'உன்னைச் சரணடைந்தேன்': பகுதி 60 - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

🚩 🚩 🚩
கோட்டத்தின் மேல்மாடி திறப்பு விழாவும், 
இசைநிகழ்ச்சிகளும்

கம்பன் கோட்டக் கட்டிடம்,
பல கட்டமாகக் கட்டப்பட்டதை முன்னரே சொல்லியிருக்கிறேன். 
முதலில் அத்திவாரமிடப்பட்டு தளமிடுமளவுக்கு,
கீழ்க்கட்டிடம் ஓரளவு பூர்த்தியானது.
இக்காலத்தில் தான் இந்திய இராணுவம் இங்கு முகாமிட்டது. 
அதன் பின்னர் கழக அன்பர்,
மனோகரபூபன் அவர்களுடைய துணையால்,
கீழ்க்கட்டிடம் முழுவதும் அழகுபடுத்தப்பட்டு முழுமையாய்ப் பூர்த்தியானது.
அதன்பின்தான் கம்பன்கழக அலுவலகம், 
இங்கே இயங்கத் தொடங்கியது. 
மூன்றாம் கட்டமாக முன் சித்திரக்கதவு வேலை முடித்து,
அதற்கு ஒரு திறப்பு விழாவை நடத்தினோம்.
நான்காம் கட்டமாக மேல் மாடியைக் கூரை போடுமளவு கட்டிமுடித்தோம்.
இங்ஙனமாய் நீண்ட கட்டிட வேலைகள் 
இவ்வாண்டிலேதான் பூர்த்தியின. (1995)
இக்காலத்தில்தான்  கட்டிடத்தின் மேல் மண்டபத்தை,
முழுமையாய்க் கட்டி முடித்தோம். 
கம்பன் கழகத்தின் ஆதரவாளனாய் இருந்த கணேசராஜா என்பவர்,
மண்டபத்தின் உள்ளே 'சீற்'முதலியவை அடித்து,
வேலையைப் பூரணமாக்கித் தந்தார். 
எங்களுடைய நண்பர் சிவஞானம் அண்ணன்,
கொழும்பிலிருந்து கடல் வழியாகப் படகில்,
நிலத்தில் பதிக்கவென, மாபிள்கள் கொண்டுவந்து தந்தார். 
மேல் மண்டபம் அழகுறப்பூர்த்தியானது.
மேல் வேலைகள் பூர்த்தியானதும்,
மேல் மாடியைத் தனியாகத் திறந்து வைத்தோம். 
மாநகரசபை முன்னாள் ஆணையாளர் சீ.வி.கே. சிவஞானம்,
மண்டபத்தைத் திறந்து வைத்தார்.

🚩 🚩 🚩

சிவாண்ணை

இந்தியத் தமிழரான இவர் ஈழத்தில் பலகாலம் வாழ்ந்தவர். 
யாழ்ப்பாணத்திலேயே திருமணம் செய்திருந்தார்.
எங்கள் கழகத்தில் பெரும் ஈடுபாடு காட்டியவர்.
யாழ். கம்பன்கோட்ட மேல் மண்டபம் கட்டப்பட்டபோது,
அதற்கான மாபிள்களை, கிளாலி கடற்பாதையூடு,
மிகச் சிரமப்பட்டுக் கொண்டுவந்து சேர்த்தவர்.
பொருளாதாரத்தாலும் ஆதரவு செய்தவர்.
அவரது மனைவி, குழந்தைகள் அத்தனை பேரும்
கழகத்தை உறவாய் நேசிப்பவர்கள்.
நாம் இடம்பெயர்ந்து கொழும்பு சென்றபோது,
சிவாண்ணை எமக்குப் பெரும் ஆதரவு செய்தார்.
இன்று லண்டனில் அவரது வாழ்க்கை.
சிலகாலமானாலும் அவர் செய்த உதவிகள் மறக்கமுடியாதவை.

🚩 🚩 🚩

வருகையும் பிரிவும்

மேல்மண்டபத் திறப்பு நிகழ்வில் சிவராமலிங்க மாஸ்ரர்,
சிவத்தமிழ்ச் செல்வி, மாவை ஆதீனம், இலக்கண வித்தகர் போன்ற,
அறிஞர் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
கழக இளைஞர்கள் பெரியார்களுக்குப் பாதபூஜை செய்து சிறப்பித்தனர்.
அன்றைய கட்டிடத்திறப்புவிழா நடந்து கொண்டிருந்தபொழுது,
திடீரென அங்கு திரு. வைத்தியநாதன் தம்பதியர்,
கொழும்பிலிருந்து வருகை தந்தனர்.
அவர்கள் இனி யாழ்ப்பாணத்திலேயே இருக்கப்போவதாய் அறிந்து,
எல்லையற்ற மகிழ்ச்சி கொண்டோம்.
எங்களது கம்பன் கோட்டத்தைப் பார்த்து,
வைத்தியநாதன் அவர்கள் ஓர் குழந்தையைப் போல மகிழ்ச்சியடைந்தார்.
அவர் அலுவலகம் செல்ல,
அம்மையார் முழுமையாய் விழாவில் கலந்து கொண்டார்.
அடுத்த நாள் அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று வந்தது.
வைத்தியநாதன் அவர்கள் மாரடைப்புக்கு ஆளாகி,
யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாய் அறிந்து வருந்தினோம்.
ரத்தினகுமார் அப்போது வைத்தியசாலையில் வேலைசெய்து கொண்டிருந்ததால், 
அன்று மாலையே வைத்தியநாதன் அவர்களை அவசரப்பிரிவில் சென்று பார்த்தேன்.
என்னோடு சிரித்துப்பேசி மகிழ்வித்தார்.
ஆனால், அடுத்தநாள் காலை வைத்தியநாதன் இறந்துபோன செய்தி வந்தது.
துடித்துப் போனோம்.
யாழ்ப்பாணத்தில் வாழவென ஆர்வத்தோடு வந்த அவர்,
திடீரென மறைய குழந்தைகள் இல்லாத அம்மையார்,
தனியராக, கிளாலிப்பாதையினூடு படகில்,
அவரது சடலத்தை எடுத்துச் சென்ற துன்பநிகழ்வை மறக்க முடியாது.
நாங்கள் 1995 இடப்பெயர்வோடு கொழும்பு வந்ததும்,
அம்மையாரின் தொடர்பு புதுப்பிக்கப்பட்டது.
இன்று ஒரு தாயாக எங்கள்மேல் அன்புகாட்டி,
எங்கள் முயற்சிகளுக்குக் கைகொடுத்து,
எங்களுடனேயே அவர் வாழ்ந்து வருகிறார்.
அந்தச் சம்பவங்களைப் பின்னால் விரிப்பேன்.

🚩 🚩 🚩

நவராத்திரி விழா

மண்டபத்தைப் புதிதாய்த் திறந்த கையோடு,
ஒக்டோபர் மாதத்தில் நவராத்திரி விழா வர,
அக்காலத்தில் மூன்று நாட்கள் 
கலை நிகழ்ச்சிகளை நடத்த முடிவுசெய்தோம்.
முதல்நாளில் ஓர் பட்டிமண்டபத்தினை நடாத்தினோம்.
எங்களோடு இணைந்து நிற்காத காரணத்தால்,
வேண்டுமென்றே திருமுருகனை அப்பட்டிமண்டப நிகழ்ச்சியில்,
இணைத்துக் கொள்ளாது விட்டோம்.
ஆனாலும் அவன் பெருந்தன்மையோடு,
சபையில் வந்திருந்து நிகழ்ச்சியைக் கேட்டான்.
இரண்டாவது நாளில், திருமதி மேரி சரோஜா அவர்களினதும்,
நாதஸ்வர வித்துவான் எஸ். சிதம்பராநாதன் அவர்களினதும்,
இசை நிகழ்ச்சிகளை நடத்தினோம்.
அன்று சிதம்பரநாதன் வாசித்த தேனுகா இராகத்தை என்றும் மறக்க முடியாது.
இவ் இடைக்காலத்தில்,
இசைநாடகக் கலைஞர்கள் எங்களோடு உறவாய் நெருங்கியிருந்தனர்.
அதனால் மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக,
அவர்களது இசைநாடகத்தை நடாத்தினோம்.
அப்போது புலிகளின் பாடல்களைப் பாடி,
இயக்கத்தின் பாடகர் எனப் பெயர் எடுத்திருந்த சாந்தன் அவர்களையும்,
இந்நாடகத்தில் கலந்து கொள்ளும்படிக் கேட்டோம்.
அவரும் சம்மதித்திருந்தார்.
ஆனால் நிகழ்ச்சி அன்று அவர் வராமல் விட்டார்.
ஆனாலும் வில்லிசைக் கலைஞர் சின்னமணி போன்றவர்கள் கைகொடுக்க,
அந்நிகழ்ச்சி சிறப்புற நடைபெற்றது.
பத்திரிகைகளில் இந்நிகழ்ச்சி பற்றிய விளம்பரங்களைப் போட்டும்,
முதல் இரண்டு நாட்களும் மிகக் குறைவான கூட்டமே,
இந் நிகழ்வுகளுக்கு வந்தது, அதனால் வருந்தினேன்.

🚩 🚩 🚩

வில்லிசை சின்னமணி

இக்கலைஞரைப் பற்றியும் இங்கே நான் சொல்ல வேண்டும்.
அச்சுவேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர்,
ஆசிரியராய்த் தொழில் செய்தார்.
இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழும் கைவரப்பெற்ற,
பெருங் கலைஞர் இவர்.
நாங்கள் சிறுபிள்ளைகளாய் இருந்தபொழுது,
ஆலயத் திருவிழாக்களில் சின்னமணி அவர்களைக் காண,
பெருமளவில் கூட்டம் கூடும்.
வெளிநாடுகளுக்கெல்லாம் சென்று,
அவர் வில்லிசையால் பெரும் புகழ் ஈட்டினார்.
எங்கள் கம்பன் கழக விழாக்களில் பலதரம்,
வில்லிசை நிகழ்ச்சியை நடாத்தி,
சபையைப் பெரிதும் ஈர்த்திருக்கிறார்.
யாழ்ப்பாணத்தில் நாங்கள் இசை நாடகங்களை அரங்கேற்றியபோது,
அதில் யமன் வேஷமிட்டு,
அவர் காட்டிய அட்டகாச நடிப்பை மறக்க முடியாது.
எவ்வித எதிர்பார்ப்புமின்றி எங்கள் கழக முயற்சிகளுக்கு,
அன்போடு கைகொடுப்பார்.
எங்களை உரிமையோடு நேசித்த மனிதர் இவர்.
பிற்காலத்தில், எமது கொழும்புக் கம்பன் கழகத்தில்,
அவருக்குச் சான்றோர் விருதளித்துக் கௌரவித்தோம்.
இப்பெருங் கலைஞரும் அண்மையில் இறைபதம் எய்தினார்.

🚩 🚩 🚩

ஸ்ரீ  தியாகராஜ சுவாமிகள் இசை ஆராதனை 
5 ஆவது நிகழ்ச்சி (1995)

இத்தனை எதிர்ப்புக்களின் மத்தியிலும்,
இவ்வாண்டுக்குரிய இசைஆராதனை,
நிகழ்ச்சியையும் செய்ய ஆயத்தம் செய்தோம்.
இவ்வாண்டுக்குரிய இசைப்பேரறிஞராய்,
அண்ணாமலை இசைத்தமிழ்மன்றத்தைச் சார்ந்த,
'சங்கீத பூஷணம்' எஸ். பாலசிங்கம் அவர்களைத் தேர்ந்தெடுத்தோம்.
ஆனால் 1995 ஒக்டோபர் இடப்பெயர்வால்,
இவ்விழா நடைபெறாமலே போயிற்று.

🚩 🚩 🚩

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்