'உன்னைச் சரணடைந்தேன்': பகுதி 62 - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

🚩 🚩 🚩
புதுவையின் கவிதை- பேச்சை நிறுத்தினேன்

இச் சூழ்நிலையில் தான் முதல் முதலாய்,
எங்கள்மேலான புலிகளின் மறைமுகமான கண்டனம் ஒன்று,
பத்திரிகையில் வெளிவந்தது.
நேராகக் கம்பன்கழகத்தைச் சாடாவிடினும்,
ஆலயங்களில் நாங்கள் செய்துவந்த பட்டிமண்டபங்களை,
மறைமுகமாகக் கிண்டல் செய்து புதுவை எழுதிய ஒரு கவிதையை,
புலிகளின் அதிகார பூர்வ பத்திரிகையான 'ஈழமுரசு' வெளியிட்டிருந்தது.
புலிகளின் சார்பில் நேரடியாக முதல்முதலில்,
எங்கள்மேல் தொடுக்கப்பட்ட அம்பு அது.

🚩 🚩 🚩

புதுவைக்கும் எனக்குமான நெருக்கம்

புதுவை எங்களைச் சகோதரர்களாய் நேசித்தவர். 
அவரது மனைவியார் மிக மென்மையானவர்.
அவர்களது மூத்த மகனுக்குச் சோபிதன் என,
நான் தான் பெயரிட்டேன்.
இயக்கத்தோடு நாம் முரண்பட்டிருந்த போதும்,
எங்களின் மீதான அன்பையும், மதிப்பையும் புதுவை குறைக்கவில்லை.
இவர் இயக்கத்தில் இருந்தபோது,
இவருக்குத் தெரியாமல்,
இவரது ஒரே மகள் இயக்கத்தில் சேர்ந்தாள்.
அப்போது என்னைத் தேடி வந்த இவர்,
மனம் வருந்தித் தனது துக்கத்தைக் கொட்டினார்.
இடையில் ஒரு நாள் மகள் வீட்டிற்கு வந்தபோது,
கம்பன் கோட்டத்திற்கு ஓடி வந்து,
என்னை அழைத்துச் சென்று,
இயக்கத்தை விட்டு விலத்திவிடும்படி,
மகளுக்குப் புத்திமதி சொல்லச் சொன்னார்.
நான் புத்தி சொல்லியும் கேட்காமல் அவள் சென்று விட,
மனம் வருந்தி அன்றிரவு  நெடுநேரம்,
எங்களோடு பல விஷயங்களையும் மனம் விட்டுப் பேசினார்.
அவற்றை இங்கு எழுத முடியாது.
யாழை விட்டு எல்லோரும் புறப்படுகிறபொழுது,
என்னைத் தேடி வந்து,
'நீங்கள் இங்கு நிற்க வேண்டாம் வெளிக்கிடுங்கோ' என்று,
புத்தி சொல்லிப் போனார்.
பிறகு நான் கொழும்பு வந்துவிட்டேன்.
பின்னர் போர் நிறுத்தம் ஏற்பட்டபோது,
கொழும்புக்கு என்னைத் தேடி வந்து சந்தித்தார்.
நடந்தவற்றிற்காய் மன்னிப்புக் கோரினார்.
மீண்டும் போர் தொடங்கி நடந்து கொண்டிருந்த காலத்தில்,
மல்லிகை அட்டைப்படத்திற்காக அவரைப் பற்றிக் கட்டுரை எழுதினேன்.
அக்கட்டுரையைப் படித்துவிட்டு வன்னியிலிருந்து,
தொலைபேசியில் நெக்குருகிப் பேசினார்.
இன்று அவர் எங்கிருக்கிறார் என்று தெரியாத நிலை.
அவர்மீதான அன்பு ஒரு துளியும் குறையவில்லை.
அவர் மீண்டும் வர வேண்டும் எனப் பிரார்த்தித்தபடி இருக்கிறேன்.

🚩 🚩 🚩

புதுவையுடன் சண்டை பிடித்தேன்

இத்துணை நெருக்கமான புதுவை,
எங்களைக் கிண்டல் அடித்து எழுதிய,
கவிதையைக் கண்டதும் நான் கடும் கோபம் கொண்டேன்.
காரணம் புதுவையிடம் பலதரமாக,
இயக்கம் எங்களோடு ஏன் முரண்படுகிறது என்று கேட்டிருக்கிறேன்.
அதற்கு அவர் அத்தகைய முரண்பாடு ஏதும் இல்லை என்று,
சத்தியம் பண்ணாத குறையாகப் பதில் சொல்வார்.
இப்போது இவரே எங்களைக் கிண்டல் பண்ணிக் கவிதை எழுதியதும்,
ஆத்திரப்பட்ட நான் நேராகக் கம்பன்கோட்டத்திற்கு அருகில் இருந்த,
அவரது வீட்டிற்கு நேரடியாகச் சென்றேன்.
அது ஒரு விடியற்காலை நேரம்.
என்னைக் கண்டதும் புதுவை மிகச் சங்கடப்பட்டார்.
'உங்களுக்கு எங்களோடு என்ன பிரச்சினை?
ஏன் இப்படி எழுதினீர்கள்'
என்று நேரடியாய்க் கேட்டேன்.
நான் அப்படி நேராய் வந்து கேட்பேன் எனப் புதுவை எதிர்பார்க்கவில்லை.
'ஜெயா இது உங்களைப் பற்றி எழுதின கவிதையில்ல,
வேற பட்டிமண்டபக் குழுக்களைப் பற்றி எழுதின கவிதை'
என்று 
சமாளித்தார்.
நான் அதை ஒத்துக் கொள்ளாமல் சத்தம் போட்டேன்.
அப்போது ஆகாயத்தில் பொம்மர் சுற்றத் தொடங்க,
'ஜெயா நீங்கள் இங்க நிக்கிறது ஆபத்து,
உடன கோட்டத்திற்குப் போங்கோ'
என்று சொல்லி,
என்னை அனுப்பி வைத்தார்.
அவரின் சங்கடத்தைப் புரிந்து கொண்டு நானும் திரும்பினேன்.

🚩 🚩 🚩

கூடி ஆராய்ந்தோம்

கவிதையைப் பார்த்துவிட்டுத் திருநந்தகுமாரும் கழகத்திற்கு வந்தான்.
திருநந்தகுமார், குமாரதாஸ், நான், ரத்தினகுமார் ஆகியோர்,
அதுபற்றி உடனடியாகக் கூடி ஆலோசித்தோம்.
மறைமுகமாகக் காட்டி வந்த எதிர்ப்பை,
முதல் முதலாகப் புலிகள் வெளிப்படக் காட்டத் தொடங்கியிருக்கின்றனர்.
இனி அவர்கள் எந்த எல்லைக்கும் செல்லலாம்.
ஆகவே, அவர்களை நாம் முந்திக்கொள்ள வேண்டும் என, 
ஓர் அவசர முடிவினை எடுத்தோம்.
'கழகம் மதிக்கப்படும்வரை,
இனி நாம் யாழ்ப்பாணத்தில் பேசுவதில்லை'
என்பதுவே அம்முடிவு.

🚩 🚩 🚩

ஒதுங்கிக் கொண்ட திருமுருகனும், தமிழருவியும்

ஒற்றுமையாய் அம்முடிவு எடுக்கப்பட்டால் தான்,
சமுதாயத்தில் அது பாதிப்பை ஏற்படுத்தும் என நினைந்து,
தமிழருவி சிவகுமாரனோடும், ஆறு.திருமுருகனோடும்,
அதைப் பற்றிப் பேச, கார்பிடித்துச் சென்றோம்.
சிவகுமாரன் அம்முடிவைக்கேட்டு மகிழ்ந்து,
எம்முடன் இணைய உடன் சம்மதித்தான்.
அங்கிருந்து திருமுருகனைச் சந்திக்க,
ஸ்கந்தவரோதயாக் கல்லூரிக்குச் சென்றோம்.
எங்களைக் கண்டதும் திருமுருகன் பதற்றப்பட்டான்.
நாம் வந்த நோக்கத்தைச் சொன்னதும் திருமுருகனின்  முகத்தில் குழப்பம்,
இயக்கத்தோடு முரண்பட அவன் பயந்தான்.
'அண்ணை! அவசரப்படாதீங்கோ  நான் போய்க் கதைச்சுப் பார்க்கிறன்' என்றான்.
திருநந்தகுமாருக்குக் கடும் கோபம்.
'விருப்பமென்றால் நீ எங்களோடு சேர், இல்லாட்டி விடு' என்று,
கோபமாய்ப் பேசி விட்டு எங்களை அழைத்துக்கொண்டு திரும்பிவிட்டான்.
ஒரு ஆடு, மந்தையை விட்டு அச்சத்தால் திசை மாறியது.
இதற்கிடையில் பேச்சால் வந்த வருமானம் நிற்பதில்,
சிவகுமாரனின் வீட்டில் முரண்பாடு ஏற்பட்டிருக்கும் போல.
அம்முரண்பாட்டினால் சிவகுமாரனும்,
எங்கள் போராட்டத்திலிருந்து விலகிக்கொள்வதாய், பின்னர் அறிவித்தான்.
மற்றொரு ஆடு ஆசையால் திசை மாறியது.

🚩 🚩 🚩

ஆதீனத்தில் எதிர்ப்புக் கூட்டம்

அடுத்தநாள் பத்திரிகையில்,
'இனி நான் யாழ்ப்பாணத்தில் எங்கும் பேசப்போவதில்லை, 
ஒத்துக்கொண்ட பேச்சுக்கள் அத்தனையையும் இரத்துச்செய்கிறேன்'
என, 
விளம்பரம் கொடுத்தேன்.
எங்களது இந்த நகர்வை இயக்கம் எதிர்பார்க்கவில்லை.
அவ்விளம்பரத்தால் யாழ்ப்பாணத்தில் பெரிய பரபரப்பு ஏற்பட்டது.
என்ன நடந்தது என்று தெரியாமல் மக்கள் மனதில், பெரும் குழப்பம்.
ஒரு சிலர், கம்பன்கழகத்தைப் புலிகள், பேசக் கூடாதென, 
தடை செய்து விட்டார்கள் என்று பேசிக்கொண்டார்கள்.
அப்போது யாழ்ப்பாணம் முழுவதிலும் உள்ள கோயில்களில்,
பெரும்பாலும் எனது சொற்பொழிவுகள் நடந்து வந்தன.
திருவிழா உபயகாரர்கள் எனது நிகழ்ச்சிகளை,
பத்திரிகைகளில் தினமும் விளம்பரம் செய்து வந்தார்கள்.
நான் பேசுவதில்லையென அறிவித்ததும், உபயகாரர்களுக்கு அதிர்ச்சி,
நெல்லியடி தயாபரன் நான், முடிவை மாற்றி 
தொடர்ந்து பேச வேண்டும் எனக்கேட்டு,
பத்திரிகையில் ஓர் விளம்பரம் வெளியிட்டான்.
அவ் விளம்பரத்தைப் பார்த்துப் பல கோயிற்காரர்களும்,
என்னைப் பேசச்சொல்லி வலியுறுத்தி,
தொடர்ந்து பத்திரிகையில் விளம்பரங்களைப் போடத் தொடங்கினர்.
எங்கள் கழக உறுப்பினன் கிருபானந்தா என்னைப் பேசச் செய்வதற்காய்,
பலரையும் சந்தித்து,
நல்லை ஆதீனத்தில் ஒரு கூட்டம் நடாத்த ஒழுங்கு செய்தான்.
அன்னை தங்கம்மா அப்பாக்குட்டி, 
மாவை ஆதீனம் சண்முகநாதக்குருக்கள், நல்லை ஆதீனம், 
சிவராமலிங்கம் மாஸ்டர் எனப் பல சமயப் பிரமுகர்களும்,
கிருபாவின் முயற்சியால் அக்கூட்டத்தில் பேச மனமுவந்து சம்மதித்தனர்.
அக் கூட்டம் நடக்கப் போகும் செய்தியும் பத்திரிகையில் வெளி வந்தது.
அதனால் புலிகள் கடுமையாய் அதிருப்தியுற்றனர்.

🚩 🚩 🚩

அம்மையாரின் மனமாற்றம்

இதற்கிடையில் இக் கூட்டத்தில் கலந்து கொண்டால்,
புலிகளின் எதிர்ப்பைச் சம்பாதிக்க வேண்டி வரும்; என,
அன்னை தங்கம்மா அப்பாக்குட்டியையும் சிலர் மிரட்டினராம்.
அச்செயலில் கழகத்திலிருந்த சிலருமே பங்குபற்றியதாய் அறிந்து
மனம் வருந்தினேன்.
இங்ஙனமாய் சிலர் குழப்ப, அம்மையாரும் குழம்பிப் போனார்.
முதல் தரம் கிருபானந்தா சென்றபோது,
உற்சாகமாக அப்படியொரு கூட்டம் நடத்தத்தான் வேண்டும் 
என்று சொன்னவர்.
இரண்டாம் தரம் அவன் சென்றபோது,
அவனைக் கடுமையாய்த் திட்டி,
கூட்டத்தில் கலந்து கொள்ள 
மறுப்புத் தெரிவித்து அனுப்பினார்.

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்