களிலே வார்த்தைகளை அமைத்துக்காட்டி
சொக்கித்தான் சபையினரை மயங்க வைத்தோன்.
வரமெனவே அமைந்த பெரும்வடிவினாலே
வளமாகச் சபைகளையே நிறைத்து நின்றோன்.
அருந்தமிழின் உயர்வெல்லாம் அறிந்த ஐயன்
அற்புதமாய் நாடகங்கள் நடிக்கவல்லோன்
பெரும் பதவிவகித்தாலும் பெருமை காட்டா
பெரும் பண்பன் பிள்ளையெனப் பழகும் மேலோன்
 
அமிழ்தொத்த இவர் இசையைக் கேட்டு எங்கள்
அரங்குகளில் தமிழ்நாட்டுக் கலைஞரெல்லாம்
தமிற் பெரியோன் இவன் என்று தரணிதொட்டு
தாழ்ந்ததனை நினைக்கின்றேன் தஞ்சமென்று
நிமிர்வுடைய இவர்தனையே பணிந்து நின்று
நேசத்தால் உறவாகி நின்றதெல்லாம்
தமிழ் ஈழம் இனி என்றும் காணுமாமோ?
தள்ளாத பெருஞ் சொத்தை இழந்து போனோம்.
 
எந்தனக்கும் சிலநாட்கள் ஏற்றம்மிக்க
இசையதனைப் பிச்சையதாய் இட்ட வள்ளல்
சொந்தமென எனை நினைந்து இல்லந்தேடி
சோர்வின்றி தானே வந்தருளும் செய்தோன்.
மந்தமிகு புத்தியதால் மாண்புமிக்க 
மாமேதை தந்த வரம் இழந்து நின்;று
நொந்த கதை இப்போதும் நினைவில் பாயும்
நோற்றாது பெருவரத்தை இழந்து போனேன்.
 
கணபதிப்பிள்ளை அவரின் கனிந்த நெஞ்சும்
கற்றோர்கள் வியக்கின்ற தமிழும் பாட்டும்
மனமதனில் வஞ்சமிலா நினைவும் அன்பும்
மாறாத பக்தியிலே ஊறிப் பண்ணால்
தினம் தினமும் ஈசனையே பாடும் வாழ்வும்
தேற்றமொடு மாணவரை ஏற்றி என்றும்
நினைவதனில் போற்றுகிற நிமிர்ந்த பண்பும்
நினைத்தாலும் எவர்க்கேனும் வருமோ கூறீர்!
 
வேற்றுலகம் சென்றாலும் எங்கள் ஐயன்!
விண்ணிருந்தும் எமைத்தாங்கி நிற்பான் நல்ல
நாற்றுகளாய் நாம் விளைந்து பயனும் செய்ய
நல்ல வரம் அங்கிருந்தும் எமக்கு ஈவான்
மாற்றமிலா தனதன்பால் கழகந் தன்னை
மண்மீது உயர்த்திடுவான் மனதில் வைத்து
போற்றி அவன் திருவடியைப் பணிந்து நின்றோம்
போனாலும் அவன் எம்முள் நிற்பான் கண்டீர்.
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்