'உலகம் யாவையும்':பகுதி 02-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

லகுக்குப் பொதுவான இறையை, 
தன் கவியுள் அடக்க நினைந்து 
கடவுள் வாழ்த்தைப் பாடத்தலைப்பட்ட கம்பன்,
இறைவனோ, 'உணர்ந்து ஓதற்கரியவன்',
சிந்தனைக்கும் மொழிக்கும் அகப்படாதவன்,
எனினும்,
அன்பால் நினைவார்தம் அகம்படுபவனுமாம்.
அகப்படாமையும் அகம்படுதலும்,
அவ்வாண்டவன்தன் அலகிலா விளையாட்டன்றோ!
இறைவன் குணம் குறி அற்றவன்.
இது இயல்பு, இது வடிவு என இயம்புதற்கரியன்.
எது இயல்பு, எது வடிவு எனக் கொண்டாலும் அதற்குரியன்.
குணங்குறி கடத்தலும்,
குணங்குறி எடுத்தலும்,
அவ்வாண்டவன்தன் அலகிலா விளையாட்டன்றோ!
இறைவன், எப்பொருளுள்ளும் அடங்காதவன்.
அவனே, எப்பொருளுள்ளும் அடங்கியவனுமாம்.
உலகோடு ஒன்றாயும், வேறாயும், உடனாயும் நிற்பது அவனியல்பன்றோ!
அனைத்திலும் அடங்கியும் அடங்காமலும் நிற்றல்,
அவ் ஆண்டவன்தன் அலகிலா விளையாட்டன்றோ!
இறைவன், 
'உண்டு' என்பார்க்கு உளனாவான்.
'இலை' என்பார்க்கு இலனாவான்.
'ஒன்று' என்பார்க்கு ஒன்றாவான்.
'பல' என்பார்க்குப் பலவாவான்.
'நன்று' என்பார்க்கு நலனாவான்.
'தீது' என்று உரைப்பின் தீதாவான்.
அகப்படாமையும் அகம்படுதலும்,
குணங்குறி கடத்தலும் குணங்குறி எடுத்தலும்,
அடங்குதலும் அடங்காமையும்,
உளனாதலும் இலனாதலும்,
ஒன்றாதலும் பலவாதலும்,
நன்றாதலும் தீதாதலும்,
ஒருங்கு செய்தல்,
அவ்வாண்டவன்தன் அலகிலா விளையாட்டன்றோ!
மொத்தத்தில் இவ்வலகிலா விளையாட்டுடைய ஆண்டவனே,
இவ்வுலகின் காரணனாம்.
தோற்றாத, உணரமுடியாத,
அவ்வேதமுதற் காரணனை உணர்தல் எங்ஙனம்?
அவன் நிமித்த காரணனாக, காரியமாய் உதித்தது இவ்வுலகு.
காரியம் கொண்டே காரணம் உணரப்படும்.
அருவ நிலையும் கடந்த கடவுளாம் அக்காரணனை, 
உருவ நிலை கொண்ட,
உலகம் எனும் காரியம் கொண்டே உணர்தல் கூடுமாம்.
இவ்வுண்மை உணர்கிறான் கம்பன்.
சமயங்கடந்த இப்பொதுக்கருத்து, 
கம்பன் சிரத்தில் உதித்துக் கரத்துள் புக,
அவனை அறியாமல் அவன் எழுத்தாணி,
'உலகம்' எனும் அதேசொல்லை மற்றொருதரம் அழுத்தி எழுதிற்று.
🍁 🍁 🍁
படைத்தல், காத்தல், அழித்தல் என இம்முத்தொழில்களையும்,
பற்றின்றி, விளையாட்டாய், முழுமையாய்ச் செய்ய வல்லான் எவனோ,
அவனே உலகின் தலைவனாம்.
அத்தலைவனை அடைதல் எங்ஙனம்?
கம்பன் மனத்துள் மீண்டும் கேள்வி.
புலன்களும், அறிவும், முயற்சியும் அவனைக்காணவல்லன அல்ல.
அவனே காட்டினன்றி,
அவனைக்காணுதல் என்றும் இயலாதாம்.
எப்போ அவன் தன்னைக் காட்டுவன்?
காட்டச் செய்வதற்காம் வழி யாது?
கேள்விகளுக்குச் 'சரணாகதி' ஒன்றே பதிலாகிறது.
'அவர் தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே'
எனும் நிலை கூடுதல் எங்ஙனம்?
கேள்வி பிறக்கக் கம்பன் சிந்திக்கின்றான்.
சரணாகதி என்றால் என்ன?
இறைவனிடம் தன்னை முழுமையாய் ஒப்படைத்தல்.
முழுமையாய் ஒப்படைத்தல் கூடுமோ?
தானே அவன் என உணர்ந்தாற் கூடும்.
அவ்வாறு உணர்தல் எங்ஙனம் சாத்தியம்?
நான் அவனுள் ஒரு பகுதி என உணர அது சாத்தியமாம்.
நான் அவன் எனும் இருநிலை துறந்து,
நான் அவனுள் ஒரு பகுதியாதலை விளக்க,
உவமை தேடிற்றுக் கம்பன் உள்ளம்.
உலகே அவ்வுவமையாயிற்று.
நான் என நினைக்க உலகு நம்மில் வேறாகும்.
உலகென நினைக்க நாம் உலகில் ஒன்றாவோம்.
முதற்சிந்தனை நம்மினின்றும் உலகை வேறாக்கும்.
இரண்டாம் சிந்தனை உலகோடு நம்மை ஒன்றாக்கும்.
உலகின் இவ்விருமை நிலையே,
'உளவாக்கலும், நிலைபெறுத்தலும், நீக்கலும்' செய்யும், 
'அலகிலா விளையாட்டுடைய' அத்தலைவனை உணர்ந்து,
'அவர் தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே' என,
நாம் சரணாவதற்காம் வழியை உவமையாய் விளக்கி நிற்கிறது.
அவ்வுண்மை உணர, உலகம் எனும் சொல், 
கம்பன் சிந்தையுள் ஒளிர்ந்து, கைவழி வழிந்து வர,
அவன் கையெழுத்தாணி, 'உலகம்' எனும் அதேசொல்லை,  
மீண்டும் மற்றொருதரம் அழுத்தி எழுதிற்று.
🍁 🍁 🍁
(தொடரும்)

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்