'ஒப்பற்ற பேரறிஞன் விருது கொண்டான்!' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

லகம் எலாம் போற்றுகிற உயர்ந்த ஞானம்
ஒப்பற்ற தமிழ்மொழியின் உதிரா மானம்
நிலமுழுதும் தன் தமிழால் ஈர்த்து நிற்கும்
நேரில்லாப் பெரும் புலமை கொண்ட ஐயன்
தளம் முழுதும் நாவசையக் காத்து நிற்கும்
தன்னேரில் பெரும் புலவோன் தமிழை ஏற்றி
பலர் புகழும் 'பத்மஸ்ரீ' விருது பெற்றார்
பாப்பையா திருவடிகள் போற்றி நின்றோம்.
 
தமிழர்களின் இல்லமெல்லாம் தமிழைத் தாங்கி
தரம் உரைத்துப் பெருமை செய்யும் பெரிய வேந்தன்
அமிழ்தனைய குரல் நூலுக்கினிய நல்ல 
அற்புதமாம் பொருள் உரைத்து ஈர்த்த ஐயன்
உமிழுகிற எச்சிலையும் தமிழாய் ஆக்கி
ஊரெல்லாம் தமிழ் எழுச்சி செய்த ஆசான்
நிமிடமதில் சபை பிடித்து நேராய் நின்று
நிகரில்லாத் தீர்ப்புரைக்கும் நெடிய செம்மல்.
 
பெரிய சபை அதிர்ந்திடவே கருத்துச் சொல்லி
பேரியக்கம் ஆக்கி உளம் கவர்ந்து இன்று
அரிய தமிழ் பெருமைதனை அகிலமெங்கும்
ஆக்கியதை அனைவர்க்கும் ஈந்த வள்ளல்
கரிய உரு ஆனாலும் கருத்தோ வெண்மை
கற்றவர்கள் உளம் குளிரும் கருத்தின் நுண்மை
உரியதுவாம் தீர்ப்புரைத்து உலகை ஆளும்
ஒப்பற்ற பேரறிஞன் விருது கொண்டான்.
 
மக்கள் உளக் கோயிலிலே புகுந்து நின்று
மாண்புடனே தமிழ் வளர்த்த எங்கள் ஐயன்
தக்கபடி இளையோரைத் தழைக்கச் செய்து
தருக்கதுவே இல்லாமல் தமிழைக் காத்தான்
பக்கதுணை ராஜாவும் பாரோர் போற்றும் 
பாரதியும் நின்றுரைக்கப் பல நாடெங்கும்
சொக்கிடவே வீதியுலாச் செல்லும் ஐயன் 
சுகத்தமிழால் 'பத்மஸ்ரீ' விருது பெற்றான்.
 
தன் நாவால் தமிழதனை உயர்த்தி இன்று
தரணியெலாம் போற்றிடவே விருதும் பெற்று
விண்ணார்ந்த புகழ் கொண்டு நிற்கும் எங்கள்
வீறுடைய பெரும் புலவர் பாப்பையாவும்
பொன்னான தமிழ்த்தாயை புகழுக்காக்கி
பொலிவடையச் செய்த பெரும் புலவோர் போல
மண்ணாளும் பெருமைதனைக் கொண்டார் இன்று
மானமுள்ள தமிழரெலாம் மகிழ்வு கொண்டார்.
 
கம்பனவன் பெருமை தனை ஈழமண்ணில்
களிப்போடு போற்றுகிற கழகம் தன்னில்
நம்முடைய ஐயாவைப் பணிந்து ஏற்றி
நலமுடனே 'கம்ப புகழ்' விருதும் ஈந்தோம்.
தம்முடைய விழிசோரத் தமிழாய் நின்று
தம்பியரை வாழ்த்திய நாள் மறக்கப் போமோ?
எம்முடைய பேரறிஞர் இன்னும் நூறு
எழில் ஆண்டைக்கடந்து தமிழ் வளர்க்க வேண்டும்!
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்