'உன்னைச் சரணடைந்தேன்': பகுதி 57 - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

🚩 🚩 🚩
பகை மேகம் சூழ்ந்தது

இக்கால கட்டம் கம்பன் கழக வரலாற்றில்.
மறக்கமுடியாத இருள் நிறைந்த 
காலகட்டமாய் அமைந்தது.
அதுவரை எம்மோடு அன்பாய் 
இணைந்திருந்த பலர், பகையாகி 
பலவிதத்திலும் கழகத்திற்கு தீங்கு இழைக்க முயன்றனர்.
தனித்து யாருக்கும் நாம் தீங்கு செய்யாவிட்டாலும்,
கொள்கைப்பிடிப்போடு நாம் வாழ நினைத்தது, 
பலருக்கும் இடைஞ்சலை உண்டாயிற்று.
நம்மைப் போல இவர்களும், ஏன் எல்லோரிடமும் சமரசம் செய்து கொள்கிறார்கள் இல்லை.
என்பதுவே பலரதும் பகைக்குக் காரணமாயிருந்தது.
அப்பகையினை வரிசை செய்கிறேன்.

🚩 🚩 🚩

பொன். சுந்தரலிங்கத்தின் பகை

இதுபற்றி ஏற்கனவே பல தரம் சொல்லி விட்டேன்.
ஆரம்பத்தில் எங்கள்மேல் மிகுந்த அன்பும், ஆதரவும் செய்து வந்த இவர்.
நாம் வளர வளர எம்மேல் பகை கொள்ளலானார்.
ஒரு காலத்தில் நிதி சேகரிப்பு, கலைஞர் தொடர்பு, புரவலர்கள் தொடர்பு 
என்பவற்றில் நாம் முன்னுதாரணராய் இவரையே கொண்டோம்.
இவரின் பகையை, விதியின் விளையாட்டு என்றுதான் சொல்ல வேண்டும்.

🚩 🚩 🚩

பல்கலைக்கழகப்  பகை

இங்கு, விடயத்தின் முழுமை நோக்கி,
சில செய்திகளை மீள உரைக்கவேண்டியுள்ளது.
ஆரம்பத்தில் பல்கலைக்கழகத்தார் பலரும்
எம்மோடு இணைந்தே செயல்பட்டனர்.
கைலாசபதி, வித்தியானந்தன், துரைராஜா, பாலசுந்தரம்பிள்ளை, 
சண்முகதாஸ், சுப்ரமணிய ஐயர், பாலசுந்தரம், சிவலிங்கராஜா,
நாகேஸ்வரன், வேதநாதன், கோபாலகிருஷ்ண ஐயர், நந்தி முதலியோர்,
எம்கழகத்துடன் நெருங்கிப் பழகினர்.
பின் நாளில் எமது வளர்ச்சியின் பாதிப்பும்,
அறிவுலகத்தில் அவர்கள் பிழைகளை,
நான் தட்டிக்கேட்க முயன்றதன் விளைவும் ஒன்று சேர்ந்து,
அவர்களை எமக்குப் பெரும் பகையாளிகள் ஆகிற்று.
அப்போது யாழில் வெளிவந்துகொண்டிருந்த  'மாற்றம்' என்ற சஞ்சிகையில்,
தொடர்ச்சியாக வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் எழுதி வந்தேன்.
'பல்கலைக்கழகத் தமிழ்த்துறை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?'
என்று என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு,
'பாவம் தமிழ்' என நான் அளித்த பதில்,
அந்நாளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திற்று.
'உங்கள் ஆதரவாளரான பேராசிரியர் சண்முகதாஸ்,
பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத்தலைவராக இருக்கிறாரே,
அவர்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?' என,
மீண்டும் அதே சஞ்சிகையில் கேட்கப்பட்ட கேள்விக்கு,
'தமிழ் மட்டும் பாவமல்ல சண்முகதாஸூம் பாவம் தான்' 
எனப் பதிலுரைத்து,
மீண்டும் அவர்களை அதிர வைத்தேன்.
இப்பகை பெரிய அளவில் வெடித்தது.
ஆரம்ப காலத்தில் 
புலிகளின் சாயல் தங்கள் மேல் படிந்து விடக் கூடாது என்பதில்,
பல்கலைக்கழகத்தார் மிகக் கவனமாக இருந்தனர்.
புலிகள் நடத்திய 'முத்தமிழ் விழாவில்',
இயல் நிகழ்ச்சிகளை நடாத்தித் தரும்படி,
எங்களோடிருந்த நட்பின் காரணமாக,
புதுவை இரத்தினதுரை எங்களிடமே கேட்டிருந்தார்.
அவர் அன்புக்குக் கட்டுப்பட்டு அப்பொறுப்பைக் கழகம் ஏற்றுக்கொண்டது.
அவ்விழாவில் கலந்து கொள்ளும்படி நாம் அழைத்தபோது,
பயந்து பின் வாங்கிய பல்கலைக்கழகத்தார், 
இயக்கம் வளர வளரத் தேவை கருதி அதனோடு ஒட்டிக் கொண்டனர்.
பாவனையிலிருந்த கோப்பி, பாண் முதலிய பெயர்களை,
தமிழில் பெயர் மாற்றம் செய்வது, புதிய பாடத்திட்டம் அமைப்பது என,
அவர்கள் நெருக்கமாய்ப் புலிகளோடு உறவு கொண்டாடினார்கள்.
அவ்வுறவை அடிப்படையாய்க் கொண்டு,
எம்மை அடக்கிவிடவும் முயன்றார்கள்.
அவர்களின் அந்த எண்ணம் முழுமையாய் நிறைவேறவில்லை.
எங்கள் கழக விழாக்களில்,
பேராசிரியர்களை அவர்களது பட்டப்படிப்பு அங்கியோடு வரச்செய்து,
பேசவைப்பதை வழக்கமாக்கி இருந்தோம்.
பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவைத் தவிர,
வெளியில் அவர்கள் அப்படி முதன் முதலாக வரத் தொடங்கியது,
எங்கள் விழாக்களிற்குத் தான்.
சிவத்தம்பி, துரைராஜா, பாலசுந்தரம்பிள்ளை, குணரட்ணம் என,
பலரும் அங்ஙனம் எங்கள் விழாக்களில் கலந்து கொண்டனர்.
பகை பிறந்ததும் அப்படிக் கம்பன் விழாவிற்குப் போகக் கூடாது என்று,
பலகாரணங்களும் கூறி ஒருவரையொருவர் தடுத்தனர்.
தமிழ்த்துறை நெருக்கடி தர இந்து நாகரிகத்துறையும்,
அவர்களோடு சேர்ந்து கொண்டது.
கழகத்தைத் தனிமைப்படுத்த அவர்கள் அனைவருமாய் முயற்சித்தனர்.
ஆனால், எமது இவ்வாண்டு விழாவில்கூட,
அவர்களில் பலரும் எம்மை முறிக்க விரும்பாது,
ஒருவருக்கொருவர் தெரியாது வந்து 
விழாவில் கலந்து சென்றது வேடிக்கை,
இவர்களது நெருக்கடிகளை மீறி,
இவ்விழாவில் கலந்த துணைவேந்தர் பேராசிரியர் குணரட்ணம்,
பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை, பேராசிரியர் நந்தி போன்றோர் செய்த,
உபகாரத்தை எம்மால் மறக்க முடியாது.

🚩 🚩 🚩

இயக்கப் பகை

இக்காலத்தில் புலிகள் இயக்கமும்,
எங்களோடு மறைமுகமாய் பகை காட்டத்தொடங்கியிருந்தது.
அதுபற்றி இந்நூலின் முடிவில் தனிக்கட்டுரை வரைந்திருக்கிறேன்.
புலிகளின் ஆதரவு எமக்கில்லையெனத் தெரிந்ததும்,
எம்மைப் பிடிக்காத பலரும் துள்ளி விளையாட ஆரம்பித்தனர்.
எங்களை வீழ்த்தவும், எரிச்சல்படுத்தவுமாக,
அவர்கள் செய்த செயல்கள் பற்பல,
ஏதோ இறையருள் எங்களுக்குத் துணை நின்று,
இவர்களிடமிருந்து எம்மைக் காத்து வெற்றி பெற வைத்தது.

🚩 🚩 🚩
சமயவாதிகள் பகை

இக்காலத்தில் போலிச் சமயவாதிகள் சிலரும் 
எமக்கெதிராகப் போர்க்கொடி தூக்கினர்.
சொற்பொழிவுகளால் எமக்கேற்பட்ட பிரபல்யமும் 
அதனால் எமக்குக் கிடைத்த வருமானமும்,
வேறுசில சமயசொற்பொழிவாளர்களுக்கு பொறாமையையூட்ட,
அவர்கள் எம்மைச் சமயத்தை விற்பவர்கள் என்றும் 
இவர்கள் வைஷ்ணவர்கள் என்றும்,
புதுப்புதுவிதமான பிரச்சாரங்களில் ஈடுபட்டனர்.
ஒருநாள் நான் சிவராமலிங்கம் மாஸ்ரரிடம் செல்ல 
அவர் சற்றுக் கவலையாக,
மங்கையற்க்கரசியாரையும், சம்பந்தரையும் தொடர்புபடுத்தி 
கொச்சையாய் நான் பேசியதாய்,
கோப்பாய் ஆசிரியபயிற்சிக் கலாசாலை 
விரிவுரையாளர் சிவ. மகாலிங்கம் சொன்னதாய்ச் சொன்னார்.
கடுமையாய்க் கோபம் கொண்ட நான், உடனடியாக 
கோப்பாய் ஆசிரியபயிற்சிக் கலாசாலைக்குச் சென்று,
வகுப்பிலிருந்து சிவ. மகாலிங்கத்தை வெளியே அழைப்பித்து,
'இப்படி நீங்கள் சிவராமலிங்கம் மாஸ்ரரிடம் சொன்னீர்களாம்.
உடனே வாருங்கள் நல்லூர் வாசலில் நீங்கள் சொன்னது உண்மையா?
நான் சொன்னது உண்மையா? எனப் பூக்கட்டிப் பார்ப்போம்.
நீங்கள் சொன்னது உண்மை என்று வந்தால் 
நான் பேசுவதை விட்டுவிடுகிறேன்.
நான் சொல்வது உண்மை என்று வந்தால் 
நீங்கள் பேசுவதை விட்டுவிட வேண்டும்'
என்றேன்.
பயந்து போன அவர் கெஞ்சாத குறையாக 
என்னைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.
இப்படி எமக்கெதிராக இன்னொரு குழுவும் இக்காலத்தில் வேலை செய்தது.
🚩 🚩 🚩

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்