'அவள் பறந்து போனாளே!' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

யிர் துடித்துப் போயிற்று.
வாழ்வின் துன்பநாள்களில் ஒன்றாக இன்றைய நாளும் விடிந்தது.
வெள்ளிக்கிழமையும் அதுவுமாய் இன்றைய காலைப்பொழுதில்,
எங்கள் கிருஷ்ணியின் உயிர் பிரிந்து போயிற்று.
யாரது கிருஷ்ணி என்கிறீர்களா?
எங்கள் வீட்டு நாயின் பெயர்தான் கிருஷ்ணி.
எனது பழைய வாசகர்களுக்கு,
கிருஷ்ணியை ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன்.
சில வருடங்களுக்கு முன்பு நான் எழுதிய 'அதிர்வுகள்' தொடரில்,
'கிருஷ்ணியின் காதல்' எனும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்.
அதனைப் படிக்காதவர்கள்,
'உகரத்தில்' பதிவாகியிருக்கும் (கிருஷ்ணியின் காதல்) அந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு,
இதனைப் படித்தால்த்தான்,
இக்கட்டுரைக்குள் பதிவாகியிருக்கும் உணர்வினைப் புரிந்துகொள்ளலாம்

🐕‍🦺 🐕‍🦺 🐕‍🦺

கிருஷ்ணி எங்கள் வீட்டுக்கு வந்து கிட்டத்தட்ட பத்தாண்டுகள் முடியப்போகிறது.
பத்தாண்டுகள் வளர்ந்த உறவு பத்தே நிமிடத்தில் முடிந்து போயிற்று.
இனி, நாம் கூப்பிட்டால் கிருஷ்ணி ஓடிவராது.
இனி, எங்கள் மடியில் வந்து விழுந்து கிருஷ்ணி விளையாடாது.
இனி, புதிதாய் வருகிறவர்களைக் கண்டு குலைத்து கிருஷ்ணி மிரட்டாது.
இனி, வீட்டுக்குள் ஓடி வந்து 'சூ' போய் எங்கள் டாக்டரிடம் கிருஷ்ணி அடிவாங்காது.
ஒரு நாய் கூட நிலையாமையை உணர்த்துமா? வியப்பாய் இருக்கிறது.

🐕‍🦺 🐕‍🦺 🐕‍🦺

எங்கள் வீட்டாரைப் பொறுத்தவரையில் கிருஷ்ணி சாந்தசொரூபி.
வெளியாரைக் கண்டாலோ அது 'காளிக்கோலம்' கொள்ளும்.
முற்றத்தில் போய் உட்கார்ந்தால் ஓடிவந்து மடியில் பாய்ந்து,
அது செய்யும் செல்ல விளையாட்டுக்கள் மறக்கமுடியாதவை.
எங்கள் கழக டாக்டருக்கும் கிருஷ்ணிக்குமான அன்பு பற்றி,
போன கட்டுரையிலேயே எழுதியிருக்கிறேன்.
டாக்டருக்கும் கிருஷ்ணிக்குமான உறவு புதுவிதமானது.
ஒருவரோடும் அன்பு காட்டிப் பேசாத எங்கள் டாக்டர்,
கிருஷ்ணியோடு மட்டும் 'செல்லம்பொழிவது' கண்டு,
அவரது மகளே பொறாமைப்படுவாள்.

🐕‍🦺 🐕‍🦺 🐕‍🦺

செல்லம் பொழிவது என்பதற்கு அதனோடு சிரித்து விளையாடுவதாய்,
அவசரப்பட்டு பொருள் கொண்டுவிடாதீர்கள்.
அதன் காதைப் பிடித்துத் திருகுவதும், 
தனது சுட்டுவிரலை மடித்துப் பிடித்து கிருஷ்ணியின் மூக்கைத் தட்டுவதும்,
அதன் வாயையும் மூக்கையும் சேர்த்து அழுத்திப் பிடிப்பதும் தான்,
கிருஷ்ணியுடனான டாக்டரின் செல்ல விளையாட்டுக்களாய் இருக்கும்.
அவ்விளையாட்டுக்களின் போது சிலவேளைகளில் கிருஷ்ணி கூடச் சிரிக்குமாற்போல்; தோன்றும்.
ஆனால் அந்த நேரத்திலும் டாக்டரின் முகம் 'உம்' என்றுதான் இருக்கும்.
எங்கே கிருஷ்ணி அவரது சேட்டைகளில் கோபப்பட்டுக் கடித்துவிடுமோ என்றுகூட நான் அஞ்சுவேன்.
ஆனால், டாக்டர் என்ன செய்தாலும் அதை கிருஷ்ணி விளையாட்டாய்த்தான் எடுத்துக் கொள்ளும்.

🐕‍🦺 🐕‍🦺 🐕‍🦺

முன்பும் ஓரிரு தடவை 'டாஷன்' இனநாய்களை நாம் வளர்த்திருக்கிறோம்.
ஆனால் வளர்த்த நாய்களில் ஒன்றுகூட குட்டிபோட்டுப் பெருகியதில்லை.
நாம் தர்மராம வீதியில் இருந்தபோது வளர்த்த 'டாஷன்' மட்டும்,
ஒரேயொரு தரம் ஒரு குட்டியைப் போட்டு அதையும் தானே கடித்துக் கொன்றுவிட்டது.
அதனால் நாய்க்குட்டிகளின் மழலைக்குரல் கேட்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்ததேயில்லை.
அந்தக் குறையை நீக்கியது எங்கள் கிருஷ்ணிதான்.

🐕‍🦺 🐕‍🦺 🐕‍🦺

வீட்டாரைப் பொறுத்தளவில் சாந்தசொரூபியாய் இருக்கும் எங்கள் கிருஷ்ணிக்கு,
பிரசவங்களின் போது மட்டும் அப்படி ஒரு மூர்க்கம் வந்துவிடும்.
நான் கூட அருகில் போகமுடியாது.
'கிருஷ்ணீ......' என்று கூப்பிட்டபடி மெல்ல நான் அருகில் போனால்,
'உர்ர்ர்....' என அது எழுப்பும் சத்தத்தில்,
'தயவு செய்து தூரப்போய்விடு!' என்ற உத்தரவு பதிவாகியிருக்கும்.
அதை விளங்கிக் கொண்டு நானும் பின்வாங்கிவிடுவேன்.
என் கதியே அதுவானால் மற்றவர்களின் கதியைச் சொல்லவா வேண்டும்.

🐕‍🦺 🐕‍🦺 🐕‍🦺

ஆனால் அந்த நேரத்திலும் அது டாக்டருக்குப் பணிந்துதான் நடக்கும்.
கிருஷ்ணியின் பிரசவ காலங்களில் அவர் மட்டும் தான் அதற்கருகில் செல்லமுடியும்.
பக்கத்தில் போய் உட்கார்ந்து கொண்டு அதன் குட்டிகளை எல்லாம் கையில் எடுத்து,
அவர் துப்பரவு செய்தாலும் ஒரு சிறிய சத்தம் கூடப் போடாமல்,
கிருஷ்ணி பேசாமல் அவரையே பார்த்துக் கொண்டிருக்கும்.
தனது பாதுகாவலர் அவர்தான் என்பதில் கிருஷ்ணிக்கு நூறு வீத நம்பிக்கை இருந்தது.
ஏதோ முற்பிறவித் தொடர்பு போலும்.

🐕‍🦺 🐕‍🦺 🐕‍🦺

கிருஷ்ணி பற்றிய முன்னைய கட்டுரையில்,
அதனுடைய 'சீன' மாப்பிளை பற்றிச் சொன்னது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம்.
அந்தச் சீன மாப்பிளையின் உறவால் பிறந்ததுதான் எங்களுடைய 'டோனி'.
கறுப்பு நிறமான கிருஷ்ணியின் மாப்பிள்ளை சிவப்பு நிறமானவர்.
'டாஷன்' இனத்தில் அந்த இரண்டு நிற நாய்கள் மட்டும்தான் உள்ளனவாம்.
எங்கள் கிருஷ்ணி மெல்லிய உருவம் கொண்டது.-சீன மாப்பிள்ளையோ கொழுத்த மாப்பிள்ளை.
என்னவோ தெரியவில்லை முதல் பிரசத்தில் பிறந்த 'டோனி'யும்,
அப்பனின் நிறத்தோடும் அப்பனின் வடிவத்தோடும் தான் இருந்தது.

🐕‍🦺 🐕‍🦺 🐕‍🦺

பின்னாளில் டோனியின் தோற்றம் கண்டும் அதன் குரலில் இருந்த வலிமை கண்டும்,
வீட்டிற்குள் வருகிறவர்கள் நடுநடுங்கியபடிதான் வருவார்கள்.
கிருஷ்ணிக்கு பயமின்றி ஊசி போடும் எங்கள் 'வெட்நெறி சேர்ஜன்',
டோனிக்குக் கிட்டப் போகவே அஞ்சுவார்.
கிருஷ்ணியின் முதல் குட்டியாகிய டோனியை விற்க மனமில்லாமல் டாக்டர் வளர்க்க,
பின்னாளில் அதுவே கிருஷ்ணியின் கணவனும் ஆயிற்று.

🐕‍🦺 🐕‍🦺 🐕‍🦺

கிருஷ்ணியும் டோனியும் எங்கள் வீட்டுப் பிரஜைகளாகிப் போனநிலையில்,
இரண்டு மாதங்களுக்கு முன்னர் திடீரென டோனிக்கு,
பின்னங்கால்கள் இரண்டும் நடக்கமுடியாமல் போயின.
அந்நேரத்தில் எங்கள் டாக்டரும் நாட்டில் இல்லை.
மகளைப் பார்க்கவென அவர் அவுஸ்திரேலியா சென்றிருந்தார்.
உடனிருந்த கழகப் பிள்ளைகள் என்னென்னவோ முயற்சி செய்தார்கள்.
'வெட்நெறி சேர்ஜன்' வந்து ஊசி எல்லாம் போட்டார். ஒன்றுக்கும் பயனில்லாமல் போயிற்று.
இரண்டு வாரம் கழித்த பின்னர்தான் எங்கள் டாக்டர் மீண்டும் நாடு வந்து சேர்ந்தார்.
வந்த நாள் தொடக்கம் டோனிக்கு வைத்தியம் தான்.
டோனியின் பின் இடுப்பில் கயிறு போட்டு இழுத்துப் பிடித்துக் கொண்டு,
அதை பலவந்தமாய் நடக்கப்பண்ணி அவர் கொடுமை செய்தார்.
ஆனால் ஆச்சரியமாய் அவரின் 'பிஷியோத்தெரபி' முயற்சியில்,
டோனி ஒரே வாரத்தில் இயல்பு நிலைக்கு வந்தது.
எல்லாம் டாக்டரின் 'நாய்ராசி'.

🐕‍🦺 🐕‍🦺 🐕‍🦺

சென்ற மாதம் எங்கள் ஆலயத்தில் புதிதாக ஒரு வைரவர் சிலையை ஸ்தாபித்தோம்.
ஒரு முழுநாயுடன் வைரவர் நிற்கும் சிலை அது.
வைரவரின் கும்பாபிஷேகத்திற்கு முதல் நாள்,
திடீரென டோனிக்குக் காய்ச்சல் வந்து யாரும் எதிர்பாராத வகையில்,
கும்பாபிஷேகத்தன்று காலையில் அது இறந்து போனது.
வைரவர் தான் டோனியை எடுத்துக் கொண்டார் என்றார்கள் சிலபேர்.

🐕‍🦺 🐕‍🦺 🐕‍🦺

டோனியின் இழப்பு, கிருஷ்ணியின் மனதைப் பெரிதாய் பாதித்திருக்கும் போல.
சில நாட்களாக அதன் கண்களில் வெறுமை.
டாக்டரின் நெருக்குதலால் வேண்டா வெறுப்பாக கொஞ்சமாய் உணவு உண்டது.
அதன் பின் தனது விளையாட்டுக்களை எல்லாம் கிருஷ்ணி குறைத்துக் கொண்டது.
சோகம் அப்பிய அதனது கண்களைப் பார்த்து நாமெல்லாம் கவலை கொண்டோம்.
டாக்டர் என்னென்வோ முயற்சிகள் செய்து பார்த்தும் அதன் இயல்பு மாறவில்லை.
கணவனைப் பிரிந்த அதனது கவலை, நாட்கள் சென்றும் கொஞ்சமும் குறையவில்லை.
அதன் கற்பின் திண்மை கண்டு நாம் வியந்தோம்.

🐕‍🦺 🐕‍🦺 🐕‍🦺

சரியாக ஒருமாதம் தான் இருக்கும்.- கிருஷ்ணியும் நோய்வாய்ப்பட்டது.
அதனுடைய நடக்கும் சக்தியும் மெல்ல மெல்ல குறையத் தொடங்கிற்று.
டாக்டர் என்னென்னவோ வைத்தியம் செய்து பார்த்தார்.
அவரது 'பிசியோதெரபி' முயற்சிகள் கிருஷ்ணிக்கு எந்தப் பயனும் அளிக்கவில்லை.
கடைசி ஒரு வாரமாக கிருஷ்ணியால் நடக்கவே முடியாமல் போயிற்று.
டாக்டரின் மனவருத்தம் சொல்லில் அடங்காதது.
கிருஷ்ணிக்கு அவர் செய்த சேவையைக் கண்டு நான் கலங்கிப் போனேன்.
அதன் தலையைத் தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டு,
சோறைப் பிசைந்து ஒரு குழந்தைக்கு ஊட்டுவது போல் ஊட்டுவதும்,
ஊசிக்குழாய் மூலம் கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் பருக்குவதுமாக அவர் படாதபாடுபட்டார். 
காலை, மதியம், மாலை என மூன்று நேரமும் கிருஷ்ணியுடனேயே தன் பொழுதைக் கழித்தார்.
தன் தாய்க்கும் செய்யாத கடமைகளையெல்லாம் நாய்க்குச் செய்தார்.

🐕‍🦺 🐕‍🦺 🐕‍🦺

டாக்டர் ஒரு புதுவிதப் பிறவி.
'சீற்றம் இன்றியும் தீ எழ நோக்குவான்' என்று, இராமாயணக் குகனை அறிமுகப்படுத்துவான் கம்பன்.
அதனைப் படிக்கும் போதெல்லாம் எங்கள் டாக்டரைத்தான் நான் நினைத்துக் கொள்வேன்.
எப்போதும் அவரது முகம் 'உர்ர்ர்' என்று தான் இருக்கும்.
எங்கள் நாய்களின் 'உர்ர்ர்' ஐ விட டாக்டரின் 'உர்ர்ர்' க்கு கழக உறுப்பினர்கள் அதிகம் பயப்பிடுவார்கள்.
இது என்ன கல்லுப் பிறவி என நானே கூட நினைப்பது உண்டு.
ஆனால் இரண்டு சம்பவங்களில் நான் அவரது மானுடத்தைக் கண்டு கொண்டேன்.
யாழ்ப்பாணத்தில் அவர் வளர்த்த ஒரு நாய் நோயால் இறந்த போதும்,
கொழும்பில் அவர் வளர்த்த நாய் ஒன்று காரில் அடிபட்டு இறந்த போதும்,
அவர் விம்மி விம்மி அழுதது கண்டு எங்கள் கழகமே ஸ்தம்பித்துப் போய்விட்டது.
கல்லுக்குள் ஈரம்.

🐕‍🦺 🐕‍🦺 🐕‍🦺

கிருஷ்ணியின் நோய் நாளுக்குநாள் கூடத் தொடங்கியது.
நடக்க முடியாத அதைத் தூக்கிக் கொண்டுவந்து, 
என் மடியில் கிடத்தச் சொல்லி நானும் தடவிக் கொடுப்பேன்.
அப்போது கண்ணை மட்டும் உயர்த்தி அது என்னைப் பார்க்கும் பார்வையில்,
ஆயிரம் செய்திகள் பதிந்து என்னை அதிரச் செய்யும்.
'கவலைப்படாதே நான் போய் வரப்போகிறேன்' என்று அது சொல்லுமாப் போல் எனக்குத் தோன்றும்.
கிருஷ்ணியினுடைய உணர்வு மிகக் கூர்மையானது.
நான் தடவத் தடவ கண்மூடிக் கிடப்பதும், பிறகு என்னைப் பார்ப்பதுமாய் இருந்த அதன் செயல்கள்,
இப்போது நினைத்தாலும் என் அடிவயிற்றைக் கலக்குகின்றன.
ஒரு வருடத்திற்கு முன் இறந்து போன எனது தாயும் கிட்டத்தட்ட இப்படித்தான் கிடந்தார்.
தாயோடு நாயையும், நாயோடு தாயையும் தொடர்புபடுத்தி நெகிழ்வேன்.

🐕‍🦺 🐕‍🦺 🐕‍🦺

நேற்று கிருஷ்ணிக்கு ஒன்றுமே செய்யமுடியாமல் போயிற்று.
நான் அருகில் சென்று 'கிருஷ்ணம்மாமாமா..' என்று ஆதரவாய் அழைக்க,
எந்த அசைவுமின்றி கிடந்த கிருஷ்ணி, அந்த நிலையிலும் தனது வாலை மட்டும் ஆட்டி,
என்னை ஆறுதல் படுத்தியது. 'உன் வார்த்தைகள் என் காதில் கேட்கின்றன.
என்ன செய்ய? இனி உங்களோடு நான் இருக்கமாட்டேன்,
என் உணர்வுகள் மெல்ல மெல்லத் தேய்ந்து கொண்டு வருகின்றன.
முடிந்தால் மறுபிறவியில் சந்திப்போம்.'
என்று,
கிருஷ்ணி தன் வாலாட்டுதல் மூலம் பேசுவதாய் என் மனதிற்குப்பட,
என்னை அறியாமல் கண்ணீர் பொங்கிற்று.
கடைசியாக நேற்று இரவு டாக்டர் கையால் பால் வாங்கிக் குடித்து,
இன்று காலை கிருஷ்ணி தன் உயிரை விட்டது.

🐕‍🦺 🐕‍🦺 🐕‍🦺

கிருஷ்ணியின் இழப்பால் மனதினுள் பெரிய வெளி.
ஆயிரம் கேள்விகள் புத்தியைப் பிடிங்கித் தின்கின்றன.
ஒரு நாய் செத்ததற்கா இவ்வளவு பெரிய 'எடுப்பு'?
உங்களில் ஒருசிலரின் மனதில் கேள்வி எழும்.
உடல்கள் தான் உயிர்களுக்குள் பேதம் செய்கின்றன.
மற்றும்படி உயிர் எல்லாம் ஒன்றேதான்.
ஆண் உடலில் புகுந்தால் அவ் உயிர் ஆண் உயிர் ஆகிறது.
பெண் உடலில் புகுந்தால் அவ் உயிர் பெண் உயிர் ஆகிறது.
அதுபோலத்தான் நாய் உடலில் புகுந்ததும் நாய் உயிர் ஆகிறது.
உடலை நோக்கும் மட்டும்தான் இந்த பேதங்கள்.
உடலைக் கடந்து சிந்தித்தால் எல்லா உயிர்களும் ஒன்றேதான்.
சொர்க்கம், நரகம், வீடுபேறு என்பவை எல்லாம்,
மனிதர்களுக்கும் நாய்க்கும் வேறுவேறாகவா இருக்கப் போகின்றன?

🐕‍🦺 🐕‍🦺 🐕‍🦺

எவ்வளவு அன்பு காட்டினாலும்,
பதிலுக்கு அன்பு காட்டாத மனிதர்களைப் பார்த்திருக்கிறேன்.
அன்பைத் தன் உயிரில் தேக்கி வைத்திருந்த எங்கள் கிருஷ்ணி,
அந்த மனிதர்களைவிட எவ்வளவோ உயர்ந்தது.
ஏதோ ஒரு பிறவித் தொடர்பில்லாமலா கிருஷ்ணி எங்களிடம் வந்திருக்கும்.
எங்கள்மேல் இவ்வளவு அன்பு செய்திருக்கும்.

🐕‍🦺 🐕‍🦺 🐕‍🦺

அடுத்த பிறவியிலும் இன்னன்னாருடைய தொடர்பு வேண்டும் என்று,
என் புத்தியில் ஒரு பட்டியல் உண்டு.
அந்தப் பட்டியலில், என் குருநாதர் பேராசிரியர் இராதாக்கிருஷ்ணன், 
எனது ஆசிரியர்கள் சிவராமலிங்கம், வேலன், ஆறுமுகம், வித்தகர்,
நான் மதித்த அறிஞர்கள், நான் ரசித்த கலைஞர்கள்,
என்னை முந்திக் கொண்டு சென்றுவிட்ட உருத்திரகுமார் போன்ற மாணவர்கள்,
நான் என்ன செய்தாலும் சகித்து என்னை நேசிக்கின்ற சகோதரர்கள், மாணவர்கள்,
எனது பெற்றோர், பிள்ளையாய் நான் வளர்த்த என் தங்கை போன்றோராடு,
கிருஷ்ணியின் பெயரும் நிச்சயமாய் அப்பட்டியலில் இனிப் பதிவாகியிருக்கும்.

🐕‍🦺 🐕‍🦺 🐕‍🦺

என் அன்புச் செல்லமே கிருஷ்ணம்மா!
அடுத்த பிறவியில் மனித வடிவெடுத்து எனக்காக நீ காத்திரு.
இறைவனின் அருள் இருந்தால் நானும் மனிதப்பிறப்பெடுத்து,
உன் உறவைத் தேடி வருவேன்.
அது வாய்க்காத பட்சத்தில் நாயாகப் பிறந்தேனும்,
உன் அன்புக்காய் நான் உன் வீட்டில் வளர்வேன்.
மகளே கிருஷ்ணம்மா சென்று வா!

🐕‍🦺 🐕‍🦺 🐕‍🦺

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்