'அழியா அழகு' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

லகை ஈர்த்த அஞ்சனவண்ணன் இராமன்,
கற்போர் அனைவரதும் நெஞ்சகம் புகுந்தவன்.
கற்போரால் மட்டுமன்றி,
காவியத்துள் உலாவரும் மற்றைய கதை மாந்தராலும், 
பெரிதும் விரும்பப்படுபவன்.
கண்ணினும் நல்லன், கற்றவர் கற்றிலாதவரும்
உண்ணும் நீரினும் உயிரினும் அவனையே உவப்பர்

இஃது இராமன் பற்றிய வசிட்டரின் கருத்து.
🌧 🌧 🌧
வேட்டுவக் குகனோ,
அஞ்சன வண்ணன் என் ஆருயிர் நாயகன் எனப் பேசுகிறான்.
காதல் எந்தன் உயிர் மேலும் இக்கரியோன் பால் உண்டாம்,
இது விசுவாமித்திரரின் கூற்று,
🌧 🌧 🌧
இராமனைச் சார்ந்தார் மட்டுமன்றி பகைத்திறத்தாரும்கூட,
காவியத்தின் பல இடங்களிலும் இராமனைப் போற்றி நிற்கின்றனர்.
இராமனால் வீழ்த்தப்பட்ட வாலி,
தாயென உயிர்க்கு நல்கி தருமமும் தகவும் சால்பும்
நீயென நின்ற நம்பி 

என அவனைப் புகழ்ந்துரைக்கிறான்.
இராமனின் எதிரியாகிய இராவணனும் கூட,
நாசம் வந்துற்ற போதும் நல்லதோர் பகையைப் பெற்றேன் 
என இராமனைப் பாராட்டிப் பேசுகிறான்.
🌧 🌧 🌧
இவ்வாறு,
கற்போர் நெஞ்சமும், கதை மாந்தர்தம் கருத்துமன்றி,
காவியம் செய்த கம்பனும் இராமன்பால் மனதைப் பறிகொடுத்து,
மயங்கி நிற்பதாய ஓர் இடம் உண்டு.
அம்மயக்கத்தை வெளிப்படுத்தும் பாடல் அற்புதமானது.
அப்பாடலை விளக்கம் செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாம்.
இனி அப்பாடலைக் காண்போம்.
🌧 🌧 🌧
கைகேயி வரத்தின்படி காடேகப் புறப்படும் இராமனைத் தொடர்ந்து,
அயோத்தி மக்கள் அனைவரும் உடன் செல்கின்றனர்.
இரவு, ஊர் எல்லையில் அனைவரும் தங்கிய நிலையில்
சுமந்திரனை இரகசியமாக நாடேகும்படி உத்தரவிட்ட இராமன்,
சீதையையும், இலக்குவனையும் அழைத்துக் கொண்டு,
மற்றவர்களுக்குத் தெரியாமல் காட்டுக்குள் புகுகிறான்.
அப்போது சூரியோதயம் நிகழ்கிறது.
இஃதே கம்பன் இராமன்பால் மயங்கியதான பாடல் பிறக்கும் சூழலாம்.
🌧 🌧 🌧
காலை வெயில் இராமன் மேனியில் படரச் சீதையோடும் இலக்குவனோடும்,
இராமன் நடந்து செல்லும் காட்சி கம்பன் மனதில் விரிகிறது.
இராமன்பால் தன்னைப் பறிகொடுத்த கம்பன்,
சூரியன் தன் கதிர்களால் இராமனைச் சுடுவதைக் கண்டு தவிக்கிறான்.
சூரியன்மேல் அவனுக்குக் கோபம் பிறக்கிறது.
சூரியனைக் குறிப்பதான நல்ல பொருள் தரும் பெயர்கள் பல இருக்கவும் 
கொடியோன் எனப் பொருள்படும் பெயரைத் தேர்ந்தெடுத்து,
சூரியனை விளிப்பதன் மூலம் தன் கோபத்தை வெளிப்படுத்துகிறான் அவன்.
பாடல் தொடங்குகிறது.
வெய்யோன்.........
🌧 🌧 🌧
அம்மானதக் காட்சியை மேலும் கூர்ந்து நோக்குகிறான் கம்பன்.
வாடிய அவன் உள்ளம் மகிழ்கிறது.
இராமன் மேனியைத் தீண்டியதான சூரியக் கதிர்கள் தம் ஆற்றல் இழந்து,
இராமன் மேனியிலிருந்து எழுவதான சோதியில் மறைந்து போகின்றன.
இராமனின் மேனி ஒளி சூரிய ஒளியை உள்வாங்கி விட, 
தோற்றனன் சூரியன் என மகிழ்கிறது கம்பனது உள்ளம்.
அம்மகிழ்ச்சியில் கவிதையின் முதலடியை நிறைவு செய்கிறான்.
வெய்யோன் ஒளி தன் மேனியின் விரிசோதியில் மறைய
🌧 🌧 🌧
இப்பாடல் அடியில் சூரியக் கதிரை ஒளியென்;றும், 
இராமன் மேனி ஒளியைச் சோதியென்றும்,
ஒன்றான ஒளியினை வேறுபடுத்திச் சுட்டும்,
கம்பனின் சொற்றிறம் கவனிக்கத் தக்கது.
ஒளி என்பது உலகைச் சார்ந்தது.
சோதி என்பது இறையைச் சார்ந்தது.
இந்த இருவேறு வார்த்தை வேறுபாடுகளால்,
இராமனின் தெய்வத்தன்மையை கம்பன் மறைமுகமாகக் குறித்தனன் போலும்.
🌧 🌧 🌧
கம்பன் மனதில் தொடர்ந்தும் அக்காட்சி விரிகிறது.
சூரிய ஒளியை வென்று நடக்கிறான் இராமன்.
அவன் அடிபற்றிச் செல்கிறாள் சீதை.
பெண்மை இலட்சணங்கள் அத்தனையும் பொருந்தியவள் அவள்.
அவளது மென் பாதங்கள் கானகத்தின் வெம்மை தாங்காது தடுமாறுகின்றன.
அத்தடுமாற்றத்தால் அவள் மெல்லிடை அசைகின்றது.
அசையும் அவளது இடையைக் கண்ட கம்பன் மனதில் ஒர் ஐயம் தோன்றுகிறது.
இம் மெல்லியளுக்கு இடை உண்டா? இல்லையா?
இதுவே அவ் ஐயமாம்.
தெளிவுபெற முடியாத கம்பன் தன் ஐயத்தை வெளிப்படுத்தி, 
கவிதையின் அடுத்த அடியை ஆரம்பிக்கிறான்.
பொய்யோ எனும் இடையாளொடும்.........
🌧 🌧 🌧
அடுத்து, தொடர்ந்து செல்லும் இலக்குவனை காண்கிறது கம்பன் மனம்.
அவன் இராமனுக்கு இளையான்.
தன் துன்பம் பாராதும், கண் துஞ்சாதும் இராமனுக்குத் தொண்டாற்றுவதிலும்கூட,
அவன் இளையாதவனாம்.
இவ்விரு கருத்தும் தோன்ற இலக்குவனை இளையான் எனச் சுட்டி,
கவிதையின் இரண்டாம் அடியைப் பூர்த்தி செய்கிறான் கம்பன்.
வெய்யோன் ஒளி தன் மேனியின் விரி சோதியில் மறைய 
பொய்யோ எனும் இடையாளொடும் இளையானொடும் போனான்.

🌧 🌧 🌧
மீண்டும் கம்பன் பார்வை இராமன் மேற்படுகிறது.
நடந்து செல்லும் இராமனின் அழகை மனதில் கண்டு மயங்குகிறான் கம்பன்.
தான் அனுபவித்த இராமனது அழகை மற்றவர்களையும் அனுபவிக்கச் செய்ய,
கம்பனின் கவியுள்ளம் விழைகிறது.
அத்தெய்வீக அழகை விபரிக்கச் சொற்களைத் தேடுகிறான் அவன்.
சொற்களுள் அடங்கிடுமா அத்தெய்வ அழகு?
தன் இயலாமையை நேர்செய்ய உவமைகளைச் சரணைடைகிறான் கம்பன்.
பொருத்தமான உவமையைத் தேடி ஆராயத் தொடங்குகிறது அவன் மனம்.
🌧 🌧 🌧
இராமனோ, கரியசெம்மல், கண்டோர் கண்களைக் குளிரச் செய்பவன் அவன்.
கருமையும் குளிர்மையும் பொருத்தியதோர் உவமானம்,
அவன் அழகை வெளிப்படுத்தும் என எண்ணிய கம்பன், 
அவ்விரண்டும் பொருந்தியதான மையினை
அவன் அழகுக்கு உவமையாக்குகிறான்.
மூன்றாம் அடியின் முதற்சொல் பிறக்கிறது.
மையோ......
🌧 🌧 🌧
கம்பனுக்கு திருப்தியில்லை.
'மை' குளிர்மையும் கருமையும் உடையது எனினும் அது அழிந்து போகக்கூடியது.
இராமன் அழகோ காலங்கடந்து நிலைக்கப் போவது.
கண்ணிலன்றி வேறெங்கு இட்டாலும் கறையாய்த் தோன்றக் கூடியது மை.
எவ்விடத்தும் பொருந்தி அழகு தருவது இராமனின் அழகு.
இராமனின் அழகை உவமிப்பதில் மையினது இயலாமை தெரியவர,
வேறு உவமையைத் தேடத் தொடங்குகிறான் கம்பன்.
🌧 🌧 🌧
அசையாத திண்மை உடையவன் இராமன்.
அவன் பச்சை வண்ணன், மற்றவர்களால் விரும்பப்படுபவன்.
இராமனின் இவ்வியல்புகள் மனத்துள் உதிக்க,
அதே இயல்புகள் பொருந்தி நிற்கும் மரகதக் கல்லை உவமையாக்கி,
கவிதையின் அடுத்த சொல்லைச் சேர்க்கிறான் கம்பன்.
மையோ, மரகதமோ...............
🌧 🌧 🌧
கம்பனுக்கு இப்போதும் திருப்தி உண்டாகவில்லை.
அவ் உவமையின் பொருத்தமின்மையை அறிவு எடுத்துக் காட்டுகிறது.
திண்மை மட்டுமன்றி மென்மையும் உடையவன் இராமன்.
திண்மை மட்டுமே உடையது மரகதக் கல்.
மதிப்பிட முடியாத பெருமை கொண்டவன் இராமன்.
மதிப்பிடக் கூடியது மரகதம்.
இராமன் நல்லாரை மட்டும் சார்ந்து நிற்பான்.
தீயார் கையிலும் சேரக் கூடியது மரகதம்.
இவ் உவமையையும் கம்பனது அறிவு நிராகரிக்க,
மீண்டும் அவனது அறிவின் தேடல் தொடர்கிறது.
🌧 🌧 🌧
இராமன் நீலவண்ணன்.
அளவிடமுடியாத பெருமை கொண்டவன்.
நற்குணங்களான செல்வங்களைத் தன்னகத்து அடக்கியவன்.
கடலும் நீல வண்ணம் உடையது.
அளவிட முடியாத பெருமை கொண்டது.
கடல்படு திரவியங்களைத் தன்னகத்தே அடக்கியது.
பொருத்தங்கள் வெளிப்பட மகிழ்ந்த கம்பன்,
இராமனின் மேனிக்குக் கடலை உவமையாக்கிக் கவிதையைத் தொடர்கிறான்.
மையோ மரகதமோ மறிகடலோ..................
🌧 🌧 🌧
இப்போதும் திருப்தியுற மறுக்கிறது கம்பனின் மனம்.
ஆரவாரத் தன்மை கொண்டது அலைகடல்.- இராமனோ அடக்கமானவன்.
உவர்ப்பானது அலை கடல், இராமனோ அனைவர்க்கும் இனியன்.
அச்சமூட்டுந் தன்மை அலை கடலுக்கு உரியது.
இராமனோ, அச்சந் தீர்த்து ஆட்கொள்பவன்.
இவற்றால் கடல் உவமையும் தோற்றுப் போக,
மீண்டும், புதிய உவமை தேடுகிறது கம்பனின் அறிவு,
🌧 🌧 🌧
இப்போது இராமனின் உத்தம குணங்கள் அவன் மனதில் வரிசைப்படுகிறன.
வேறுபாடின்றி அனைவர்பாலும் கருணை பொழிபவன் இராமன்.
மேலிருந்து கீழ்வந்த அவதார புருஷன் அவன்.
தான் சென்ற இடங்களையெல்லாம் செழிக்கச் செய்பவன்.
இத்தனை இயல்போடும் கருமை நிறமும் பொருந்தியவன்.
இவற்றால் மழைமுகிலே இராமனுக்குத் தக்க உவமை எனக்கொண்டு, 
கவிதையைத் தொடர்கிறான் கம்பன்.
மையோ மரகதகமோ மறிகடலோ மழை முகிலோ.........
🌧 🌧 🌧
சற்று ஆராய, பொருந்திய இவ் உவமையும்,
இராமனின் அழகுக்கு இணையற்றுப் போவது தெரிகிறது.  
வேண்டுவார்க்கு வேண்டும் இடத்தில் பயன் தருபவன் இராமன்.
மழையோ அதற்கு மாறுபட்ட இயல்பைக் கொண்டது.
இராமனோ நல்லார்க்குத் தீங்கிழையாதவன்.
காலந்தவறிப் பெய்து நல்ல பயிர்களையும் அழிக்க வல்லது மழை.
இராமனோ, எல்லார்க்கும் எக்காலத்திலும் கருணை பொழிபவன்,
மழையோ காலம் வகுத்து மட்டுமே பெய்வது.
எனவே, இந்த 'மழை' உவமையும் பொருந்தாமற் போக,
சலிப்படைகிறான் கம்பன்.
🌧 🌧 🌧
இத்தனை தமிழாற்றல் இருந்தும்,
இராமனின் அழகை ஓர் உவமைக்குள் அடக்க முடியாமற் போனது கண்டு,                            
தவிக்கிறான் கம்பன்.
சொல்லிவிட வேண்டும் எனும் ஏக்கம், சொல்ல முடியாத தவிப்பு,
தன் தமிழால் முடியாது போன இயலாமை,
இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து விரக்தியின் உச்சநிலைக்கு அவனைத் தள்ள, 
வார்த்தைகளைக் கடந்து நிற்கும் இராமன் அழகால் அதிசயமுறுகிறான் அவன்.
அழியா அழகு கொண்ட இராமனை, அழியும் இவ் உலக அழகுகளைக் கொண்டு,
உவமிக்க முடியாது எனும் உண்மை கம்பனுக்குப் புரிகிறது.
தன் நிலைக்கு இரங்கி 'ஐயோ' எனும் வார்த்தை அவனை அறியாமல் வந்து விழுகிறது.
🌧 🌧 🌧
அவ்வார்த்தையைக் கொண்டே அடுத்த அடியை ஆரம்பித்து,
இராமனின் அழியா அழகை வியந்து கவிதையை நிறைவு செய்கிறான் கம்பன்
வெய்யோன் ஒளி தன் மேனியின் விரசோதியில் மறைய
பொய்யோ எனும் இடையாளொடும் இளையானொடும் போனான் 
மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ 
ஐயோ இவன் வடிவென்பதோர்
அழியா அழகுடையான்
🌧 🌧 🌧
இங்கோர் அதிசயம் நிகழ்கிறது.
கம்பன் அடுத்தடுத்து அடுக்கிய உவமைகளால்,
இராமனின் அழகை விளங்க முடியாத நாம்,
வியப்பினாலும் இயலாமையினாலும் கம்பன் இறுதி அடியில் இட்ட,
ஐயோ எனும் சொல்லால் அதனை உணர்ந்து விடுகிறோம்.
🌧 🌧 🌧
எங்ஙனம்?
தமிழ்க்கடலைக் கடைந்து இராமகாதை எனும் அமிர்தத்தை,
உலகிற்கு ஈந்த கவிச்சக்கரவர்த்தி கம்பனே,
இராமனின் அழகை உவமிக்கச் சொற்களின்றி,
தன் இயலாமையால் ஐயோ எனச் சலிப்படைய, 
அதுவரை உவமைகளால் இராமனது அழகை விளங்க முடியாத நாம்.
அறிய முடியாத இராமனின் அழகினை,
இப்போது உணர்ந்து விடுகிறோம்.
🌧 🌧 🌧
உவமைத் தேர்வில் தோற்ற கம்பன்,
இயலாமையாலும் வியப்பாலும், தான் இட்ட ஐயோ எனும் உணர்வுச் சொல்லால், 
இராமனின் அழகைக் கற்போர்க்கு உணர்த்திவிடுகிறான்.
அதுமட்டுமன்றி உலகியலில் அவலச் சொல்லாய்க் கருதப்படுகிற ஐயோ எனும் சொல்லை,
இராமனின் அழகை உணர்த்தும் மங்களச் சொல்லாகவும் ஆக்கி மகிமை செய்கிறான் அவன்.
இவ் ஒரு பாடலில் இராமனின் அழியா அழகையும்,
கவிச்சக்கரவர்த்தி கம்பனின் கவியாற்றலையும் கண்டு,
நாம் வியந்து நிற்கிறோம்.
🌧 🌧 🌧

 

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்