'சிவனருட்செல்வி': பகுதி 04 -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

திரம் முழுவதும் வற்றினாற் போலாயிற்று சிவனருட்செல்விக்கு.
மாப்பிள்ளை கலிக்காமர் குழுவினர் அண்மித்து விட்டதாய் வந்த செய்தியால்,
மகிழ்ந்திருந்த அவளின் எண்ணத்தில் முனிவரின் வேண்டுகோள்,
இடியாய் வீழ்ந்து இன்னல் தந்தது.
நடக்கப்போவதை ஓரளவு அவள் ஊகித்தால்,
தந்தையின் இயல்பு அவளுக்குத் தெரியாததல்ல.
அடியார் கேட்ட ஒரு பொருள் தன்னிடம் இல்லாவிட்டாலும்கூட,
எங்கிருந்தேனும் அவர்களுக்கு அதனைப் பெற்றுக் கொடுப்பவர் அவர்.
இப்போது அருகிலேயே நிற்கும் எனது கூந்தலைக் கேட்கிறார் முனிவர்.
தந்தை மறுத்துச் சொல்லமாட்டார் என்பதாய் அவள் உள்ளுணர்வு சொல்லிற்று.
நீண்டிருந்த தனது கூந்தலை ஒருதரம் கைகளால் வாஞ்சையோடு தடவிக் கொள்கிறாள்.

🌊 🌊 🌊

முனிவரின் வேண்டுதலால் கூடியிருந்தோர் கொதித்து நிற்க,
மானக்கஞ்சாறனார் முகத்தில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை.
மீண்டும் ஒருதரம் வந்த முனிவரை வீழ்ந்து வணங்குகிறார்.
அவர் கண்களில் நீர் கசிகிறது.
கூடியிருந்தோர் உணர்ச்சிகளைச் சிறிதும் கவனியாமல் பேசத் தொடங்குகிறார்.
'சுவாமி, அவசரமான இந்நேரத்தில் கிடைக்காத ஓர் பொருளைக் கேட்டு,
என்னைச் சங்கடப்படுத்தாமல் எனக்குரிய என் மகளின் கூந்தலைக் கேட்டு,
என்னை ஆறுதல் செய்தீர்கள், அஃது சிவனின் கருணையேயாம். 
என் மகள் என் சொத்து. - அவள் என்றும் என் வார்த்தையை மீறியதில்லை.
இன்றும் மீறமாட்டாள் என்பது நிச்சயம்.
இதோ இப்போதே அவள் கூந்தலை,
உங்கள் பூணூலுக்குப் பயன்படும் வண்ணம் வாங்கித்தருவேன்'
என்று,
மானக்கஞ்சாறனார் நிதானமாய் உரைக்கக் கூடியிருந்த கல்யாணச்சபை பதறிற்று.

🌊 🌊 🌊

உற்றாருள் மூத்தவரான ஒருவர்,
மானக்கஞ்சாறனாரை நோக்கித் தாழ்ந்த குரலில் பேசத் தொடங்குகிறார்.
'ஐயனே! சற்றுப் பொறு! உன்னோடு நான் தனிமையில் பேச வேண்டும்.
ஒருதரம் உள்ளே வந்துவிட்டுப் போ!'

முதியவர் அழைக்க, முனிவரிடம் அனுமதி பெற்று,
அழைத்த மூத்தவரோடு உட்கூடத்திற்குள் நுழைகிறார் மானக்கஞ்சாறனார்.
உறவுகள் முழுவதும் அவர்கள் பின்னால் முண்டியடித்து உள் நுழைகிறது.
வந்த முனி ஏதும் அறியார்போல் மோனத்தோடு வானம் பார்க்கிறார்.

🌊 🌊 🌊

'ஐயனே! உனக்கென்ன பைத்தியமா? 
இன்று நடக்கப்போகும் நற்காரியத்தை மறந்தாயோ?
இன்னும் சிலமணிநேரங்களில் உன் உயிரொத்த மகளான,
சிவனருட்செல்வி மங்களநாண் பூணப்போகிறாள்.
இதோ மாப்பிள்ளையும் அவர் உற்றாரும்,
ஊரினுள் நுழைந்துவிட்டதாய்ச் செய்தி வந்திருக்கிறது.
இதுநாள் வரை கண்போலப் பாதுகாத்து வளர்த்த,
உன் செல்வியின் கூந்தலைப் பூணூலுக்காய்க் கேட்கிறான் வந்த மூடமுனி.
அவனை விடு! அவன் துறவி அவன் கேட்டதில்கூட தவறில்லை.
நீ உன் மகளின் வாழ்வை நினைத்திருக்கவேண்டாமா?
எதுவித யோசனையுமின்றிக் கூந்தலைத் தருகிறேன் என்று கூறிவிட்டாயே.
முனிவருக்கு நிலமையை விளங்கப்படுத்தி,
வேறிடத்தில் கூந்தல் பெற்று கொடுத்திருக்கலாமே.
மங்களகாரியம் நிகழும் இவ்வேளையில்,
கூந்தலைக் கொடுத்து அமங்களக் கோலத்தோடு உன் பெண் நின்றால்,
வருகின்ற மாப்பிள்ளையும் மாப்பிள்ளையின் உறவினர்களும் அவளை ஏற்பார்களா?
இதற்குத்தானா அவளைக் கண்ணெனப் போற்றி வளர்த்தாய்.
உடனே போய் முனிவருக்கு நிலமையை விளக்கு,
முனிவருக்குக் கூந்தல் தானே தேவை,
சிவனருட்செல்வியின் வாழ்வுக்காக அவளது தோழியர் எவருமே,
தம் கூந்தலைத் தரத் தயாராக இருப்பார்கள்.
அதைக் கொடுத்து முனிவரை ஆறுதல் செய்யலாம்.'
என்று கூறி,
அப்பெரியவர் சிவனருட்செல்வியின் அருகில் நின்ற தோழியரைப் பார்க்க,
அவர்கள் அனைவருமே கிழவரின் வார்த்தைக்குத் தாம் கட்டுப்படுவோம் என்பதை,
முகக் குறிப்பால் உணர்த்துகின்றனர்.

🌊 🌊 🌊

பேசிய பெரியவரின் வார்த்தைகளை மறுக்கமுடியாமையால்,
மானக்கஞ்சாறனார் முகத்தில் சிறிது குழப்பம். 
சூழ நின்ற உறவினர்கள் அனைவரும்.
அப்பெரியவரின் கருத்தை ஆமோதித்துத் தலை அசைக்கின்றனர். 
அவர்கள் கருத்தை மறுத்துரைத்தால்,
விருந்தினர்களாய் வந்த அவர்களை அவமரியாதை செய்ததாய் ஆகிவிடுமோ என,
மானக்கஞ்சாறனார் மருளுகிறார்.
வந்த அனைவரும் தன்னைக் குற்றஞ்சாட்டி நிற்பதை அவரால் உணரமுடிகிறது.
உற்றார், உறவினர்கள் ஒருபக்கம், வந்த சிவனடியார் மறுபக்கம்.
ஏதுசெய்வதென அறியாது குழம்புகிறார் மானக்கஞ்சாறனார்.
எப்போதும் தலைநிமிர்ந்து நிற்கும் தனது தந்தை,
இப்போது தலைகவிழ்ந்து நிற்கும் காட்சி கண்டு சிவனருட்செல்வி மருள்கிறாள்.
அவள் மனம் ஓர் முடிவு செய்கிறது.

🌊 🌊 🌊

யாரும் எதிர்பாராத நிலையில்,
கையில் கூரிய வாள் ஒன்றை எடுத்தபடி,
தந்தையின் அருகில் ஓடிவருகிறாள் சிவனருட்செல்வி.
வந்தவள் தந்தையின் கரங்களை இறுகப் பற்றிக் கொள்கிறாள்.
அவள் கண்களில் சிறிதும் சலனமில்லை.
அதுவரை தந்தையின் முகம் பார்த்துப் பேசி அறியாத அவள்,
மானக்கஞ்சாறனாரின் முகம் நோக்கி நிமிர்வாகப் பேசத் தொடங்குகிறாள்.

🌊 🌊 🌊

'தந்தையே, என்ன தயக்கம்? 
சிவனடியார் கேட்கும் எதனையும் வழங்குவதுதானே தங்கள் இயல்பு.
வந்த சிவக்கோலம் கொண்ட மாமுனிவர் என் கூந்தலைக் கேட்கிறார்.
இது ஒரு பெரிய விடயமா?
இதற்குப்போய் ஏன் இத்தனை தயக்கம்?
ஏன் இந்த வேண்டாத தலைகுனிவு?
என்றோ ஒருநாள் என் கூந்தல் உதிரத்தான் போகிறது.
தலையிலிருந்து இறங்கினால் அதற்கான மதிப்பு,
எத்தகையது எனத் தாங்கள் அறியீர்களா?
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை என்று,
நம் வள்ளுவக் கடவுளாரே சொல்லவில்லையா?
ஒன்றுக்கும் உதவாத அக்கூந்தலைத் தானே வந்த மாமுனிவர் கேட்கிறார்.
மற்றவர்கள் ஏதும் சொல்லட்டும் நீங்கள் அதுபற்றிச் சிறிதும் கவலைப்படாமல்,
இதோ இந்த வாளினால் என் கூந்தலை அறுத்து முனிவருக்குக் கொடுத்துவிடுங்கள்.'

சிவனருட்செல்வி பேச, மானக்கஞ்சாறனார் கண்களில் நீர் அருவியாகக் கொட்டுகிறது.
அவ்விருவரையும் பார்த்து அவையிலுள்ளோர் அத்தனைபேரும் நெகிழ்ந்து நிற்கின்றனர்.

🌊 🌊 🌊

'மகளே! உன்னைப் பெற்றதன் பயனை இன்று முழுமையாய் அடைந்தேன்.
இதைவிட என்ன பேறு எனக்கு வேண்டும்?
ஆனாலும் ஒன்று, என் உயிர் ஒத்தவளே!
இன்னும் சிலநேரங்களில் மாப்பிள்ளை வந்துவிடப்போகிறார்.
இந்நேரத்தில் இச்செயல் சரியாகுமா? என்றே மனம் தடுமாறுகிறது.'

தந்தையார் சொல்லி முடிக்கும் முன்,
சிவனருட்செல்வி குறுக்குடுகிறாள்.
'அப்பா! சிவனையும் சிவனருளையும் நினைந்து நினைந்து வாழும்,
உங்களுக்கா இந்தக் குழப்பம்.
எனது திருமணத்தைச் சிவனார் பார்த்துக் கொள்ளமாட்டாரா?
என் திருமணம் நிற்க வேண்டும் என்று சிவனே முடிவு செய்தால்,
அதிலும் ஒரு நியாயம் இருக்காதா?
ஒன்றும் யோசியாதீர்கள். உடனடியாக இந்த வாளால் என் கூந்தலை அறுத்துக் கொடுத்து,
முனிவரைத் திருப்தி செய்யுங்கள்.'
என்று கூறியபடி,
அவர் கையில் வாளைத் திணித்து,
தந்தையின் முன் தலை தாழ்த்தி நிற்கிறாள் சிவனருட்செல்வி.

🌊 🌊 🌊

சிவனருட்செல்வியின் பேச்சினைக் கேட்டுப் பெரியவர்கள் பேதலித்து நிற்கிறார்கள்.
மூத்த சுமங்கலிப் பெண்கள் அவள் வார்த்தைகளைக் கேட்டு நெகிழ்ந்து,
'சிவ, சிவ' 'சிவ, சிவ' என்று கூறித் தலையில் கைகூப்புகிறார்கள்.
அருகிருந்த தோழியரும் காளையரும் ஏதும் பேச இயலாமல்,
வாய்பொத்தி விம்முகின்றார்கள்.
கற்பரசியான சிவனருட்செல்வியின் தாயார்,
தன் கணவரின் விரதத்தைக் காக்க மகள் செய்யும் தியாகத்தால்,
பெருமிதமுற்று நிமிர்ந்து நிற்கிறாள்.
கூடியிருந்த எல்லோரும் அதிர்ந்து 'ஹர ஹர, சிவ சிவ' என்று வாய்விட்டு அரற்ற 
மணக்கோலத்தில் இருந்த மகளின் கூந்தலைப் பற்றி,
எதுவித பதற்றமும் இல்லாமல் அவள் தந்த வாளால் அறுத்து எடுக்கிறார்
மானக்கஞ்சாறனார்.

🌊 🌊 🌊

(சிவனருட்செல்வி தொடர்ந்து வருவாள்)

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்