'உன்னைச் சரணடைந்தேன்': பகுதி 58 - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

🚩 🚩 🚩

உற்பாதங்கள் நிகழ்ந்தன

ஒருவருக்கு நன்மை, தீமை நடப்பதன் முன்,
அதுபற்றிய சில முன் எச்சரிக்கை அடையாளங்கள் தெரியவரும் என்று,
நம் மூதாதையர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
அங்ஙனம் நன்மைக்கு முன்பாக வரும்,
எச்சரிக்கை அடையாளங்களை 'சகுனம்' என்றும்,
தீமைக்கு முன்பாக வரும் எச்சரிக்கை அடையாளங்களை,
'உற்பாதம்' என்றும் உரைப்பது வழக்கம்.
இவ்வாண்டில் எங்களுக்குப் பல உற்பாதங்கள் நிகழ்ந்தன.

🚩 🚩 🚩

சீதாராமர் சிலைகள் உடைந்தன

எங்களிடம் 'பேப்பர்பரிஸினால்' செய்யப்பட்ட,
சீதா, இராம, இலக்ஷ்மண, அனுமன் சிலைகள் இருந்தன.
அவற்றைக் கம்பன் விழா மேடையில் நாம் வைப்பது வழக்கம்.
1995 கம்பன் விழாவிலும் அச்சிலைகளை மேடையில் வைத்தோம்.
முதல் நாள் விழா முடிய, கடும் மழை பெய்தது.
(விபரம் 95 விழாக் கட்டுரையில் சொல்லியிருக்கிறேன்.)
இரவோடு இரவாக மேடையிலிருந்த,
பிற பொருள்களை அகற்றிய நாங்கள் அச்சிலைகளை மறந்து போனோம்.
அடுத்தநாள் காலையில் சென்று பார்த்தால்,
அச்சிலைகளெல்லாம் மழை நீரில் ஊறி,
சிதைந்து துண்டு துண்டுகளாகிக் கிடந்தன.
நான் நடுநடுங்கிப் போய்விட்டேன். 

🚩 🚩 🚩

நவராத்திரிக் கும்பத்தில் புழு

அது போலவே அவ்வாண்டு நவராத்திரியின்போது,
பஞ்சலோகத்தில் புதியதோர் அம்மன் சிலை செய்வித்து,
அதன் முன் கும்பம் வைத்தேன்.
வழக்கமாகக் கும்பத்தில் இடும் நவதானியங்கள் செழித்து வளரும்.
இம்முறை ஒரு பயிரும் முளைக்கவில்லை.
நான்கு நாள் கழித்துப்பார்த்தால், கும்பத்தைச் சுற்றி புழுப்பிடித்திருந்தது.
இது அடுத்த அதிர்ச்சி.

🚩 🚩 🚩

வீணை உடைந்தது

அதே போல் நவராத்திரியின் நான்காம் நாளில்,
உள்அறைக் கட்டிலில் நான் பத்திரமாய் வைத்திருந்த உருத்திர வீணை,
எப்படியென்று தெரியாமல் விழுந்து உடைந்தது.
சிலைகள் உடைந்ததில் எனக்குப் பெரிய அதிர்ச்சி,
ஏதோ தீமை வரப்போகிறது என உணர்ந்து கொண்டேன்.

🚩 🚩 🚩

எஜமானும் மறுத்தார்

நல்லூர் வீதியில் விழா நடத்த,
ஆலய எஜமான் குமாரதாச மாப்பாண முதலியார் அவர்கள்,
பெருந்தன்மையோடு இரண்டு வருடங்களாக எங்களுக்கு அனுமதி தந்தார்.
இவ்வாண்டு விழா முடிந்ததும்,
அவரும் வீதியில் விழா நடத்த இனி அனுமதி தர முடியாது என்று சொன்னபோது,
உண்மையில் நான் அதிர்ந்து போனேன்.
அந்த விடயத்தில் எங்களிலும் சிறு தவறிருந்தது.
நடந்த அல்லோகல்லங்களால் விழா முடிந்தும்,
நாங்கள் பந்தலைக் கழற்ற ஒருசில நாட்களாயிற்று.
பந்தல் தடியைக் கழற்றிய குழியை, வேலையாட்கள் மூடாமல் சென்றதால்,
அதற்குள் கால்வைத்து விழப்போன யாரோ ஒருவர்,
எஜமானிடம் சென்று முறையிட்டிருக்கிறார்.
இதுதவிர அப்போதைய சூழ்நிலையில் எங்களோடு பகைத்த சிலரும்,
கழகம்பற்றி அவரிடம் குறைசொல்லியிருக்கின்றனர்.
இவை காரணமாகத்தான் எஜமான்,
இனி வீதியில் விழா நடத்த முடியாது என்று சொன்னார் என்பதை,
தெரிந்து கொண்டோம்.

🚩 🚩 🚩

புதிய சிலைகள் வார்க்கும் முயற்சியில் தடை

பஞ்சலோகத்தில் புதிய சீதாராம விக்கிரங்களை, 
வார்ப்பிக்க வேண்டும் என நினைந்து,
என்மேல் அன்பு கொண்டிருந்த 
சின்னராசா ஆசாரியாரை அணுகினேன்.
அவர் ஏற்கனவே என் வழிபாட்டிற்கென,
ஒரு லிங்கத்தையும், அம்மன் சிலையையும் அமைத்துத் தந்திருந்தார்.
புதிய சிலைகளை அமைத்து விட்டால் 
வரவிருக்கும் ஆபத்து நீங்கும் என, என் உள்ளுணர்வு சொல்லியது.
என் எண்ணத்தைச் சொல்லி,
உடன் புதிய சிலைகளை அமைத்துத்தரவேண்டுமென,
சின்னராசா ஆசாரியாரிடம் கேட்டுக் கொண்டேன்.
அவர் பணம் ஏதும் வாங்கிக்கொள்ளாமல்,
என் கோரிக்கையை ஏற்று, உடன் புதிய சிலைகளைச் செய்ய ஆரம்பித்தார்.
ஆரம்ப வேலைகள் எல்லாம்; முடிந்து சிலை உருக்கி வார்க்கிற அன்று,
மேலே 'பொம்மர்' சுற்றத் தொடங்கிவிட்டது.
நிறையத் தென்னை மட்டைகள் போட்டுத்தான் உலோகத்தை உருக்குவார்கள்.
அந்தப் புகை வானளாவி எழும்பும்.
அப்புகையைக் கண்டால் பொம்மர் அடித்து விடும் எனப் பயந்து,
சிற்பி அடுப்;பை அணைத்துவிட்டார்.
நான் யாழ்ப்பாணத்தைவிட்டு வெளிக்கிடுவதற்கு,
இரண்டு நாட்களுக்கு முன் இது நடந்தது.
நான் கொழும்பு வரும் வரை அச்சிலைகள் வார்க்கப்படவேயில்லை.
பின்னர் சாவகச்சேரிக்கு அவரும் இடம் பெயர்ந்து,
மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பியதும் தான்,
அச்சிலைகளை அவர் வார்த்து முடித்தார்.

🚩 🚩 🚩

கொழும்பிலும் புதிய சிலைகள் வடித்தோம்

சிதைந்த சிலைகளைப் புதிதாய் வார்த்துவிட வேண்டும் எனும் 
வெறி, எனக்குள் இருந்தது.
புதிய சிலைகள் மீண்டும் வந்துவிட்டால் 
எங்களது துன்பங்கள் தீரும் என,
எனது உள்மனம் சொல்லியபடியே இருந்தது.
அதனால் சின்னராசா ஆசாரியார் சிலைகள் 
வார்த்ததை அறியாத நான், இதே காலத்தில் கொழும்பிலும்,
 கொழும்புக் கம்பன் கழகச் செயலர் பாலசுந்தரம் அவர்களிடம் நிதிபெற்று,
புதிய சீதாராமர் சிலைகளை, திருகோணமலையில் இருந்த சிற்பி 
சிவசோதிலிங்கத்தினைக் கொண்டு, வார்ப்பித்தேன்.

🚩 🚩 🚩

உள் உணர்வின் உண்மை

யாழில் கடைசியாய் நடந்த 1995 ஆம் ஆண்டு கம்பன் விழாவில்,
இருந்த சிலைகள் உடைந்தன.
அன்றிலிருந்து நாம் பெரும் இன்னல்களுக்கு ஆளானோம்.
எத்தனையோ முயன்றும்  புதிய சிலைகளை உடன் ஆக்கமுடியவில்லை.
நீண்ட நாட்களின் பின்னர்தான் புதிய சிலைகள்,
ஒன்றுக்கு இரண்டாக அமைந்தன.
அவை அமைந்த பின்னர் கம்பன்கழகம்  மீண்டும் துளிர்க்க ஆரம்பித்தது.
இதை நீங்கள் நம்பப்போவதில்லை.
மந்திரத்தால் மாங்காய் விழுத்திய கதையென 
நீங்கள் ஒருவேளை சிரிப்பீர்கள். எதையும் சொல்லிவிட்டுப் போங்கள்.
சிலை உடைந்த பின் துன்பம் தொடங்கியதும்,
சிலை வந்தபின் துன்பம் நீங்கியதும் சத்தியமான உண்மைகள்.
காரணங்களோடு விளங்கப்படுத்த முடியாவிட்டாலும்,
என் உள் உணர்வு உண்மையானது நிஜம்.
புதிய சிலைகள் வந்தபின்னர் தான்,
கொழும்பில் கம்பன் கழகம் மீண்டும் 
உயிர்ப்புடன் இயங்கத்தொடங்கியது.
அதுபற்றிப் பின்னர் விரிவாய்ச் சொல்லுகிறேன்.

🚩 🚩 🚩
தொடரும்...

 

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்