'எங்கள் பூர்வீக இன அடையாளத்தை இழக்கலாமா?'-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

அவுஸ்திரேலியச் சனத்தொகை மதிப்பீட்டுப் பதிவு சம்பந்தமான பிரச்சனைபற்றிய ஓர் ஆய்வு

ண்மையில் அந்தச் செய்தியை நம்பக் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. அவுஸ்திரேலியாவிலிருந்து என் நண்பன் ஒருவன் நேற்றுத் தொலைபேசியில் பேசினான். அவன் சொன்ன செய்திதான் ஆச்சரியத்திற்குக் காரணமாய் இருந்தது. என்ன செய்தி என்கிறீர்களா? சொல்கிறேன். அதற்கு முன்....... 

⚜️ ⚜️ ⚜️
பலபேரும், புலம்பெயர் தமிழர்கள்தான் இன்றைக்கு ஈழத் தமிழினத்திற்குப் பலம் சேர்க்கிறார்கள் என்பார்கள். போதாக்குறைக்கு வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் கனவோடு இருக்கும் நம்நாட்டு, தமிழ்நாட்டுப் பேச்சாளர்களும், எழுத்தாளர்களும் வேறு, ஈழத்தமிழர்களால்த்தான் இன்று உலகம் முழுதும் தமிழ் பரவியிருக்கிறது என்றும், அவர்களால்த்தான் எதிர்காலத்தில் இனி நம் தமிழ் வாழும் என்றும் தம் நோக்கம் கருதிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அங்கிருந்து கிடைக்கக்கூடிய பணத்திற்காக நம் அரசியல்வாதிகளும்கூட இக்கருத்துக்களை ஆமோதித்து நிற்கிறார்கள். 

⚜️ ⚜️ ⚜️

அங்கு சென்ற உண்மை மனிதர்கள் ஒருசிலர் நம் தமிழை அங்கும் பாதுகாக்க வேண்டும் எனவும், வளர்க்க வேண்டும் எனவும் பெருமுயற்சிகள் செய்துவருவதை நான் அறியாதவன் அல்லன். அத்தகையவர்களை நோக்கி நான் தலைவணங்குகிறேன். அவர்கள் விதிவிலக்கானவர்கள் அவ்வளவே. ஆனால் அவர்களின் முயற்சிகூட நம் மொழியையும் இனத்தையும் அங்கு அடுத்தடுத்த தலைமுறை வரை கொண்டு செல்லும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. 

⚜️ ⚜️ ⚜️

இங்கிருந்து உயிர்ப்பயத்திற்காகவும், பொருள் ஆசைக்காகவும், வசதியான வாழ்வுக்காகவும் நாட்டைவிட்டு ஓடிய சிலர் பிறநாடுகளுக்குச் சென்றவுடன் காட்டும் இனப்பற்றோ சொல்லத்தக்கதன்று. பாதுகாப்பான சூழ்நிலையில் எந்தவித பயமுமின்றி இருந்து கொண்டு, அவர்கள் காட்டும் 'அளப்பறை' சகிக்கமுடியாதது. இங்கிருந்து போராடிச் செத்த போராளிகளைவிட, தாம் பெரிய தேசப்பற்றாளர்கள் போல, அவர்கள் நடிக்கும் உணர்ச்சி பூர்வமான நாடகம் அனைவரையும் ஏமாற்றவல்லது. இங்கு யாராவது இனத்திற்கு ஒருசிறு, பாதிப்பைத் தெரியாமல் செய்துவிட்டாலும் அவர்கள் அங்கு காட்டுகிற கொதிப்பைப் பார்க்கவேண்டுமே, நடிகர் திலகம் தோற்றார் போங்கள். 

⚜️ ⚜️ ⚜️

எனக்கென்னவோ புலம்பெயர் தமிழர்களால்த்தான் தமிழ் வாழும் என்பதில் அன்றுதொட்டு இன்றுவரை அதிக நம்பிக்கை இருந்ததில்லை. ஏற்கெனவே இங்கிருந்து போனவர்களின் புதிய சந்ததியினருக்குப் பெரும்பாலும் தமிழ் பேசவே தெரியவில்லை. அதற்கடுத்து வரப்போகும் சந்ததியைக் கேட்கவே வேண்டாம். நான் கனடாவிற்குச் சென்றபோது, அங்கு ஒரு பல்பொருள் அங்காடியில் எங்களின் புதிய சந்ததிக் கொழுந்தொன்று ஏதோ பொருளை வாங்கியது. அந்தக் கடையில் நின்ற ஒரு 'கனேடியன்' இவனுடைய ஆங்கில உச்சரிப்பைப் பார்த்தோ, நிறத்தைப் பார்த்தோ 'நீ தமிழனா?' என்று கேட்டான். அந்தக் கேள்வி கேட்கப்பட்டதும் அந்தப் பையன் பதறியடித்து 'இல்லை நான் ஒரு கனேடியன்' என்று தலைநிமிர்த்திப் பதில் சொன்னான். தன்னைத் தமிழனாய் அடையாளப்படுத்தியதை அந்தப்பிள்ளை அருவருப்பாய்க் கருதியதை நான் நேரில் கண்டேன். அதனால்த்தான் சொல்கிறேன். இவனுக்கும் அடுத்ததாய் வரப்போகிற மூன்றாந் தலைமுறை பெரும்பாலும் தமிழனென்றோ, இலங்கைத் தமிழனென்றோ, ஏசியனென்றோ ஒருக்காலும் சொல்லப் போவதில்லை. என்னைப் பொறுத்த அளவில் அது சர்வ நிச்சயமாய்ப்படுகிறது. ஈழத் தமிழினத்தைத் தாய்நாட்டில் வாழுகின்ற, நம் அப்பாவிப் பிள்ளைகளின் பரம்பரைகள்தான் நிலைநிறுத்தப் போகிறது. இதில் எந்தச் சந்தேகத்திற்கும் இடமில்லை!

⚜️ ⚜️ ⚜️

'யதார்த்தவாதி வெகுசனவிரோதி' என்பார்கள். நானும் மற்றவர்களைப் போல் தேவைகள் கருதி புலம்பெயர் தமிழர்களை மகிழ்விக்க நினைக்காமல், யதார்த்தமாய் சில உண்மைகளைச் சொல்லி முன்னரே அவர்களின் பகையைத் தேடினேன். இனிப் பெரும்பாலும் அவர்களின் பகைவர்கள் வரிசையில் எனக்குத்தான் முதலிடம் கிடைக்கப் போகிறது. 'ஆண்டி எதையோ தட்டினால் பறப்பது புழுதி' என்பார்கள். இன்றைய எனது நிலையும் அதுதான். வரப்போகும் கூர்ங்கணைகளிலிருந்து தப்புவதற்காகப் புதிய கேடயங்களைத் தயார் செய்து கொண்டு தான் இக்கட்டுரையை எழுதத் தொடங்கியிருக்கிறேன்.

⚜️ ⚜️ ⚜️

திடீரென எதற்கு இந்த முன்னுரை என்று நினைக்கிறீர்களா? விடயம் இல்லாமல் வீண்பகை தேடுவேனா? முதலில் நான் சொல்லப்போகிற விடயத்தைக் கேளுங்கள். பிறகு அதுபற்றி ஆராய்வோம். அவுஸ்திரேலியாவில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை சனத்தொகை மதிப்பீடு எடுப்பார்களாம். இம்முறையும் அந்த வேலை தொடங்கியிருக்கிறது. மக்கள் பற்றிய பதிவு எடுக்கும் பத்திரத்தில் தம் மக்கள் பற்றிய சரியான விபரப் பதிவுக்காக அங்குள்ள அரச நிர்வாகம் பல கேள்விகளைத் தொடுத்திருக்கிறதாம். அதில் பூர்வீகம் (ancestry) பற்றிய ஒரு கேள்வியும் அமைந்திருக்கிறதாம். நீங்கள் இந்தியத் தமிழர்களா?, இலங்கைத் தமிழர்களா?, தமிழர்களா? என்பதே அக்கேள்வி. இதிலென்ன பிரச்சனை இருக்கிறது. சரியாகத்தானே கேட்டிருக்கிறார்கள், நம்மவர்கள் இலங்கைத் தமிழர்கள் என்று தான் அப்படிவத்தை நிரப்புவார்கள் என்கிறீர்களா? அதிலேதான் பிரச்சனை தொடங்கியிருக்கிறது.

⚜️ ⚜️ ⚜️

உங்களுக்கும் எனக்குமாய் புத்தியில் உதித்த மேற்கேள்விக்கான பதில் பிழையாம்! இலங்கைத் தமிழர் என்று அப்படிவத்தில் நிரப்பவேண்டாமென அங்கு ஒரு குழு பிரச்சாரம் தொடங்கியிருக்கிறதாம். என்ன விழிக்கிறீர்கள்? நான் சொல்வது பொய் என்று நினைத்தால் அங்கு இருக்கும் உங்கள் உறவினர்களிடம் கேட்டுப் பாருங்கள். உண்மை தெரியவரும். இலங்கைத் தமிழர்கள் இந்நாட்டின் பூர்வீகக் குடிமக்கள் என்ற கருத்துக்கு எதிரானவர்கள் யாராவது அப்படிச் சொல்லியிருக்கக்கூடும். அப்படிச் சொல்ல நம்மவர்களுக்கு என்ன பைத்தியமா? என்று கேட்பீர்கள். புலம்பெயர் தமிழர்கள்மேல் நீங்கள் வைத்திருக்கும் அப்பாவித்தனமான நம்பிக்கையை நினைந்து வருத்தப்படுகிறேன்.  

⚜️ ⚜️ ⚜️

இலங்கைத் தமிழர்கள் என்று குறிக்காமல் தமிழர்கள் என்று குறியுங்கள் என்று பிரச்சாரம் செய்யத் தொடங்கியிருப்பவர்கள் யாரென்றால், ஒருகாலத்தில் ஈழத்தமிழர் பற்றியும் ஈழத்தமிழர் போராட்டம் பற்றியும் அதிக அக்கறை செலுத்தியவர்கள் தானாம். அப்படிச் சொன்னால்கூட தவறு. ஈழத்தமிழர் போராட்டத்தின் பிரதிநிதிகளாய் அங்கு தம்மை அறிவித்துக் கொண்டு ஒரு காலத்தில் அங்குள்ளவர்களை ஓரளவு ஆட்டிப் படைத்தவர்கள் அவர்கள் என்பதுதான் நிஜம். யாராவது, இயக்கத்தின் கருத்துடன் சற்று முரண்பாடாய் நடந்தாலே, அவர்களை ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கும் அளவுக்கான அதிகாரம் பெற்றிருந்த 'நாட்டாமைகளாய்' இயங்கியவர்கள்தான் அவர்கள். ஒருமுறை கொழும்பில் நடந்த எங்கள் கம்பன்விழாவிற்கு, நாம் அழைக்காமலே நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி வருகைதர, கொதித்துக் கொந்தளித்து எங்களை இனவிரோதிகளாய்க் காட்ட அவர்கள் பட்டபாடு இருக்கிறதே, அது பெரியபாடு. ஏதோ மக்கள் எங்கள்மேல் வைத்த நம்பிக்கையால் நாம் தப்பிப் பிழைத்தோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள்தான் இன்று அங்குள்ள தமிழர்களை இலங்கைத் தமிழர்கள் என்று அடையாளப்படுத்தாதீர்கள்! என பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்களாம். 

⚜️ ⚜️ ⚜️

நாகரீகம் கருதி தனிப்பெயர்களைத் தவிர்க்கிறேன். அந்தக் கூட்டத்தில் எங்களவரும் ஒருவர் இருக்கிறார் என்பதுதான் எனக்கான பெருங்கவலை. இந்த விடயத்தைக் கேள்விப்பட்டு, இலங்கைத் தமிழர்கள் எனப் போடவேண்டாம் என்று ஏன் அவர்கள் சொல்கிறார்கள் எனக் கேட்டீர்களா? என்று தெரிந்தவர்களிடம் கேட்டேன். எந்தக் காரணமும் சொல்லவில்லையாம். முன்பு மக்களை மிரட்டிச் செம்மறியாடுகளாய் மேய்க்க நினைத்த அதே மனோபாவம் தான் இன்றும் அவர்களிடம் என்று தெரிகிறது.  

⚜️ ⚜️ ⚜️

பிறகு, அப்பிரச்சாரக் குழுவைச் சேர்ந்த, எனக்குத் தெரிந்த ஒருவரிடம் இது பற்றிக் கேட்டேன். அவர் சொன்ன பதில் நகைப்பை ஊட்டியது. இலங்கைத் தமிழர், இந்தியத் தமிழர் என்று ஏன் பிரிவான். ஒட்டுமொத்தத் தமிழர்களாய் நாம் அடையாளப்படுத்துவதுதானே நல்லது என்றார். கொத்துக் கொத்தாய் நம் இலங்கைத் தமிழர்கள் இறுதிப் போரில் இறந்து கொண்டிருந்த போது, நீங்கள் சொல்லும் அந்த ஒருமித்த தமிழினம் என்ன செய்ததாம்? என்று கேட்கத் தோன்றியது. 

⚜️ ⚜️ ⚜️

அவர் சொன்ன இன்னொரு பதில் முதல் பதிலைவிட ஆச்சரியமானது. டுபாய்த் தமிழர் ,சிங்கப்பூர்த் தமிழர், மலேசியத் தமிழர், சவுதித் தமிழர் என்றெல்லாமா அவர்கள் போடுகிறார்கள்? அவர்களெல்லாம் தமிழர் என்ற 'கொலத்தை'த் தானே நிரப்புவார்கள் என்றார்அவர். எனக்கு வியப்பாய் இருந்தது. சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் டுபாயிலும் சவுதியிலும் இருக்கும் தமிழர்கள் அந்த மண்ணின் உரிமையாளர்கள் அல்லர், குடியேறியவர்கள். அதனால்  அவர்கள் தம்மை வெறுமனே தமிழர்களாய் அடையாளப்படுத்தலாமே தவிர அந்த நாட்டுடன் தொடர்புபடுத்தி அடையாளப்படுத்த இயலாது. அதனால் அவர்கள் வெறுமனே தமிழர்கள் என்று போடுவது சரிதான். இலங்கைத் தமிழர்களும் தமிழ்நாட்டுத் தமிழர்களும் அப்படியானவர்கள் அல்லர். அவர்களுக்கு தாம் வாழும் நாட்டில் உரிமை இருக்கிறது. ஈழப்போராட்டத்தின் பின்னணியே அதுதானே. அப்படியிருக்க பிறநாடுகளில் குடிபுகுந்து வாழும் தமிழர்களில் ஒருவராய் நம்மையும் அடையாளப்படுத்தவேண்டும் என்று எப்படிச் சொல்கிறீர்கள் என்றேன். சில நாடுகளில் உரிமைபெற்றுள்ள  பூர்வீகத் தமிழர்களைப் பிரித்து அறியத்தானே, அப்படிவத்தில் இந்தியத் தமிழர், இலங்கைத் தமிழர், தமிழர் என்பதாய்ப் பிரிவுகள் செய்தனர். அந்த அடிப்படையைக் கூடவா உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றேன். பதில் சொல்ல முடியாத அவர் என்னை விழுத்த அடுத்த ஆயுதத்தை எடுத்தார்.

⚜️ ⚜️ ⚜️

உங்களுக்கு விஷயம் தெரியாது. இங்கு வாழும் தமிழர்களின் அளவை அதிகமாகக் காட்டினால்த்தான் இங்குள்ள அரசாங்கம் தரும் 'பெனிபிற்ஸ்ஸூ'களை நாம் அதிகம் பெறமுடியும் என்று, தான் தேடிய புதிய ஆயுதத்தை என்மேல் செலுத்தினார். உதவிகள் கிடைக்கும் என்பதற்காகப் பூர்வீக இன அடையாளத்தையே விற்கத் தயாராகிவிட்டீர்களா? என்றேன். தொடர்ந்து திருவள்ளுவர், கயவர்களை அடையாளம் காட்ட ஓர் வரையறையைத் தந்திருக்கிறார். கயவர்கள் எதற்கு உரியவர்கள் என்றால், ஒரு தேவை ஏற்படின் எதையும் விற்கத் தயாராகிவிடுவார்கள் என்பதுதான் அவர் சொன்ன அவ் அடையாளம். ('எற்றிக்கு உரியர் கயவர் ஒன்றுற்றக்கால் விற்றற்கு உரியர் விரைந்து') இது உங்களுக்குத் தெரியாதா? என்றேன். பின்னர், நீங்கள் இலங்கைத் தமிழர் என்று பதிவு செய்தாலும் அங்குள்ள தமிழர்களின் அளவு அதிகரிக்கத்தானே போகிறது என்றும் கேட்டேன். அவர் முகத்தில் கோபத்தின் சாயல் தெரியத் தொடங்கியது. 

⚜️ ⚜️ ⚜️

கடைசி ஆயுதமாக இதெல்லாம் சும்மா ஒரு தரவுக்காக எடுக்கும் பதிவுதான். இதில் தமிழர் என்று போட்டால் என்ன? இலங்கைத்தமிழர் என்று போட்டால் என்ன? எல்லாம் ஒன்றுதான் இங்குள்ள இந்தியத் தமிழர்கள் பலரும் அப்படித்தான் போடப்போகிறார்களாம், அவர்களோடு சேர்ந்துதான் நாமும் இந்த முடிவுக்கு வந்திருக்கிறோம் என்றார். இப்போது எனக்குச் சற்றுக் கோபம் வந்தது. அறிவோடுதான் பேசுகிறீர்களா? என்று கேட்டேன். இந்தியத் தமிழர்கள் தங்கள் நாட்டில் உரிமை பெற்று வாழ்கிறார்கள். அவர்கள் கதைவேறு. இலங்கைத் தமிழர்கள் இன்னும் நம் மண்ணில் உரிமைக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் கதை வேறு. அவர்கள் தமிழர்கள் என்று இலாபம் கருதி பொதுப்படப் போடலாம். நாங்கள் அப்படிப் போடலாமா? என்று கேட்டுவிட்டு, என்னுடைய ஒரு கேள்விக்குப் பதில் சொல்லுங்கள் என்றேன். என்ன என்றார்? 

⚜️ ⚜️ ⚜️

இலங்கைத் தமிழர்கள் இன்னும் நம் மண்ணில் அடக்குமுறைக்கு ஆளாகி தம் உரிமைகளை இழந்துதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு எதிராக எழுந்த போராட்டத்தைப் பேரினத்தார் எப்படி அடக்கினார்கள் என்பது உலகத்திற்கே தெரிந்திருக்கிறது. நமக்குச் சார்பாக உலகநாடுகள் கொடுக்கும் குரல்தான் இலங்கைத்தமிழர்களுக்கு இன்றைக்கு இருக்கும் ஒரே பாதுகாப்பு. முன்பு நடந்தது போல் இனியும் இலங்கைத் தமிழர்களுக்கு இங்கு ஒரு பாதிப்பு ஏற்படுமானால், எமது நாட்டில் இத்தனை ஆயிரம் இலங்கைத் தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காகக் குரல் கொடுக்கிற உரிமை எமக்குண்டு என்று உலக அரங்கில் அவுஸ்திரேலியா பேசுவதற்கு, நாம் நம்மை இலங்கைத் தமிழர்களாய்ப் பதிவு செய்து வைப்பது அவசியமல்லவா? இதைக்கூடவா நீங்கள் யோசிக்கவில்லை என்றேன். இப்போது ஏதோ நினைத்த நண்பர் ஈழத் தமிழர்களாகிய நாங்கள் ஏன் இலங்கைத் தமிழர்கள் (Srilankan Tamil)எனப் போடவேண்டும் என்று சொற்குற்றம் கண்டுபிடித்தார். தப்ப நினைக்கும் அவர் நோக்கம் புரிந்தது. ஐ.நா. சபையிலும் Srilankan Tamils' problem என்றுதான் சொல்கிறார்கள். அதற்காக அங்கிருந்தும் நாம் ஒதுங்கிவிட முடியுமா? என்றேன். இப்போது அந்த நண்பரின் முகத்தில் சிறிது குழப்பம். அவரை அறியாமல் அவர் தலை கவிழ்ந்தது.

 ⚜️ ⚜️ ⚜️

நிறைவாக ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். இன்றைக்கு நம் அவுஸ்திரேலியத் தமிழர்கள் வசதிகளுக்காகத் தம்மை இலங்கைத் தமிழர்களாய்ப் பதிவு செய்யத் தவறுவார்களேயானால், நாளைக்கு இதனையே முன்னுதாரணமாய்ப் பின்பற்றி உலகநாடுகளில் வாழும் நம் தமிழர்கள் எல்லோரும்கூட தம் பூர்வீக இன அடையாளத்தை ஒழித்து அந்தந்த அரசாங்கங்கள் தரும் வசதிகளுக்காகத் தாமும் அவ்வாறே செய்யத் தலைப்படுவார்கள். அது நம் இனத்தை எந்த அளவு பாதிக்கும் என்பதை அவுஸ்திரேலிய இலங்கைத் தமிழர்கள் உணரவேண்டும். 

⚜️ ⚜️ ⚜️

நிச்சயமாக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நம் 'நாட்டாமை'களுக்கு என்மேல் கடுங்கோபம் வரப்போகிறது. அவர்கள் கோபப்பட்டு எனக்கு ஆகப்போவது ஒன்றுமில்லை. அவர்களுடைய அழைப்புக்கும் அவர்கள் தரும் செல்வத்திற்கும் ஆட்படாமல் ஒருவனாவது துணிந்து பேசினானே என்று அங்குள்ள நல்லவர்கள் நாலுபேர் நினைத்தால் அதுவே எனக்குப் போதும். அவுஸ்திரேலியாவில் வாழும் நம் தமிழர்கள், மேல் உண்மைகளைத் தரிசனம் செய்யுங்கள் என்று பணிவோடு கேட்டுக் கொள்கிறேன். நான் சொன்ன கருத்தைக் கண்டிக்க முடியாவிட்டாலும் என்னை இழிவுபடுத்தி இந்தக் கட்டுரைக்காக பலபேர் இனிப்பலதும் எழுதுவார்கள். அதுபற்றி நான் கவலைப்படப் போவதுமில்லை. அவர்களுக்கு நான் பதில் சொல்லப் போவதுமில்லை. என் கடமை முடிந்துவிட்டது.

⚜️ ⚜️ ⚜️

 

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்