'உன்னைச் சரணடைந்தேன்': பகுதி 78 - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

🚩 🚩 🚩
கவிஞர் நடனசிகாமணி

என் மேலும் கழகத்தின்மேலும்  அன்பு கொண்டவர்களில் இவரும் ஒருவர்.
அக்காலத்தில் வீரகேசரி, ஈழநாடு ஆகிய பத்திரிகைகளின் 
நிருபராகவும் இவர் செயலாற்றி வந்தார்.
கழகத்தையும் என்னையும் வளர்க்க வேண்டும் எனப் பெரு முயற்சிகள் செய்தார்.
பிரச்சினைக் காலங்களிலெல்லாம் என்னிடம் பேட்டி எடுத்து,
அதனைப் பத்திரிகையில் வெளிவரச்செய்தார்.
எங்கள் கம்பன் விழாக் கவியரங்கங்களிலும்,
இவர் ஓரிரு தடவை பாடியிருக்கிறார்.
சற்று முன்கோபக்காரர்.
கழக வளர்ச்சியில் அதீத அக்கறை கொண்டிருந்தவர்.

🚩 🚩 🚩
தேவர் அண்ணை

தேவர் அண்ணை, இவரும்
புலிகளின் கலைப் பண்பாட்டுக் கழகத்தில் முக்கிய பங்கு வகித்தவர்.
சற்று வயதானவர், கடும் போக்காளர்,
கம்பனை எதிர்த்ததில் முதன்மை வகித்தவர்.
இலங்கேஸ்வரன் நாடகம் அரங்கேறியது இவரின் பொறுப்பில்தான்.
அப்போது ஆலயத் திருப்பணிகளைக் கண்டித்து 
பலரதும் கசப்பைச் சம்பாதித்தார்.
கம்பனை எதிர்த்தாலும் என்னை நேசித்தவர்.
பிற்காலத்தில் இவரும் இயக்கத்தை விட்டு விலகினார்.
சில காலம் கொழும்பில் வந்து தங்கியிருந்தார்.
அப்போது நிறைய நாடக முயற்சிகள் செய்தார்.
அரசு சார் நாடக நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார்.
கொழும்பில் நடந்த எங்கள் கம்பன் விழாக்களுக்குத் தவறாமல் வருவார்.
சிறு நிதியுதவியும் செய்வார்.
வீட்டிற்கு வந்து மனம் திறந்து பழையவற்றையெல்லாம் பேசுவார்.
இன்று இந்தியாவில் இருப்பதாய்க் கேள்வி.

🚩 🚩 🚩
தமிழ்ச்செல்வன்,  நடேசன்

புலிகள் இயக்கத்தில் பெரும் பதவிகளை வகித்தவர்கள் இவர்கள்.
தமிழ்ச்செல்வன் பின்னாளில் புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளராய் இருந்தார்.
நடேசன் காவல்துறைப் பொறுப்பாளராய் இருந்தார்.
இவ்விருவரும் என்மேல் எல்லையற்ற அன்பும், மதிப்பும் கொண்டவர்கள். 
தமிழ்ச்செல்வன் என்பேச்சின் ரசிகன்.
மிக மரியாதை தந்தே என்னுடன் பழகுவார்.
இவர் எங்காவது சென்றுகொண்டிருக்கையில்,
எனது பேச்சு எங்கும் கேட்டால் உடனே,
தனது வாகனத்தை நிறுத்திவிட்டு,
பேச்சு முழுவதையும் கேட்டுவிட்டுத்தான் செல்வார் என,
அவரை வைத்துக்கொண்டு,
அவர்களது மேடையிலேயே புதுவை சொல்லியிருக்கிறார்;.
அதுபோலவே, 
ஒருமுறை புலிகளின் காவல்துறைக்கு நான் சென்றபோது,
நடேசன் எழுந்து நின்று என்னை வரவேற்றதோடு,
தனது ஆன்மீக ஈடுபாடுபற்றி நிறையநேரம் பேசினார்.
பின்னாளில் இயக்கத்துடனான முரண்பாடுகள் தோன்றியபோது,
இவ்விருவருமே என்னைச் சந்திப்பதைத் தவிர்த்தனர்.

🚩 🚩 🚩
எங்களோடு நெருங்கியிருந்த இசை அறிஞர்கள்

இசை வேளாளர்களைப் போலவே இசையறிஞர்கள் பலரும்,
எங்கள் கழகத்தின் மேல் அக்கறையும், அன்பும் காட்டி வந்தனர்.
எங்களது ரத்தினகுமாரினது தந்தையார் புகழ்பெற்ற வயலின் வித்துவான்
வி.கே. குமாரசாமி அவர்களைப் பற்றியும்,
எங்கள் இசை ஆசிரியை  சத்தியபாமா ராஜலிங்கம் அவர்களைப் பற்றியும்,
முன்னரே சொல்லியிருக்கிறேன்.
அவர்களைத் தவிர, அக்காலத்தில் புகழ்பெற்றிருந்த மூத்த இசைக் கலைஞர்,
பரம் தில்லைராஜா அவர்களும் எம்மேல் அதிக அக்கறை காட்டினார்.
அதுபோலவே, புகழ்பெற்ற சங்கீத வித்துவான் 
திரு. கணபதிப்பிள்ளை அவர்களும், எங்கள்மேல் அதீத அக்கறை கொண்டிருந்தார்.
அவரிடம் நான் சில காலம் சங்கீதமும் பயின்றேன்.
சங்கீதபூஷணம் நாகம்மா கதிர்காமர் எங்களைப் பிள்ளைகளாகவே நினைத்தார்.
பத்மலிங்கம், திலகநாயகம்போல்,  மேரி சரோஜா ஜஸ்டின், வேலாயுதப்பிள்ளை ஆகியோரிடம்
நானும், ரத்தினகுமாரும் சிலகாலம் இசை பயின்றோம்.
அத்தொடர்பால் அவர்களும் எங்கள்மேல் அன்பு பாராட்டி வந்தனர்.
ஏதோ வகையில் எல்லா இசைக்கலைஞர்களுடனும்,
எங்களுக்குத் தொடர்பு இருந்தது.

🚩 🚩 🚩
நித்தியண்ணை,  பட்டாசண்ணை

இவ்விருவரும் எங்கள் விழாக்களுக்கு ஒலி அமைப்புச் செய்தவர்கள்.
அத்துறையில் நித்தியண்ணை பெரும் நிபுணன்.
இன்றுவரை அவருக்கு நிகரான ஒலி அமைப்பாளரை
நான் சந்தித்ததில்லை.  அவர் மறைவு எமக்கேற்பட்ட பேரிழப்பு.
அவரைப்போலவே பட்டாசண்ணையும், 
எங்கள் விழாக்களுக்கு ஒலி, ஒளி அமைப்புக்கள் செய்வார்.
வெகுளியான ஆழமான மனிதர்.
சோதனைகள் வந்தபோதெல்லாம் எங்களைக் கைவிடாதவர்.

🚩 🚩 🚩
கெங்காதரன்,  பாலேந்திரன்

எங்கள் கழகம் விரிவடைந்து, பெருவிழாக்களை எடுக்கத் தொடங்கியபின்,
விருதுகள் வழங்க ஆரம்பித்த விபரத்தை முன்பே சொல்லியிருக்கிறேன்.
எதைச் செய்தாலும், அதை அழகாய்ச் செய்ய வேண்டும் என்பது எங்கள் கொள்கை.
அதனால், விருதாளர்களுக்கு வழங்கப்படும் விருதினையும்,
கலைநுட்பத்தோடு செய்ய வேண்டும் என விரும்பினோம்.
அப்போது, வண்ணார் பண்ணையில் இருந்த கலைஞர்,
கெங்காதரன் அவர்கள் எங்களுக்குத் துணை செய்ய முன்வந்தார்.
மரம், பித்தளை, வெள்ளி ஆகிய மூலப் பொருட்களைக் கொண்டு,
முதல் 'மகரயாழ்' விருதினை அற்புதமாய்ச் செய்துதந்து,
எம்மை வியக்க வைத்தார் அவர்.
ஆனால், பின்னாளில் எங்களைப் பகை மேகம் சூழ்ந்தபோது, 
அவரும் அப்பகைக்குழுவினரின் கை வயப்பட்டு எம்மை நிராகரித்தார்.
அந்த நேரத்தில்தான்,
சுன்னாகத்தைச் சேர்ந்த அதே கலையில் வல்லவரான
இளைஞர் பாலேந்திரன்,
கம்பன் அருளால் எங்களுக்குக் கைகொடுக்க முன்வந்தார்.
முன்னை விருதுக்குச் சற்றும் தாழ்வில்லாத வகையில்,
அதி அற்புதமான விருதை இரண்டாவது விழாவிற்கு,
அவர் ஆக்கித் தந்தபோது, நாம் வியந்து போனோம்.
அந்த நண்பனின் கழகத்துடனான தொடர்புபின் நீண்டது.
இன்றுவரையும் நீடித்து வருகிறது.

🚩 🚩 🚩
சோதி,  சிறில்

இவ்விருவரும் கழகத்தால் மறக்கமுடியாத ஊழியர்கள்.
சோதி கம்பன் கோட்ட அமைப்பில் பெரும் பங்கு வகித்தவர்.
பொறியியலாளரே அதிசயிக்கும்படி,
கோட்டத்தின் கூரை வேலையை நிறைவு செய்தவர்.
எங்கள் கழகத்தை அழகுபடுத்துவதில் முக்கிய பங்கு வகித்தவர்.
எனக்குப் பழைய கலைப்பொருட்களில் விருப்பம் அதிகம்.
கழகத்தில் நான் தேடி வைத்த கலைப்பொருட்களைத் தங்கமாய் மாற்றிவிடும்
கைவண்ணம் பெற்றவர்.
இவ்விருவரின் தொடர்பு இன்றும் தொடர்கிறது.

🚩 🚩 🚩
கழகத்திற்கு துணைசெய்த அச்சகங்கள்

'ஞானம் ஆர்ட்ஸ்' ஏ. ஞானசேகரம்

ஆரம்பத்தில், எங்கள் கழகத்தின் அச்சுவேலைகளை, 
யாழிலிருந்த சைவப்பிரகாச அச்சியந்திரசாலை, செட்டியார் அச்சகம், 
சாந்தி அச்சகம், தாசன் அச்சகம், திருவள்ளுவர் அச்சகம் 
ஆகியவற்றில் செய்து வந்தோம்.
பின்னர் கழகம் வளர்ச்சி அடையத்தொடங்கியபின்,
எமது அச்சுமுயற்சிகள் அழகுபெறத் தொடங்கின.
அந்த விடயத்தில் எமக்கு முதலில் உதவியவர்
சங்கானையில் இயங்கிவந்த ஞானம் ஆர்ட்ஸ் அச்சகத்தின் 
உரிமையாளர் ஓவியர் ஞானம் ஐயா அவர்கள் ஆவார்.
எங்கள் அச்சு முயற்சிகளுக்கு அக்கறையோடு அவர் துணை புரிந்தார்.
அவரால்தான் எங்களின் கழக அழைப்பிதழ்கள் 
முதன்முதலில் அழகு பெறத் தொடங்கின.
இன்று அவர் அவுஸ்திரேலியாவில் வாழ்கிறார்.
அன்றுதொட்டு இன்றுவரை எங்கள் கழகத்தின்மேல்
மதிப்பும் அன்பும் கொண்டு இயங்கி வருகிறார்.

'யுனி ஆர்ட்ஸ்' பொன்.  விமலேந்திரன்

அக்காலத்தில் கொழும்பில் 'ஓப்செற்' பதிவு வந்துவிட்டது.
எங்கள் விழா அழைப்பிதழ்கள் அப்பதிவில் வர வேண்டும் என்பதற்காக,
முதன்முதலில் 1994 இல் கொழும்பில் இயங்கிய 'யுனி ஆர்ட்ஸ்' அச்சக உரிமையாளர்,
பொன். விமலேந்திரன் அவர்களுடன் தொடர்புகொண்டு,
அவ்வாண்டு விழா அழைப்பிதழை அச்சிட்டோம்.
அழகான சிவப்பு நிறப் பெட்டியினுள் புத்தகம்போல்,
வைக்கப்பட்ட அவ்வழைப்பிதழுக்கு, பெரும் வரவேற்பு இருந்தது. 
விழாவின்போது அவ்வழைப்பிதழை சிலர் விலைகொடுத்துக்கூட வாங்கினார்கள்.
அதன்பின்னர் பலகாலம் எங்கள் அச்சக முயற்சிகள் அனைத்தையும்,
'யுனி ஆர்ட்ஸ்' நிறுவனமே செய்து வந்தது. 
நாங்கள் கொழும்பு வந்ததும் 
நண்பர் விமலேந்திரன் எங்கள் கழக உறுப்பினர்களுள் ஒருவரானார்.
அச்சகத்துணை மட்டுமன்றி சிறிய பொருட்துணையும் செய்து 
எங்கள் கழகத்தைப் பேணி வந்தார்.
அவரால் நாம் பயன்பெற்றதுபோலவே, எம்மால் அவர் பயன் பெற்றதும் உண்மை.
நான் வடிவமைத்த அழைப்பிதழ்களும்,
புத்தக அட்டைகளும் அவரது அச்சகத்திற்கு
பெரும் விளம்பரத்தைத் தேடித்தந்தன.
அப்படியிருந்தும்,  அவரை நாம் போற்றி நடந்தது போல,
எம்மை அவர் போற்றி நடக்கத் தவறினார்.
பல விடயங்களில் இவரோடு இடையிடையே முரண்பட வேண்டி வந்தது.
அம்முரண்பாடு சிலநாட்களிற் தானே மறைந்தும் வந்தது.
பின்னாளில் இம்முரண்பாடு பெருகத் தொடங்கியது.
எமது எளிமையை விளங்கிக் கொள்ளாது,
எம்மை அலட்சியம் செய்து இவர் நடக்கத்தலைப்பட்டதால்,
அவரையும் அவ் அச்சகத்தையும் விட்டு 
நாம் நிரந்தரமாய்ப் பிரியவேண்டி வந்தது.

🌷உன்னைச் சரணடைந்தேன் நிறைவுப் பகுதி🌷
இதுநாள் வரையிலும் ஆவலோடு வாசித்து மகிழ்ந்த
அனைத்து உகர வாசகர்களுக்கும் நன்றி.
உங்கள் ஆதரவு என்றும் எமக்காகுக!

'இன்பமே எந்நாளும் துன்பமில்லை.'

#கம்பவாரிதி
#குருநாதர்🙏

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்