'உலகம் யாவையும்':பகுதி 03-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

லகம் செழித்தற்கு,
தன் காவியம் காரணமாதல் வேண்டுமென,
அருளால் காவியம் செய்யத் தலைப்பட்ட,
கவிச்சக்கரவர்த்தி கம்பன் விரும்புகின்றான்.
உலகம் மங்கலமுற,
மங்கலச் சொல்கொண்டு காவியம் தொடங்குதல் மரபு.
ஒலியால் உருவான உலகில்,
ஒலிகள் பயன்செய்தல் இயல்பன்றோ?
ஒவ்வோர் சொல்லின் ஒலியும், 
ஒவ்வோர் விதமாய்ப் பயன் விளைக்குமாம்.
நம் ஞானியர், தம் யோகக்காட்சியால்,
தமிழ்ச் சொற்களுள்,
மங்கலத்தன்மை கொண்டவற்றை இனங்கண்டு,
வரிசைப்படுத்தினர்.
அவற்றுள் உலகம் எனும் சொல் முதன்மை பெற்றது.
அது நோக்கியே,
'உலகெலாம்' எனச் சேக்கிழாரும்,
'உலகம் உவப்ப' என நக்கீரரும்,
பாடல் தொடங்கினர்.
இவ்வுண்மை உணர,
கம்பன் மனதில்,
உலகம் எனும் சொல் மீண்டும் ஒலிக்கிறது.
உளத்தில் உதித்த அவ்வொலி, கரத்தின் வழியாக,
அவன் கை எழுத்தாணி அவனையறியாமல்,
'உலகம்' எனும் அதேசொல்லை, 
மேலும் ஒருதரம் வலிந்து எழுதிற்று.
♠♠♠♠♠
வைதிக இந்துமதம் பலகூறுகளாய்ப் பிரிந்தது.
அங்ஙனம் பிரியினும்,
அவையனைத்திற்கும் விநாயக வணக்கம் பொதுவாம்.
விநாயகனைத் தொழுது தொடங்கும் செயல்கள் அனைத்தும்,
அவனால் வினை தீர,
உயர்ந்து உலகை உய்விக்கும் என்பது,
அம்மதத்தார் அனைவர்க்கும் கருத்தாம்.
மரபுவழிவந்த கம்பனும் இக்கருத்தாற் கட்டுண்டான்.
கடவுள் வாழ்த்தில் விநாயகனை வணங்கி,
காப்புச் செய்ய அவன் மனம் விரும்பிற்று.
அங்ஙனம் செய்யின்,
தன் கடவுள் வாழ்த்து,
குறித்த மதம் சார்ந்து,
'உலகு' எனும் தன் நோக்கத்தை,
சிதைவிக்கும் என உணர்கிறான் கம்பன்.
இலட்சியத்திற்கும் மரபிற்கும் இடையில்,
அவன் மனத்துள் போராட்டம்.
இரண்டையும், விட முடியாது திகைத்த கம்பன்,
சிந்திக்கின்றான்.
விநாயகன் பிரணவ வடிவானவன்.
நாதம், விந்து எனும் இரண்டின் சேர்க்கையே பிரணவம்.
நாதக் குறியீடு '—'
விந்துக் குறியீடு 'ο',
இவை இணைந்த வடிவாய்,
பிரணவத்தின் குறியீடாய் நிற்பது,
'உ' எனும் எழுத்து.
இதுவே 'பிள்ளையார் சுழி' எனப்படுமாம்.
சிந்தனை சிறக்கக் கம்பன் களிப்புறுகிறான்.
மரபுவழிநின்று விநாயகனை வணங்கும் அதேவேளை,
மற்றை மதத்தார்க்கும் இடையூறின்றி,
கடவுள் வாழ்த்தியற்ற வழிபிறக்கிறது.
தன் மனத்திருப்திக்கு 'உ' எனப் பிள்ளையார் சுழியிட்டு,
உலகம் எனும் சொல்லுள் அதனை அடக்கி, 
உவகை கொள்கிறான் கம்பன்.
உலகம் எனும் சொல் தந்த அவ் உவகை,
அவன் மனத்திருந்து கரத்திற் புக,
அவன் எழுத்தாணி அவனையறியாமல்,
'உலகம்' எனும் அதேசொல்லை, 
அழுத்தி மீண்டும் ஒருதரம் எழுதிற்று. 
♠♠♠♠♠
உயிர், மெய் என,
தமிழ் முதலெழுத்துக்கள் இரண்டு வகைய.
அவற்றுள் மெய்யெழுத்து, 
தன்மை நோக்கி,
வல்லினம், மெல்லினம், இடையினம் என மூவகையவாம்.
உயிரும், மெய்யும் இணையப் பிறப்பவை,
உயிர்மெய்யெழுத்துக்கள்.
தமிழ் மரபுச் சிந்தனை முழுவதையும்,
தன் காவியத்துள் அடக்க நினைத்த கம்பன்,
தான் இடும் காவிய முதற் சொல்லில்,
பிரிவுபட்ட தமிழ் எழுத்துக்களின் வகை அனைத்தையும்,
அடக்க வேண்டும் என விரும்புகிறான்.
'உலகம்' எனும் சொல் மீண்டும் மனதுள் உதிக்கிறது.
'உ' - உயிரெழுத்து.
'ல' - இடையின மெய்யால் பிறந்த உயிர்மெய்யெழுத்து.
'க' - வல்லின மெய்யால் பிறந்த உயிர்மெய்யெழுத்து.
'ம்' - மெல்லின மெய்யெழுத்து.
இவ்வாறு, உலகமெனும் சொல்,
தமிழின் எழுத்து வடிவு முழுவதையும் உள்ளடக்கி,
கம்பன் விருப்பத்தை நிறைவு செய்ய,
களிப்புறுகிறான் அவன்.
அக்களிப்பு கைவழி வெளிப்பட,
அவன் எழுத்தாணி,
'உலகம்' எனும் அதேசொல்லை,
நிறைவாய்த் திரும்பவும் அழுத்தி எழுதிற்று.
♠♠♠♠♠
இங்ஙனமாய்,
தன் கருத்துட் பிறந்த,
'உலகம் யாவையும்',
ஒன்றாகி உவகை தர,
உலகம் எனச் சொல்லிட்டு,
தன் கடவுள் வாழ்த்தை எழுதத் தொடங்கினான் கம்பன்.
அச்சொல் உலகம் உள்ளளவும்,
கம்பனை நிலைக்கச் செய்து சித்து புரிந்தது.
இவ்வற்புதம் கண்டு,
கற்றோர் நெஞ்சு களித்தது.
கம்பனிட்ட 'உலகம்' எனும் சொல்,
அவனைக் காலம் கடப்பித்து கடவுளாக்கிற்று.
♠♠♠♠♠
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்
நிலைபெறுத்தலும், நீக்கலும், நீங்கலா
அலகிலா விளையாட்டுடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே.
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்